பசி மற்றும் இம்சை குறித்து ஒரு ஆட்டோஃபிக்ஷன் கதை (குறுநாவல்)

புகைப்படம்: ஒளி முருகவேள்

1.பச்சைக் கண்

சனிக்கிழமை வாசகர் வட்ட சந்திப்பு முடிந்து எல்லோரும் அவரவர் இடத்துக்குக் கிளம்பி விட்டார்கள்.  நாங்கள் ஐந்து பேர் – நான், கொக்கரக்கோ, வினித், ஒளி முருகவேள், பாண்டியன் – மட்டுமே அந்த வன இல்லத்தில் தங்கியிருந்தோம்.  சந்திப்புக்கு வந்த நண்பர்கள் யாரும் இரவு எங்களோடு தங்கக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தேன்.  அது பற்றி நான் பலமுறை என்னுடைய இணையதளத்தில் போதும் போதும் என்கிற அளவுக்கு எழுதியிருக்கிறேன்.  தங்கினால் பெரிய பிரச்சினை ஆகி விடுகிறது. 

நாங்கள் தங்கியிருந்த ஆரோவில் வன இல்லம் ஒரு அடர்ந்த வனத்தின் நடுவே இருந்தபடியால் அவ்வப்போது அங்கே பாம்பு பூரானெல்லாம் வரும்.  எப்போதும் ஊர்ந்து கொண்டிருக்கும் புல்லட் எறும்புகள் தனிக் கணக்கு.  பாம்பு பூரானால் பிரச்சினை இல்லை என்றாலும் புல்லட் எறும்பு எடுத்ததற்கெல்லாம் கடித்துத் தொலைக்கும்.

அந்த வன இல்லத்தின் ஒரு அறையில் குளிர்சாதன எந்திரத்தைப் பொருத்த வந்த இளைஞனை ஒரு புல்லட் எறும்பு கன்னத்தில் கடித்து விட்டது.  கண்கள் வீங்கி அந்தப் பையன் மயக்கமடித்து விழுந்து விட்டான்.  ஜிப்மருக்குக் கொண்டு போய் ஐசியூவில் போட்டார்கள்.  பிழைத்து விட்டான். 

பொதுவாக புல்லட் எறும்பு கடித்தால் உயிரெல்லாம் போகாது.  ஆனாலும் ஒன்றிரண்டு நாட்கள் கடித்த இடம் வீங்கிக் கொண்டு உயிரை எடுக்கும்.  மேற்படி சம்பவம் நடந்த போது நான் வாயை வைத்துக் கொண்டு சும்மா இராமல் புல்லட் எறும்பு நம்மை எங்கே கடித்தாலும் கொட்டையில் மட்டும் கடித்து வைக்கக் கூடாது என்றேன்.  ஏனென்றால், மனித உடம்பில் அந்த இடம்தானே ரொம்பவும் மென்மையானது இல்லையா?

சொன்னது போலவே அன்றைய இரவு இரண்டு புல்லட் எறும்புகள் என் ஆணுறுப்பில் வேலையைக் காண்பித்தன.  ஒன்று, கொட்டையிலும் ஒன்று குஞ்சிலும் கடித்தன. (அல்லது, ஒரே எறும்புதான் இரண்டு இடத்திலும் கடித்து வைத்ததோ, நித்திரையில் தெரியவில்லை!) குஞ்சில் மட்டும் கடித்ததோடு போயிருக்கக் கூடாதா?  வாழ்க்கையில் எல்லா ஆண்களுக்கும் உள்ள ஆழ்மன விருப்பத்தின்படி எனக்கும் கழுதைப் பூல் குதிரைப் பூல் என்று சில தினங்கள் பெருமையாக சொல்லிக் கொண்டு திரிந்திருக்கலாம்.  அப்படித்தான் அலவாங்கு போல் வீங்கிக் கிடந்தது குஞ்சு.  ஆனால் கொட்டையும் அல்லவா வீங்கிக் கொண்டு டோங்கா மாதிரி ஆகி விட்டது?  டோங்கா என்றால் உங்களுக்குத் தெரியுமோ?  தமிழில் வழக்கொழிந்து போன வார்த்தைகளில் ஒன்று டோங்கா.  படம் என்ற வார்த்தையில் வரும் ‘ட’வை உச்சரிப்பது போல் உச்சரிக்க வேண்டும்.  டோங்கா.  ’கா’வை பெருங்காயத்தில் வரும் ‘கா’ போல் உச்சரிக்க வேண்டும்.  எங்கே சொல்லுங்கள்… டோங்கா.  டோங்கா.  எங்கள் ஊரில் ஒரு வாத்தியாருக்கு புடுக்கு ரொம்பப் பெரிது.  அவரை நாங்கள் டோங்கா வாத்தியார் என்றே அழைப்போம்.  என் கொட்டையும் அதுபோல் வீங்கி விட்டது. 

அதற்குப் பிறகு ஒரு வார காலம் என்னால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை.  யாழ்ப்பாணம் தேங்காய் மாதிரி வீங்கிக் கிடந்த டோங்காவைத் தூக்கியபடி எப்படி லஜ்ஜையின்றி வெளியே செல்வது?  கடுமையான அரிப்பு வேறு பிடுங்கித் தின்றது. 

வாசகர் சந்திப்புக்கு வருபவர்கள் எங்களோடு இரவு தங்கக் கூடாது என்ற கடுமையான விதியை அனுசரித்ததற்குக் காரணம் இது அல்ல.  முந்தைய சந்திப்பில் நடந்த ஒரு சம்பவம்தான்.  மக்களுக்கு மது அருந்தினால் நிதானம் தெரிவதில்லை.  சந்திப்புக்கு வந்த ஒரு ஆள் போதையில், இரவிலும் தங்கி விட்ட ஒரு பெண்ணின் உதட்டைத் தொட்டு விட்டான்.  அப்போது நாங்கள் டீஜே வைத்து டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தோம்.  மூன்று நான்கு பெண்களும் இருந்தார்கள்.  அவர்களில் அதி கவர்ச்சியாக இருந்த ஒரு பெண்ணின் உதட்டை இந்தப் பயல் தொட்டு விட்டான்.  

கேட்டால் வியர்வையைத் துடைத்தேன் என்கிறான்.  டேய், உதட்டிலாடா வியர்வை வரும் என்று கேட்டு அவனை ஆங்கிலத்தில் திட்டியிருக்கிறார் பெண்.   அவன் அதோடு விட்டிருந்தால் அதோடு போயிருக்கும்.  ஆனால் அவன் மறுபடியும் அந்தப் பெண்ணின் முகத்தைத் தொட்டிருக்கிறான்.  பெண் கன்னாபின்னாவென்று கத்த ஆரம்பிக்க மற்ற நண்பர்கள் அந்த ஆளை அங்கிருந்து அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்.  

இந்த விஷயம் எனக்குக் காலையில்தான் தெரிய வந்த்து.  அதேபோல் இன்னொரு ஆசாமி, போதை அதிகமாகி அங்கேயே நடுக்காட்டில் படுத்து விட்டான்.  தூக்கினால் மேல்சாதி நாய்களே என்று திட்டுகிறான்.  அப்படியும் அவனைத் தூக்கிக் கொண்டு வந்து இல்லத்தில் போட்டிருக்கிறார்கள்.  இதுவும் காலையில்தான் எனக்குத் தெரிந்தது. 

”ஏன், அவனை அங்கேயே போட்டு விட்டு வந்திருக்க வேண்டியதுதானே? ஏன் சிரமப்பட்டு தூக்கி வந்தீர்கள்?” என்றேன்.

”பாம்பு கடிச்சு செத்துருவான் சாரு” என்றார் வினித். 

அதுவும் சரிதான் என்று பெண்ணின் உதட்டிலும் முகத்திலும் கை வைத்த ஆசாமியைத் தேடினேன்.  ஆள் காலையிலேயே கிளம்பி விட்டான் என்றார்கள். அவனை ஃபோனில் அழைத்தேன்.

ஆ, ஆஹா, ஊஹூ… சாரு…….. என்ற புளகாங்கித்த்துடன் பேச ஆரம்பித்தான்.  அப்போது நடந்த உரையாடல்.

உங்களுக்குத் திருமணம் ஆகி விட்டதா?

ஆகி விட்டது சாரு. 

குழந்தைங்க இருக்கா?

ஒரு பெண் குழந்தை சாரு. 

எத்தனை வயசு?

எட்டு வயசு சாரு.

டேய் நாயே, உன் குழந்தையின் மேல் எவனாவது கை வச்சா நீ சும்மாயிருப்பியாடா? 

ஐயோ சாரு, போதையில தெரியாமப் போச்சு சாரு.  மன்னிச்சிருங்க சாரு.

அப்போ, போதையில தெரியாமப் போச்சுன்னு உங்க அம்மா மேல கை வைப்பியாடா?  தோ பார், இனிமே நீ என் உயிர் இருக்கிற வரை என் கண்ணிலேயே படக் கூடாது.  சரியா?

ஃபோனை வைத்து விட்டேன். 

இம்மாதிரி பிரச்சினைகளால்தான் இரவு சந்திப்பின்போது மட்டும் வெளியாட்களை அனுமதிப்பதில்லை.  குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது பழகியிருந்தால்தான் இரவில் அனுமதி.  இங்கே இன்னொரு சம்பவத்தையும் சொல்ல வேண்டும்.

எனக்கு ஒரு இருபத்தைந்து வயதுப் பெண்ணோடு பழக்கம் இருந்தது.  உடனே தப்பாக நினைத்து விடாதீர்கள்.  வெறும் நட்புதான்.  ஆனாலும் அவள் ஒரு சினிமா நடிகையை விடவும் கவர்ச்சியாகவும் அழகாகவும் இருந்ததாலும், அதோடு என்னைப் பொது இடங்களில் பார்க்கும் போது என் மீது விழுந்து கட்டிப் புரண்டு முத்தம் கொடுத்து ரகளை பண்ணுவதாலும் அவளுக்கும் எனக்கும் ஏதோ உறவு இருப்பது போல் ஒரு வதந்தி இங்கே உலவிக் கொண்டிருந்தது.  எனக்கு அவள் மீது ஒரு கண் இருந்தது வாஸ்தவம்தான், இல்லை என்று சொல்லவில்லை.  உடனே என் ஒழுக்கத்தை விமர்சிக்க ஆரம்பித்து விடாதீர்கள்.  அவளுக்குப் பச்சைக் கண்.  தமிழ்நாட்டில் எந்தப் பெண்ணுக்காவது பச்சைக் கண் இருந்து நீங்கள் கண்டதுண்டா?  பச்சைக் கண் கொண்ட தமிழச்சி ஒருத்தி உங்களையே விழுங்கி விடுவது போல் ஒரு மணி நேரம் பார்த்தபடி உங்கள் சுவாசத்தோடு சுவாசம் கலக்க பேசிக் கொண்டிருந்தால் அவள் மீது உங்களுக்கு ஒரு கண் விழுமா, விழாதா? மனதைத் தொட்டுச் சொல்லுங்கள், ப்ளீஸ். 

ஆனால் அவள் இந்த உலகத்தை ஒரே வாயில் விழுங்கக் கூடிய அளவுக்கு டகால்டி பேர்வழியாகவும் இருந்தாள்.  எப்படித் தெரியுமா?  இருபத்தைந்து வயதில் அவளுக்குப் பன்னிரண்டாவது ப்ரேக் அப் நடந்து ஒரு வாரம்தான் ஆகியிருந்தது.  அந்த ஒரு வாரத்தில் என்னோடு பழக்கம்.  முதல் பாய் ஃப்ரெண்ட் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது என்றாள். 

ஆமாம் குட்டி, இந்த ரிலேஷன்ஷிப்பில் எல்லாம் சரீர சம்பந்தம் உண்டா? 

ஓல்ட் மேன் என்று காட்டி விட்டீர்களே சாரு, சரீர சம்பந்தம் இல்லாவிட்டால் அது வெறும் ஃப்ரெண்ட்ஷிப்.  இப்போது நாம் இருப்பது போல.  சரியா?

சரி. 

ஒருநாள் நான் லெபனானில் சுற்றிக் கொண்டிருந்தபோது ஃபோனில் அழைத்தாள்.  நடுத்தெருவில் நிற்கிறேன் சாரு.  என் அறைத் தோழி ஒரு லெஸ்பியன்.  தெரிந்தும்தான் தங்கினேன்.  ப்ரேக் அப் ஆன பிறகு எங்கே தங்குவது என்று செட்டாகவில்லை.  அதுவரை இவளோடு தங்கலாம், நமக்கு ஒன்றும் ஆபத்து இருக்காது என்று நம்பினேன்.  கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி, இன்று ரேப் பண்ணுகிற அளவுக்கு வந்து விட்டாள்.  மிகவும் அசூயையாக இருக்கிறது.  வெளியே வந்து விட்டேன்.  இன்று மட்டும் எங்கேயாவது தங்கிக் கொண்டு நாளையே வீடு பார்த்துக் கொண்டு போக வேண்டும்.  கையில் ஒரு பைசா கிடையாது.

அழுதாள். 

ஒரு லட்சம் ரூபாயை உடனடியாக அவளுக்கு அனுப்பி வைத்தேன். 

வீடு பார்த்துக் கொண்டு குடி போன பிறகு அவள் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தாள்.  உங்களைப் போல் ஒரு மனிதனை என் வாழ்நாளில் பார்த்ததில்லை, ஒரு வாரப் பழக்கத்தில் யாராவது ஒரு பெண்ணை நம்பி ஒரு லட்சம் ரூபாயைக் கொடுப்பார்களா?  இதுவே கடிதத்தின் சுருக்கம்.

ஆனால் நான் சற்றும் எதிர்பார்க்காதவண்ணம் ஒரு ஆண்டில் அந்த ஒரு லட்சத்தை சிறுகச் சிறுக என்னிடம் கொடுத்து விட்டாள். 

அவளுடைய வீட்டுக்குப் போயிருக்கிறேன்.  நீண்ட நேரம் தங்கியிருக்கிறேன்.  ஒரு ஆண் நண்பனைப் போல்தான் பழகினாள்.  அப்படிப் பழகும் பெண்களோடு எனக்குப் பிரச்சினையே இருந்ததில்லை. ஆனால் அந்தப் பச்சைக் கண்ணோடு என்ன பிரச்சினையென்றால், பொது இடங்களில் பார்க்கும் போது மட்டும் அணைப்பது, முத்தமிடுவது, இத்யாதி என்று அவளும் நானும் “உறவில்” இருப்பது போல் காட்டிக் கொண்டதுதான். 

என் நண்பர் கோவிந்தன் உஷாரானார். என் தர்ம பத்தினிக்கு அடுத்தபடியாக இந்த உலகத்திலேயே என் மீது தாய்ப் பாசத்தைப் பொழிபவர் இந்த கோவிந்தன்தான்.  ஆணாக இருந்தாலும் தலை முதல் கால் வரை அவர் ஒரு தாய்தான்.  என் மீது அப்படி ஒரு அன்பு, கரிசனம், அக்கறை. 

ஒருநாள் புக்ஃபேரில் வைத்து எங்கள் ‘உறவை’ நிலைநாட்டினாள் பச்சைக் கண்.  வேறு என்ன, கட்டி அணைத்தல், கன்னத்தில் முத்தம், இத்யாதி.  பக்கத்தில் இருந்த கோவிந்தன் கொலைவெறி ஆகி விட்டார்.  ஏனென்றால், அவர் கேட்ட போதெல்லாம் நான் எனக்கும் பச்சைக் கண்ணுக்கும் எதுவுமே இல்லை, வெறும் நட்புதான் என்று சொல்லி வந்தேன்.  ஆனால் இப்போது?  பச்சைக் கண் அணைத்த அணைப்புக்கும் கொடுத்த கட்டி முத்தத்துக்கும் என்ன அர்த்தம்? 

அப்போதுதான் வந்தது என் பிறந்த நாள்.  என் நண்பர் ஒருவர் எம்சிசியில் வைத்து எனக்கும் நண்பர்களுக்கும் விருந்து கொடுத்தார்.  பிறந்த நாள் என்பதால் கொஞ்சம் அதிகமாக வைன் அருந்தி விட்டேன் போல. அப்போதுதான் அங்கே வந்தாள் பச்சைக் கண்.  அவளை நான் அழைக்கவில்லையே?  அது கோவிந்தனின் சதித் திட்டம் என்று மறுநாள்தான் தெரிந்தது.  ஏனென்றால், அங்கே இருந்த கோஷ்டியில் பச்சைக் கண்ணின் தொலைபேசி எண் தெரிந்திருந்த ஒரே நபர் கோவிந்தன்தான்.

நீங்கள் குடிக்கும் வழக்கம் உள்ளவரா?  அப்படியானால் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  குடித்தால் நம் மனதில் உள்ள தடைகள் கொஞ்சம் அகன்று விடும்.  அதற்காக “போதை” என்று சொல்லி பெண்களின் உதட்டையும் முகத்தையும் தொடுவதை நான் சொல்லவில்லை.  மனத்தடை அகன்று விடும் என்றால், நீங்கள் டான்ஸ் ஆடும் விருப்பம் உள்ளவராக இருந்து டான்ஸ் ஆட வெட்கப்படுபவராகவும் இருந்தால், கொஞ்சம் குடித்தால் மனத்தடை இன்றி ஆடலாம். 

பச்சைக் கண் என் பக்கத்தில் இருந்த நண்பரை வேறு இடம் அனுப்பி விட்டு என் அருகில் அமர்ந்து கொண்டாள்.  பொது இடம் இல்லையா, வழக்கம் போல் அணைப்பு, கட்டி முத்தம், இத்யாதி.  அவள் ஒரு முத்தம் கொடுத்தால் நான் இரண்டாகத் திருப்பினேன்.  வைன்.  அவள் மூன்றாக அடித்தாள்.  அதற்கு நான் என்ன செய்தேன் என்று ஞாபகம் இல்லை.

மறுநாள்தான் முதல் நாள் நடந்த அசம்பாவிதங்கள் எல்லாம் கோவிந்தன் மூலமாக எனக்குத் தெரிய வந்தன. 

நான் கோவிந்தனிடம் கேட்டேன், ஏய்யா, நான் எவளோடு எப்படியிருந்தால் உமக்கு என்ன?  உமக்குக் கிடைக்கவில்லை என்ற பொறாமைதானே?

அட லூசு, உமக்கு உம்முடைய கொக்கரக்கோ மாதிரி திறமை போதாதுங்காணும், நீர் மாட்டிக் கொள்வீர்.  ரொம்ப கஷ்டப்பட்டு இவ்வளவு பெரிய இடத்துக்கு வந்திருக்கிறீர்.  பெண் பிரச்சினையில் மாட்டிக் கொண்டால் என்ன ஆகும், தெரியும்தானே? தருண் தேஜ்பாலுக்கு என்ன நடந்தது?  அவர் உமக்கு நண்பர்தானே?  இப்போது உரசிக் கொண்டு பழகி விட்டு நாளையே “சாருதான் என்னைக் கெடுத்தான்” என்று அந்தப் பெண் சொன்னால் என்னய்யா செய்வீர்?  அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை என்று சொன்னால் ஒரு பயல் நம்புவானா?  அதிலும் அந்தப் பெண்ணுக்கு எத்தனை வயது?  இருபத்தைந்து?  ம்?  திருமணமும் ஆகவில்லை.  உம்மை நான் பெண்களோடு பழகாதீர் என்று சொல்லவில்லை.  திருமணமாகி செட்டில் ஆகி விட்ட பெண்ணோடு பழகும்.  பிரச்சினை இல்லை.  சின்னப் பெண்களோடு பழகவே பழகாதீர்.

கோவிந்தன் அடித்த நீண்ட லெக்சரை இங்கே சுருக்கிக் கொடுத்திருக்கிறேன். 

அப்போதிருந்துதான் நான் முடிவு செய்தேன், இனிமேல் நான் குடிக்கும் போது எனக்கு மிக நெருக்கமான நண்பர்கள் மட்டுமே என் உடன் இருக்க வேண்டும் என்று.  நான் யாருடனாவது ’ரிலேஷன்ஷிப்’பில் இருக்கிறேனா இல்லையா என்று உளவு பார்ப்பவர்களோடும், பொது இடத்தில் ஒரு மாதிரி, தனியிடத்தில் ஒரு மாதிரி என்று பழகும் டகால்டி பேர்வழிகளோடும் குடிக்கவே கூடாது என்று என் தாய் ஸ்மஷான் தாரா மீது சத்தியம் செய்தேன். 

இந்தப் பின்னணியோடு ஆரோவில் வாருங்கள்.  சனிக்கிழமை வாசகர் வட்டச் சந்திப்பு முடிந்து இரவு எட்டு மணி அளவில் நண்பர்கள் சந்திக்கிறோம்.  நான், கொக்கரக்கோ, வினித், ஒளி முருகவேள், பாண்டியன். மற்றும் ஒரு நபர்.  யார் அந்த நபர்?  அன்றைய தினம் நடந்த வாசகர் வட்ட சந்திப்புக்கு வந்தவர்.  பாண்டிச்சேரியை சேர்ந்தவர். பெயர் கந்தசாமி.  வயது முப்பதுக்குள் இருக்கும். 

எட்டு மணிக்கு நாங்கள் கச்சேரியை ஆரம்பிக்க வேண்டும். கந்தசாமியோ கிளம்பாமல் மொக்கை போட்டுக் கொண்டே இருக்கிறார்.  நிறுத்தாமல் தொடர்ந்த பேச்சு.  தேன் கூட்டைக் கலைத்தால் தேனீக்கள் எப்படி பொங்கிப் பொங்கி வருமோ அப்படி அவர் வாயிலிருந்து வருகின்றன வார்த்தைகள்.  அதோடு போகாமல், என்னிடம் ”என்ன பியர் வைத்திருக்கிறீர்கள்? ஆரம்பிக்கலாமா?  இன்று இரவு நான் சாருவோடு நேரம் செலவழிக்க நினைத்திருக்கிறேன்” என்கிறார். 

என் தலைக்குப் பொங்கி விட்டது ரத்தம்.  ஏங்கடா, விபச்சாரியாக இருந்தால் கூட அவள் அனுமதியோடுதானே அவளோடு இரவு தங்க முடியும்?  நான் என்ன விபச்சாரியை விடக் கேடு கெட்டுப் போய் விட்டேனா?  நான்தான் யாரும் என்னோடு இரவு தங்க முடியாது, தங்கக் கூடாது என்று தெள்ளத் தெளிவாக எழுதியிருந்தேனே?  அப்புறமும் ஏன்டா இப்படித் தாலியறுக்கிறீர்கள்?  எல்லாம் உள்ளுக்குள் நினைத்துக் கொண்டதுதான். 

தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார் கந்தசாமி.  வினித், ஒளி, பாண்டியன் மூவரும் அமைதியாக இருந்தார்கள்.  பாண்டியனும் எப்போதும் பேசிக் கொண்டிருப்பவர்தான்.  ஆனாலும் அப்போது கொஞ்சம் அமைதி காத்தார்.  கொக்கரக்கோ இன்னும் கச்சேரிக்குத் தயாராகவில்லை.  

என்னுடைய அணுகுமுறை எப்படியென்றால், எதையும் முகத்துக்கு நேராக சொல்லி விடுவதுதான்.  “இதோ பாருங்கள் கந்தசாமி, இரவு நான் நண்பர்களுடன் பேச வேண்டும்.  வீட்டுச் சிறையிலிருந்து பரோலில் வருவது போல் வந்திருக்கிறேன்.  இதை விட்டால் இனிமேல் கொக்கரக்கோவைப் பார்த்துப் பேச இரண்டு மாதங்கள் கூட ஆகலாம்.  நீங்கள் கிளம்புங்கள்.” 

எனக்கு இப்போது ரஷ்யன் செண்டரில் நடந்த ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது.  நானும் என் நாவலை மொழிபெயர்த்துக் கொண்டிருந்த சிநேகிதியும் ரஷ்யன் செண்டரில் உள்ள கஃபேவில் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தோம்.  அப்போது என் வாசகர் என்று சொல்லிக் கொண்ட ஒருவர் வந்து எந்தத் தயக்கமும் இல்லாமல் எங்களோடு ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டுக் கொண்டு அமர்ந்தார்.  பார்க்க கனவான் போல் தெரிந்தார்.  நான் மிகவும் கடுமையான தொனியில் “நீங்கள் இந்த இடத்திலிருந்து உடனடியாக எழுந்து கொள்ளுங்கள், இப்போது நான் உங்களோடு பேசத் தயாராக இல்லை” என்று பளிச்சென்று சொல்லி விட்டேன்.

அதேபோல் இந்தக் கந்தசாமியிடமும் சொல்லி விடலாம்.  ஆனால் அப்போது அங்கே வந்து சேர்ந்த கொக்கரக்கோ ”அப்படியெல்லாம் முகத்தில் அடித்தாற்போல் சொல்ல வேண்டாம், நீங்களும் நானும் வெளியே ஒரு நண்பர் வீட்டுக்கு சாப்பிடப் போகிறோம் என்று சொல்லி கிளம்ப எத்தனித்தால் கந்தசாமியும் கிளம்பிப் போய் விடுவார்” என்றார்.

அதுவும் சரியாகத்தான் தோன்றியது.  ”சிற்றரசு என்று ஒரு நண்பர் இங்கே இருக்கிறார், அவர் வீட்டுக்கு நானும் கொக்கரக்கோவும் டின்னருக்குக் கிளம்புகிறோம்” என்று கந்தசாமியிடம் சொன்னேன்.

அவர் வீடு எங்கே இருக்கிறது என்று கேட்டார் கந்தசாமி.

சுத்தம்.  இப்படிக் கேள்வி கேட்டால் நான் உளறி விடுவேன்.  ஆனால் கொக்கரக்கோ சமயோஜிதமாக குறுக்கே விழுந்து ஒரு ரோட்டின் பெயரைச் சொன்னார். 

அந்த ரோடு முடியும்போது ஒரு மேம்பாலம் வருகிறதே, அதற்கு முன்னாலா பின்னாலா என்று அப்பாவியாகக் கேட்டார் கந்தசாமி. 

“இல்லை, மேம்பாலத்தில் ஏறாமல் கீழாலேயே போய் இடது பக்கம் திரும்ப வேண்டும்.”

“அங்கே இடது பக்கம் சாலை இல்லையே?”

”போய் ரொம்ப நாள் ஆகிறது.  சிற்றரசுவிடம் ஃபோன் பண்ணிக் கேட்டுக் கொள்கிறோம்.  சரி, இப்போதே லேட்டாகி விட்டது. கிளம்புகிறோம்.”

நானும் உடை மாற்றிக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி, “சரி கந்தசாமி, நீங்களும் கிளம்புங்கள், மறுபடியும் சாவகாசமாக ஒருநாள் சந்திப்போம்” என்று எழுந்தேன்.  பிறகு கந்தசாமியை அணைத்து விடை கொடுத்து விட்டு என் அறைக்குள் வந்தேன். 

ஐந்து நிமிடம் ஆயிற்று.  கந்தசாமியின் குரல் கேட்டுக் கொண்டேயிருந்ததால் நான் வெளியே போகவில்லை.  பத்து நிமிடம் கடந்தும் கந்தசாமியின் குரல் கேட்டுக் கொண்டே இருந்தது. என் பொறுமையை இழந்தேன்.  ஆனாலும் வெளியே செல்லத் துணிவில்லை.  கந்தசாமியின் குரலும் பதிலுக்கு பாண்டியனின் குரலும் கேட்டுக் கொண்டே இருந்தது. 

அப்போது உள்ளே நுழைந்த கொக்கரக்கோவிடம் நான் ரகசியமான குரலில் ஆனால் ஆவேசமாக, “என்னங்க இது, கட்டிப்புடிச்சி விடை குடுத்துட்டு வந்தும் இன்னும் ஒக்கார்ந்திருக்கான், என்ன இது அந்யாயம்” என்று பொருமினேன்.  

”கொஞ்சம் பொறுங்கள் சாரு, இப்போது கந்தசாமி உட்கார்ந்திருப்பது அவர் தவறு இல்லை.  பாண்டியன்தான் அவரை உட்காரச் சொல்லி விட்டார்.  அதை நான் அப்புறம் விரிவாகச் சொல்கிறேன்.  இப்போது அவரை இங்கிருந்து கிளப்ப எனக்கு ஒரு பத்து நிமிடம் கொடுங்கள், அதற்குள் ஆளை அனுப்பி விடுகிறேன், அதுவரை நீங்கள் இங்கேயே இருந்து கொள்ளுங்கள், இந்தாருங்கள் உங்கள் லேப்டாப், இதைப் பார்த்துக் கொண்டிருங்கள்” என்றார்.  நானும் லேப்டாப்பை வாங்கிக் கொண்டு கட்டிலில் அமர்ந்தேன்.  ஏதோ கடன்காரனுக்கு பயந்து கொண்டு பதுங்கியதைப் போல் இருந்தது.  

மணி எட்டரை.  ஒன்பது வரை வெளியேயிருந்து ஒரு தகவலும் இல்லை.  கொக்கரக்கோ விவரமானவர் ஆயிற்றே, இத்தனை நேரமாகவா கந்தசாமியை வெளியேற்ற முடியவில்லை?  வெளியே எட்டிப் பார்க்கலாமா வேண்டாமா என்று யோசனையாக இருந்தது.

ஒன்பது மணிக்கு கொக்கரக்கோ ஆர்ப்பாட்டமாக அறைக்குள் வந்து வெளிய வாங்க, ஆள் போயாச்சு என்றார்.

வெளியே வந்த போது கந்தசாமியையும் காணோம்.  பாண்டியனையும் காணோம்.    

“அது பெரிய கதை. நீங்கள் அந்த ஆளுக்கு விடை கொடுத்து விட்டு உள்ளே போன பிறகு அந்த ஆளும் கிளம்பத்தான் செய்தான்.  அதற்குள் உங்கள் பாண்டியன் குறுக்கே புகுந்து கந்தசாமியிடம் ‘உங்கள் வீடு எங்கே?’ என்று கேட்க, அதற்கு அவன், ‘இதோ பத்து நிமிட தூரத்தில்தான்’ என்று சொல்ல, பதிலுக்கு பாண்டியன், ‘அப்படியானால் இங்கேயே இருந்து விட்டு அப்புறமாகப் போங்கள், நாம் பேசிக் கொண்டிருக்கலாம்’ என்று அவனை உட்கார வைத்து விட்டார்.  அதற்குப் பிறகு நான் என்ன செய்யலாம் என்று யோசித்து, பாண்டியனை கிச்சனுக்குள் அழைத்துச் சென்று விஷயத்தை விளக்கி ’சாரு, நம் எல்லார் மீதும் கொலைவெறியில் இருக்கிறார்’ என்று ஒரு கொள்ளியையும் சொருகி ‘இப்போது நீர் என்ன செய்வீரோ தெரியாது, கிளம்பிப் போக இருந்தவனைப் பிடித்து உட்கார வைத்து விட்டீர், இன்னும் கொஞ்ச நேரத்தில் இவனை நீர்தான் இங்கேயிருந்து அப்புறப்படுத்தியாக வேண்டும்’ என்று மிரட்டினேன்.  அதற்குப் பிறகு பாண்டியன் தனக்கு அவசரமாக ஒரு மாத்திரை வாங்க வேண்டியிருப்பதாகவும் கந்தசாமியின் பைக்கில் தன்னை ஒரு மருந்துக் கடையில் கொண்டு போய் விட்டு விட்டால், பிறகு தான் நடந்தே திரும்பி வந்து விடுவதாகவும் சொல்ல, கந்தசாமியும் பாண்டியனும் கிளம்பிப் போனார்கள்.  இப்போது பாண்டியனை கந்தசாமி மருந்துக் கடையில் விட்டிருப்பார்.  மருந்தை வாங்கிக் கொண்டு பாண்டியன் இந்தக் காட்டுப் பாதையில் இரவு நேரத்தில் நடந்து வருவதை நினைத்தால் அச்சமாக இருக்கிறது” என்றார் கொக்கரக்கோ. 

கடைசியில் கொக்கரக்கோ சொன்னபடி ஒன்றரை கிலோமீட்டர் தூரம் வெளிச்சமே இல்லாத காட்டுப் பாதையில் நடந்துதான் வந்து சேர்ந்தார் பாண்டியன்.  

கச்சேரியிலும் பாண்டியனைத் திருந்திய மனிதனாகப் பார்க்க முடியவில்லை.  ஏதோ பேச்சு நோய் வந்தது போல் பேசிக் கொண்டே இருந்தார்.  நான் எத்தனை எச்சரித்தும் கேட்கவில்லை.  கேட்கும் நிலையில் அவர் இல்லை.  சரக் சரக் என்று ஒரு எட்டு ரவுண்டு விஸ்கியை ஏற்றிக் கொண்டு ஏதேதோ பேசிக் கொண்டே இருந்தார்.  பிறகு சீக்கிரமாகவே போய் தூங்கி விட்டார். 

ம்ஹும், அது அத்தனை சுலபமாக நடக்கவில்லை.  பாண்டியன் அன்று இரவு குடிக்க நினைத்திருக்கிறார்.  நினைத்தால் குடியை வாங்கிக் கொண்டு வந்திருக்க வேண்டும்.  சரி, சரக்கு வாங்குவதற்காக சரக்கு அடிக்காத வினித் ஊருக்குள் செல்கிறார்.  வினித் கடைக்குப் போய்ச் சேர்ந்த சமயத்தில் பாண்டியன் வினித்துக்கு ஃபோன் பண்ணி எனக்கும் ஏதாவது சரக்கு வாங்கி வந்து விடுங்கள், வந்ததும் பணம் தந்து விடுகிறேன் என்கிறார்.

என்ன சரக்கு?

ஏதாவது வாங்கி வாங்க, காஸ்ட்லியா.

இங்கே நெப்போலியன் காலத்திய ரெமி மார்ட்டின் இருக்கு.  ஒரு லட்சம் ரூபாய். 

ஐயோ வினித்.  அவ்ளோ காஸ்ட்லி வேண்டாம்.  கொஞ்சம் கம்மியா. 

ஓல்ட் மாங்க் ரம் இருக்கு.  —————— ரூபாய்.

வேணாம், வேணாம்.  நான் ரம் அடிக்க மாட்டேன். 

சரி, வேற என்ன வேணும்?  இங்கே ரம், விஸ்கி, பிராந்தி, ஜின், வோட்கா, வைன்னு நிறைய வரைட்டி இருக்கு.

விஸ்கி வாங்கி வாங்க, காஸ்ட்லியா.

சரி, சிங்கிள் மால்ட் விஸ்கி இருக்கு.  —————-  ரூபாய். 

ஐயோ, அவ்ளோ காஸ்ட்லியா வேணாம்.  கொஞ்சம் கம்மியா.

—————————- விஸ்கி இருக்கு.  —————- ரூபாய்.

வினித், ப்ளீஸ்.  இவ்ளோ சீப்பா வேணாம்.  இன்னும் கொஞ்சம் காஸ்ட்லியா. 

இப்படியாக இந்தப் பஞ்சாயத்து ஒரு மாதிரி முடிவுக்கு வந்து பாண்டியனுக்குத் தோதான சரக்கை வாங்கி வந்திருக்கிறார் வினித். 

பத்து நாள் பட்டினி கிடந்தவன் சாப்பாட்டில் விழுவது போல் சரக் சரக்கென்று சரக்கை அடித்த பாண்டியன் கையை நீட்டி நீட்டி ஆவேசமாகப் பேச ஆரம்பிக்க ஒளியும் வினித்தும் நாற்காலியை பின்னுக்கு நகர்த்திப் போட்டுக் கொண்டார்களாம்.  இதெல்லாம் வினித் அப்புறமாக என்னிடம் சொன்னது.  அப்படியும் அடங்கவில்லை பாண்டியனின் ஆவேசப் பேச்சு.  அறிஞர் அண்ணாவின் வழித் தோன்றல் போல.  மீண்டும் மீண்டும் கையை நீட்டி நீட்டிப் பேசுகிறார் பாண்டியன்.  அப்போது வினித் ஒளியிடம் “அவர் விரல் மட்டும் சாரு மீது படட்டும், அப்ப இருக்கு கச்சேரி” என்று சொல்லியிருக்கிறார். 

ஆனால் கடைசி வரை சம்பவம் நடக்கவில்லை. 

ஏன் வினித்?

நீங்கள் கொஞ்சம் பின்னுக்கு சாய்ந்து அமர்ந்திருந்தீர்கள் சாரு.  அதனால் அவர் விரல் உங்கள் மீது படவில்லை.

அன்றைய இரவு, பாண்டியன் போய்த் தூங்கிய பிறகுதான் நாங்கள் பேச ஆரம்பித்தோம். அப்படியே பேசிக் கொண்டிருந்ததில் உறங்குவதற்குக் காலை நாலரை மணி ஆகி விட்டது.  

எவ்வளவு தாமதமாக உறங்கினாலும் காலையில் எழுந்து விடும் பழக்கம் உள்ளவன் என்பதால் எட்டரைக்கு எழுந்தேன்.  வினித் எங்களுக்கு முன்பே உறங்கப் போய் விட்டதால் அவரும் பாண்டியனும் ஒளி முருகவேளும் இருந்தார்கள்.  பாண்டியன் என் உற்ற நண்பர்.  எனக்குப் பலவிதமான உதவிகளைச் செய்து கொண்டிருப்பவர். 

நான் முந்தின தினம் – சனிக்கிழமை – மதியம் கொஞ்சம் குஸ்கா சாப்பிட்டதோடு சரி.  பந்திக்கு முந்தாததால் குஸ்காதான் மிஞ்சியது.  நான் இரவு உணவு எடுத்துக் கொள்வதில்லை.  ஆக, நான் சாப்பிட்டு பதினெட்டு மணி நேரம் ஆகியிருந்தது.  கொலைப் பசி.

இந்த குஸ்கா கதையையும் இங்கே கொஞ்சம் சொல்ல வேண்டும்.  அன்றைய தினம் வாசகர் வட்ட நண்பர்கள் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி இரண்டையும்தான் வரவழைத்திருந்திருக்கிறார்கள்.  ஆனால் யாருமே சிக்கன் பிரியாணியைத் தொடவில்லை.  காரணம், தமிழ்நாட்டில் நல்ல தரமான மட்டன் பிரியாணியே கிடைப்பதில்லை.  அதனால்தான் எல்லோரும் மட்டன் பிரியாணி பக்கிகளாக இருக்கிறார்கள். நான் உட்பட.  அதுவும் தவிர, எனக்கு சிக்கன் விஷயமாக எதுவுமே பிடிக்காது.  ஏனென்றால், தமிழ்நாடு முழுவதுமே சிக்கன் என்றால் அது நார் நாராகத்தான் இருக்கிறது.  அதனால் நான் சிக்கனைத் தொடுவதே இல்லை. 

”இந்த கொலைப்பசி என்ற வார்த்தை இனி என் காதிலேயே விழக் கூடாது” என்று சொல்லி என்னுடைய கைபேசியிலேயே ஸ்விக்கி செயலியையும் போட்டுக் கொடுத்திருந்தார் கொக்கரக்கோ.  ஏனென்றால், கடந்த பத்து ஆண்டுகளாக நடந்து வரும் எல்லா வாசகர் வட்ட சந்திப்புகளிலும் நான் எட்டு மணிக்கு எழுந்து கொள்வேன்.  சாப்பிட்டு பதினெட்டு மணி நேரமோ இருபது மணி நேரமோ ஆகியிருக்கும்.  ஆனால் நான் தங்கியிருக்கும் இடத்தில் காலை உணவுக்கு எந்த வழியும் இருக்காது.  நாங்கள் கடலோரத்திலோ மலையடிவாரத்திலோ வனப்பிரதேசங்களிலோதான் தங்குவோம் என்பதால் காலை உணவு என்பது மிகவும் கவனத்தோடு முந்தின இரவே திட்டமிடப்பட வேண்டிய விஷயம்.  ஒரே வழி, முந்தின தினமே நிறைய பழங்களை வாங்கி வைத்துக் கொள்வதுதான்.   

ஆனால் நாங்கள் அப்போது தங்கியிருந்த ஆரோவில் வனப்பகுதியில் அதற்கெல்லாம் அவசியம் இருக்கவில்லை.  வனத்துக்குள் ஸ்விக்கி ஆட்கள் வருகிறார்கள்.  அல்லது, வண்டியை எடுத்துக் கொண்டு போனால் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் பலவிதமான சாப்பாட்டுக் கடைகளும் நவீனமான உணவு விடுதிகளும் உள்ளன.  எனக்கு வண்டி ஓட்டத் தெரியாது.  அதனால் எட்டரை மணிக்கு ஸ்விக்கி போட்டால் ஒன்பது மணிக்கு உணவு வந்து விடும்.  ஆனாலும் எட்டு மணியிலிருந்து ஒன்பது வரை நான் கொலைப்பசியில் துடிப்பேன்.  அதைத் தவிர்ப்பதற்காகத்தான் என் ஃபோனில் ஸ்விக்கி செயலியைப் போட்டுக் கொடுத்தார் கொக்கரக்கோ.  (கொக்கரக்கோ பொதுவாக பதினோரு மணிக்குத்தான் எழுந்து கொள்வார் என்பதால் எனக்குக் காலை உணவு ஏற்பாடு செய்யும் வேலைக்கு மட்டும் அவரை எதிர்பார்க்க முடியாது.)

சரி, டிஃபனுக்கு என்ன ஏற்பாடு என்று வினித்திடமும் ஒளியிடமும் பாண்டியனிடமும் கேட்டேன்.  அப்போது பாண்டியன் முன்வந்து “என் டிரைவர் இந்த ஊர்தான், அதனால் ஒரு நல்ல இடத்தில் நமக்கு டிஃபன் வாங்கி வருகிறார்” என்றார். 

”எப்போது கிளம்பினார்?”

ஏனென்றால், அப்போதே மணி எட்டரை. 

”இப்போதுதான் கிளம்பினார்.  இதோ பத்து நிமிடத்தில் வந்து விடுவார்” என்றார் பாண்டியன்.   

உண்மையில் காரை எடுத்துக் கொண்டு போனால் மெயின் ரோடில் டிஃபன் வாங்கி வர அதிக பட்சம் இருபது நிமிடம் ஆகலாம். 

ஒன்பது ஆயிற்று.

ஒன்பதரை ஆயிற்று.

பத்து ஆயிற்று. 

நான் பசியில் துடிக்க ஆரம்பித்து விட்டேன்.  பாண்டியனோ டிரைவரோடு ஃபோனில் பேசியபடியே இருந்தார். 

டிஃபன் மட்டும் வந்தபாடு இல்லை. 

என்னிடம் ”இதோ சார், இதோ சார், இதோ வந்து கொண்டே இருக்கிறார் சார்” என்று ஜல்லியடித்துக் கொண்டிருந்தார் பாண்டியன்.

எனக்கு அந்த வன இல்லத்தையே கொளுத்த வேண்டும் என்ற வெறி ஏற்பட்டது.  பசியில் பைத்தியம் பிடித்து விடும் போல் இருந்தது. 

துரியோதனனின் சாபம் ஞாபகம் வந்தது.  அது என்னவென்றால், துரியோதனனின் சாப்பாட்டுத் தட்டில் கை வைத்து ஒரு கவளம் எடுத்து உண்டால், அடுத்த கவளத்துக்கு அவனால் அதே தட்டில் கை வைக்க முடியாது.  ஒரு கவளம் எடுத்ததுமே மீதி உணவு புழுவாக மாறி விடும்.  எனவே, அவனுக்கான ஒவ்வொரு கவளத்துக்கும் ஒவ்வொரு தட்டு.  அதேபோல் எனக்கு இரண்டு சாபங்கள்.  எப்போது பார்த்தாலும் – குறிப்பாக காலை வேளைகளில் – உணவு கிடைக்காமல் கொலைப்பசியில் வாட வேண்டும்.  இன்னொரு சாபம்.  இலக்கியச் சந்திப்புக்குச் சென்றால் அங்கே வரும் அல்பங்களிடமிருந்து வசை தின்ன வேண்டும். 

பாண்டியனின் டிரைவர் பத்தரை மணிக்கு வந்தார்.  பேயைப் போல் பாய்ந்து பொட்டலத்தைப் பிரித்து ஒரு இட்லியைப் பிட்டு வாயில் போட்டேன்.  அப்படியே சாப்பிட்டும் முடித்திருப்பேன்.  பக்கத்தில் வந்து அமர்ந்த பாண்டியன் – எனக்கு எவ்வளவோ உதவிகள் செய்து கொண்டிருப்பவர் – ஸாரி ஸார் என்றார். 

கொலைப் பசி கொலை வெறியாக மாறி விட்டது.  சாப்பிட ஆரம்பித்த உணவுப் பொட்டலத்தை அப்படியே வைத்து விட்டு எச்சில் கையோடு எழுந்து டிரைவர் முன்னே வந்து நின்று அவரைத் திட்ட ஆரம்பித்தேன். 

ஏய்யா இப்படி எழவு எடுக்கிறீங்க?  இதோட பத்து வருஷமா ஒவ்வொருத்தரா மாத்தி மாத்தி வந்து எழவெடுக்கிறீங்க.  எங்கேர்ந்துய்யா ஒவ்வொருத்தரா வந்து இப்டி எழவெடுக்கிறீங்க.  இங்கேர்ந்து மெயின் ரோட்டுக்குப் போய் டிஃபன் வாங்கிட்டு வர்றதுக்காய்யா ரெண்டு மணி நேரம்?  இருபது நிமிஷ வேலய்யா இது?  உங்களால முடிலேன்னா வேற எவன்ட்டாயவது சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே?  அறிவில்லையா உங்களுக்கு?  செத்திருப்பேன்யா நான்.  என்னைப் பார்த்தா கேணப் புண்டையா தெரியுதா உங்களுக்கெல்லாம்?    கொலைகாரப் பாவிங்களா.  நீங்கதான்யா கொலகாரனுங்க.  மனுசனாய்யா நீங்கள்ளாம்?  ஏன்யா என்னை இப்படிப் பட்டினி போட்டுக் கொல்றீங்க?  என்னைப் பட்டினி போட்டுக் கொல்ல ஒங்களுக்கு எவன்யா ரைட் குடுத்தது?  என்னை விடத் தெருவில சுத்தற நாய்கூடத் தேவலாம்யா… என்னய்யா நெனைச்சிக்கிட்ருக்கீங்க?  மனுசனாய்யா நீங்கள்ளாம்?  கொலகாரப் பாவிங்களா…  இத்தனை நேரம் ஆகும்னு இடையிலேயே ஒரு ஃபோனைப் போட்டு சொல்லித் தொலச்சிருந்தா நானே ஸ்விக்கிலேர்ந்து வரவழைச்சிருப்பேனேய்யா… அதுக்கும் வழியில்லாம இதோ இதோ இதோ இதோ இதோன்னு நொட்டி என்னைக் கொன்னுட்டீங்களேய்யா…  இப்படியே பத்து வருஷமா நடந்துக்கிட்டு இருக்கு.  உள்ளே தூங்கிறார் பாருங்க ஒத்தர்… அவர் மட்டும் எழுந்து வந்தா உங்களை வெட்டிப் போட்ருப்பார்.  ஆமா, பத்து வருஷமா ஒவ்வொரு ஆளா மாத்தி மாத்தி வந்து இப்டி எழவெடுத்துக்கிட்டிருந்தா என்னாய்யா அர்த்தம்?  என்னைப் பட்டினி போட்டுக் கொல்ல உமக்கு என்னய்யா ரைட் இருக்கு? 

இதே ரீதியில் பத்து நிமிடம்.  ஒரு கிலோ மீட்டர் தூரம் கேட்கும் அளவுக்கு சப்தமாக. 

திட்டி விட்டு வந்து மீண்டும் சாப்பிட ஆரம்பித்தேன்.  பாண்டியன் பக்கத்திலேயேதான் இருந்தார். 

மூன்று ஆண்டுகளாக பாண்டியனிடம் சொல்லாமல் இருந்த – வாழ்வில் ஒருபோதுமே சொல்லப் போவதில்லை என்று நினைத்திருந்த விஷயத்தை அவரிடம் அப்போது சொன்னேன்.  மிகக் கடுமையான தொனியில். 

”நீங்க ரொம்பப் பேசுறீங்க பாண்டியன்.  ரொம்ப ரொம்பப் பேசுறீங்க.  நீங்க மட்டும் இப்போ ஸாரி சொல்லாமல் இருந்திருந்தால் நான் பாட்டுக்கு சாப்பிட்டு முடிச்சிருப்பேன்.  நீங்கள் ஸாரி சொன்னதால் மட்டுமே நான் அந்த ஆளைத் திட்டினேன்.  இத்தனை திட்டும் நீங்கள்தான் அவருக்கு வாங்கிக் கொடுத்தீர்கள்.” 

ஏன் இப்படிச் சொன்னேன் என்றால், கடந்த மூன்று ஆண்டுப் பழக்கத்தில் நான் கவனித்தது, இருபது நொடியில் சொல்ல வேண்டியதை பாண்டியன் பத்து நிமிடங்களில் சொல்லுவார்.  எனக்கு மண்டையே வெடித்து விடும் போல் இருக்கும்.  என்ன செய்யட்டும்.  நண்பர்.  எனக்கு மிகப் பெரிய உதவிகள் செய்பவர்.  அன்றைய தினம் ஆரோவில்லில் பசிக் கொடுமையில் சொல்லி விட்டேன். 

இம்மாதிரியேதான் ஏற்காட்டிலும் காலை உணவுக்குப் பிரச்சினை ஆகிக் கொண்டே இருந்த்து.  ஏற்காட்டில் அவ்வளவாக உணவு விடுதிகளும் கிடையாது.  காரையோ பைக்கையோ எடுக்க ஆள் பக்கத்தில் இல்லையென்றால், பட்டினிதான்.  அதனால் நான் ஏற்காடு செல்வதையே நிறுத்தி விட்டேன்.  இப்போது ஆரோவில்…

2

ஆன்மீகச் செயல்பாடு

பெண்களுக்குத்தான் ஈ.எஸ்.பி. என்று சொல்லப்படுகின்ற புலன்களுக்கு அப்பாற்பட்ட உணர்திறன் அதிகம் என்று நம்பப்படுகிறது.  ஆனால் இந்த கோவிந்தனுக்கு எப்படியோ நம்ப முடியாத அளவுக்கு ஈ.எஸ்.பி. அதிகமாக வேலை செய்தது. 

ஒருநாள் கோவிந்தனிடம் சொன்னேன், ”எனக்கும் அந்தப் பச்சைக் கண்ணுக்கும் எந்த உறவும் இல்லய்யா, நட்பு என்று கூட சொல்ல முடியாத அளவுக்குத்தான் பழக்கம், சத்தியமாக வேறு எதுவுமே இல்லை.” 

“வேறு எதுவும் இல்லை என்றால் அதற்காக ஏன் இத்தனை பதறுகிறீர்?”

“ஏனென்றால், ஒரு உத்தமத் தமிழ் எழுத்தாளனாக வாழ்ந்து கொண்டிருக்கும் நான் ஓர் உத்தம மானுடனாகவும் மாற விரும்புகிறேன்.  அப்படியிருக்கும்போது இம்மாதிரி சந்தேகங்களெல்லாம் உத்தம மானுடத்தை நோக்கிய என் பயணத்துக்குத் தடையாக இருக்கும் இல்லையா?  மேலும், ஒரு பெண் மீது வீண் பழி வருவதும் நல்லது இல்லையே?”

“ஆ, என்ன, உத்தமத் தமிழ் எழுத்தாளனா?  நீரா?  இப்படிச் சொல்ல உமக்கு வெட்கமாக இல்லை?  உத்தமத் தமிழ் எழுத்தாளன் என்ற வார்த்தையை வைத்துக் கொண்டு என்னென்ன ஜுகல்பந்தி பண்ணிக் கொண்டிருந்தீர்?  அதெல்லாம் உமக்கு மறந்து விட்டதா?”

“எப்படி மறக்கும்?  ஆனால் நானே ஒரு உத்தமத் தமிழ் எழுத்தாளனாக மாறிய பிறகு அதை எப்படி ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியும்?”

”சரி, அதை விடும்.  நீர் வார்த்தையில் விளையாடுகிறவர். உம்மோடு மல்லுக்கு நிற்க முடியாது.  விஷயத்துக்கு வருவோம்… இறுதியாகக் கேட்கிறேன், உமக்கும் அந்தப் பெண்ணுக்கும் ஒன்றுமே இல்லை?”

“ம்.  ஒன்றுமே இல்லை.  ஏற்கனவே சொன்னேன், நட்பு என்று கூட சொல்ல முடியாது.”

”அப்படியானால் நான் இப்போது கேட்கப் போகும் கேள்விக்கு நீர் உண்மையான பதிலைச் சொல்ல வேண்டும்.  மறைக்கக் கூடாது?”

“ம், கேளும்…”

”சில மாதங்களுக்கு முன் அந்தப் பச்சைக் கண்ணை நீர் ப்ரூ ரூமில் வைத்து ஒருமுறை சந்தித்தீரா?”

“ஒரு முறை என்ன, நாலைந்து முறை சந்தித்திருக்கிறேனே?”

”சரி, அப்படி ஒருமுறை நீர் அவளைச் சந்தித்த போது அவளைத் தொட்டு அவள் தலைக்கும் முதுகுக்கும் மஸாஜ் செய்து கொண்டிருந்தீர், பொது இடம் என்ற பிரக்ஞை கூட உமக்கு இல்லை.  உண்மையா?”

“அடக் கடவுளே, நான் என்ன சொன்னாலும் இப்போது நீர் நம்பப் போவதில்லை.  என்ன நடந்தது என்றால், பச்சைக் கண் அன்றைய தினம் மிகவும் சோர்வாக இருந்தாள்.  என்ன என்று கேட்டேன்.  தலைவலி மண்டையைப் பிளக்கிறது என்றாள்.  தலைக்கு மஸாஜ் பண்ணி விடவா என்று கேட்டேன்.  ஒன்றும் பதில் சொல்லாமல் என் முகத்துக்கு நேரே அவள் தலையைக் குனிந்தாள்.  நான் மஸாஜ் பண்ணி விட்டேன்.  கொஞ்ச நேரம் கழித்து இன்னும் கீழே என்றாள்.  அதனால் கழுத்திலும் மஸாஜ் பண்ணினேன்.  போதும் என்று எழுந்த போது அவள் கண்கள் கலங்கியிருந்தது போல் தோன்றியது.  அதில் ஒன்றும் செண்ட்டி விஷயங்கள் கிடையாது.  உம் மண்டையில் நான் மஸாஜ் செய்தாலும் உம்முடைய கண்கள் கலங்கத்தான் செய்யும்…”

“எவ்வளவு நேரம் மஸாஜ் பண்ணினீர்?”

”இதெல்லாம் என்னய்யா கேள்வி?  பத்துப் பதினைந்து நிமிடம் பண்ணியிருப்பேன்…”

“ஓ… ஆனால் அவளுக்கும் உமக்கும் நட்பு என்று கூட சொல்ல முடியாது?”

“ஆமாம்.  நிச்சயமாக.”

அதற்கு மேல் அந்த விஷயம் முடிவுக்கு வந்தது.  கோவிந்தனுக்கு நான் சொன்னதில் நம்பிக்கை வரவில்லை. ஆனால் இந்தக் கதையைப் படிக்கும் உங்களையும் நான் கோவிந்தனைப் போல் விட்டு விட முடியாது.  இதில் வரும் பெயர்களும் சம்பவங்களும் கற்பனையே என்று எச்சரிக்கையில் சொல்லியிருந்தாலும் இது ஒரு ஆட்டோஃபிக்ஷன் கதை என்பதால் நாம் கொஞ்சம் சமீபத்தில் வெளிவந்த ஒரு கட்டுரையிலிருந்து ஒரு பத்தியை எடுத்துக் கொள்ளலாம்.

“இன்றைய ஆன்மீகவாதிகள் தங்களுக்கென ஒரு பீடம் அமைத்துக்கொண்டு அதிலிருந்து இறங்க மறுக்கின்றனர். அதிகாரம் அவர்களின் போதை வஸ்துவாக இருக்கிறது. இந்த அதிகாரத்தையும் ஒன்றுமில்லாமல் ஆக்குவதுதான் சாருவின் ஆன்மீகம்.  ஒரு உதாரணம் தருகிறேன். லா.ச.ரா.வின் நூற்றாண்டு விழா நடந்த அன்று காலை எங்கள் வீட்டின் சிறிய அறையில் சாரு தரையில் அமர்ந்திருக்கிறார். லா.ச.ரா.வின் புதல்வர் சப்தரிஷியும் கீழே அமர்ந்துவிட்டார். கொஞ்ச நேரத்தில் சப்தரிஷி அவர்களுக்கு கால் வலிக்க ஆரம்பித்துவிட்டது. காலை சற்று நீட்டி உட்காரலாம். ஆனால் எதிரில் சாரு உட்கார்ந்திருக்கிறார் என்று தயங்கி இறுதியாக சாருவிடமே தான் காலை கொஞ்சம் நீட்டிக்கொள்ளலாமா எனக் கேட்டுவிட்டார். அப்போது சாரு சொன்ன பதில்தான் ஆன்மீகத்தின் உச்சம் எனச் சொல்கிறேன்: “காலை என் மடியில் வச்சுகோங்க; நான் பிடித்துவிடுகிறேன்,” என்றார். இதைத்தான் லெவினாஸ் தன்னிலிருந்து பிறருக்குக் (From I to other) கடந்து போவது என்றார்.”*

 ஆக, அன்றைய தினம் ப்ரூ ரூமில் பச்சைக் கண்ணுக்கு நான் ஹெட் மஸாஜ் கொடுத்தது ஓர் ஆன்மீகச் செயல்பாடுதான் என்பதில் ஓர் உத்தமத் தமிழ் எழுத்தாளனாக எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. 

***

3

பசி மற்றும் இம்சை குறித்த ஆட்டோஃபிக்ஷன் கதையின் துயர முடிவு

இந்தக் கதையின் இரண்டாம் பாகத்தோடு கதை முடிந்து விட்டது என்றுதான் நினைத்தேன்.  ”பின்நவீனத்துவக் கதைக்கு ஒரு முறையான முடிவெல்லாம் இருக்க வேண்டியதில்லை என்பது எனக்குத் தெரியும், இருந்தாலும் உங்கள் நண்பன் என்ற முறையில் கேட்கிறேன், அந்தப் பச்சைக் கண்ணோடு இன்னமும் ‘டச்’சில் இருக்கிறீர்களா?” என்று என் மதுரை நண்பர் குமரேசன் கேட்டு விட்டதால் முற்றும் போட்ட கதையை மீண்டும் தொடர வேண்டியிருக்கிறது. எனக்கு புனைகதைகளிலோ கட்டுரைகளிலோ ஆங்கிலம் கலந்து எழுதுவது பிடிக்காது என்ற போதிலும் குமரேசனின் கேள்வியில் இருந்த ‘டச்’ பிடித்துப் போய் விட்டது.  ஏற்கனவே சொன்னேன், பச்சைக் கண்ணுக்கும் எனக்கும் இருந்த பழக்கத்தை நட்பு என்று கூட சொல்ல முடியாது என்று.  அவள் தலையிலும் பின்னங்கழுத்திலும் மஸாஜ் செய்து விட்டதையும் என் பாதிரி நண்பன் வளனின் எழுத்தை வைத்து அது ஓர் ஆன்மீகச் செயல்பாடு என்பதையும் காரண காரியங்களுடன் நிறுவியாயிற்று.  ஆக, பச்சைக் கண்ணுக்கும் எனக்கும் இருந்த பரிச்சயத்தை ‘டச்’ என்று சொல்வதே சாலச் சிறந்த்து. 

குமரேசன் சொல்வது போல் பின்நவீனத்துவக் கதைகளுக்கு முடிவு தேவையில்லைதான்.  வாழ்க்கை என்பதே ஓர் முடிவற்ற பயணம் என்றுதான் முன்னோர்கள் சொல்லிச் சென்றார்கள் என்றாலும் இந்தக் கதைக்கு ஒரு முடிவு தேவைதான் என்று தோன்றியது.  ஏன் என்று மட்டும் கேட்டு விடாதீர்கள், உளற ஆரம்பித்து விடுவேன். 

ஏன் தெரியுமா?  நேற்று நடந்த சம்பவத்தைச் சொல்கிறேன்.  காலையில் எட்டரை மணிக்கு எழுந்து வந்த என் தர்ம பத்தினி “இப்போதெல்லாம் நீ வாக்கிங் போகிறாயா?” என்று கேட்டாள்.  கேட்டதற்குக் காரணம் என்னவென்றால், அவள் ஒன்றரை மாதம் எங்கள் மகன் வீட்டுக்குப் போய் வந்தாள்.  அதனால் கேட்டிருக்கலாம்.  மற்றபடி காலை நேரத்தில் இப்படியெல்லாம் கேள்வி கேட்பவள் அல்ல அவள்.

நான் அவளுடைய கேள்வியால் திக்குமுக்காடிப் போய் விட்டேன்.  இந்த சாதாரண கேள்விக்குப் போய் ஏன் திக்குமுக்காட வேண்டும் என்று திரும்பவும் ஒரு கேள்விக் கணையைத் தொடுத்து என்னை சித்ரவதை செய்யாதீர்கள்.  சமீபத்தில்தான் ஒரு இலக்கியச் சந்திப்பில் வாசகர்கள் என்ற சேடிஸ்டுகளின் கேள்விகளால் ரண காயம் பட்டு மீண்டிருக்கிறேன். 

சிறிது நேரமே திக்குமுக்காடிய நான் “ம், போகிறேனே” என்றேன்.  எங்கே என்றாள்.  இந்தக் கேள்விக்கு நான் திக்குமுக்காடவில்லை.  உடனடியாக நம் வீட்டு மொட்டை மாடி என்றேன்.  ஏனென்றால், அப்போதுதான் மொட்டைமாடியில் வாக்கிங் போய் விட்டுக் கீழே இறங்கியிருந்தேன். 

என்னது, மொட்டை மாடியா?  கிழிஞ்சிது போ.  அங்கே போய் எங்கே வாக்கிங் போவது?  அங்கே போய் நீ ஃபோன்தான் பேசிக் கொண்டிருப்பாய் என்று நக்கல் தொனியில் சொன்னாள் பத்தினி. 

நான் கொலைவெறி ஆகி விட்டேன். 

அதன் பின்னணி என்னவென்றால், இந்தக் குடியிருப்புக்கு வந்த ஐந்து ஆண்டுகளில் ஒரே ஒருமுறை நானும் பத்தினியுமாக மாலை நேரத்தில் மொட்டை மாடிக்குக் காற்று வாங்க செல்லலாம் என்று முடிவு செய்திருந்தோம்.  தோம் என்ன தோம்?  என் பத்தினிதான் கேட்டாள், மொட்டை மாடிக்குப் போகலாமா என்று.  சரி என்றேன். அவளோடு அதுதான் மொட்டை மாடிக்கு முதல் முறை. (அதுவே கடைசி முறையாகவும் அமைந்தது.)  நான் பலமுறை அங்கே போய் கடல் காற்று வாங்கியிருக்கிறேன்.  கல்லெறி தூரத்தில் இருந்தது வங்கக் கடல்.  ஆனால் கடைசி நேரத்தில் நான் வரவில்லை, நீ போவதென்றால் போய்க் கொள் என்று சொல்லி விட்டாள் பத்தினி.  சரி என்று நான் மட்டும் கைபேசியையும் ஏர்பாடையும் எடுத்துக் கொண்டு மேலே போனேன்.  கொக்கரக்கோவுடன் கொஞ்சம் பேச வேண்டியிருந்தது.  வீட்டில் இருக்கும் போது கொக்கரக்கோவுடன் பேச முடியாது.  கொக்கரக்கோவுடன் மட்டும் அல்ல, யாருடனும் பேச முடியாது என்பதுதான் எதார்த்தம்.

அப்படியா இந்தக் குடும்பத்தில் அடக்குமுறை ராஜ்ஜியம் நடந்து கொண்டிருக்கிறது?

இல்லவே இல்லை.  ஆனால் என்னால் எப்படி யாரோடும் ஃபோன் பேச முடியாமல் போகும் என்றால், நேற்று நடந்த சம்பவத்தைச் சொல்கிறேன்.

என்னைப் பற்றிய ஆவணப் பட்த்துக்காக நானும் ஒளி முருகவேளும் தாய்லாந்து போக வேண்டும்.  தாய்லாந்து போக வீசா தேவையில்லை என்றாலும், இன்னும் சர்வதேச அளவில் விமானப் போக்குவரத்து பழைய நிலைக்குத் திரும்பவில்லை.  கொரோனாவினால் மூடப்பட்ட சுற்றுலாத் துறை இன்னமும் சரியாகவில்லை.  உதாரணமாக, தாய்லாந்தின் தென்மூலையில் கிட்டத்தட்ட மலேஷியா அருகில் உள்ள க்ராபியிலிருந்து தாய்லாந்தின் வடகிழக்கு மூலையில் லாவோஸ் எல்லையில் உள்ள உடான் தானி என்ற ஊருக்குப் போக முன்பெல்லாம் ஒரு நாளில் நான்கு விமானங்கள் பறந்தன என்றால், இப்போது நான்கு நாட்களில் ஒரு விமானம் பறந்தது.  அதிலும் சில தினங்களில் டிக்கட் விலை இருபதாயிரம் ரூபாய் என்றால் சில தினங்களில் பத்தாயிரம் ரூபாய்.  ஆக, டிக்கட் விலையோடு எந்தெந்த நாட்களில் விமானம் இருக்கிறது என்பதையெல்லாம் கூட்டிக் கழித்து டிக்கட் போட வேண்டும்.  கிட்டத்தட்ட மூன்று தினங்கள் இரவு பகலாக வேலை செய்தேன், எனக்குக் கட்டணம் கொடுக்க வேண்டும் என்றால் இதற்கு ஒரு லட்சம் ரூபாய் ஆகும், கண்களே பூத்துப் போய் விட்டன என்றார் கொக்கரக்கோ. 

இது பற்றியெல்லாம் கொக்கரக்கோவுடன் பேச வேண்டும். ஆனால் வீட்டில் பேச முடியாது.  ஏன் என்றுதான் விளக்க முயற்சி செய்கிறேன்.  முடியவில்லை.  யாரோடும் பேசக் கூடாது என்று தடையெல்லாம் இல்லை.  ஆனாலும் பேச முடியாது. முன்மதியம் பன்னிரண்டே கால் மணிக்கு கொக்கரக்கோவை அழைத்துப் பேச ஆரம்பித்தேன்.  அப்போதுதான் நானும் பத்தினியும் எங்கோ வெளியே போய் விட்டு வந்திருந்தோம்.  அப்போது என் அறைக்குள் நுழைந்த பத்தினி நான் ஃபோனில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்த பிறகும் அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலையின்றி “சாரு, சாதம் வைப்பா, மணி பன்னண்டே கால் ஆச்சுப்பா” என்றாள். 

எனக்குக் கோபம் தலைக்கு ஏறியது.  “அம்மு, வெளியே போய்ட்டு வந்து இன்னும் நான் ஒண்ணுக்குக் கூடப் போகல. பேண்ட்டைக் கூட கழட்டல.  அர்ஜெண்ட்டா தாய்லாந்து ட்ரிப் பத்திப் பேசிட்டு இருக்கேன்” என்றேன். 

சரி என்று திரும்பியவள் மீண்டும் உள்ளே வந்து மேஜையின் மீது கிடந்த என் ஃபோனில் யாரோடு பேசிக் கொண்டிருக்கிறேன் என்று எட்டிப் பார்த்தாள்.  நான் ஏர்பாட் மாட்டிக் கொண்டு பேசுவதால் ஃபோன் மேஜையில்தான் இருக்கும்.  ஃபோனில் கொக்கரக்கோவின் பெயர் இருந்திருந்தால் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு எனக்குக் கிடைத்திருக்கும் கச்சேரி.  ஆனால் அதிர்ஷ்டவசமாக பத்தினி என் ஃபோனை எட்டிப் பார்த்தபோது ஃபோனில் வெளிச்சம் இல்லை.  இருளாக இருந்ததால் பெயர் தெரியவில்லை.  தப்பினேன்.  ஏனென்றால், பத்தினிக்கு கொக்கரக்கோதான் என்னைக் கெடுப்பதாக ஒரு எண்ணம்.

”கொக்கரக்கோவுடன் மட்டும் இளித்து இளித்துப் பேச முடிகிறது, என்னிடம்தான் நீ வள் வள்ளென்று விழுகிறாய்” என்று ஆரம்பித்து இரண்டு மணி நேரம் ஓடும் கச்சேரி.  சங்கீதக் கச்சேரிகளில் சில கலைஞர்கள் நாதப் பிரம்மத்தோடு தாங்களும் சேர்ந்து செல்லும் பயணத்தில் கண்டடைந்த பரவசத்தின் உச்சத்தைப் பலவிதமாக வெளிப்படுத்துவார்கள்.  அதேபோல் இந்தக் கச்சேரியிலும் பத்தினி வெளிப்படுத்துவாள். விளக்குமாற்றை எடுத்து அதன் தோகைப் பகுதியைக் கையில் பிடித்துக் கொண்டு மட்டைப் பகுதியால் சுவரை ஓங்கி ஓங்கி அடிப்பாள்.  சுவர்தான் கொக்கரக்கோ என்று நினைத்துக் கொள்வேன். 

இதனால் எல்லாம் நான் ஒருபோதும் பாதிக்கப்பட்டதில்லை.  ஏனென்றால், நியாயமில்லாமல் நீங்கள் ஒருவரை சபித்தால் அந்த சாபம் அவரது கிரீடத்தில் இன்னொரு சிறகாகத்தான் போய் ஒட்டிக் கொள்ளும்.  உண்மையில் அந்த சாபமெல்லாம் ஆசீர்வாதம் என்றே நாம் எடுத்துக் கொள்ள வேண்டும்.  அதிலும் என் பத்தினியைப் போன்ற ஒரு மகாத்மாவின் சாபம் நிச்சயம் வரமாகத்தான் மாறும் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை என்பதால் அவ்வளவாக அது பற்றிப் பொருட்படுத்த மாட்டேன். 

வீட்டில் ஃபோன் பேச இயலாது என்பதற்கு இன்னொரு சம்பவம்.  இன்று காலை பத்து மணிக்கு சந்தானம் அழைத்தார். 

சாரூ, நீங்கள் ராஜபாளையம் போறீங்களாமில்லே?  விஸ்வநாதன் சொன்னான்.  அவனும் ராஜபாளையம்தான்.  ஜெயமோகனின் தீவிர விசிறி. 

ஆமாம், அந்தக் கூட்டம் டிசம்பர் முதல் வாரத்தில் இருக்கிறது.  ராஜபாளையத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களிடையே நான் உரையாற்றுகிறேன். 

ஆனால் அது பற்றி இப்போது சந்தானத்திடம் பேசினால் அதைத் தொடர்ந்து வரும் பூகம்பத்தில் வீடே இடிந்து விழுந்து விடும்.  காரணம், டிசம்பரில் பத்தினி மும்பை போகலாம்.  அப்படியானால் நான்தான் வீட்டில் இருக்கும் பத்து பூனைகளையும் பார்த்துக் கொள்ள வேண்டும்.  அப்படியானால் எப்படி நான் ராஜபாளையத்தில் நடக்கும் இலக்கியச் சந்திப்புக்குப் போக முடியும்?

இப்படி ஏன் கூட்டங்களுக்கு ஒப்புக் கொள்கிறாய் என்ற அடுத்த கேள்வி வரும். 

இதற்கு நான் என்ன பதில் சொல்ல முடியும்?  ஆண்டு முழுவதும் – 365 நாளும் நான் மாணவர்களிடமும் இளைஞர்களிடமும் உரையாற்றியாக வேண்டும்.  அந்த அளவுக்கு இங்கே செய்ய வேண்டிய அடிப்படை வேலைகள் இருக்கின்றன.  இதையெல்லாம் யாருக்காவது நான் சொல்லிப் புரிய வைக்க முடியுமா?  இருந்துமே நான் ஆயுள் தண்டனை கைதிக்குக் கிடைக்கும் பரோல் மாதிரிதான் எப்போதாவது வீட்டிலிருந்து வெளியே செல்கிறேன்.

”சரி, நீ என்ன திட்டத்தில் ராஜபாளையம் கூட்டத்துக்கு ஒப்புக் கொண்டாய்?  பத்தினி ஊருக்குப் போயிருந்தால் இந்தப் பத்து பூனைக்குட்டிகளின் கதி?” என்று இந்தக் கதையை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்கள் கேட்கலாம். 

சென்னையிலிருந்து ராஜபாளையம் ஒரு இரவு பயணம்.  அவ்வளவு தூரம் போய் விட்டு என் தாய் ஆண்டாள் வாழ்ந்த மண்ணைப் பார்க்காமல் வர முடியாது.  வில்லிப்புத்தூரும் போக வேண்டும்.  ஆக, அதற்கு ஒரு நாள், ராஜபாளையம் கூட்டத்துக்கு ஒரு நாள்.  இரண்டு பகல், இரண்டு இரவு.  இதற்கு என்னுடைய வீட்டில் வசிக்கும் பத்து பூனைகளுக்கும் ஒரு கேர்டேக்கரைப் போட்டு விட்டுத்தான் போக வேண்டும்.  இதையெல்லாம் இப்போது பேசினால் வீட்டில் பூகம்பம் வெடிக்கும்.  தேவையா?  அதனால் சந்தானத்திடம் அப்புறம் பேசலாம் என்று இரண்டே வார்த்தையில் முடித்துக் கொண்டேன். 

பெரும்பாலும் ஒவ்வொரு ஃபோன் அழைப்புமே இப்படிப்பட்ட வெடிகுண்டுகளையே தாங்கியிருக்கும் என்பதால் நான் எந்த ஃபோன் அழைப்பையுமே எடுப்பதில்லை.

நான் மொட்டைமாடிக்குச் சென்ற போது பத்தினி கூட வரவில்லை என்ற தைரியத்தில் ஏர்பாடையும் எடுத்துச் சென்று கொக்கரக்கோவுடன் பேசியதன் பின்னணி இதுதான்.  ஆனால் பத்தினி திட்டமிட்டுச் செய்தாளா அல்லது சந்தர்ப்பவசமாக அமைந்ததா என்று எனக்குத் தெரியாது. நான் மொட்டைமாடிக்கு வந்த ஐந்து நிமிடங்களிலேயே அவளும் வந்து விட்டாள்.  நான் கொக்கரக்கோவுடன் பேசிக் கொண்டிருக்கிறேன்.  ஆனால் அவள் வந்து விட்டாள் என்பதற்காக பேச்சை நிறுத்தவில்லை.  நாங்கள் என்ன தேசத் துரோக வேலையிலா ஈடுபட்டிருக்கிறோம்?  கொஞ்ச நேரம் பேசி விட்டு நிறுத்தினேன்.  பத்தினியும் எதுவும் சொல்லவில்லை.  இது நடந்து மூன்று ஆண்டுகள் கழித்து இன்று வந்தது பேச்சு.     

”மொட்டை மாடியில் போய் நீ ஃபோன்தானே பேசிக் கொண்டிருப்பாய்?”

எத்தனை கோபம் வந்தாலும் வெளியே காண்பிக்க முடியாது.  கூடாது என்பதுதான் உண்மை.  காண்பித்தால் நமக்கு ரத்த அழுத்தம் ஏறி, பத்தினிக்கும் அழுத்தம் ஏறி, இரண்டு பேருக்கும் மன உளைச்சல் ஆகி, இருவரின் முழுநாளும் வீணாகி விடும்.  அதனால் நான் “ஃபோனெல்லாம் பேச மாட்டேம்மா, ஏர்பாட் போட்டுக் கொண்டு ம்யூசிக்தான் கேட்பேன்” என்றேன். 

உடனடியாக, கண்ணிமைக்கும் நேரத்தில், கையில் நெருப்புப் பட்டு விட்டது போல் ஐயோ ஐயோ என்று அலறினாள் பத்தினி.  பதறிப் போய் எட்டிப் பார்த்தேன். 

“ஐயோ, ஏர்பாட் எல்லாம் போட்டால் மூளைக்கு பாதிப்பு உண்டாகி விடும்… அதையெல்லாம் போட்டு ம்யூசிக் கேட்காதே.”

“அடப் போய்யா, ம்யூசிக் கேட்கலேன்னா எனக்குப் பைத்தியம் பிடித்து விடும்.  அதை விட மற்ற எல்லாமே தேவலாம்” என்று சொல்லி விட்டு என் அறைப்பக்கம் நகர்ந்தேன்.  நகர்ந்ததோடு விட்டிருக்கலாம்.  கொஞ்ச நேரம் கழித்து அவளிடம் திரும்பி வந்து ”நீ என்னை எப்போதும் விமர்சித்துக் கொண்டே இருக்கிறாய்” என்றேன். 

இப்படி நான் சொன்னதற்குக் காரணம், எங்களுடைய ரகசிய மந்திரம் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது என்று அவள் சற்று முன்பு என்னை மட்டம் தட்டிப் பேசியது கூட இருக்கலாம்.   

அந்தச் சம்பவம் இவ்வாறாக நடந்தது: காலையில் எட்டரை மணிக்கு உறங்கி எழுந்து வந்ததும் ”முத்துவுக்கு நீ நம்முடைய ரகசிய மந்திரத்தை அனுப்பி வைத்து விடு, அதைத் தொடர்ந்து கேட்டால் அவருடைய மூளை நலத்துக்கு நல்லது” என்றாள் பத்தினி.

முத்துவை இங்கே நான் அறிமுகம் செய்தாக வேண்டும்.  மத்திய அரசில் பெரிய பதவியில் இருப்பவர்.  முன்பு போபாலில் இருந்தார்.  பத்து ஆண்டுகள் அதே ஊரில் இருந்தபடியால் மாற்றலில் வேறு ஊருக்குப் போக வேண்டும்.  வேறு எங்காவது செல்லுங்கள், சென்னை வேண்டாம் என்றேன்.  நானும் மத்திய அரசு ஊழியனாக இருந்தவன்தான் என்றாலும், முத்து என்னைப் போல் இடைநிலை ஊழியர் அல்ல, அவர் ஐஏஎஸ்.  ஆனால் ஐஏஎஸ் என்றாலும் அந்தப் பதவிக்கான இறுக்கங்கள் இங்கே தமிழ்நாட்டில் அதிகம் என்று எனக்குத் தெரியும்.  என்னுடைய நெருங்கிய நண்பராக இருந்த ஒருவர் வருமான வரித் துறையில் கமிஷனராக இருந்து, மேலிடத்து நெருக்கடிகள் தாங்க முடியாமல் வேலையையே விட்டுப் போய் விட்டார்.  அது என்ன மேலிடத்து நெருக்கடி?  ஊழலுக்குத் துணை போகாமல் அங்கே அவரால் தாக்குப் பிடிக்க முடியவில்லை. 

என் பேச்சைக் கேட்காமல் சென்னை வந்தார் முத்து.  என் வார்த்தை முக்கியம் அல்ல; என் அரசு ஊழிய அனுபவங்களைக் கொண்டு நான் எழுதிய ராஸ லீலா நாவலையாவது படித்திருக்கலாம். அதுவும் இல்லை.  எப்படியோ சென்னை வந்து சேர்ந்து விட்டார் முத்து.  வந்த பிறகு நான் எப்போது ஃபோன் செய்தாலும் தீராத தலைவலியில் இருப்பவரைப் போல் அலுவலக நெருக்கடிகள் பற்றிப் புலம்புவார்.  ஒரே வருடத்தில் மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு அதன் விளைவான பக்கவாதமும் பீடித்துக் கொண்டது.  அதைச் சரி பண்ணுவதற்குத்தான் ரகசிய மந்திரத்தை அனுப்பச் சொன்னாள் பத்தினி. 

பொதுவாக பத்தினி சொல்வதற்கெல்லாம் ஜால்ரா தட்டும் நான் அப்போது அதற்கு இடம் கொடுக்கவில்லை. 

”இல்லை, நான் அனுப்ப மாட்டேன்.  அப்படியெல்லாம் யாருக்கும் அனுப்பி எனக்குப் பழக்கம் இல்லை” என்றேன்.

”ஏன்?”

“அவர் முந்தாநாள் வரை நாஸ்திகராக இருந்தவர்.  அவருக்கு இதிலெல்லாம் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ.  நான் அனுப்ப மாட்டேன்.”

“இல்லை. அனுப்பு.  மூளை நரம்புகளுக்கு இது நல்லது.  ஆனால் உனக்கே நம்முடைய ரகசிய மந்திரத்தின் முக்கியத்துவம் தெரியவில்லை.  நீ எங்கே மற்றவர்களுக்கு அனுப்பப் போகிறாய்?” என்றாள் நக்கலாக. 

எனக்கு சுருக்கென்று குத்தியது.  இந்த ஆன்மீகவாதிகள் எல்லோரையுமே கவனித்திருக்கிறேன்.  தாங்கள் மட்டும்தான் இந்தப் பிரபஞ்சத்தின் ரகசியத்தையே சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டிருப்பது மாதிரி பேசுவார்கள்.  மற்ற அத்தனை பேரும் மடையர்கள்.  இவர்கள் ஞானத்தைக் கண்டடைந்தவர்கள் என்பதால் எப்போது வாய்ப்பு கிடைத்தாலும் நம்முடைய மௌடீகத்தைக் களைய முற்படுவார்கள்.  அந்த முயற்சியில்தான் அப்படிச் சொன்னாள் என் பத்தினி.  அவளுக்கு அந்த மந்திரத்தின் முக்கியத்துவம் தெரியும்.  எனக்குத் தெரியாது.  இந்த அஹங்காரத்தைக் களைவதுதான் ஆன்மீகத்தின் முதல் பாடம் என்பது இதில் உள்ள நகைமுரண்.  

இந்த எண்ண ஓட்டத்துடன், ’ஏன் இது குறித்து அந்தக் காலை நேரத்தில் வம்பு’ என்று நினைத்தபடி “அனுப்புகிறேன், கட்டாயம் அனுப்புகிறேன்” என்றேன்.  ஆனால் இந்த விஷயம் என் மனதில் நன்றாகப் பதிந்து போனது.  பொதுவாகவே மனித சமூகம் அடுத்தவனைத் திருத்துவதிலும் சரி செய்வதிலுமே அதிக கவனம் செலுத்துகிறது.  இதேபோல் ஏற்கனவே ஒருமுறையும் நடந்திருக்கிறது.  ஷோபனா என் சிநேகிதி.  அரசுத் துறையில் பெரிய அதிகாரி.  அவருக்கு ஒருமுறை காலில் சுளுக்கிக் கொண்டு விட்டது.  அந்த சுளுக்குடனேயே நொண்டி நொண்டி என் வீட்டுக்கு வந்தார் ஷோபனா.  மாடி ஏறி வந்ததால் வலி அதிகம் போலும்.  வலி முகத்தில் தெரிந்தது.  உடனடியாக என் பத்தினி ஷோபனாவுக்கு மருத்துவம் சொல்ல ஆரம்பித்தாள். 

அடக் கடவுளே, இன்னும் ஒருவருக்கொருவர் முகமன் கூட சொல்லிக் கொள்ளவில்லை.  தண்ணீர் அருந்தவில்லை.  அதற்குள் மருத்துவமா?  எத்தனை பேர் இதற்குள் ஷோபனாவிடம் மருத்துவம் சொல்லிச் சொல்லி அவரை இதற்குள் சல்லடை ஆக்கியிருப்பார்கள்.  எனக்குக் கோபம் வந்து விட்டது. 

”சும்மா இரும்மா, ஏன் எப்போதும் மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்வதிலேயே குறியாக இருக்கிறாய்?  இப்படி ஒரு உயர்ந்த இடத்தில் நம்மை வைத்துக் கொள்வது ஒரு வியாதி” என்றேன் கடுப்பாக. 

அதற்குப் பிறகு மூன்று நாட்கள் என் பத்தினி என்னோடு பேசவில்லை.       

ஷோபனாவைப் போலவே முத்துவும் ஒரு உயர் அதிகாரி.  அவருடைய சுகவீனத்துக்காக இதுவரை நூறு பேராவது இந்த மந்திர வைத்தியம் மாதிரி வெவ்வேறு வைத்தியங்களைப் பரிந்துரை செய்திருப்பார்கள்.  இதையெல்லாம் கேட்டு நடந்தால் ஒருத்தன் பைத்தியம் ஆகி விட மாட்டானா?  எந்த தைரியத்தில் நான் முத்துவுக்கு இந்த மந்திரத்தை அனுப்பி வைக்கட்டும்?  இந்த மந்திரத்தை உச்சாடனம் செய்யும் பலரை நான் பார்த்திருக்கிறேன்.  அத்தனை பேருமே போட்டி, பொறாமை, வஞ்சம், வன்மம், குரோதம், பேராசை, இச்சை, அஹங்காரம் என்று சகல விதமான சிறுமைத்தனங்களும் நிறைந்தவர்களாக இருப்பதையே காண்கிறேன். 

உதாரணமாக, கொக்கரக்கோவை மன்னிக்கவே மாட்டேன் என்று சொல்லிக் கொண்டிருப்பவள் பத்தினி.  ஆக, ரகசிய மந்திரம் அவளிடம் மனித மாண்பை ஏற்படுத்தவில்லை. 

கொக்கரக்கோ உனக்கு என்ன செய்தார் அம்மணி?

என் வாழ்க்கையைப் பறித்துக் கொண்டார். 

நான் உன் அருகிலேயேதானே இருக்கிறேன்?

அது அல்ல.  முன்பெல்லாம் நீ வருடாவருடம் புத்தக வெளியீட்டு விழா நடத்துவாய்.  எத்தனையோ பெரிய மனிதர்கள் வருவார்கள்.  இப்போது கொக்கரக்கோ எல்லாவற்றையும் பறித்துக் கொண்டு விட்டான்.  எல்லாமே போச்சு.

இதற்கும் கொக்கரக்கோவுக்கும் சம்பந்தம் இல்லை.  நானே அம்மாதிரி வெளியீட்டு விழாக்களிலிருந்தெல்லாம் விலகி விட்டேன்.

ம்ஹும்.  பத்தினியிடம் எந்த தர்க்கமும் வேலை செய்யவில்லை.  ஆக, நம்முடைய ரகசிய மந்திரத்தினால் உனக்குள் வளர்ந்து கொண்டிருக்கும் குரோதத்தையும் வன்மத்தையும் பழி உணர்வையும் கொஞ்சம் கூட அசைக்க முடியாத போது நான் எப்படி அந்த மந்திரத்தை முத்துவுக்குப் பரிந்துரைக்க முடியும்?  மேலும், நான் என்ன மற்றவர்களின் வாதையை சொஸ்தப்படுத்த வந்திருக்கும் யேசு கிறிஸ்துவா?  அப்படி நான் நினைப்பதே அயோக்கியத்தனம் ஆயிற்றே?  அப்படிப்பட்ட எண்ணத்தை எதிர்த்துத்தானே நான் எழுதிக் கொண்டிருக்கிறேன்?

நினைத்துக் கொண்டேன், சொல்லவில்லை.  இதற்குப் பிறகுதான் மொட்டை மாடி நடைப் பயிற்சி பற்றிய பேச்சு எழுந்தது.  ஒரே ஒரு நாள் மொட்டை மாடியில் நான் கொக்கரக்கோவுடன் ஃபோனில் பேசியது இன்று என்னை மடக்கப் பயன்பட்டது.

“என்னது, நான் உன்னை விமர்சிக்கிறேனா?  நானா உன்னை விமர்சிக்கிறேன்?  இதற்குப் பெயரா விமர்சனம்?  இனிமேல் நான் உன்னிடம் எதுவுமே பேசவில்லை.  வேண்டாம், இனி உங்களை நான் ஒருமையிலும் அழைக்க மாட்டேன்.  இன்றோடு, இந்த நொடியோடு நமக்குள் இருந்த உறவு பந்தம் பாசம் எல்லாம் முடிந்தது.  இனிமேல் நான் வாயைத் திறந்தால் கேளுங்கள்.”

சொல்லி விட்டு ஒருமணி நேரம் விக்கி விக்கி, தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள் பத்தினி.

பத்தினியின் வயது அறுபத்தியிரண்டு.  என் வயது எழுபதைத் தொடப் போகிறது.

இப்படிப்பட்ட சூழலில் நான் எப்படி எழுத முடியும்?  எழுத வேண்டுமானால் வீட்டின் லயம் கெடக் கூடாது. 

நேராக பத்தினியிடம் போய் “அம்மா, தாயே, நீ இல்லாமல் நான் இல்ல,  என் வாழ்க்கை இல்லை,  நீ ஊருக்குப் போயிருந்த ஒன்றரை மாதமும் நான் வெறுமனே வெப்சீரீஸ் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தேன்,  என் எழுத்தின் மீது சத்தியமாகச் சொல்கிறேன்” என்ற ரீதியில் ஒரு அரை மணி நேரம் பேசிய பிறகுதான் வேதாளம் முருங்கை மரத்திலிருந்து இறங்கியது.

மாலையில் “ஆமாம் சாரு, நான் ஒரு கேள்வி கேட்பேன்.  உண்மையைச் சொல்ல வேண்டும்.  நான் உன் கூட இருந்தால் பிடிக்கிறதா, இல்லாவிட்டால் பிடிக்கிறதா?” என்று கேட்டாள் பத்தினி. 

“நீ கூட இருந்தால்தான் என்னால் நிம்மதியாக எழுத முடிகிறது, அதனால் நீ என் கூட இருந்தால்தான் பிடிக்கிறது” என்று சொல்லி வைத்தேன். 

“பொய் பொய்” என்று சத்தமாகச் சொல்லி கலகலவென்று சிரித்தாள்.

பிறகு ஒரு அரை மணி நேரம் கழித்து என்னை நெருங்கி வந்து, “இப்போவெல்லாம் நீ எனக்கு முத்தாவே குடுப்பதில்லை” என்றாள்.  இரண்டு கன்னத்திலும் இரண்டு முத்தம் கொடுத்தேன்.      

இந்தப் பின்னணியில்தான் கோவிந்தன் சொன்னதை நாம் கவனிக்க வேண்டும்.  ”உம்முடைய மனைவி மட்டும் உம்மோடு இல்லாவிட்டால் அந்தக் கொக்கரக்கோவோடு சேர்ந்து குடித்துக் குடித்து நீர் சீக்கிரமே மேலே போய்ச் சேர்ந்து விடுவீர், அதில் எனக்கு சந்தேகமே இல்லை.  உம்முடைய தர்ம பத்தினிதான் உமக்குக் காவல் தெய்வம்.” 

இந்த இடத்தில் ”குடித்துக் குடித்து” என்ற பதப் பிரயோகம் பற்றிக் கொஞ்சம் நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.  அவர் பெயர் ரங்கராஜன்.  என் அத்யந்த நண்பரான சந்தானத்தின் தமையனார்.  சந்தானத்தின் வயது அறுபத்தைந்து.  ரங்கராஜன் வயது தொண்ணூறு.  ஆள் பார்ப்பதற்கு நடிகர் ரங்காராவ் மாதிரி இருப்பார்.  ஆறேகால் அடி உயரம்.  தொப்பை.  கர்லாக்கட்டை மாதிரி கைகளும் தொடைகளும்.  உடம்பில் சட்டை கிடையாது.  நெற்றி, நடுவயிறு, நடு மார்பு, நடு கழுத்து, வயிற்றின் வலப்பக்கம், வலது தோள், கழுத்தின் வலப்பக்கம், வயிற்றின் இடப்பக்கம், இட்து தோள், கழுத்தின் இடப்பக்கம், முதுகில் தண்டுவடத்தின் கீழ்ப்பக்கம், தண்டுவடத்தின் மேல்பக்கம் என்று பன்னிரண்டு இடங்களில் ஸ்ரீசூர்ணம் இட்டு பக்திப் பழமாகக் காட்சியளிப்பார்.   காலையில் ஆறு மணியிலிருந்து ஆறேகால் வரை மெரினா பீச் காந்தி சிலையின் கீழே தலைகீழாக நின்று கொண்டிருப்பார்.  சிரசாசனமாம்.  அவரைச் சுற்றி மேட்டுக்குடியைச் சேர்ந்த கல்லூரி மாணவிகள் கூட்டம் ஒன்று எப்போதும் நின்று கொண்டிருக்கும். காரணம் ஒன்றும் யூகிப்பதற்குச் சிரமம் இல்லை.  இந்தக் காலத்தில் இந்திய மரபு, இந்தியப் பாரம்பரியம் பற்றி அறிந்து கொள்ள மேட்டுக்குடி இளைஞர்கள் விரும்புகிறார்கள். குறிப்பாக, பெண்கள். அதுவும் தவிர நாய் பூனைகளுக்கு உணவிடுவது, வீகன் உணவைக் கடைப்பிடிப்பது, பசுக்களிடம் அன்பு பாராட்டுவது போன்ற ஒரு செயல்பாடுதான் இந்த வைஷ்ணவ யோகியிடம் ஆர்வம் காட்டுவதும்.  ”என்ன இருந்தாலும் தொண்ணூறு வயது முதியவர் அரை மணி நேரம் தலைகீழாக நின்று யோகா செய்கிறார் அல்லவா?  கீழே குனிந்து செருப்பை மாட்டினாலே நமக்குத் தலை வலிக்கிறதே?” என்றார்கள் அந்த மேட்டுக்குடிப் பெண்கள்.  ஒருநாள் நான் கூச்சம் பார்க்காமல் அந்த வைஷ்ணவ யோகியைச் சூழ்ந்திருந்த ஒரு பெண்ணிடம் கேட்ட போது கிடைத்த பதில் அது. 

ஒரு ஊரில் நூறு அசாதாரணர்கள் – எக்ஸெண்ட்ரிக்குகள் – இருந்தால் அதில் தொண்ணூறு பேர் ஸ்ரீவைஷ்ணவராயிருப்பர்.  இதுதான் என் அனுபவம்.  அப்படிப்பட்ட எக்ஸெண்ட்ரிக்குகளில் ஒருவர்தான் இந்த வைஷ்ணவ யோகி.  புல்லட்டில்தான் பீச்சுக்கு வருவார்.  அந்த புல்லட்டும் வித்தியாசமாக இருக்கும்.  பிரார்த்தனை விருட்சங்களில் கயிறும் பைகளும் தொங்கும் இல்லையா, அதேபோல் அந்த புல்லட்டைச் சுற்றிலும் ஒரு இஞ்ச் பாக்கியில்லாமல் பை பையாகத் தொங்கும்.  அந்தப் பைகளில் உள்ள சூர்ணங்களை அவர் யார் யாருக்குத் தேவையோ அவர்களுக்கு வழங்குவார்.  அதோடு கூட புல்லட்டின் முன்பக்கம் எப்போதும் அலறிக் கொண்டிருக்கும் ஒரு ட்ரான்ஸிஸ்டர். பீச்சுக்கு வந்தவுடனே ட்ரான்ஸிஸ்டரை அணைத்து விடுவார்.  யோகா பண்ணும்போது பாட்டுக் கேட்கக் கூடாது போல.  இவரைப் பற்றி சந்தானத்திடம் சொல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டே இருந்தேன்.  ஆனால் சந்தானத்தை சந்திக்கும் போது மறந்து விடும்.  இந்த நிலையில் அந்த வைஷ்ணவ யோகியை வசந்த பாலன் படம் ஒன்றில் பார்த்ததும் மறுநாளே சந்தானத்திடம் சொல்லி விட்டேன். 

ஆ சாரு, அவன் என் அண்ணன் ரங்கராஜன் ஆயிற்றே என்றார் சந்தானம். 

என்னது, அண்ணனா?  சொந்த அண்ணனா?

இல்லை, பெரியப்பா பையன்.  அவன் வீட்டில்தான் நான் ஐந்து வருஷம் தங்கிப் படித்தேன்.  என்னைப் பெற்றுப் போட்டு விட்டு பிரசவம் நடந்த அன்றே இறந்து விட்டாள் என் அம்மா.  எங்க அப்பன் – தேவடியாப் பய (தகப்பனைப் பற்றி எப்போது பேசினாலும் இந்த விவரத்தையும் சேர்க்கத் தவற மாட்டார் சந்தானம்) – சின்னப் பையனான என்னைப் பார்த்து ’எங்கேயாவது ஓடிப் போயேண்டா, சனியனே, ஏன்டா இங்கே இருந்து உயிரை வாங்கறே?  உன்னை எங்கியாவது கோவில் திருவிழா கூட்டத்துல கொண்டு போய்த்தான் விடப் போறேன்’ என்று சொல்லிண்டே இருப்பான்.  அப்போ எனக்கு வயசு ஆறோ ஏழோ இருக்கும்.  அப்போதான் என் பெரியப்பா – எங்கப்பன் தேவடியாப் பயலோட அண்ணா – என்னை ஸ்ரீவில்லிபுத்தூர்லேந்து மாம்பலத்துக்குக் கூட்டிண்டு போனார்.  அப்போதான் இந்தத் தேவடியாப் பய – யாரு, எங்க அண்ணா, இந்த ரங்கராஜன் – அவனோட குறியை எடுத்து என் கையில குடுத்து ஆட்டச் சொல்லுவான்.  ஆட்டினா ஏதோ கொழகொழன்னு வரும்.  உடனே போய் வாந்தி எடுத்துருவேன்.  கையில எவ்வளவு சவுக்காரத்தைப் போட்டு தேய்ச்சுக் கழுவினாலும் நாத்தம் போகாது.  அந்தக் கையாலேதான் சாப்பிடணும்.  என்னிக்கெல்லாம் அவனுக்கு நான் அதைப் பண்ணி விடறேனோ அன்னிக்கெல்லாம் சாப்பிடும் போதும் ஒரு தடவை வாந்தி பண்ணுவேன். 

(இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது பொது இடம் என்றும் பாராமல் சந்தானம் கேவிக் கேவி அழுது விட்டார்…)

அதனாலதான் எங்கப்பன் தேவடியாப் பய செத்துட்டான்னு எங்க அண்ணா சேதி அனுப்பினதும், இதோ பார் அண்ணா, சடங்குகளுக்கு உண்டான பைசாவை அனுப்பிடறேன், ஆனா நேர்ல என்னை வரச் சொல்லாதே, வந்தா அவன் பொணத்தை நான் எட்டி ஒதைச்சிடுவேன், வேண்டாம், நான் வர்லை, என்னை விட்ருன்னு சொன்னேன்.  கடைசி வரை நான் போகலை.

அதற்கு மேல் சந்தானம் சொன்ன கதை சுவாரசியமாக மாறியது.  ரங்கராஜன் இளம் வயதிலேயே – அதாவது, பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே – மது அருந்த ஆரம்பித்து விட்டானாம்.  நன்றாகப் படிக்கும் பையன் என்பதால் பள்ளிப் படிப்பை முடித்ததுமே அரசு உத்தியோகம் கிடைத்தது.  அதற்கப்புறம் என்ன?  தினமும் குடி, கூத்தியா.  குடித்து விட்டு வந்து நடு வீட்டில் வாந்தி எடுப்பானாம்.  ஒருநாள் நள்ளிரவில் குடித்து விட்டுத் திரும்பிய போது கொல்லையில் இருந்த கிணற்றுக்குள் விழுந்து விட்டான்.  தண்ணீரில்லாத பாழுங்கிணறு.  உடனே தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் வந்துதான் கிணற்றுக்குள் இறங்கி ஆளைத் தூக்கியிருக்கிறார்கள்.  தீயணைப்புத் துறையின் சிவப்பு வண்டியைப் பார்த்ததுமே “நம்முடைய தெருவில் எப்படி தீ பிடித்தது?  குடிசைப் பகுதிகளில்தானே தீ பிடிக்கும்?” என்று தெருவில் உள்ளோர் ஆச்சரியப்பட்டனர். 

தினமுமே குடிதானாம்.  ஆஃபீஸ் விட்டதுமே சைக்கிள் ரிக்ஷாவில் ஏறி நாப்பத்தெட்டாநம்பர் போ, நாப்பத்தொம்பதாநம்பர் போ என்றுதான் உத்தரவு பறக்கும்.  அப்போதெல்லாம் சாராயக் கடைகளுக்கு நம்பர் கொடுக்கப்பட்டிருந்தது. 

இப்பேர்ப்பட்ட பெருங்குடிகாரரான ரங்கராஜன் எண்பதாவது வயதில்தான் குடியை நிறுத்தினார்.   நிறுத்திய கையோடு பைக் சவாரி, தேசியக் கொடி, இளம் பெண்களுக்கு யோகா பயிற்சி, வசந்த பாலன் படத்தில் நடிப்பு என்று வாழ்க்கைப் பாதை மாறியது.  ஆனால் என்னுடைய கேள்வி என்னவென்றால், எண்பது வயது வரை குடியான குடி.  அது மட்டும் அல்ல.   அரவை எந்திரம் மாதிரி அவர் வாய் எதையாவது அசை போட்டுக் கொண்டே இருக்கும்.  பக்கோடா, காராசேவு, மிக்ஸர், வேர்க்கடலை என்று எதையாவது கொரித்துக் கொண்டே இருக்க வேண்டும் ரங்கராஜனுக்கு. சந்தானம் வீட்டுக்கு வந்தாலும் அதே கதைதான்.  ஒரு நாளில் பத்து காஃபி.  தளிகையில் எந்தப் பொருளும் விலக்கம் கிடையாது.  அப்பளம்?  ஒண்ணுக்கு ரெண்டு.  ஊறுகாய்?  நெய்யோடு பருப்புப் பொடி போட்டு ஒரு இழுப்பு இழுத்துவிட்டு, ஆவக்காய் தொக்கை சுடு சாதத்தில் பிசைந்து ஒரு அடி.  அதற்குப் பிறகுதான் சாம்பார், சாற்றமுது பக்கமே போவார்.  சாற்றமுதில் கூட நெய் விட வேண்டும்.  ஆங், முக்கியமானதைச் சொல்ல விட்டு விட்டேனே?  ரங்கராஜன் பீடி புகைப்பார்.  பீடியை மட்டும் இந்தத் தொண்ணூறு வயதிலும் நிறுத்தவில்லை.  ஆனாலும் இளம் பெண்கள் அதை மன்னித்து விட்டார்கள்.  ஏனென்றால், ஞானிகளும் துறவிகளும் கஞ்ஜா குடிப்பதே இங்கே அனுமதிக்கப்பட்டது என்பதால் யோகி ரங்கராஜன் பீடி குடிப்பதை இளம் பெண்கள் முழு மனதோடு ஏற்றுக் கொண்டு விட்டார்கள்.  

இப்போது என் கேள்வி என்னவென்றால், இந்தக் குடிகார யோகி ரங்கராஜனுக்கு இந்தத் தொண்ணூறு வயது வரை எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லை.  ஆனால் இன்னமும் ரங்கராஜன் சந்தானம் வீட்டுக்கு வந்தால் மதியம் சாப்பாடு முடிந்து கை கழுவும் போதே ஈவினிங் டிஃபன் என்ன என்று கேட்டுக் கொண்டேதான் கை கழுவுகிறார்.  ஆனியன் பஜ்ஜி செய்கிறேனே என்று சந்தானத்தின் மனைவி சொன்னால், நம்மவாள்ளாம் ஆனியன் சாப்பிடக் கூடாதுன்னுட்டுத் தெரியாதா நோக்கு?  மொளகா பஜ்ஜி பண்ணிடூ என்பார்.  ஒருவேளை மறுநாளும் சந்தானம் வீட்டிலேயே தங்க நேர்ந்தால் மறுநாள் மதியமும் கை கழுவும்போது முதல் நாளைப் போலவே கேள்வி எழும்.  அப்போது சந்தானத்தின் மனைவி வாழக்கா பஜ்ஜி என்றால், தெனோ(ங்) பஜ்ஜிதானா, நாக்கு செத்துடாது?  இன்னிக்கு கேசரியும் போண்டாவும் பண்ணிடூ என்பார். 

இப்படிப்பட்ட அரவை மெஷினான யோகி ரங்கராஜன் இந்தத் தொண்ணூறு வயது வரை கருங்கல்லைப் போல் வாழ்ந்து வருகிறார்.  எந்த நோயும் அண்டவில்லை.  ஆனால் நம் சந்தானம் இருக்கிறாரே, நாற்பது வயதிலிருந்து அறுபத்தைந்து வயது வரை அவருக்கு மிகப் பிடித்தமான அப்பளத்தைத் தொட்டதில்லை, வடையைத் தீண்டியதில்லை, நெய்க்குத் தடை (யாரும் அவரைக் கட்டாயப்படுத்தவில்லை, அவரே தனக்குப் போட்டுக் கொண்ட தடை), அவருக்கு மிகப் பிடித்தமான கேசரி போன்ற இனிப்புப் பண்டங்களை ஏக்கத்தோடு ஒரு பார்வை பார்ப்பதோடு சரி, ஒரு விள்ளல் கூட நாவில் பட்டதில்லை.  ஊறுகாய்?  உயிர்.  ஆனாலும் தொட்டதில்லை.  கல்யாண வீட்டு விருந்துகளில் கூட ஊறுகாயைக் கண்கொண்டு காண்பதோடு சரி.  தொடுவதில்லை.  மனம் சஞ்சலம் கொள்ளும்.  இருந்தாலும் சந்தானத்துக்கு ஹெல்த் முக்கியம்.  ஹெல்த்துக்காக அவர் எந்த சுகத்தையும் சுவையையும் விட்டுக் கொடுக்கத் தயார்.  சாப்பாட்டிலேயே இத்தனை கெடுபிடி கொண்ட ஒருவர் தண்ணி அடிப்பாரா என்ன?  மது, புகை எதுவும் கிடையாது.  இது தவிர தினமும் காலையில் ஒரு மணி நேரம் நடை; ம்ஹும், நடை என்றா சொன்னேன்?  அரை மணி நேரம் ஓட்டம், மீதி அரை மணி நேரம்தான் நடை.  மாலையில் ஒன்றரை மணி நேரம் டென்னிஸ்.  சந்தானம் ஒரு டென்னிஸ் பைத்தியம் என்பதையும் நான் உங்களுக்குச் சொல்லி விட வேண்டும். அவருடைய ஒரு நாள் கூட டென்னிஸ் இல்லாமல் இருந்ததில்லை. 

சென்ற மாதம் அவருக்கு நெஞ்சு வலி.  பயம் வேண்டாம், அது சும்மா வாய்வாக இருக்கும், எதற்கும் போய்ப் பார்த்து விடுங்கள் என்று சொன்னேன்.

பார்த்தால் இதயத்தில் அடைப்பு.  இப்போது ஸ்டெண்ட் வைத்திருக்கிறார்கள்.

இதை யாராவது ஒரு மருத்துவராவது படிப்பார் என்று நினைக்கிறேன்.  யோகி ரங்கராஜன் மாதிரி தறுதலையாக வாழ்ந்தும் இதயத்தில் ஒரு பிரச்சினை இல்லை, இருபத்தைந்து ஆண்டுகள் யோகியாய் வாழ்ந்த சந்தானத்துக்கு இதயத்தில் அடைப்பு என்றால், நான் ஏன் என்னை விதிமுறைகளுக்குள் குறுக்கிக் கொண்டு வாழ வேண்டும்? 

போகட்டும், கொக்கரக்கோவின் காரணமாக நீங்கள் குடித்துக் குடித்தே செத்து விடுவீர்கள் என்றால் எதார்த்த வாழ்வில் அப்படி நடக்கவில்லையே?  எந்த மேற்கத்திய எழுத்தாளனைப் பார்த்தாலும் தொண்ணூறைத் தாண்டி அல்லவா வாழ்ந்து கொண்டிருக்கிறான்?  உடனே அந்த நாடுகளின் தட்பவெப்பத்தைக் கொண்டு வந்து என் மூக்குக்கு முன்னே நீட்டுவீர்கள்.  அதனால்தான் ரங்கராஜனின் கதையைக் கொஞ்சம் விவரமாகச் சொன்னேன். 

இத்தனை கதையும் ஏன் வந்தது?  என்னிடம் எதற்குமே ஏன் என்று கேட்காதீர்கள்; கேட்டால் உளற ஆரம்பித்து விடுவேன் என்றேன்.  அதுசரி, இந்தக் கதையின் துயரமான முடிவு என்ன?  பச்சைக் கண் இப்போது என்னுடன் ‘டச்’சில் இருக்கிறாளா?

துயரமான முடிவு என்றதுமே யூகித்திருப்பீர்கள்.  ஆம், ‘டச்’சில் இல்லை.  ஏன் தெரியுமா?  அதுதான் இந்தக் கதையின் மூன்றாம் பாகம்.  என் எழுத்தைப் படிக்காத யாருடனுமே நான் நட்பு வைத்துக் கொள்ள மாட்டேன்.  அது இந்திர லோகத்து ரம்பா ஊர்வசியாக இருந்தாலும் சரி.  என் எழுத்தோடு ‘டச்’ இல்லையேல் அவர்களோடும் எனக்கு ‘டச்’ இல்லை.  நான் பச்சைக் கண்ணிடம் இது பற்றிப் பலமுறை எச்சரிக்கை செய்தேன்.  அவள் கேட்கவில்லை.  பிறகு அவளிடம் என்னுடைய நாவல் ஒன்றைக் கொடுத்துப் படிக்கச் சொன்னேன்.  ஆறு மாதம் ஆகியும் ஒரு பக்கம் நகரவில்லை.  என்ன செய்யட்டும் நான்?  குட் பை சொல்லி விட்டேன்.  யாருக்கு?  என் வாழ்விலேயே நான் பார்த்த மகா மகா பேரழகிக்கு. 

அதோடு முடிந்திருந்தால் பரவாயில்லை.  குட் பை சொல்லி ஒரு வருடம் ஆகியிருக்கும்.  உதவி இயக்குனராக இருக்கும் அறவாணன் என் நண்பன்.  என் எழுத்தின் தீவிர வாசகன்.  பச்சைக் கண் ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் அவனைச் சந்தித்திருக்கிறாள்.  அறவாணனும் நானும் நண்பர்கள் என்று பச்சைக் கண்ணுக்குத் தெரியாது.  என்னைப் பற்றிய பேச்சு வந்திருக்கிறது.  அப்போது பச்சைக் கண் சொன்னாளாம், எனக்கு சாருவைப் பிடிக்கும், ஆனால் அவர் எழுத்து பிடிக்காது என்று. 

சரி, உங்களுக்குப் பிடித்த எழுத்தாளர் யார் என்று கேட்டிருக்கிறான் அறவாணன்.

போகன் சங்கர் என்று சொல்லியிருக்கிறாள் பச்சைக் கண்.

போகன் சங்கரின் பாருக் குட்டி உங்களைப் பார்த்திருக்கிறாளா என்று மடக்கியிருக்கிறான் அறவாணன். 

பாருக் குட்டி யாரு என்று கேட்டாளாம் பச்சைக் கண். 

பின்குறிப்பு: வாக்கிங் போகிறாயா என்ற கேள்விக்கு ஆமாம் என்று சொல்லி, எங்கே போகிறாய் என்ற கேள்விக்கு மொட்டை மாடி என்று பதில் சொன்னேன் அல்லவா?  அந்த பதிலே ஒரு அபத்தம்தான்.  ஏனென்றால், நான் தினமுமே பார்க்கில்தான் வாக்கிங் போய்க் கொண்டிருந்தேன், என் பத்தினி என்னைக் கேள்வி கேட்ட அன்றைய தினம் மட்டுமே மொட்டை மாடியில் வாக்கிங் போனேன்.  இந்த வரலாறு எல்லாம் அவள் கேட்டதும் எனக்கு மறந்து போய் விட்டதால்தான் சட்டென்று மொட்டை மாடி என்று உளறியது. சரியா?