நொய்யல் – ஒரு நவீனத்துவ காவியம்

எழுத்தாளர்களில் பெரும்பாலானவர்களுக்குத் தமது வாழ்க்கை பற்றி எழுதுவதில் விருப்பம் அதிகம்.   எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் என்ற என்னுடைய முதல் நாவலே சுயசரிதத்தன்மை கொண்டதுதான். 

ஆனால் இப்படி சுயசரிதத்தன்மை கொண்ட பல நாவல்கள் இலக்கியரீதியாக வெற்றியடையாமல் வெறும் ஆவணமாக மட்டுமே மிஞ்சுவதையும் காண்கிறோம். 

மனிதராகப் பிறந்த எல்லோருக்குமே மற்றவரிடம் சொல்வதற்கு தன்னைப் பற்றிய ஒரு கதை இருக்கிறது.  ஒருவருடைய பாட்டி மண் பானை நிறைய தங்க நகைகளை வைத்துக் கொண்டிருந்திருப்பார்.  பேரனோ சிங்கிள் டீக்கு சிங்கி அடிப்பவனாக இருப்பான்.  எப்படி வீழ்ந்தது அந்தக் குடும்பம் என்பது ஒரு கதை.  ஒருவர் பண்ணை அடிமையாக இருந்திருப்பார்.  அவருடைய பேரன் இன்று கல்வித் தந்தையாக மிளிர்வார்.  அது ஒரு கதை.  இப்படி எல்லா மனிதர்களிடமும் சொல்வதற்கு ஒரு கதை இருக்கிறது.  மனிதர்கள் என்று இல்லை.  எல்லா ஜீவராசிகளிடம் இப்படிப்பட்ட கதைகள் உண்டு.  ஒரு ஆலமரத்தை எடுத்துக் கொள்வோம்.  அது அதனுடைய கதையை, அதன் மடியில் அமர்ந்திருந்த மானுடர்களின் கதையைச் சொல்லுமானால் எத்தனை லட்சம் பக்கங்கள் வரக் கூடியதாக இருக்கும் அந்தக் கதை?  ஒரு பூனையின் கதை, ஒரு தெருநாயின் கதை, ஒரு சிங்கத்தின் கதை… வேண்டுமானால் ஒரு புழுவின் கதையிலோ ஒரு ஈசலின் கதையிலோ நமக்கு சுவாரசியம் எதுவும் இல்லாமல் போகலாம்.  ஆனால் மற்ற எல்லா ஜீவராசிகளின் கதையும் சுவாரசியமானதுதான்.

ஆனால் இப்படிப்பட்ட சுயசரித்திரங்கள் எல்லாமே இலக்கியமாகி விட முடியுமா?  முடியாது என்றால் ஏன்?

நொய்யல் என்ற இந்த நாவல் தேவிபாரதி என்ற எழுத்தாளன் கேட்ட அவருடைய மூத்தோர்களின் கதைதான். தேவிபாரதி அந்த மூத்தோரின் வாரிசு. நொய்யல் என்ற நதியின் வாரிசு. 

தான் நின்று கொண்டிருக்கும் இடத்திலிருந்து பின்னே திரும்பிப் பார்த்து தன் மூத்தோரின் கதையை எழுதியிருக்கிறார் தேவிபாரதி.  இன்று சாயப்பட்டறைக் கழிவாக ஓடிக் கொண்டிருக்கும் நொய்யலின் பழைய கதை என்ன என்பதுதான் இந்த நாவல். 

ஆனால் ஒரு புதினம் மகத்தான இலக்கியப் படைப்பாக மாறுவதற்கு இந்தக் கதை மட்டும் போதுமா?

இங்கேதான் தமிழின் நவீன கதைசொல்லிகள் அத்தனை பேரையும் நான் நொய்யலை நோக்கி அழைக்கிறேன்.

பத்து ஆண்டுகளுக்கு முன் ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் என்னிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. 

உங்கள் எழுத்து எப்படி உருவாகிறது?  மிகச் சுருக்கமாக சொல்ல முடியுமா? 

ஒரே வார்த்தையில் சொல்கிறேன்: மேஜிக். 

இந்த மேஜிக்தான் நொய்யலின் ஒவ்வொரு பக்கத்திலும் நிகழ்ந்திருக்கிறது.  நொய்யல் நதி ஒரு மாயாஜாலம்.  நொய்யல் நதிக்கரையில் வசிக்கும் காரிச்சி ஒரு மாயவித்தைக்காரி.  தடித்த உதடுகளும் கருத்த மேனியும் துர்நாற்றம் வீசும் உடம்புமாகத் திரியும் அவள் கிரிக்கவுண்டனுக்கு (வெள்ளியங்கிரி) மட்டும் பேரழகியாகத் தோற்றம் தருகிறாள்.  ஷேக்ஸ்பியர் சொன்ன ”Beauty is in the eye of the beholder” மாதிரி அல்ல.  கீழ்ச்சாதியைச் சேர்ந்த அவள் அந்த அவலட்சணத்தைத் தன் பாதுகாப்புக் கவசமாகவே கொண்டிருக்கிறாள்.  சிசுவிலிருந்தே அப்படித்தான் இருக்கிறாள் காரிச்சி.  சிறுவன் கிரிக் கவுண்டனுக்கு அந்த சிசு தந்த தோற்றத்தை இப்படி வர்ணிக்கிறார் தேவிபாரதி:

“அவன் ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு நின்றான்.  யாரும் தூண்டிவிடாமலேயே ஓங்கியெரியத் தொடங்கியது சுடர். கண் மூடிக் கண் திறப்பதற்குள் அந்தக் குடிசை முழுவதும் பகல் போல் வெளிச்சம் படர்ந்து பரவத் தொடங்கியது.  அவனுடையதும், அவனுடைய நாயினுடையதுமான நீண்ட கரிய நிழல்கள் சுவர்களில் படர்ந்து ஆடத் தொடங்கின.  அவன் அவற்றின் மீதிருந்து கண்களை எடுக்கவில்லை.  அவற்றின் கரிய நிறம் மாறிக் கொண்டிருந்தது.  கண்களை கூசச் செய்யும் பளீரென்ற ஒளி.  அவற்றின் தடித்த உதடுகளும் பெருத்த நாசியும் கூட மாறத் தொடங்கின.  மாறி மாறி அங்கே கடைசியில் தென்பட்டது பேரழகு கொண்டதொரு சிசுவின் சிறு உருவம்.  அதை அப்படியே வாரியெடுத்துத் தன் சிறுமார்பில் கிடத்தித் தழுவிக் கொள்ள வேண்டுமென்ற ஆசை உண்டாயிற்று.  அது சாதாரண அழகாகத் தென்படவில்லை.  அதற்கு முன்னர் அவன் பார்த்தோ கேள்விப்பட்டோ இராத பேரழகின் வடிவம் அது.  அதைக் கண்டு அவன் பயந்தான்.  கைகள் நடுங்கின.  கையிலிருந்த விளக்கும் அதன் நிமிர்ந்த சுடரும் கூட அவனோடு சேர்ந்து நடுங்கின.  அவனுக்கு வியர்வை ஆறாகப் பெருகி வழியத் தொடங்கியது. தானும் அசைவற்று நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தது அவனுடைய பட்டிநாய்.  அதன் முகத்திலும் வியர்வைத் துளிகள்.

குழந்தை துள்ளிற்று.  தன் பொக்கைவாய்த் திறந்து அவனைப் பார்த்துக் கெக்கலிக்கத் தொடங்கியது.

விளக்கைக் கீழே வைத்துவிட்டு அவன் அச்சிசுவைத் தன் பிஞ்சுக் கைகளால் வாரியெடுக்க முற்பட்டான்.  அவனால் அதைத் தூக்க முடியவில்லை.  அவனுக்குப் பெரும் ஏமாற்றமாக இருந்தது.  தவித்தான்.  பிறகு ஆற்றாமையுடன் குனிந்து அதற்கொரு முத்தமிட்டான்.  அதன் மேனியிலிருந்து வீசிய நறுமணம் கிறக்கமூட்டியது.  பிரக்ஞை தவறிவிடும் போலிருந்தது.  அவனுக்கு மயக்கம்.  யாரோ அவனை அழைப்பதாக உணர்ந்தான்.  “கிரிக்கவண்டரே, கிரிக்கவுண்டரே” என்னும் உரத்த அழைப்பு.  எனினும் மனம் அதை நோக்கித் திரும்ப மறுத்தது.  அப்பொழுது திடீரென நாய் குரைக்கத் தொடங்கியது.  அச்சமும் பதற்றமும் கொண்ட ஊளை.  பதற்றம் கொண்டு நிமிர்ந்தான்.  எதிரே கருகிய இருளின் கூட்டைத் தவிர வேறெதுவும் தென்படவில்லை.  பிறகு திரும்பி சிசுவைப் பார்த்த பொழுது தென்பட்ட தோற்றம் கலைந்து தனது முந்தைய உருவத்தைப் பெற்றிருந்தது அது. 

கரிய அவலட்சணமான உருவம்.”

இப்படி காரிச்சி என்ற பெண் நாவல் முழுவதுமே அவலட்சணத்தின் மொத்த உருவமாகவும், சில சமயங்களில் பேரழகின் தூல வடிவமாகவும் மாறி மாறிக் காட்சி தருகிறாள். 

நாவலில், நொய்யல் நதி மற்றும் நொய்யல்வாசிகளின் மாயக் கதையைச் சொல்லும் மொழியுமே மாயத்தன்மை கொண்டதாகத்தான் இருக்கிறது. அதன் காரணமாக, நாவல் முழுவதையுமே வசியத்துக்கு ஆட்பட்ட ஒருவரின் மனநிலையிலேயே வாசிக்க வேண்டியிருந்தது. 

***        

தமிழின் சமகால இலக்கியத்தைத் தன் குருதியோட்டமாகக் கொண்ட ஒருவர்தான் நொய்யல் போன்ற ஒரு நாவலை எழுத முடியும்.  ஏனென்றால், ஜெயமோகன் தன் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது போல நொய்யலில் வரும் காரிச்சியை நாம் லா.ச.ரா. உருவாக்கிய ஜன்னியின் நீட்சியாகவே கொள்ளலாம். 

நொய்யல் முழுக்க முழுக்க செவ்வியல் தன்மை கொண்ட ஒரு நவீனத்துவ காவியம்.  நவீனத்துவத்தில் தமிழின் சமகால இலக்கியம் உருவாக்கிய ஓர் உச்சம் நொய்யல்.  அந்த வகையில் நொய்யல் பின்நவீனத்துவத்தின் வெகுமதிகளையும் கண்டுபிடிப்புகளையும் எடுத்துக் கொள்ளவில்லை.  இதுவரை பின்நவீனத்துவப் பிரதிகளையே வாசித்திருப்பவர்களுக்கு நொய்யல் மிகவும் அந்நியமாகக் கூட தோன்றலாம்.  ஆனால் ஒரு மனிதத் தொகுதியின் மொழி, கலாச்சாரம், நம்பிக்கைகள், கடவுளர்கள், கதைகள், பாடல்கள், கனவுகள் போன்றவற்றை நவீனத்துவ மொழியிலும் கதை மாந்தரின் வட்டார வழக்கிலும் பதிவு செய்ததில் நொய்யல் முதன்மை இடம் பெறுகிறது. 

செவ்வியல் காவியங்களில் பிரதியின் இன்பம் (pleasure of the text) என்பது அந்தக் கதையின் துயரம்தான். நொய்யலும் அதேபோல்

ஒரு மாபெரும் சாபத்திலிருந்துதான் தொடங்குகிறது.  நாட்டார் பெண் தெய்வங்கள் பலவற்றின் கதை என்ன?  பாலியல் ரீதியாகக் குற்றம் சாட்டப்பட்டு ஒரு பெண்ணை அந்த கிராமமே பலி கொடுத்து விடும்.  பலி முடிந்து பெண் உயிரை விட்டதுமே அவள் அந்த ஊரின் காவல் தெய்வமாகி விடுவாள். (தமிழர்களின் necrophilia பற்றி நான் பல சமயங்களில் எழுதியிருக்கிறேன்.  திரும்பவும் அதை இங்கே எழுதத் தேவையில்லை.  பாரதி தமிழர்களின் நெக்ரோஃபீலியா குணத்துக்கு ஒரு உதாரணம்.  உயிரோடு இருக்கும்போது பட்டினி போட்டுக் கொன்றுவிட்டு, அவன் இறந்ததும் தெய்வமாக்கி விட்டார்கள்.)   அப்படித்தான் வெடத்தலாங்காடு என்ற அந்த ஊரில் தெய்வமாகி நிற்கிறாள் தேவனாத்தா.   

இந்த நாவலில் வரும் எல்லாமே மானுடரைப் போலவேதான் இதில் உயிரோடு நடமாடுகிறார்கள்.  ஆந்தை, வவ்வால், சாரை, நாகம், காகம், நெருஞ்சி, நாய், கெண்டைகள், கோழிகள், பெருச்சாளிகள், பாறை, மண், நதி, விருட்சங்கள், தெய்வம், சூறைக் காற்று என்று எல்லாமே சேர்ந்துதான் நாவலின் கதையையும் சொல்லாடலையும் உருவாக்குகின்றன.  பிரபஞ்சத்தில் தெய்வத்துக்கு மிஞ்சி எதுவும் இல்லை.  ஆனால் நொய்யலின் தெய்வமான தேவனாத்தாள் நொய்யல் நதிவாசிகளைப் போலவே நிராதரவாகக் கண்ணீர் விடுகிறாள்.  ஊர்க்காரர்கள் அவளை சரியாக கவனிக்கவில்லை.  பூஜை இல்லை. பூ இல்லை.  புடவை இல்லை. படையல் இல்லை.  நெய் விளக்கு இல்லை.  கோவில் பூராவும் புதர் மண்டிக் கிடக்கிறது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்தாள் தேவனாத்தாள்.  ஒருநாள் நொய்யல் நதியை ஊருக்குள் ஏவி ஊரையே காலி பண்ணினாள்.  கால்நடைகளையும் அழித்துப் போட்டாள்.  ஊரில் பெருநாசம்.  ஊர் மக்கள் புரிந்து கொண்டார்கள்.  தேவனாத்தா, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டுக் கதறி அழுதார்கள்.  ஆறுமுகப் பண்டாரத்தின் உடம்பில் புகுந்தாள் தேவனாத்தாள்.

கோபத்தின் உச்சத்தில் இருக்கும் ஆத்தாளிடம் யார் கேள்வி கேட்பது?  யார் பேசுவது?  அதற்குத் தோதாக இருந்தாள் நாசுவத்தி செலம்பா.  பேச்சு சாமர்த்தியத்தில் கில்லாடி. 

“நாங்க ஆராத்தா, நீ புடுச்சு வெச்ச மண்ணு, உம்பட வவுத்துல பச்ச மண்ணாத்தேம் பொறந்தோ, இன்னொ பச்ச மண்ணாத்தேம் நிக்கறொ, என்ன வேணும்னு சொல்லு, உம்பட பேச்ச மீறி இங்க என்ன இருக்குதாத்தா?”

நாசுவத்தி செலம்பாவின் நீண்டதொரு பேச்சின் கடைசிப் பகுதியை மட்டுமே இங்கே கொடுத்திருக்கிறேன்.  இது போன்று நாவலின் பல பகுதிகள் எனக்கு கிரேக்கத் துன்பவியல் நாடகங்களை ஞாபகப்படுத்தின.  அப்படி ஒரு இடம்தான் இது. ’நாசுவத்தியின் பேச்சைக் கேட்டு தேவனாத்தா நெகிழ்ந்தாள், கூக்குரலிட்டு அழுதாள்; மழையில் நனைந்து வெயிலில் காய்ந்து சித்தம் கலங்கி மண்டையிடி கொண்டு ஊருக்குள் நுழைந்து விட்டதாய்ச் சொல்லிக் கண்ணீர் விட்டு நின்றான் தேவனாத்தாளின் வடிவம் கொண்ட ஆறுமுகப் பண்டாரம்.’

இந்த நாவலைப் படிக்க எனக்கு ஒரு மாதம் ஆயிற்று. ஏனென்றால், 630 பக்கம் கொண்ட நொய்யலின் மேற்கண்ட பகுதி முப்பத்தொன்பதாவது பக்கத்தில் வருகிறது.  என்னால் மேற்கொண்டு நாவலைப் படிக்க முடியவில்லை.  தெய்வமே வந்து ஊர் மக்களிடம் மன்னிப்புக் கேட்கும் அந்தத் தருணத்திலேயே நான் மூன்று தினங்கள் வாழ நேர்ந்தது. 

சாரைப் பாம்பு முதல் சூறைக் காற்று வரை நாவலின் கதை மாந்தர்கள்.  சூறைக் காற்றுதான் வேம்பன கவுண்டரின் மனைவி சாமியாத்தாள்.  செத்த பிறகு அவள் சூறையாக மாறி அந்த ஊரின் அரூபப் பிரஜையாகி விடுகிறாள்.  அந்த சூறையோடு ஊர் மக்கள் பேசுகிறார்கள், அஞ்சுகிறார்கள், ஓடி ஒளிகிறார்கள். கோவிலில் குடிகொண்டிருக்கும் தேவனாத்தாளைப் போல, நொய்யல் நதியைப் போல, சாமியாத்தாளும் சாபம் சுமந்து திரிகிறாள்.  கணவன் உயிரோடு இருக்கும்போதே இன்னொருத்தனோடு உறவு கொண்ட சாபம்.   

சாமியாத்தாளின் மகன் பூபதியும் சாபத்தோடுதான் திரிகிறான்.  பூபதி ஒரு பெண் பித்தன்.  வெடத்தலாங்காட்டில் அவன் ஸ்பரிஸம் படாத பெண்கள் மிகவும் சொற்பம்.  அவனுடைய அம்மை சாமியாத்தாள் கணவர் வேம்பன கவுண்டரைத் தாண்டி உறவு கொண்டாடிக் கொண்டிருக்கும் ஆள் குமாரசாமி.  ஆனால் குமாரசாமியும் அவனுக்கு மகன் உறவு உள்ள பூபதியும் சேர்ந்தேதான் ஸ்த்ரீ வேட்டை ஆடுகிறார்கள்.  ஒருமுறை குமாரசாமி ஒரு பெண்ணைக் கொண்டு வந்து தன் பணியாள் ஒருவனுக்குப் ‘பேருக்காகத்’ திருமணம் செய்து வைத்து விட்டு இவன் பெண்டாண்டு கொண்டிருக்கிறான்.  அவளையும் தன் வசப்படுத்த முயற்சிக்கிறான் பூபதி.  அப்போது ஒருநாள் நிறைபோதையில் குமாரசாமி பூபதியிடம் சொல்கிறான்:

“பூவு, நா உங்கம்மாள வச்சிருக்கிறெ, அது உனக்குத் தெரியும், அவ அவுசேரி, வேற எத்தன பேர வெச்சிருந்தாளோ ஆருக்குத் தெரியும்? அவ அவுசேரீங்கறதுனால அவகோடப் படுத்துருவியா? சொல்லு, உனக்கு அவ வேற நா வேறயாடா பூவூ?”

பதற்றமில்லாமல் எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருக்கும் பூபதி ஒரு கருங்கல்லை எடுத்து குமாரசாமியின் மண்டையில் போட்டு கபாலத்தை சுக்கு நூறாக்கி, அதோடும் விடாமல் அதே கல்லால் அவன் ’மேனி முழுவதையும் அம்மி கொத்துவது போல் ஒரு விரற்கடை பாக்கியில்லாமல் கொத்துகிறான்.’   பிறகு அமராவதி நதி மீன்களுக்கு அந்த உடலை உணவாக்கி விட்டுப் போகிறான். 

இப்படி நாவலின் ஒவ்வொரு பாத்திரமுமே பழியும் வன்மமுமாகப் பாவத்தைச் சுமந்துகொண்டே திரிகிறார்கள்.  ஏற்கனவே சொன்னபடி, மானுடர் மட்டுமல்ல, ஒரு சாரைப் பாம்பு கூட வன்மம் கொண்டு திரிகிறது நாவலில்.  தன் இணையைக் கொன்றவனைப் பழி வாங்குவதற்காக.  நொய்யல் நதியும் ஏதோ ஒரு பாவத்தைத்தான் சுமந்து கொண்டிருந்தது போலும்.  நாவலின் முடிவில் நதியும் காய்ந்து விடுகிறது. 

பின்நவீனத்துவத்தின் நிழல் கூடப் படியாத நவீனத்துவ காவியம் என்பதால் இந்தப் பழிக்கும் பாவத்துக்கும் நாவலில் விடியலே இருப்பதில்லை.  எல்லாமே ஒரு பாழ்வெளியாய் மாறுவதோடு நாவல் முடிகிறது. 

ஓர் மகத்தான நவீனத்துவ காவியம் இப்படித்தான் முடியும்…

***

நூல் கிடைக்கும் இடம்: தன்னறம் பப்ளிகேஷன், குக்கூ காட்டுப் பள்ளி, புளியானூர் கிராமம், சிங்காரப்பேட்டை – 635307

பக்கங்கள் 632, விலை 800 ரூ.

போன் 98438 70059

மின்னஞ்சல்: thannarame@gmail.com