நாளை – செப்டம்பர் 29 – மாலை ஐந்தரை மணிக்கு மைலாப்பூரில் உள்ள ரசிக ரஞ்சனி சபாவில் நடக்க இருக்கும் நாட்டிய நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்கிறேன். (30, சுந்தரேஷ்வரர் தெரு, மைலாப்பூர்) பொதுவாக கலை நிகழ்ச்சிகளின் போது பார்வையாளர் அனைவரும் நிகழ்ச்சி எப்போது தொடங்கப் போகிறது என்றுதான் ஆர்வம் கொண்டிருப்பார்கள். அதற்கு முன்னால் பேசுபவர்களை நிகழ்ச்சிக்கு இடையூறாகவே நினைப்பார்கள். எனவே எனக்குக் கிடைக்கும் ஐந்து பத்து நிமிடங்களில் என்னுடைய ஆகச் சிறந்த ஒரு பேச்சை வழங்குவேன். ஏனென்றால், 1978இலிருந்து 1990 வரை பன்னிரண்டு ஆண்டுகள், அந்தக் காலகட்டத்தில் உலகில் வாழ்ந்த அத்தனை நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சிகளையும் நேரடியாக முதல் வரிசையில் அமர்ந்து பார்த்திருக்கிறேன். எல்லா நடன வகைகள் பற்றியும் அவற்றின் அடிப்படை நூல்களைப் படித்திருக்கிறேன். ஆனால் எழுதவில்லை. ஏனென்றால், அது வேறு ஒரு துறை. சினிமா பற்றி எழுதினாலும் நடனம் பற்றி எழுதாததற்குக் காரணம், நடனம் பற்றி எழுதினால் அதற்காக நான் பல மணி நேரங்களை செலவு செய்ய வேண்டியிருக்கும். இருந்தாலும் ஸால்ஸா, த்தாங்கோ நடனங்கள் பற்றித் தமிழில் கிடைக்கும் ஆகச் சிறந்த கட்டுரைகள் என்னுடையவைதான். கோணல் பக்கங்கள் தொகுப்பில் இருக்கிறது என நினைக்கிறேன்.
எனவே என் பேச்சைக் கேட்கவும் என் உறவுக்காரர்களின் நடனங்களைக் காணவும் உங்களை அன்புடன் அழைக்கிறேன்.