தமிழ்ப்பிரபாவுக்கு ஒரு பதில்

”இது போன்ற ஓரிரு குறைகள் இருந்தாலும் நட்சத்திரம் நகர்கிறது என்ற திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு மைல்கல் என்றே நான் கருதுகிறேன். ஆனாலும் அது பற்றி நான் அப்போது எழுதாததற்குக் காரணம், எழுத்தாளர்களெல்லாம் சினிமா இயக்குனர்களின் ஊழியர்களா என்ன என்ற கோபம்தான். நட்புக்காக எழுதலாம். தவறே இல்லை. ஆனால் விஷ்ணுபுரம் விருது எனக்கு அறிவிக்கப்பட்ட போது என் நட்பு வட்டத்தில் உள்ள தமிழ்ப் பிரபாவோ, பா. ரஞ்சித்தோ எனக்கு ஒரு வாழ்த்துச் செய்தி கூட அனுப்பவில்லை. பெஸ்ட் விஷஸ் என்று ரெண்டு வார்த்தை வாட்ஸப்பில் அனுப்ப மனம் இல்லையா? நேரம் இல்லையா? அப்படி அவர்களுக்குப் பழக்கம் இல்லையா? அல்லது, நெஞ்சில் ஈரம் இல்லையா? அல்லது, நான் அவர்களின் நட்பு வட்டத்தில் இருப்பதாக நானாக நினைத்துக் கொண்டிருக்கிறேனா? அப்படிப்பட்டவர்களின் படத்தைப் பற்றி நாம் ஏன் எழுத வேண்டும்? பார்த்தோம், ரசித்தோம், விட்டு விடுவோம் என்று இருந்து விட்டேன். (இன்னொரு விஷயம், சார்பேட்டா பற்றி அது வெளிவந்த போது மிக விரிவாக எழுதியிருந்தேன். அது பற்றித் தம் மகிழ்ச்சியை எனக்குத் தெரிவித்திருந்தார்கள் ரஞ்சித்தும், தமிழ்ப்பிரபாவும்!) //

என் அன்பிற்குரிய சாருவுக்கு,

உங்களுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்க இருக்கின்றனர் என தெரிய வந்தபோது முதலில் எனக்கு ஏற்பட்டது ஒரு இனிமையான குழப்பம் மட்டுமே! உங்கள் இருவரையும் வாசித்து வந்தவன் என்கிற முறையில் இரு துருவங்கள் இணைந்த புள்ளி எதுவாக இருக்கும்! உங்கள் இருவருக்குள்ளும் இருந்த மூர்க்கம், முதுமையின் வாசலை எட்டிப் பார்க்கும்போது கனிவாக மாறிவிட்டதா! ஜெயமோகனின் இலக்கியப் பள்ளிக்கு எதிர்நிலையில் நின்று சமராடிக் கொண்டிருந்த உங்கள் கையிலேயே அவர்களின் ப்ரத்யேக வாளைக் கொடுத்ததன் முரணியக்கம் என்னவாக இருக்கும் என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருந்தேன். வாழ்த்து சொல்லக்கூடாது என்றில்லை சாரு. முன்பே சொன்னதுபோல ஒரு இனிமையான குழப்பம்.

என் சார்புநிலை காரணமாக, விஷ்ணுபுரம் விருதிற்கு வாழ்த்துக்கள் என்று ஜெயமோகனுக்கு மட்டும் ஒரு மெசேஜ் டைப் செய்து அனுப்பாமல் விட்டுவிட்டேன்.

இதுவரை எந்தவொரு விஷ்ணுபுரம் விருது நிகழ்விற்கும் செல்ல வாய்ப்பு அமைந்ததில்லை. கடந்த வருடம் ஜெயமோகன் விஷ்ணுபுரம் விருது நிகழ்விற்கு அழைத்தும் போக முடியவில்லை. என் மகள் தோகை எப்போது வேண்டுமென்றாலும் பிறந்து விடுவாள் என்கிற நிலை. ஆனால், இந்த வருடம் நிச்சயமாக உங்களுக்காக வந்து கலந்து கொள்வேன் சாரு. பாட்ஷா, மாணிக்கமாக வாழும் காலத்தில், அவரைத் தெரிந்தவர்கள் மட்டும் அவர் கையில் முத்தம் கொடுப்பார்களே, அப்படியொரு முத்தம் உங்கள் கையில் கொடுத்துவிட்டு அங்கிருந்து விடைபெற வேண்டும்.

தமிழ்ப்பிரபா

May be an image of 2 people and people sitting

அன்புள்ள தமிழ்ப்பிரபா,

வாளை ஒன்றும் கொடுத்துவிடவில்லை. எதிர்ப் பள்ளி என்பது எதிர்ப் பள்ளிதான். அதில் ஒருபோதும் மாற்றம் வந்து விடாது. சமீபத்திய என்னுடைய சினிமா விமர்சனங்களைப் பார்த்தாலே உங்களுக்கு அது புரிந்து விடும். ஜெயமோகனுக்கு எது உச்சமோ அது எனக்கு ஆகாது. அவருக்கும் அப்படியே. எனக்கு மரியோ பர்கஸ் யோசா ஒரு உச்சம் என்றால் ஜெயமோகனுக்கு யோசா எழுத்தாளனே இல்லை. தமிழிலிருந்தே உதாரணம் தரலாம். சில தினங்களுக்கு முன்னால் ஆதவன் பற்றி ஜெயமோகன் இப்படி எழுதியிருந்தார்:

”ஆதவன் என் வாசிப்பில் முக்கியமான எழுத்தாளர் அல்ல. பொதுவாசிப்புத் தரத்துக்கு சற்று மேல் என்று சொல்லத்தக்க தரம் கொண்டவை அவர் ஆக்கங்கள். அன்றைய பொதுமோஸ்தரான சிந்தனைகளால் உருவாக்கப்பட்டவை. இன்று, அந்த காலகட்டம் பின்சென்ற பின் அவை மேலும் ஒளிமங்கியிருக்கின்றன.”

ஆதவன் பற்றி ஜெயமோகன். ஆனால் ஆதவன் இல்லாவிட்டால் நான் எழுத்தாளனே இல்லை. நான் எழுத ஆரம்பித்ததே ஆதவனைப் படித்ததனால்தான். சில சமயங்களில் முன்பு இளமையில் நம்மைக் கவர்ந்த எழுத்தாளர்கள் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு நமக்கு அந்நியமாகப் போய் விடுவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். எனக்கு அப்படி ஆனதில்லை. ஆதவனை சமீபத்தில் நான் முழுமையாகப் படித்தபோது நாற்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் அவர் எழுத்து என்னை எப்படி ஈர்த்ததோ அப்படியே இப்போதும் ஈர்த்தது.

இந்த வேறுபாடு இலக்கியம் குறித்து சாரு, ஜெயமோகன் இருவருடைய அணுகுமுறை மற்றும் ரசனையின் அடிப்படையில் உருவாகிறது. இருவேறு இலக்கியப் பள்ளிகள் என்றுதான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். இது எனக்கு எப்போது புரிந்ததோ அப்போதிருந்து அவரோடு சண்டை போடுவதை நிறுத்தி விட்டேன்.

இன்னொரு உதாரணம் தருகிறேன். 2000இல் நான் பாரிஸ் சென்ற போது பாரிஸ் பற்றிய ஒரு ஆவணப்படம் எடுத்தேன். அதை ஒருநாள் பார்க் ஷெரட்டன் அருகில் தங்கியிருந்த என் நண்பர் ஒருவரின் அறையில் வைத்துப் பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது எங்களோடு அமர்ந்திருந்த ஒரு தெற்கத்தி எழுத்தாளர் “இதைப் பார்த்தால் எனக்கு வாந்தி வருகிறது, அருவருப்பாக இருக்கிறது” என்று பயங்கர கோபத்துடன் கத்தி விட்டு வெளிநடப்பு செய்து விட்டார். ஜெயமோகனின் அணுக்க நண்பர். இப்போதுதான் எனக்குக் காரணம் புரிகிறது. ஆபாசமாக எதையும் நான் காண்பித்திருக்கவில்லை. ஒரு பத்து நிமிடங்களுக்கு மொந்த்பர்னாஸ் மெத்ரோ நிலையத்தில் நிற்கும் ரயில்களிலிருந்து இறங்கிச் செல்லும் பயணிகளின் கால்களையே படம் பிடித்திருந்தேன்.

என் எழுத்தை குப்பை என்று வர்ணிக்கும் பல இலக்கிய அன்பர்களையும் நான் அவ்வாறே புரிந்து கொள்கிறேன். இருவேறு இலக்கியப் பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் நானும் ஜெயமோகனும். இதுதான் காரணமே தவிர வயதுக்கும் இதற்கும் சம்பந்தமே கிடையாது. நீங்கள் டிசம்பரில் கோவை வரும் போது உங்களிடம் மட்டும் என்னுடைய கேர்ள் ஃப்ரெண்டை அறிமுகப்படுத்துகிறேன். சிரித்தால் ப்ரியங்கா சோப்ராவை ஞாபகப்படுத்தும் துஷாராவை விட அழகாக இருப்பாள். இரண்டே நிபந்தனைகள். 1. ரகசியத்தைக் காப்பாற்ற வேண்டும். 2. உங்கள் படத்தில் நடிப்பதற்குக் கூப்பிடக் கூடாது.

சாரு