பொன்னியின் செல்வன் : மதிப்புரைக்கு ஒரு எதிர்வினை

சினிமா விமர்சனங்களிலிருந்து ஒதுங்கியிருக்கலாம் என்று முடிவு எடுத்து ஐந்தாறு ஆண்டுகள் ஆகின்றன. விமர்சனம் எழுதினால் அதன் விளைவாக சினிமா உலக நண்பர்களின் நட்பை இழக்கிறேன் என்பது உண்மைதான் என்றாலும் நான் சினிமா விமர்சனங்கள் எழுதாமல் இருப்பதற்கு அது காரணம் அல்ல. காரணம் என்னவென்றால், தமிழ்நாட்டில் சினிமாதான் மதம். சினிமா மனிதர்கள்தான் இங்கே கடவுள்கள். ரஜினி ஒரு கடவுள், கமல் கடவுள், அஜித் கடவுள், விஜய் கடவுள், சூர்யா கடவுள், தனுஷ் கடவுள், இளையராஜா கடவுள்களின் கடவுள். இதுதான் நிலை. இதன் காரணமாக, சினிமாவை விட எழுத்தாளர்களும் இலக்கியமும் கீழே என்ற மனோபாவம் சினிமாக்காரர்களிடம் நிலவுகிறது. இதற்கு விதிவிலக்காக இருப்பவர்களும் இருக்கிறார்கள். கமல்ஹாசன், வஸந்த், மணி ரத்னம், ஏ.ஆர். ரஹ்மான், வெற்றிமாறன், சத்யராஜ், பார்த்திபன், பா. ரஞ்சித் போன்றவர்களுக்கு இலக்கியவாதிகளின் மதிப்பு தெரியும்.

இதெல்லாம் போக, ஒரு படம் வெளிவந்தால் அதற்கு பாமரனிலிருந்து எழுத்தாளன் வரை மதிப்புரை சொல்லியே ஆக வேண்டும் என்ற அவல நிலை இங்கே தமிழ்நாட்டில் நிலவுகிறது. ஒவ்வொரு படம் வந்ததும் அது பற்றிக் கருத்து சொல்ல நான் என்ன சினிமாக்காரர்களின் கூலி ஆளா என்ற கேள்வியே எனக்கு முன் எப்போதும் நிற்கிறது. நான் ஏன் ஒவ்வொரு படத்தையும் பற்றிக் கருத்து சொல்ல வேண்டும்? கருத்து சொல்வதற்காகவே நான் ஏன் அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும்? கமல்ஹாஸன் போன்ற ஓரிருவரைத் தவிர வேறு எந்த சினிமா நடிகராவது, இயக்குனராவது தாங்கள் படித்த நூல் பற்றிப் பேசுகிறார்களா? பேசுவதில்லை என்கிற போது நாம் ஏன் வரிந்து வரிந்து போய் அவர்களின் படம் பற்றிப் பிரச்சாரம் பண்ண வேண்டும் என்ற எண்ணத்தினால்தான் நான் மேற்கண்ட முடிவை எடுத்தேன். என் முடிவு தவறு என்று யாரேனும் கருதினால் அது ஏன் தவறு என்று என்னிடம் சொல்லுங்கள். உங்கள் கருத்து நியாயமாக இருந்தால் என் கருத்தை மாற்றிக் கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

சென்ற மாதம் வெளிவந்த நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை அது வெளிவந்த மறுநாளே பார்த்தேன். அந்தப் படத்தில் வரும் நாடகத்தை அப்படியே சினிமாவில் நிகழ்த்தாமல் ஒரு இருபது நிமிடத்தைத் தாட்சண்யம் பார்க்காமல் வெட்டித் தள்ளியிருந்தால் அந்தப் படம் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சி.

“இப்போ கொஞ்ச நேரம் முன்னாடி என்னை லிக் பண்ணினியே, அப்போ தெரியலியா என் சாதி?” என்று கேட்கும் நாயகி ஒருத்தியை
இதுவரையிலான தமிழ் சினிமா பார்த்ததே இல்லை. படத்தைப் பற்றி எழுத எனக்கு எவ்வளவோ இருந்தது. நான் ஒரு படத்தை இயக்கினால் அந்தப் படம் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்தேன். நடத்திரம் நகர்கிறது எனக்கு ரொம்பப் பர்சனலான படமாக இருந்தது. பாண்டிச்சேரியில் நான் வாழ்ந்த தெருக்கள். நான் நடந்த, நான் குடித்த தெருக்கள்தான் படம் முழுக்க இடம் பெற்றன. படம் முழுக்கவே பூனைகள் அங்குமிங்குமாக ஓடியபடியே இருந்தன. இப்படி எல்லா வகையிலும் நட்சத்திரம் நகர்கிறது என் படமாகவே இருந்தது.

பொதுவாக தமிழ் சினிமாவுக்குள் வரும் நாடகங்கள் எல்லாம் குப்பையாக இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் வந்த நாடகம் மற்றும் நாடக ஒத்திகைக் காட்சிகள் எல்லாமே சர்வதேசத் தரத்தில் இருந்தன. ஓவியங்களும், அரங்க அமைப்புகளும் சர்வதேசத் தரம். இசையும் அப்படியே.

படத்தின் பெரிய குறை நாயகி பேசும் வசனம், நாயகியின் இயல்பு, நாயகியின் பாத்திர வடிவமைப்பு எல்லாம் பாலச்சந்தரின் (அரைவேக்காட்டு, போலிப்) புரட்சிப் பெண்ணை ஞாபகப்படுத்தின. அதிலும் இளையராஜா இளையராஜா என்று நம்மை டார்ச்சர் செய்கிறார் அந்த நாயகி. இளையராஜாவோ தன்னை தலித் என்று சொன்ன கே.ஏ. குணசேகரன் மீது வழக்குத் தொடுத்தவர். இத்தனைக்கும் குணசேகரன் தனது நூலில் இளையராஜாவை ஒரு கடவுள் ரேஞ்ஜுக்குப் புகழ்ந்தே எழுதியிருந்தார்.

இளையராஜா தன் தலித் அடையாளத்தை மறுப்பவர். யாரேனும் பாராட்டாகச் சொன்னாலுமே அவர் மீது வழக்குத் தொடுப்பவர். மேலும், இளையராஜா ஒரு மகத்தான கலைஞர். அவருக்கு ஏன் இந்த சாதி அடையாளம்? அவரே தூக்கிப் போட்டு விட்ட சாதி அடையாளத்தை ஏன் மீண்டும் மீண்டும் அவர் மீது சுமத்துகிறீர்கள்?

இது போன்ற ஓரிரு குறைகள் இருந்தாலும் நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் என்றே நான் கருதுகிறேன். ஆனாலும் அது பற்றி நான் அப்போது எழுதாததற்குக் காரணம், எழுத்தாளர்களெல்லாம் சினிமா இயக்குனர்களின் ஊழியர்களா என்ன என்ற கோபம்தான். நட்புக்காக எழுதலாம். தவறே இல்லை. ஆனால் விஷ்ணுபுரம் விருது எனக்கு அறிவிக்கப்பட்ட போது என் நட்பு வட்டத்தில் உள்ள தமிழ்ப் பிரபாவோ, பா. ரஞ்சித்தோ எனக்கு ஒரு வாழ்த்துச் செய்தி கூட அனுப்பவில்லை. பெஸ்ட் விஷஸ் என்று ரெண்டு வார்த்தை வாட்ஸப்பில் அனுப்ப மனம் இல்லையா? நேரம் இல்லையா? அப்படி அவர்களுக்குப் பழக்கம் இல்லையா? அல்லது, நெஞ்சில் ஈரம் இல்லையா? அல்லது, நான் அவர்களின் நட்பு வட்டத்தில் இருப்பதாக நானாக நினைத்துக் கொண்டிருக்கிறேனா? அப்படிப்பட்டவர்களின் படத்தைப் பற்றி நாம் ஏன் எழுத வேண்டும்? பார்த்தோம், ரசித்தோம், விட்டு விடுவோம் என்று இருந்து விட்டேன். (இன்னொரு விஷயம், சார்பேட்டா பற்றி அது வெளிவந்த போது மிக விரிவாக எழுதியிருந்தேன். அது பற்றித் தம் மகிழ்ச்சியை எனக்குத் தெரிவித்திருந்தார்கள் ரஞ்சித்தும், தமிழ்ப்பிரபாவும்!)

இந்த நிலையில் எனக்கு இன்று வாட்ஸப்பில் பின்வருமாறு ஒரு மெஸேஜ் வந்தது.

”பொன்னியின் செல்வனில் ஏ.ஆர். ரஹ்மான் பற்றி நீங்கள் சிலாகித்திருந்தது, ஒன்று, ரஹ்மான் உங்கள் நண்பர் என்பதனால் அப்படி கூறியிருக்கலாம், அல்லது சினிமா இசை பற்றி உங்களுக்கு முழுவதும் தெரியாமல் இருந்திருக்கலாம் (வேறு வழியில்லை இப்படித்தான் யோசிக்க வேண்டி இருக்கிறது).ஜெயமோகன் அவர்களின் வசனங்கள் அமெட்சூர் தனமாக இருக்கின்றது, அது பற்றி நீங்கள் வாய் திறக்கவில்லை.
மொத்தத்தில் உங்களின் விமர்சனம் பொருட்படுத்தத்தக்கதல்ல.”

நண்பர் என்பதற்காக நான் சிலாகிப்பதாக இருந்தால் இருபது ஆண்டுகளுக்கு முன்பே நான் சினிமா உலகில் பிரபலமான வசனகர்த்தாவாகப் பிரகாசித்திருப்பேன். என்னைப் பொருத்தவரை விமர்சனம் என்று வந்தால் அவர் எதிரியா நண்பரா என்று நான் பார்ப்பதே இல்லை. மேற்கண்ட மெஸேஜை அனுப்பிய அன்பர் நொய்யல் நாவல் பற்றிய என் மதிப்புரையைப் படித்தாரா இல்லையா என்றே தெரியவில்லை. என் வாழ்நாளில் என்னை மிகக் கேவலமாக, பர்ஸனலாக அவதூறு செய்த எழுத்தாளர் தேவிபாரதிதான். மற்றவர்கள் அவர் அளவுக்கு இறங்கி அடித்ததில்லை. ஆனால் தேவிபாரதியின் நொய்யலை நான் தமிழ் நாவலின் சிகரம் என்று எழுதியிருக்கிறேன். இப்படிப்பட்ட ஒரு ஆளா ரஹ்மான் என் நண்பர் என்பதற்காக சிலாகிப்பேன்? அப்படியில்லை என்றால், சினிமா இசை பற்றி எனக்குத் தெரியவில்லை என்று முடிவுக்கு வருகிறார் வாட்ஸப் அன்பர்.

இப்படியெல்லாம் ஒருவர் என்னைப் பற்றி நினைக்கலாம். ஆனால் அவர் என் நட்பு வட்டத்தில் இருக்கலாகாது. அவரை நான் ப்ளாக் பண்ணி விட்டேன். இப்படிப்பட்டவர்களோடு நான் நட்பு கொள்ள வேண்டிய எந்த அவசியமும் இல்லை.

என் தமிழ் சினிமா அனுபவத்திலேயே மிக மிக மிக மிக மோசமான அனுபவம் என்றால், அது இறைவியும் வெந்து தணிந்தது காடும்தான். ஆனால் அப்படிப்பட்ட வெந்து தணிந்த காடு படத்திலேயே பார்வையாளர் பலரும் பாத்திரங்கள் வசனம் பேசும்போது கை தட்டியதையும் விசில் அடித்ததையும் பார்த்தேன். எனவே ஒவ்வொன்றைப் பற்றியும் நான் எழுதிக் கொண்டிருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது என் வேலை இல்லை. நான் ஒன்றும் சினிமா விமர்சகனும் இல்லை.

சமீபத்தில் நான் ஒரு பரத நாட்டிய நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினேன். அப்போது நாட்டிய நங்கைகள் காளிங்க நர்த்தன கீர்த்தனைக்கு ஆடினார்கள். சம்ஸ்கிருத கீர்த்தனை. தமிழில் இந்த காளிங்க நர்த்தனத்தை எழுதியவர் ஊத்துக்காடு வெங்கடகவி என்று பக்கத்தில் அமர்ந்திருந்த வினித்திடம் சொன்னேன். வினித் ஆச்சரியம் அடைந்தார். எப்படி உங்களுக்குத் தெரியும் என்றார்.

2000 பக்கங்களுக்கு எழுத இசையிலும் நாட்டியத்திலும் எனக்கு விஷயம் இருக்கிறது என்றேன். அப்படித்தான் சினிமாவும். ஒரு ஐந்தாயிரம் பக்கத்துக்கு விஷயம் இருக்கிறது.

சொல்ல வந்ததுதான். என்னை விமர்சனம் செய்ய நினைப்பவர்கள் உங்கள் பக்கத்தில் அதைச் செய்து கொள்ளுங்கள். என்னுடைய வாட்ஸப் பகுதியில் வந்து வாந்தி எடுக்காதீர்கள்.