தேவிபாரதியின் நொய்யல்

கிட்டத்தட்ட ஒரு மாத காலமாக நொய்யல் நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன்.  ஒரு நாவலைப் படிக்க இத்தனைக் காலம் எடுத்துக் கொண்ட்து இதுவே முதல் முறை.  அந்த அளவுக்கு நான் அந்த நாவலில் மூழ்கிக் கிடந்தேன்.  அதிலேயே வாழ்ந்தேன்.  திரும்பத் திரும்பப் படித்தேன்.  நாவல் பற்றி இங்கே நான் மதிப்புரையெல்லாம் எழுதப் போவதில்லை.  பா. வெங்கடேசனின் பாகீரதியின் மதியம் என்ற நாவலை உலகின் தலைசிறந்த ஐம்பது நாவல்களில் வைப்பேன் என்றால், தேவிபாரதியின் நொய்யலுக்குத் தமிழ் நாவல் வரலாற்றிலேயே முதல் இடத்தைக் கொடுப்பேன்.  சந்தேகமே இல்லாமல் நொய்யல் தமிழ் நாவல்களின் சிகரம் என்று சொல்லலாம்.  தி.ஜானகிராமன், சம்பத், தஞ்சை ப்ரகாஷ், ப. சிங்காரம் போன்ற ஜாம்பவான்களின் நாவல் சாதனைகளை தேவிபாரதி தனது நொய்யலில் தாண்டி விட்டார் என்றே கருதுகிறேன்.  லத்தீன் அமெரிக்க கிளாஸிக்குகளான நூறாண்டுகளின் தனிமை, கார்லோஸ் ஃபுவெந்தெஸின் தெர்ரா நோஸ்த்ரா போன்ற உலகப் புகழ் பெற்ற நாவல்களையெல்லாம் நொய்யலுக்கு அடுத்தபடியாகத்தான் வைக்க வேண்டும். 

இந்த நாவலின் மொழி செவியால் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.  அதனால் இந்த முழு நாவலையும் ஆடியோ புத்தகமாக வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்.  ஆனால் கொங்கு பாஷையை வெகு சரளமாகப் பேசக் கூடியவர்கள்தான் அதைச் செய்ய வேண்டும். 

இந்த நாவலை இலக்கியப் பரிச்சயம் இல்லாதவர்கள் படித்தால் கொஞ்சம் சிரமப்படுவார்கள்.  ஏனென்றால், இது ஜனரஞ்சக வாசிப்புக்கு உகந்தது அல்ல.  அறுபது ஆண்டுகளாக தமிழர்கள் சுஜாதாவைப் படித்துத் தளர்ந்து போயிருக்கிறார்கள்.  அவர்களால் இந்த உலகின் உள்ளே நுழைய முடியாது.  ஆனால் தமிழில் புனைகதை எழுத வருபவர்கள் இந்த நாவலைப் படிக்காமல் இனி எழுத முடியாது.  அந்த அளவுக்கு ஒரு மாஸ்டர்பீஸ் என்று சொல்லத்தக்க கதையையும் மொழியையும் கொண்டிருக்கிறது நொய்யல். 

நாவலின் பேச்சு மொழியில் எனக்கு ஒரு சின்ன பிரச்சினை.  தமிழில் பேச்சு மொழியை எழுத்தில் கொடுக்கும் போது ஒரு சிக்கல் இருக்கிறது.  வண்டி வரும் என்று நாம் பேசுவதில்லை.  வரு – வரும் என்பதற்கு இடையில் இரண்டு உதடுகளையும் மூடாமல் பாதியிலேயே நிறுத்தி விடுகிறோம்.  அதை நாம் வருங் என்றோ அல்லது வரும் என்றோதான் எழுத முடியும்.  வரு என்று எழுதவே முடியாது. நான் என்று நாம் பேசுவதில்லை.  நா(ங்) என்றுதான் பேசுகிறோம்.  அதற்காக நாம் நான் என்பதை நாவலில் நா என்று எழுதினால் புரியாமல் போகும் ஆபத்து இருக்கிறது.  ஆனால் நொய்யல் முழுவதும் இப்படித்தான் எழுதப்பட்டிருக்கிறது.  நான் என்றால் நா.  வரும் என்றால் வரு.  இப்படி எழுதுவது இயல்பான வாசிப்புக்கு நெருடலாக இருக்கிறது.  தேவிபாரதி இதை நாவலின் இரண்டாவது பதிப்பில் களைந்தால் நாவலின் வாசிப்பு இன்னும் லகுவாக இருக்கும். 

நூல் கிடைக்கும் இடம்: தன்னறம் பப்ளிகேஷன், குக்கூ காட்டுப் பள்ளி, புளியானூர் கிராமம், சிங்காரப்பேட்டை – 635307

பக்கங்கள் 632, விலை 800 ரூ.

போன் 98438 70059

மின்னஞ்சல்: thannarame@gmail.com