நானும் சக எழுத்தாளர்களும்… (மற்றும்) நான்தான் ஔரங்ஸேப்… பற்றி பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

ஒளி முருகவேள்

எனக்குக் கிடைத்திருக்கும் வரங்களில் ஒன்று, எனக்கு எந்த எழுத்தாளரையெல்லாம் ரொம்பப் பிடிக்கிறதோ அவர்களுக்கு என் எழுத்து பிடிப்பதில்லை.  ஏதோ பொது நாகரிகம் கருதியோ அல்லது அவர்களைப் பாராட்டுகிறேன் என்ற காரணத்திற்காகவோ கொஞ்சமாக சிரித்து, கொஞ்சமாகப் பேசுவார்கள். வேறு வழியில்லாமல்தான்.  இதை நான் அசோகமித்திரனிடம் எப்போதும் உணர்ந்திருக்கிறேன்.  அவர் கடைசி வரை ஒரு தர்மசங்கடத்துடன்தான் என்னுடன் பேசிக் கொண்டிருந்தார்.  இருக்காதா பின்னே?  தன்னை தன் ஆசான் என்றும் தந்தை என்றும் வணங்கும் ஒருவனை ஒரு எழுத்தாளர் எப்படி முழுமையாகப் புறக்கணித்து விட முடியும்? ஆனால் அவருக்கு என் எழுத்து பிடிக்காது என்பது மட்டும் அல்ல, என் எழுத்து பற்றிய ஒரு அசூயை உணர்வே இருந்தது என்பது எனக்குத் தெரியும். ஆனால் இன்றைக்கும் சில இளம் எழுத்தாளர்களிடம் நான் காணக்கூடிய ஒரு விஷயத்தை நான் அசோகமித்திரனிடம் ஒருநாளும் கண்டதில்லை.  என்னுடைய எல்லா புதினங்களையும் பல அ-புதினங்களையும் அவர் வாசித்திருக்கிறார்.  அதிலிருந்தெல்லாம் மேற்கோள் காண்பித்து இப்படியெல்லாம் எழுத வேண்டுமா என்பார். 

படம்: ஒளி முருகவேள்

என் உலகமும் என் மொழியும் அவர் வெறுக்கக் கூடியது.  ஒற்றன் நாவலில் அவர் அமெரிக்காவில் ஒரு கறுப்பனோடு மாட்டிக் கொண்டு குளிர்ப்பதனப்பெட்டியிலிருந்து வீசும் பூண்டின் நாற்றத்தை சகித்துக் கொள்ள முடியாமல் படாத பாடு படுவார்.  அவர் அமெரிக்காவில் தங்கியிருந்த ஆறு மாதங்களுமே பூண்டு வாசத்தினால் துரத்தப்பட்டுக் கொண்டேதான் இருந்திருக்கிறார்.  படித்தபோது எனக்குப் பாவமாக இருந்தது.  அப்படிப்பட்ட பூண்டு வாசமாகத்தான் அவருக்கு நான் இருந்திருக்கிறேன்.

ஷோபா சக்தி அசோகமித்திரன் மாதிரி பூடகமான மனிதர் அல்ல.   வெளிப்படையாகவே சொல்லி விட்டார், சாரு என்னை ஆகா ஓகோ என்று பாராட்டுவதையெல்லாம் நான் பொருட்படுத்துவதே இல்லை, அவருக்கு இலக்கிய விமர்சனம் என்றால் என்னவென்றே தெரியாது.  அதேபோல் என் நாவல்களிலேயே உச்சம் என்று என் வாசகர்களால் கருதப்படும் ராஸ லீலாவை “அது நாவலே இல்லை” என்று சொன்னவர் ஷோபா சக்தி.  ஆனால் இதெல்லாம் என்னை எந்த வகையிலும் பாதிப்பதே இல்லை.  என் சக எழுத்தாளனுக்கு என் எழுத்து ரசிக்க வேண்டும் என்ற எந்தக் கட்டாயமும் இல்லை.  எனக்கு ஷோபா சக்தியின் எழுத்து பிடிக்கும்.  அதற்காக அவரை நான் என்றும் கொண்டாடுவேன்.   

ஆனால் அவதூறு செய்தால் கொஞ்சம் வருத்தமாக இருக்கும். என் மீது வீசப்பட்ட அவதூறுகளிலேயே ஆகக் கீழ்த்தரமானது தேவிபாரதி செய்ததுதான்.  ஏனென்றால், மிகப் பல ஆண்டுகளாக அவருடைய எழுத்தை நான் கொண்டாடியிருக்கிறேன்.  தமிழில் எனக்கு மிகப் பிடித்தமான எழுத்தாளர் தேவிபாரதி.  நான் எந்த எழுத்தாளர் வீட்டுக்கும் சென்றதில்லை.  ஒரே ஒருமுறை தர்மபுரியில் ஜெயமோகன், இரண்டு முறை நகுலன், மற்றபடி சென்னையில் கோபி கிருஷ்ணன் வீடு, அசோகமித்திரன் வீடு, ந. முத்துசாமி வீடு.  மனுஷ்ய புத்திரன் வீட்டை இதில் சேர்க்கவில்லை.  ஏனென்றால், அது நான் உயிர்மையில் எழுதினாலும் எழுதாவிட்டாலும் என் வீடு.  இவர்களைத் தவிர நான் சென்ற வீடு தேவிபாரதி வீடு.  வெங்கரையாம்பாளையம்.    

அப்படி நான் தேவிபாரதி வீட்டுக்குப் போய், குடித்து விட்டு பிரச்சினை பண்ணினதாகவும், வீட்டை விட்டே கிளம்ப மறுத்ததாகவும், மிகுந்த சிரமப்பட்டுத்தான் அவர் என்னை வீட்டை விட்டுக் கிளப்பியதாகவும், அப்படியும் கிளம்பும் போது பஸ் டிக்கட்டுக்கு தேவிபாரதியிடம் நான் பணம் வாங்கினதாகவும் தேவிபாரதி எழுதியிருந்தார்.  இதைப் படித்தபோது எனக்குக் கோபம் வரவில்லை.  என்ன நினைத்தேன் தெரியுமா?  வீடு, பந்தம், பாசம், குடும்பம், உறவு, பணம் எல்லாவற்றையும் துறந்து விட்டு வெறும் கோவணத்துடன் திருவண்ணாமலையில் திரியும் துறவி ஒருத்தரைத் தன் இல்லத்துக்கு அழைத்த பக்தன் ஒருவன் துறவிக்கு உணவிட்டு, அவர் கிளம்பிய பிறகு, இருபது ஆண்டுகள் கழித்து, “என் வீட்டுக்கு வந்த போது திருவண்ணாமலைத் துறவி என் வீட்டிலிருந்த கைக்கடிகாரத்தைத் திருடிக் கொண்டு போய் விட்டார்” என்று எழுதியதைப் போல் இருந்தது.  அதைப் படித்தபோது தேவிபாரதிக்காக நான் தீவிரமாகப் பிரார்த்தனை செய்து கொண்டேன், அவரது மனம் நலம் பெற வேண்டும் என்று.  

அப்படிப்பட்ட தேவிபாரதியின் நொய்யலுக்குத்தான் நேற்று அப்படி எழுதினேன்.  அதுவும் போதாது என்று இப்போது அதை விட நீண்ட ஒரு மதிப்புரை எழுதிக்கொண்டிருக்கிறேன்.  காரணம், உங்களைப் பற்றிய என்னுடைய மதிப்பீட்டை நீங்கள் தீர்மானிப்பதை நான் அனுமதிப்பதில்லை.  நீங்கள் என்னை விஷமிட்டுத் தீண்டினால் நானும் பதிலுக்கு உங்களைத் தீண்ட வேண்டுமா?  அப்படியானால் என் கருத்தை நீங்கள்தான் தீர்மானிக்கிறீர்கள் என்று ஆகிறது.  அது என்னிடம் ஒருபோதும் நடக்காது.  நடக்கக் கூடாது. 

தேவிபாரதி வீட்டுக்கு நானாகச் செல்லவில்லை.  எனக்கு என் வீடே அந்நியமாகத் தெரியும்.  நான் சுதந்திரமாக உணர்வது நட்சத்திர விடுதிகளில் மட்டுமே.  இப்போது ஆரோவில் வன இல்லம் என்று எழுத நினைத்தேன்.  ஆனால் காலை உணவு என்ற பூதம் பயமுறுத்துகிறது.  அப்படியிருக்கும்போது நான் ஏன் இன்னொருத்தர் வீட்டுக்குப் போகிறேன்?  தேவிபாரதி வீட்டுக்குப் போனதன் காரணம், அவரை நான் மிக நெருக்கமான நண்பராக நினைத்தேன்.  அதற்குக் காரணம், ஆரம்பத்திலிருந்தே எனக்கு அவர் எழுத்து பிடிக்கும்.  மேலும், நான் அந்நிய வீடுகளில் காஃபி குடிப்பதற்கே தயங்குவேன்.  இன்னும் நான் என்னுடைய அத்யந்த நண்பர்களான தினமலர் ரமேஷ், சீனி (அராத்து), ஸ்ரீவில்லிபுத்தூர் ராகவன் போன்றவர்களின் வீடுகளுக்கே சென்றதில்லை.  முன்பெல்லாம் நான் மாதாமாதம் ரமேஷுடன் சேலம் செல்வது வழக்கம்.  அங்கிருந்து ஒருமுறை தேவிபாரதியின் வற்புறுத்தலின் பேரில் (இது ரொம்ப முக்கியம், நானாகச் செல்லவில்லை!) தேவிபாரதியின் ஊரான வெங்கரயாம்பாளையம் சென்றிருந்தேன்.  ஏன் சென்றேன், எப்படிச் சென்றேன் என்று ஞாபகம் இல்லை.  நானாக யார் வீட்டுக்கும் சென்றதில்லை. 

ஆனால் ஒரு விஷயம் ஞாபகம் இருக்கிறது.  வீட்டில் இத்தனை பெண் பிள்ளைகள் இருக்கின்ற போது நீங்கள் ஏகப்பட்ட எழுத்தாளர் கூட்டத்தை வீட்டுக்கு அழைத்து விருந்து வைப்பதும் மதுவை அனுமதிப்பதும் பிரச்சினைகளை உண்டாக்கும், இதைத் தவிருங்கள் என்று அறிவுரை கூறினேன்.  நான் அப்போது ரமேஷின் ஜகுவார் காரில்தான் பயணம் செய்து கொண்டிருந்தேன்.  ஆனால் வெங்கரையாம்பாளையத்துக்கு ஜகுவார் செல்லாது என்பதனாலோ என்னவோ அங்கே நான் பஸ்ஸில் போயிருக்கலாம்.  என்னிடம் பணம் நன்றாகப் புழங்கிக் கொண்டிருந்த காலம்.  திரும்புவதற்கு டவுன் பஸ்ஸில் ஆயிரம் ரூபாய் நோட்டுக்கு சில்லறை தர மாட்டான் என்பதால் தேவிபாரதியிடம் பத்து ரூபாய் வாங்கியிருக்கலாம்.  ஞாபகம் இல்லை.  அது ஒன்றுதான் சாத்தியம்.  மற்றபடி டிக்கட்டுக்குப் பணம் கேட்டான் என்பது போன்ற பிச்சைக்காரத்தனம் பிக்காரித்தனமெல்லாம் என் வாழ்க்கையில் எப்போதுமே கிடையாது.  நான் வறுமையில் உழன்ற காலத்திலேயே பத்தாயிரம் ரூபாய்க்கு ஷூ போட்டிருந்தேன்.  அது என்ன வறுமை என்கிறாய், பத்தாயிரம் ரூபாய்க்கு ஷூ என்கிறாய் என்று என்னிடம் நீங்கள் கேட்கக் கூடாது.  அடுத்த வேளை பூவாவுக்கே வழியில்லை என்றாலும், பத்தாயிரம் ரூபாய் கிடைத்தால் அப்போது என்னிடம் ஷூவும் இல்லாமல் இருந்தால் அந்தப் பத்தாயிரத்துக்கும் ஷூ வாங்கி விடுவேன்.  அப்படி வாங்கியும் இருக்கிறேன்.  ஒருமுறை அந்த ஷூவைப் பார்த்து விட்டு மனம் மிக நொந்து “நீ உருப்படுவது ரொம்பக் கஷ்டம் சாரு” என்று ரமேஷ் சொன்னது ஞாபகம் உள்ளது. 

எவ்வளவு ஏழ்மையில் இருந்தாலும் நான் ஒரு ஆடம்பரப் பிரியன் என்பது என்னை வாசிக்கும் அத்தனை பேருக்கும் தெரியும்.  நான் குடித்துக் கொண்டிருக்கும்போது ரெமி மார்ட்டின்தான் குடிப்பேன்.  ரெமி மார்ட்டின் சினிமா உலகக் கோடீஸ்வரர்கள் குடிப்பது.  ஒருமுறை ஒரு கோடீஸ்வரரிடம் பேசிக் கொண்டிருந்தேன்.  மாதம் எத்தனை பாட்டில் ரெமி மார்ட்டின் ஆகிறது என்றார்.  வாரம் ஒன்று என்றேன்.  அப்போது ரெமி மார்ட்டின் விலை ஆறாயிரம் ரூபாய்.  பத்து ஆண்டுகள் இருக்கும்.   “நீங்கள் என்ன குடிப்பீர்கள்?” என்று கோடீஸ்வரரைக் கேட்டேன்.  ”நான் நம்மூர் சரக்குதான் சாப்பிடுவது, ரெமி மார்ட்டின் எல்லாம் கொள்ளை விலையாக இருக்கிறது.  நினைத்தாலே மலைப்பாக இருக்கிறது” என்றார். 

இப்படிப்பட்ட ஒரு ஆள் போய் பத்து வீடுகளே உள்ள வெங்கரையாம்பாளையம் என்ற சிறு கிராமத்தில் (கிராமம் என்று சொல்லக் கூட தயக்கமாக உள்ளது) வசிக்கும் ஒரு எழுத்தாளரின் வீட்டில் போய் பஸ் டிக்கட்டுக்குக் காசு கேட்டேன் என்பது மிகப் பெரிய ஜோக் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனாலும் பாதகமில்லை.  எழுத்தாளர்களும் கலைஞர்களும் இப்படித்தான் எக்ஸெண்ட்ரிக்குகளாக இருப்பார்கள்.  வேசியிடம் காதை அறுத்துக் கொடுப்பார்கள்.  ஊர் அறிந்த அயோக்கிய சிகாமணியை மகாத்மா காந்தி என்பார்கள்.  இதிலெல்லாம் எந்த தர்க்கத்தையும் காண முடியாது.   

இப்படிப்பட்ட ஒரு எதிர்மறையான சூழலில் எனக்குப் பிடித்த இன்னொரு எழுத்தாளர் பாலசுப்ரமணியம் பொன்ராஜ்.  அவருடைய ”துரதிர்ஷ்டம் பிடித்த கப்பலின் கதை” என்ற சிறுகதைத் தொகுப்பின் வெளியீட்டு விழாவில் நான் பேசியிருக்கிறேன். என்னுடைய முக்கியமான உரைகளில் ஒன்று அது.  ஏனென்றால், பாலசுப்ரமணியன் பொன்ராஜ் தன் சிறுகதைகளை மிகவும் புதிதான ஒரு மொழியில் சொல்லியிருந்தார்.  இன்ஸெப்ஷன் என்ற படத்தைப் பார்த்து விட்டு நான் இந்த கிறிஸ்தோஃபர் நோலன் போர்ஹெஸின் தீவிர வாசகராக இருக்க வேண்டும் என்று எழுதினேன்.  அப்படித்தான் அவர் பேட்டியளித்தார். அதேபோல், பாலசுப்ரமணியன் பொன்ராஜின் விருப்பத்துக்குரிய எழுத்தாளர் போர்ஹேஸாகத்தான் இருக்க வேண்டும் என்று யூகித்தேன்.  பிறகு அவரது பேட்டிகளைப் படித்தபோது என் யூகம் ஊர்ஜிதமாயிற்று.    

இது நடந்து சில பல ஆண்டுகள் இருக்கலாம்.  அதோடு பாலசுப்ரமணியன் பொன்ராஜுடனான தொடர்பு விட்டுப் போயிற்று. என் வரம்தான் காரணம்.  நான் சிலாகிக்கும் எழுத்தாளருக்கு என் எழுத்து பிடிக்காதே?  அசோகமித்திரனுக்குக் கொடுத்த சங்கடத்தை நான் மற்ற எழுத்தாளர்களுக்கும் கொடுக்க விரும்பவில்லை.  ஆனால் பாலா என் எழுத்தை எப்படி எதிர்கொள்கிறார், அவருக்கு என் எழுத்து பிடிக்குமா என்பது பற்றியெல்லாம் நான் கவலை கொள்ளவில்லை. பாலசுப்ரமணியன் பொன்ராஜ் எனக்குப் பிடித்த எழுத்தாளர். அது போதுமாயிருந்தது எனக்கு.   

இந்த நிலையில்தான் இரண்டு தினங்களுக்கு முன்பு பாலாவிடமிருந்து ஒரு ஃபோன் அழைப்பும் தொடர்ந்து ஒரு வாட்ஸப் செய்தியும் வந்தன.  அதாவது, ஓசூரில் வசிக்கும் பா. வெங்கடேசன் அவர் வீட்டு மொட்டைமாடியில் நான்தான் ஔரங்ஸேப்… நாவல் பற்றிய ஒரு சந்திப்பை – கலந்துரையாடலை – நடத்த இருக்கிறார்.  அதில் பாலசுப்ரமணியன் பொன்ராஜும் கலந்து கொண்டு பேசுகிறார்.  சு.ரா. வீட்டு மாடியில் நடந்த காகங்கள் மாதிரியா என்றேன்.  ஆமாம் என்றார் பா. வெங்கடேசன்.  அப்படியானால் நான் போக முடியாது என்று நினைத்துக் கொண்டேன்.  ஏனென்றால், இன்றைய ஓசூர் அன்றைய திருநெல்வேலி போலவோ, கோவில்பட்டி போலவோ எழுத்தாளர் பாசறையாக விளங்குகிறது. நானும் போனால் கூட்டத்தை மாடியிலிருந்து மண்டபத்துக்கு மாற்ற வேண்டியிருக்கும்.  கூட்டத்தின் தன்மை மாறி விடும்.  அதோடு, நூலாசிரியரும் உடன் இருந்தால் சுதந்திரமான கருத்துப் பரிமாற்றத்துக்கு அது இடைஞ்சலாக இருக்கும்.

இனி பாலசுப்ரமணியன் பொன்ராஜின் செய்திகள் மற்றும் கடிதம்:

திரைப்பிம்பங்களை உண்மை என்று நாம் நம்புவதைப் போலவே, வரலாற்றுத் திரையில் அசைந்த பிம்பங்களின் விமர்சனக் கட்டுரைகளின் வழி நாம் உருவாக்கிக் கொண்ட சித்திரங்களை நல்லவர் என்றும் கெட்டவர் என்றும் உருவகித்து வைத்திருக்கிறோம்.

நாவலின் குறிப்பிட்ட இந்தக் கட்டமைப்பு சிறந்த ஒப்புமை.

(நாவலில்) பனாரஸியின் இரத்தினக் கற்களை எலி உருட்டிப்போவது அபாரமான சித்திரம்.  நாவலில் கவித்துவம் உருவாகும் இடங்களில் இதுவும் ஒன்று.   நாளைக்குள் நாவலை வாசித்து முடித்துவிடுவேன்.

***

இதை உங்களுக்கு அனுப்பிவிட்டு, தரையைப் பார்க்கிறேன்.  நடைபாதைப் பிளவிலிருந்து ஒரு எலி எட்டிப் பார்க்கிறது, தேநீர் கடை அருகே போடப்பட்டிருக்கும் காகித டம்ளரைக் கொறிக்க.

***

நேற்று வாசித்து முடித்ததும் தனிநபர் வன்முறை, அரசின் வன்முறை, எதிர்ப்பின் வன்முறை என பல வகையில் யோசிக்கத் தூண்டியது.  ஓசூரில் விரிவாகப் பேசுவேன்.

***

இனி பாலசுப்ரமணியன் பொன்ராஜின் கடிதம்:

அன்பு சாரு,

வணக்கம்.  தங்களுடைய நெடும் நாவலான ‘நான்தான் ஒளரங்ஸேப்…’ வாசித்து முடிக்க அலுவல் பணிக்கு இடையேயும் நான்கே நாட்கள் எடுத்துக் கொண்டதின் காரணங்கள் இவையே:

1. தங்களுடைய மொழி, இலகுவானதும், வாசிப்பவரைத் தொடர்ந்து வாசிப்பில் ஈடுபடுத்தக் கூடியதாகவும் இருப்பது.  ஆயிரம் பக்கம் எழுதினாலும் வாசிப்பவரை பயமுறுத்தக் கூடியவர் அல்ல சாரு.

2. இந்த நாவலை ஒட்டி ஓசூர் நண்பர்கள் நிகழ்த்தும் ஒரு வாசிப்புக் கலந்துரையாடலில் நானும் கலந்து கொள்வதற்கு ஒப்புக் கொண்டது.

3. இதன் தலைப்பும், நாயகனும், நாவல் வெளிவந்திருக்கும் காலமும்.  இதுவே தலையாயது. 

தமிழ்ச் சமூகம் ஹரிக்கேன் விளக்கின் காலத்திலிருந்து, செல்போன்களில் நுகரும் காலம் வரையிலும் கொட்டப்பட்டுக் கொண்டே இருக்கும் வரலாற்று நாவல் ‘அட்டிகள்’ பக்கமே நான் போனதில்லை.

இதற்கு முன்பு வரலாற்றாக்கம், காலனியம், புனைவு, அரசியல், மேல்நிலையாக்கம் எனப் பலவற்றைப் பேசும், பா.வெங்கடேசனின், தாண்டவராயன் கதை நாவலையே மிகுந்த ஆர்வத்துடன், ஐந்து நாட்களில் நான் வாசித்திருக்கிறேன்.

யோசித்துப் பார்த்தால், கடந்த பத்தாண்டுகளில் நான் வாசித்த இரண்டாவது தமிழ் நாவல் இதுவே. 

நமது சமூகமே மூன்றாவது தலைமுறையாகக் கொண்டாடும் பொன்னியின் செல்வனின் முதல் பத்தியைத் தாண்டி ஒரு பக்கம் கூட இன்னும் வாசித்ததில்லை.  வாசிக்கவும் முடிந்ததில்லை. வரலாற்றிற்கே உரிய ஆர்வம் எப்போதும் வேண்டுமானாலும் அசட்டுக் கிளுகிளுப்பாக மாறிவிடும்.

இப்படியொரு நாவலை நீங்கள் எழுதியதற்குப் பின்பாகச் செலுத்தப்பட்டிருக்கும் உழைப்பு நாவலுக்குத் தேவைப்படுகின்ற ஒன்றே எனினும் சேகரித்தவற்றின் பிரம்மாண்டத்திலிருந்து தேவையானவற்றைப் பிரித்தெடுக்கும் தேர்ச்சி நாற்பதாண்டுகளாக எழுதும் தங்களுக்குக் கைகூடாத ஒன்று அல்ல.

அட, வேறொரு சாருவாக இருக்கிறாரே என்று எண்ணும் வேளையில் எனக்குத் தோன்றுவது, சாரு இதுகாறும் வலியுறுத்தி வந்த அரசியல், சமூக மதிப்பீடுகளை வேறொரு தளத்தில் விரிவாக முன்வைத்திருக்கிறார் என்பதுவே. 

நண்பர்கள், உறவினர்கள் சிலருக்கும் இந்நாவலை வாசிக்கச் சொல்லி இருக்கிறேன்.  ஏன் அவர்களை வாசிக்கச் சொன்னேன் எனும் காரணத்தை நீங்கள் எளிதாக  ஊகிக்க முடியும்.

எனது தங்கை மகனுக்கு பத்து வயது. அவனுக்கு இந்த நாவலை வாசிக்கக் கொடுக்க முடியாது, கூடாது.  வளர்ந்ததும் இந்த சமூகம் வரலாறு என்று அவனுக்கு வழங்கப் போகும் அலங்கரிக்கப்பட்ட இடிபாடுகளைச் சரியாகப் பார்ப்பதற்கு இந்நாவல் நிச்சயம் உதவக்கூடும்.  அவனுக்கு மட்டுமல்ல. 

விரிவாகப் பேசும் களம் பின்பு அமையும்.  அப்போது முழுமையாக நாவலைப் பற்றிப் பேசுவேன்.

நன்றி

பாலசுப்ரமணியன் பொன்ராஜ்

***

பாலா குறிப்பிடும் எலி பற்றி பா. வெங்கடேசனிடம் பேசிக் கொண்டிருந்தேன்.  ஓசூரில் எலி அதிகம் என்றார்.  ஓ, எலியுமா என்று நினைத்துக் கொண்டேன்.  சொல்லவில்லை.