க.நா.சு.வின் மனைவி ராஜியின் நேர்காணல்: தஞ்சை ப்ரகாஷ்

கீழே உள்ள பேட்டியை கவனமாகப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். காரணம், எழுத்தாளர்களின் மனைவிகள் எழுத்தாளர் தேக வியோகம் அடைந்த பிறகு கொடுக்கும் பேட்டிகள் ஒருசிலவற்றை வாசித்திருக்கிறேன். அந்தப் பேட்டிகள் எதுவும் என்னைக் கவர்ந்ததில்லை. காரணம், மனைவி என்ற பெண் எழுத்தாளனோடு கூடவே வாழ்ந்தாலும், கணவனை அவள் ஒரு எழுத்தாளனாக உள்வாங்குவதில்லை. ஒன்றிரண்டு விதிவிலக்குகள் இருந்தாலும் பொதுவான நிலைமை நான் மேலே குறிப்பிட்டதுதான். உதாரணமாக, சி.சு. செல்லப்பா தன் உரையில் சொல்வது போல, அவர் கு.ப.ரா.வுடனும் சிதம்பர சுப்ரமணியனுடன் மெரினா கடற்கரையில் செலவிட்ட பல மணி நேரங்களை அவர் தன் மனைவியோடு செலவிட்டிருக்க மாட்டார். இரண்டு நேரமும் ஒப்பு நோக்கக் கூடியதே அல்ல. எழுத்தாளர் செல்லப்பா வேறு, கணவர் செல்லப்பா வேறு. நானும் அப்படித்தான். அவந்திகாவிடம் நான் எழுத்தாளனாகவே நின்றதில்லை. ஆவணப்படத்துக்கு உன் பேட்டி வேண்டும் என்று சொன்னேன். படத்தைப் பார்த்து விட்டுத்தான் தர முடியும் என்றாள். சரி என்று விட்டு விட்டேன்.

மற்ற பல பெண்கள் தங்கள் கணவருக்குத் தருகின்ற நற்சான்றிதழான ”உருப்படாதவன்” என்று சொல்லாமல், ”நீ பாரதியைப் போல” என்று தினம் இரண்டு முறையாவது சொல்கிறாளே என்பதில் அவந்திகா மீது எனக்கு நன்றியுணர்வும் மகிழ்ச்சியும் உண்டு.

இந்தப் பேட்டியை நீங்கள் படித்த பிறகு இது குறித்து நான் எழுதலாம் என்று இருக்கிறேன். ஏனென்றால், அநேகமாக ராஜி சொல்லும் பல விஷயங்கள் எனக்கும் பொருந்தும், க.நா.சு.வின் செல்வச் சூழலைத் தவிர. மீதியைப் பிறகு எழுதுகிறேன்.

இந்தப் பேட்டியை மீள் பிரசுரம் செய்த கால சுப்ரமணியனுக்கு என் நன்றி.

-சாரு

ராஜி சுப்ரமணியம்

பேட்டி கண்டவர்: தஞ்சை பிரகாஷ்

தமிழ் இலக்கிய உலகில் கடந்த அறுபதாண்டு காலமாக தவிர்க்க இயலாத பெயர் க.நா.சு. தமிழில் எழுத வத்த எல்லோரும் க.நா.சு. அபிப்ராயம் வேண்டி நின்றனர். காரணம் அவரது மறுக்க முடியாத அபிப்பிராயத்தின் தீவிரத்தன்மை.

1950-களில் அவர் வெளியிட்ட ‘விமர்சனக் கலை’ தமிழ் எழுத்தாளர்கள் தங்கள் போக்கை மாற்றிக் கொள்வதற்கு உதவியாக இருந்தது. அவர் இருந்ததால் தமிழைப் பற்றியும், அதன் படைப்புகள் பற்றியும் இந்திய மொழிகளில் ஒரு எச்சரிக்கை உணர்வு உருவாகியது. ஒவ்வொரு ஆண்டிலும் க.நா.சு. தந்த பட்டியல்கள் துணிச்சலான மறுப்பை சொல்லித் தந்தது. டெல்லி போய் இருபதாண்டுகள் இருந்து, வட இந்தியப் பத்திரிகையில் எழுதிக் கொண்டிருந்தாலும் தமிழின் உயர்வு பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்த மனிதர். இன்றுவரைக்கும் அவரை விமர்சிக்கிறவர்கள் அவரைவிட அக்கறை குறைந்தவர்களாகவும், பரந்துபட்ட பார்வை இல்லாதவர்களாகவும், காணக் கிடைப்பது கண்கூடு. க.நா.சு. தன்னை விமர்சித்தவர்கள் யாரைப் பற்றியும் அதிகாரப் பூர்வமாக பேசியதோ, எழுதியதோ, மறுத்ததோ கிடையாது.

படைப்பிலக்கியத்தில் தமிழ்ப் பண்டிதர்களை அவர் மறுத்தார். அதேபோன்று தமிழில் வெகுஜன எழுத்தை கேலி செய்தார். வாழ்க்கையை யாருடைய துணையுமின்றி, எந்த நிறுவனத்தின் துணையுமின்றி வாழ்ந்து தீர்த்தார்.

க.நா.சு. மேல் அக்கறைவுடையவர்களுக்கும், அவரது சப்தம் காட்டாத சாதனைகளைப் பற்றி பெருமைப்படுகிறவர்களுக்கும் அவரைப் பற்றி எழுந்துள்ள சர்ச்சைகள் கவலை அளிக்கின்றன. திறந்த புத்தகமாய் இருக்கிற அவர் வாழ்க்கையை வாசகர்களும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் குறித்து அவரது மனைவி ராஜி சுப்ரமணியம் அவர்களிடம் பேசினோம்.

க.நா.சு. வின் இன்னொரு பக்கத்தை, ராஜி சுப்ரமணியம் அவர்கள் தங்களின் வாழ்வை திருபணம் செய்து அச்சமின்றி பேசியதை வாசகர்களுக்கு அறியத் தருகிறோம்:

கேள்வி: க.நா. சுப்ரமண்யம் என்கிற இலக்கிய ஆசிரியரோட மனைவியா அறுபது வருஷங்களுக்கு மேல நீங்க வாழ்திருக்கிங்க. க.நா.சு. பெரிய கலைஞர். அவரெ ஒரு விமர்சகரா மட்டும்தான் இப்பொ பாக்கறாங்க. இதுபத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?

பதில்: இப்ப எல்லாகும் க.நா.சு.வெ மோசமா பேசறா, தெரியும். முந்தி சிலோன்கார விமர்சக பண்டிதர் ஒருத்தர் இவரெத் திட்டி ஒரு புஸ்தகமே போட்டார்! ஆனா அவால்லாம் அவர் எழுதினதெ விமர்சனம் பண்ணினாளேயொழிய அவரெ விமர்சனங்கற பேர்ல தூஷணம் பண்ணவே இல்லெ! இப்போ அவர் கண் மறஞ்ச ஓடனேயே அவரோட நண்பர்கள்கூட கேவலம் பண்றா. க.நா.சு. மோசம் – நெறைய ஸ்வீட் திம்பார். ஏகமா கடன் வாங்குவார். தெறைய ஊதாரித்தனம் செய்வார். அதிகமா காப்பி குடிப்பார். என்னண்டை நெறைய பொய் சொல்லுவார். பொறுப்பில்லாம திரிவார்ன்னெல்லாம் பேசறா! அவர் இருந்தப்பகூட இதே மாறி பேசினவா உண்டு,  இல்லைங்கல்லெ! ஆனா தூஷணமா பேசறது எல்லாம் இப்ப நாலு வருஷமாத்கான். தப்பு பிரச்சாரம் நெறைய செய்ய முடியறது அவாளுக்கு.

அவர் வாழ்ந்த வாழ்க்கை அவ்வளவு சுத்தமான வாழ்க்கை. யாருகிட்டயும் கை ஏந்தாத வாழ்க்கை. ஆனா இலக்கியத்துக்காக கை ஏந்தினார். புதுமைப் பித்தன் படைப்பு எல்லாம் திரும்பி அச்சாகணும்ன்னு ஒவ்வொரு பதிப்பாளர்கிட்டயும் அலைஞ்சு கையேந்தித் திரிஞ்சார். கு. அழகிரிசாமியோட புஸ்தகங்கள் திரும்பியும் அச்சாகணுமன்னு தேடி தூண்டிவிட்டார். ஆனா அவர் புஸ்தகங்கள் திரும்பி அச்சாகணும்ன்னு அவர் அலையலை. 

கண. ராமநாதன்  செட்டியார் (ஸ்டார் பிரசுரம்) இல்லைன்னா அவரோட எழுத்துக்கள் வெளி வந்திருக்காது. இன்னிக்கு எல்லாம் எங்க குடும்பத்ல வெளக்கெரியறதுன்னா அது கண. ராமநாதன் செட்டியாராலதான் (ஸ்டார் பிரசுரம்). ஒரு மூச்சு எடுத்து அவரோட புஸ்தகங்கள் ஒரு பகுதி ரீபிரிண்ட் ஆயி இந்த தலைமுறையை வாசிக்க வெச்சதும் அவர்தான்.

தமிழ்ல ஏண்டா எழுதணும், இங்கிலீஷ்ல எழுதுன்னு அந்தக் காலத்லயே (1938) இவரோட அப்பா சொல்லிண்டே இருப்பா. இவர் என்னடான்னா தமிழ்ல தான் எழுதுவேன்: தமிழ்லதான் பேர் வெச்சுக்குவேன்னு சொல்லி “க.நா.சு.”ன்னு தன் தலையெழுத்தே எழுதினவரெ, தமிழ் மேல் க.நா.சு.வுக்கு பக்தி கெடையாது, க.நா.சு.வுக்கு தமிழ் மேல பிரியம் கெடையாதுன்னு தூஷணமா பெரிய பெரிய பத்திரிகைல எல்லாம் அச்சாகி வரது. பாவம். இங்கிலீஷ்லயும், பிரெஞ்சுலயும் மட்டும் எழுதிண்டிருந்தார்ன்னா அவர் பணத்தப் பத்தி எந்த கவலையுமில்லாம வாழ்ந்திருக்கலாம்.

சொன்னா சண்டைக்கி வருவா எல்லாம். வருஷம் முழுசும் எழுதி எழுதி அனுப்பிண்டேதான் இருப்பார் க.நா.சு. அதில என்ன தப்பு? இவால்லாம் என்ன பண்றாளாம். பத்திரிகையெ தூக்கிண்டு விற்கணுமே விற்கணுமேன்னு எல்வாத்தையும் வித்துண்டு காவடி எடுக்கலியா? என் புருஷன மட்டும்தானா அலஞ்சார்? அவர் எழுதின நாவல், கதை, கவிதை எல்லாத்தையும் பத்தி ஒரு வார்த்தை கூட விமர்சனம்ன்னு அவர் உயிரோட இருக்கிற வரைக்கும் யாரும் பண்ணினதேயில்லை. இப்ப எல்லாருக்கும் புத்தி வந்துடுத்து. “க.நா.சு. ஒண்ணுமே இல்லை” அப்டீன்னு எழுத வரா!

அவர் எழுதினது பத்தி சொல்ல எனக்கு மேதை போறாது! ரசிச்சு எழுதுவார். எழுத நேரமில்லாம தவிப்பார். ஏராளம் எழுதினார் – இவ்வளவு எழுதினார்ன்னாக்கூட யாரும் நம்ப மாட்டா, அவ்வளவு எழுதினார். “திருவாலங்காடு”ன்னு ஒரு 900 பக்கம் நாவல் இருபது வருஷமா யாரும் சீண்டாமல் கரையான் தின்னுச்சி. திருப்பித் திருப்பி பல தடவைகள் எழுதுவார். கை ரத்தம் கட்டி – கரு ரத்தம் வெரல் நுனியில் கருப்பு கருப்பா நிக்கும். அழுகையா வரும். யாரும் போடாட்டா கூட அவர் கவலைப் பட்டதில்லெ. அவர் எழுதின டயரி மட்டும் ஆயிரம் பக்கம் இருக்கும். தினம் ஒரு நாப்பது பக்கம்

நோட்டெ எழுதித் தீத்துட்டுதான் தூங்கப் போவார். வெளிநாட்ல இருந்து பெரிய எழுத்தாளன் யாராவது வந்து அவரண்டை சந்தேகம் கேட்டுண்டேயிருப்பா. பெருமைக்கு இல்லே. நிஜமாச் சொல்றேன். அவரோட கடைசி காலத்ல அவர் எழுதி வந்த பொஸ்தகம் ஒண்ணெ கண்ணால பாக்க முடியலையேன்னுதான் சாகும்போது கூட ஒரு வருத்தம் அவருக்கு! படிக்கிறதுன்னா அபார ப்ரேமை! எழுதுறதுன்னா பூதக்கண்ணாடி வெச்சுண்டுகூட கடைசி காலத்ல எழுதினார். ஓயாம எழுதினார், டைப் செஞ்சார், அடடா! அப்ப அதோட அருமை எனக்கே தெரியலை. இப்பதான் தெரியறது.

கேள்வி: குடும்பத்தை க.நா.சு. கவனிச்சதேயில்லை. ஜம்னா தானாதான் படிச்சு வந்தா – குடும்பத்து பொறுப்பு அவருக்கு ஜென்மத்லியே கெடையாது. யாரையும் கவனிக்காத செல்லப்பிள்ளை. அப்பாவால கெடுக்கப்பட்ட ஸ்பாய்ல்டு சைல்டு! அப்டின்னு க.நா.சு.வெ சொல்றாங்களே? விமர்சகர்கள் – உங்களுக்குத் தெரியுமே! நீங்க ஏதாவது சொல்லணுமே!

பதில்: (கண்ணீருடன் சிரிக்கிறார்) குடும்பத்தெ அவர் கவனிக்கலதான்! ஏன் கவனிக்கணும், அவர் கவனிக்கல்லென்னு சொல்றவன் எல்லாம் புரியாமல் சொல்றான். அவர் குடும்பத்தெ சுவனிக்க வாண்டாம்ன்னு தான் அவர் அப்பா நாராயணய்யர் பூரணமா குடும்பத்தெ ஏத்துண்டிருந்தாரே! மகன் பெரிய மேதையா வரணும் – லோக கஷ்டங்கள் தெரியாமல் மேலும் மேலும் படிச்சு மேதையா ஆகணும்னு தான்- பணம் சேத்து மகனுக்கு கொடுத்தார். லோகத்ல எல்லாருக்கும் பொறாமை எரிச்சல். நம்ம பையன்லாம் வேலைக்கு ஏறி எறங்கி அலஞ்சிண்டிருக்கப்போ- இவன் மட்டும் படிச்சுண்டும் எழுதிண்டும் இருக்கானேன்னுட்டு ஆகாமை! ஆனா அவர் சம்பாதிக்காம இருந்தார்ங்கறது பொய். அவரெப் பத்தி பொய் பேசறது; தூத்தறது – எதுக்கு எதுக்கு செய்றான்னு எனக்குத் தெரியும்! ஆகாமை! அதான்! ஆனா எல்லாரும் அதை செஞ்சா.

நல்ல புஸ்தகங்கள் எதுன்னு “படித்திருக்கிறீங்களா”ன்னு மூணு தொகுதி புஸ்தகம் போட்டார். அது மாதிரி பொஸ்தகம் அப்புறம் அவரே எழுத வாய்க்கல்லெ. “சிந்தனையாளர்கள்”னு ஒரு வரிசை புஸ்தகம் எழுதினார். கரையான் தின்று தீத்தது. பணக் கஷ்டம் இருந்தது, வாழ்க்கையில் படாத பாடுபட்டப்போகூட அவர் கலங்கி கண்ணீர் விட்டதில்லே. பிடிவாதமா எதுத்து நிப்பார். பணம் சம்பாதிக்காமல் அவர் ஜீவிச்சதா சொல்ற இந்த பெரிய மனுஷா எல்லாம், அப்ப எங்காத்துக்கு வந்து போயிண்டிருந்தவாதான். எங்காத்துக்கு வந்து காப்பி குடிச்சு அவரோட ஹோட்டல் ஹோட்டலா சுத்தி சாப்ட்டவாதான் இவா எல்லாம். இப்ப ஊதாரிங்கறா. இவர் “ஊதாரி”ன்னு ஒரு நாடகமே எழுதி வெளியிட்டார் தெரியுமோ? யார் படிச்சிருந்தாலும் அவாளுக்குப் புரியுமே!

சம்பாதிக்கல்லெங்கறாளே இவா என்ன ரொம்ப ஒழுங்கோ? க.நா.சு. எழுதித்தான் வாழ்ந்தார். இவா கையெ எப்பமும் எதிர்பாக்கல்ல. ஓயாமெ உழைச்சு எழுதினார். எழுதி சம்பாதிச்சார். கலைமகள்ல கூப்பிட்டா! போகல்லெ. கல்கி கூப்பிட்டார். போகல்லெ. போகத் தயாராயில்லெ, அதான் உண்மை. பணத்துக்கு பறக்கிறது அவர்கிட்ட நடக்காது. எப்பேர்ப்பட்ட கொம்பன் எல்லாம் கூப்பிட்டும் அவர் அப்டி ஒரு வாழ்க்கையை ஏத்துக்கத் தயாராயில்லெங்கறதுதான் நிஜம். குடும்பம் இல்லாம அவரால இருக்கவே முடியாது! பொண்ணு பாப்பா (ஜம்னா) மேல் ஒரே அன்பு மூணே பேர்தான். அதிர்ஷ்டசாலி! எனக்கு வேற பிள்ளை வேண்டாம் என் பெண் ஜம்னா மேல இப்ப இருக்க ப்ரியம் ஆசைல்லாம் குறைஞ்சு போய்டுன்னுட்டு – வேற கொழந்தைகளே வாண்டாம்ன்னுட்டார்.

கேள்வி: உங்களுக்கு எப்ப கல்யாணம் நடந்தது?

பதில்: வந்து… கல்யாணம் 1933-ல! சிதம்பரதில் எனக்கு அப்ப வயசு பதினொண்ணுதான்! எங்கப்பா வக்கீல் கிருஷ்ண மூர்த்தியய்யர். அவரோட கல்யாணம் ஆனபோது முதல் கதை (க.நா. சுப்ரமண்யம் எழுதினது) ராஜின்ற சுதைதான் விகடன்ல வந்தது. ரொம்ப சந்தோஷமா இருந்துது. சுதேசமித்ரன்ல நிர்மலான்னு அடுத்த கதை வந்தது. வாழ்க்கையெ அப்டியே எழுதுவார். வர்ணனைகள் எல்லாம் அவருக்குப் பிடிக்காது. நிதர்சனம்தான் வேணும். அவர் எழுத்துக்கெல்லாம் ஆதாரம் அவரோட அப்பாதான். அப்பாதான் அவரை உருவாக்கினார். என் மாமனார் பெரிய படிப்பாளி, சுவாமிமலை கந்தாடை நாராயணசாமி அய்யர்னு பேரு. தினமும் மகனுக்கு ஏதாவது இலக்கியம் சொல்லிண்டே இருப்பார். சிதம்பரதல் ஒரு நா தேர் வந்துது! இதெகூட அப்டியே எழுதலாம்ன்னு மகனுக்கு சொல்லிக் கொடுத்துண்டே இருந்தது – எனக்கு இப்பகூட ஞாபகம் வருது. இவர் எழுதலை. ஆனா அப்பறமா ஒரு நாள் ஒரு கதை அப்டியே அச்சா எழுதி வெளியாயி ஆச்சரியமா இருந்தது நேக்கு. இப்ப நேக்கு 74 வயசாறது. இப்பகூட ஆச்சர்யம் தான் அந்தக் கதை.

அவர் வேலை செய்யலையே, சுகவாசியா இருந்துட்டாரேன்னு இந்த அறிஞர்களுக்கெல்லாம் ரொம்பக் கவலை. அதை விமர்சனமன்னு எழுதறாளே. அவர் எழுதி வெச்ச நாவல்கள் மட்டும் 20 இருக்கு! வெளிவராத நாவல் மட்டும் 5 இருக்கு. இதை விமர்சிச்சாப் போறுமே, தமிழுக்கு எத்தனை நன்மை! இவர் அப்பாவும் என் அப்பா வக்கீல் கிருஷ்ணமூர்த்தி அய்யரும் எதை நம்பி என் பதினோராவது பிராயத்தில் என்னை அவருக்கு கல்யாணம் பண்ணி வெச்சாளாம்? சொல்ல முடியுமா? எங்கப்பாவுக்கு மருமகன் மேல அபாரமான ப்ரீதி. இவர் எது செஞ்சாலும் சரிதான் – யாரும் க.நா.சு. பத்தி ஒண்ணும் குத்தம் சொல்லவே படாது, சொன்னா பிடிக்காது. அத்தனை பிரியம். நான் ஜாதகப்படியே சுகவாசி! ரெண்டு அண்ணா எல்லாரும் தங்கமா தாங்கினா; பெண்ணுக கஷ்டப் படவேபடாதுன்னு இப்பவும் என் சகோதரன் தாங்கிண்டிருக்கான் இதோ – (கண் எதிரே காட்டுகிறார். கண்கலங்க சகோதரர் கிருஷ்ண வெங்கட் ராமன் தலைகுனிந்து கொள்கிறார்).

கேள்வி: சம்பாதித்தார் என்று சொன்னீங்களே எப்படி? சொல்லலியே?

பதில்: நிறைய எழுதி அனுப்பிச்சிண்டேயிருப்பார். இங்கிலீஷ் பத்திரிகைகள்தான் அவருக்கு நிறைய கொடுத்தா. க.நா.சு.வோட நண்பர் பெரிய பத்திரிகை ஆசிரியர் ஒத்தர் இப்ப எழுதிறார். தமிழ் பத்தி தமிழ் பண்பு பத்தி க.நா.சு.வுக்கு ஒண்னும் தெரியாதுன்னு. 1955 லேயே சிட்னி பட்டணத்திலிருந்து வெளிவந்த “Hemisphere” என்ற பத்திரிகையில் சு.நா.சு. தமிழ்ப்பண்பு பற்றி முழுவதும் இந்தியப் பண்பு பற்றியும் எழுதினார். 400 டாலருக்கு இந்திய அனுமதியோடு பாராட்டும் வந்தது. அப்போ மச்சினனுக்கு போட்டோ காமிரா ஒண்ணு வாங்கித் தந்து அவனை போட்டோகிராபர் ஆக்கினார். வாழ்க்கை துவங்கிக் கொடுத்தார். அவனும் பெரிய அளவில் வளந்து சென்ட்ரல் ரயில்வே போட்டோகிராபராக வேலை கொடுத்து ரிடயரானது அவராளதான்.

கையில் காசிருந்தால் நிறைய செய்வார். இல்லையென்றால் கவலைப்பட மாட்டார். பணம் அவரை ஒண்ணும் பண்ண முடியாது. அவர் பணியவே மாட்டார். அவர் எங்கே போகிறார். எங்கே வருகிறார். யாரும் ஒண்ணும் கண்டுபிடிக்க முடியாது. திடீர்ன்னு யாராவது ஒரு சாமியார்கிட்ட வேதம் படிப்பார், திடீர்ன்னு திருவனந்தபுரம் போயிடுவார். பட்டுன்னு அங்க ஒரு ஆச்ரமத்ல் சேந்து அத்வைதம் படிப்பார். திடீர்ன்னு ஆந்திரா போய் அங்கே ஒரு குருகிட்ட ரகசியம் கத்துப்பார். ஒண்ணும் தெளிவா சொல்ல முடியாது. பட்டுன்னு கடைசி காலத்ல கூட ஜப்பான் மொழி படிக்கிறேன்னு ஆரமிச்சு எழுதி படிச்சு சர்டிபிகேட் கூட வாங்கினார். எனக்கு அப்பப்ப திக்கின்னும். அது மாதிரி ஏதாவது பண்ணுவார்.

நிறைய புதுசு புதுசா நண்பர்கள் வருவா வீட்டுக்கு. அவர்கிட்ட பயபக்கியோட பழக ஆரம்பிப்பா. அப்புறம் வந்துரும் கேடு! தூத்துவா. பின்னால கல்கி ஆரமிச்சப்போ சிதம்பரத்தில் முதல் சந்தா கொடுத்துப் பத்திரிகை ஆரம்பிச்சு விழா பண்ணினப்போ ஏஜெண்டோட – போய் (கோட்டை விநாயகம் பிள்ளையுடன்) ஆரம்பித்து வைத்தவர் க.நா.சு.தான். பின்னால் அவர் பிள்ளை ராஜேந்திரனே க.நா.சு.வை கேலி செய்தாராம்! விதிங்கிறது இது தான். சுப்புடு பெரிய சங்கீத விமர்சகர் – அவரும் க.நா.சு. செத்தப்புறம் அவரைப் பற்றி நன்னா எழுதலை. இப்படி அவரோட நண்பர்கள் பேசுறது அவர்களைப் பற்றியே வெளித் தெரிய வருகிறார்கள் கேவலமாம்.

கேள்வி: சமீபத்து இளைய சுவிஞர்கள்கூட க.நா.சு.க்கு பிரெஞ்சு தெரியாது. அவர் சொல்கிறது எல்லாம் பொய், ஸ்டீபன் ஸ்பென்டர் போன்ற பிரிட்டிஷ் எழுத்தாளர்களைத் தெரியும் என்பது பொய் என்று அள்ளி வீசுகிறார்களே?

பதில்: சொல்லிண்டு போறா! நமக்கென்ன. தோ ஸ்டீபன் ஸ்பெண்டர் மட்டுமில்லை. பிரான்ஸ் போனது, அங்கே பேசினது எல்லா போட்டோவும் இருக்கு பாருங்கோ! ஸ்டீபன் ஸ்பெண்டர் இவருக்கு ஊருக்குத் திரும்பி இங்கிலாந்து போனதும் பணம் புஸ்தகம் எல்லாம் எவ்வளவு அனுப்பி வைச்சார் தெரியுமோ? நீங்களே பாருங்கள். (நம்மிடம் காட்டுகிறார்) சீரும் சிறப்புமா இருந்தார் புரசைவாக்கத்தில். 1940-களிலே. வீட்டுக்கு வராத பெரிய எழுத்தாளர் கெடையாது. எல்லாரையும் கூட்டிண்டு ஹோட்டலுக்குத்தான் போவார். யாரையும் செலவு செய்ய விட மாட்டார். தன கைப்பணம்தான் செலவு செய்வார். பாம்பேல இருந்தார். கொலாபாவில்! ஏராளமான எழுத்தாளர் கலைஞர்கள் வருவா. இவரோட இங்கிலீஷ் கட்டுரைகள்தான் அத்தனை தொடர்புக்கும் காரணம்.

பாரீஸ் போனாரே! சொந்த காசில் செலவழிச்சிண்டுதான் போனார். சந்திரோதயம் பத்திரிகை நடத்தினாரே யாரண்டயானும் காசு வாங்கினாரா! இதோ செல்லப்பா இருக்காரே! அவரெ கேட்டுப் பாருங்களேன். ஸ்வீட்தான் சாப்டார். அவருக்கு சர்க்கரை வியாதி இல்லையே! ஏன், கடைசி வரைக்கும் ஹார்ட் அட்டாக் கிடையாதே! மருந்து சாப்பிட மாட்டார். பிடிவாதம் தான்! ஹோட்டல் பட்சணத்து மேல ப்ரியம்தான். தஞ்சாவூர் ஹோட்டல் கோயமுத்தூர் ராமசாமியய்யர் கடையில் பிச்சமூர்த்தி, மௌனி, கு. அழகிரிசாமி என்று ஒரு படை தினமும் போய் அல்வா, காபி சாப்டு வருவா – எல்லாருமா. பில் இவர்தான் குடுப்பார். கேட்டுப் பாருங்கோளேன். மயக்கம் வரும். அதுதான் அவருக்கிருந்த ஒரே வியாதி.

கேள்வி: க.நா.சுவுக்கு சமுதாய தோக்கு இல்லெங்கிறாங்களேம்மா? ஜாதி வெறி உண்டு. அவர் பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ்.ல தொடர்பு கருத்தோட்டம் இணக்கம் எல்லாம் உண்டுங்கிறாங்களே ?

பதில்: இப்படியெல்லாம் எழுதுகிற அவரோட நண்பர்களைப் பத்தி வருத்தப்படுகிறேன். சா. கந்தசாமி நல்ல கலை எழுத்தாளர், அவரை கேட்டுப் பாருங்கோ. அவர் பூணூல் இல்லாத பிராமணன். நாங்கள் வைதீக குடும்பம்தான். அவர் (க.நா.சு.) சாமி கும்பிட மாட்டார்! ஜாதி வெறி அவருக்கு எப்பவும் கிடையாது. அவர் அரசியல் பக்கம் புத்திபூர்வமா போறது கிடையாது. அவரோட அப்பா செத்தப்போதான் அவர் கண்ல கண்ணீரே பாத்திருக்கேன். அப்பாவோட கர்மாவெ செய்ய அவரை வற்புறுத்தி பூணூல் போட்டுக்க வெச்சா எல்லாருமா. அவரே பூணூல் கொடுன்னு கேட்டு வாங்கி ஸம்ஸ்காரம் எல்லாம் முடிஞ்சதும் கழட்டி எறிஞ்சிட்டு வந்துட்டார். ஜாதி பாக்கிற ஆள் க.நா.சு. இல்லெ. ஞானரதம் ராவுத்தர் வீட்டில் சாப்பிட்டார். என்னையும் சாப்பிடச் செய்தார். மதமும் அவருக்கு எல்லாம் ஒண்ணுன்னுதான் நம்பிக்கை. வைதீக வேத ஞானம்தான் அவருக்குப் பெரிசு. தஞ்சாவூர்ல கீழ் ஜாதிகார இலக்கிய நண்பர் தான் கீழ்ஜாதின்னு சொன்னப்போ அவரை கண்டிச்சு அவர் வீட்லகூட போய்ச் சாப்பிட்டு அவரை சந்தோஷப்படுத்தினது உங்களுக்கும் தெரியுமே ப்ரகாஷ்?

கேள்வி: ஏம்மா அப்ப அவர் மேல உங்களுக்கு எந்தக் குறையுமே கிடையாதா?

பதில்: ஏன் கிடையாது? எப்பவும் நல்லா பகட்டா இருக்கத் தெரியாது. இஷ்டம் போல இருப்பார். யார் பணம் கொடுத்தாலும் வாங்கி வசதியா வாழ்த் தெரியாது. கல்கத்தாவில் இருந்தபோது மாமனார் அனுப்பிய பட்டு ஜரிகை வேட்டியைக் கூட வாங்க மறுத்துவிட்டார். காங்கிரஸ் கட்சியில் இவர் சார்பாளர் என்று 1943-களின் கடைசியில் ஒரு கூட்டத்தில் பேசியபோது ரகசிய போலீஸ் வந்து வீட்டில் புத்தகங்களைக் குடைந்து இவரை  அரஸ்ட் செய்து ஜெயிலில் வைத்தபோது “தியாகி அல்ல நான்” என்று மறுத்து ஒதுங்கி, ஜாமீன் கொடுத்து வெளியே வந்து விலகியது. நண்பர்கள் தராதரம் தெரியாமல் எல்லாரையும் நம்பி ஏமாந்து, பின்னால் அவர்கள் மண் அள்ளித் தூற்றும்போது அதுபற்றியும் கவலைப்படாமல் கேலியாய் சிரிக்கிறது. ‘கூபி’ என்ற நாய் வளர்த்தார். செத்துப் போச்சு, அதுமேல ஒரு அழகான பெரிய நாவல் எழுதி வெளியிடாமலே தானே படிச்சு ரசிச்சு கொண்டே இருந்ததாகூட… இப்டி சொல்லிண்டே போலாம். புருஷன்னு இருந்தா, புடிக்காதது; புடிச்சது, ரெண்டு தான் இருக்கும் இல்லியா?

அந்த ‘கூபி’ நாவலுக்கு ரூ.15,000 கொடுக்க ஒரு வடக்கத்தி பப்ளிஷர் தமிழ்ல வெளியிடவும் ஒத்துண்டு வந்தப்போ என்னமோ ஒரு சின்ன மாற்றம் பண்ணனும்ன்னு கேட்டப்போ பிடிவாதமா 15,000 ரூபாயையும் திருப்பிக் கொடுத்தார் மஹானுபாவள். ஸ்டார் பிரசுரம் கண. ராமநாதன் செட்டியார் கூட இருந்தார். 15,000 ரூபாயையும் திருப்பி கொடுத்தது எனக்கு கஷ்டமாய்தான் இருந்தது. 1980-ல் சென்னைக்கு வந்து திரும்பியும் எல்லா பத்திரிகையிலும் எழுத ஆரம்பிச்சப்போ கூட T.V.ல இருக்க எஸ். கோபாலி ரூ.2,000 அனுப்பிச்சபோது நான் கைநீட்டி வாங்கி வீட்டுக்கு மின்சார விசிறி ஃபிட்டப் பண்ணினேன். க.நா.சு. (அவர்) பண்ணின கண்டிப்பு லேசானதில்லை. இந்த ஃபேன் என் தலைமேலதான் விழப் போறது. வாண்டாம்ன்னு சொல்லிண்டேயிருந்தார். கோபாலியே நேரில் வந்து ரயில்வே பற்றி நான் பண்ணின TV ப்ரோக்ரராமுக்கு நீங்க சொன்ன ரயில் கதைதான் ஆதார விஷயமா இருந்தது. நீங்க வாங்கிக்கணும்ன்னு சொன்னப்புறம்தான், வாங்கிக்கிட்டது பத்தி கவலைப்படாமல் இருந்ததுன்னு அவர் பண்ற கூத்து ரொம்ப கஷ்டம் தான். மனசு படும் கஷ்டமும் கூடத்தான். இதெல்லாம் பிடிக்காட்டாக்கூட இப்ப ரொம்ப மனசு சந்தோஷப்படுது!

கேள்வி: க.நா.சு.வுக்கு ரொம்ப பிடித்தது என்ன? 

பதில்: கோதுமை அல்வா. படித்துக் கொண்டிருப்பது. எழுதுவது. (பேத்தி) மேல் கடைசியில் ரொம்ப பிரியம். ஜம்னா, மருமகன் மணி, எல்லாருமே அவரைப் போலவே ரசிகர்கள். எழுத்தார்வம், நடிப்பு, நாடகம் எல்லாம் உண்டு. அபாரமாய் செய்வார்கள். அவருக்கும் இதில் பெருமை உண்டு. குடும்பம், பாப்பா என்றால் அவருக்கு உயிர்! 

கேள்வி: புதுமைப்பித்தன் – க.நா.சு. பற்றிச் சொல்லுங்கள்.

பதில்: எனக்கு ஒண்ணும் தெரியாது. அவா பேச்சு ஓயாது! எப்பவும் ரெண்டு பேரும் விடிய விடிய பேசுவா. அவருக்கும் அல்வா ஸ்வீட் ரொம்ப பிடிக்கும். காலை நேரம் புதுமைபித்தனோட காபி சாப்பிட போவா. புதுமைப்பித்தன் அப்புறமா காணும். வடக்கே போய்ட்டாராமே? அதுக்கப்புறமா புதுமைப்பித்தன் உடம்பு ரொம்ப மோசமாப் போனபோது நானும் அவரும் (ராயப்பேட்டைல அவா அப்ப இருந்தா) போய் பார்த்தோம். பட்டுப் புடவை ஒண்ணெ (கல்யாணப் புடவை) வித்து வைத்தியம் பார்க்கணுமான்னு அவா கவலைப்பட்டு தடுமாறிண்டிருந்தப்போ இவர்தான் புதுமைப்பித்தன் உசிர் பெரிசும்மா என்று வற்புறுத்திச் சொல்லி தைரியம் சொன்னார். அப்புறம் திருவனந்தபுரம் போனது தெரியும். புதுமைப்பித்தன் இறந்துபோனது பற்றி கேள்விப்பட்டோம்.

கேள்வி: சு.தா.சு. எழுதுகிற விதம் பத்தி சொல்லுங்க?

பதில்: பேய் மாதிரி எழுதிண்டே இருப்பார். நாங்க தூங்கிப் போய்டுவோம். முழிக்கும்போது பாத்தா எழுதிண்டிருப்பார். இல்லேன்னா டைப் பண்ணிண்டிருப்பார். ஆபரேஷன் ஆனதால் கண்ணாடிகூட உதவாமல் போச்சு. கடைசில பூதக்கண்ணாடி வெச்சிண்டு படிச்சிண்டிருப்பார். எழுதுறதுதான் சுகம். எழுதினப்புறம் சுகமில்லைம்பார். படிக்கும் போது சுகம், படிச்சப்புறம் போயிட்றதேம்பார். வாழும்போது மட்டும் வாழும்போது சுகமில்லை வாழ்ந்து கடந்தப்புறம்தான் சுகம் இன்னதுன்னு தெரியும்பார். பயமா இருக்கும். கடைசி காலத்தில் கொஞ்சம் நிலம் வாங்கிண்டு தஞ்சாவூர் போயி தனியா இருக்கணும்ன்னு ஒங்களுக்கு கடிதாசி எழுதினாரே! அவரோட நன்பர்கள் கூட அவரால் இப்ப இலக்கிய விமர்சனம்ங்கிற பேர்ல திட்டு வாங்கறா! சந்திரசூடன், பி. ராமமூர்த்தி, ப்ரகாஷ், விசுவநாதன், அசோகமித்திரன் இன்னும் கோபாலி, சா. கந்தசாமின்னு ரொம்ப பேர். ஆனா இவாள எல்லாம் மறந்துகூட அவர் புகழந்தது கிடையாது. கூட இருந்த குத்தத்துக்கு பேச்சு வாங்கறா. நானும் கூட இனிமே திட்டு வாங்குவேன். என்னென்ன சொல்லப் போறாளோ சொல்லட்டும், ஆனா பொய் ஏம் பேசறா? அதான் புரியலை. தைர்யம் இருந்தா, அவர் இருந்தப்போ பேசியிருக்கணும். 

கேள்வி: தமிழ் வாசகர்களுக்கு என்ன சொல்கிறீர்கள்?

பதில்: அவரோட புஸ்தகங்கள் பதிப்பிக்க வழியில்லாம கிடக்கு. அரசு, பல்கலைக்கழகங்கள் கவனிச்சா பிரயோசனம் இல்லை. வாசகர்கள்தான் வழி பண்ணனும். இனிமே எங்களுக்கு ஒண்ணும் வேண்டாம். என் பொண்ணு நல்லா இருக்கா. பேத்தி வரைக்கும் அவர் மேல மரியாதை வெச்சிருக்கா. ஆனா புஸ்தகம் போட பதிப்பகங்கள் துணை வேணும். அவர் எல்லாரையும் விமர்சிச்சவர். முரடா அபிப்ராயங்கள் தந்தவர், அதனால் வாசகர்கள் அவரது புஸ்தகங்கள் வெளிவர உதவணும். ஏராளமா பழுப்படிச்சு அவர் எழுதின பக்கங்கள் அழிஞ்சு உதுண்டேயிருக்கு. தமிழ்நாடு க.நா.சு.வை புரிந்து கொள்ளவில்லை. காசு பணம் ஆகியவற்றை என்றைக்கும் அவர் மதித்தவரில்லை. எனவே தமிழ்நாடு அவரது நூல்களைப் போற்றி வெளியிட உதவ வேண்டும். இதுதான் என்னோட ஆசை விண்ணப்பம்.

மற்றபடி அவரை உண்மையான இலக்கியவாதிகள் தேடிப் படிக்க வேண்டும். அதுதான் அவரை கௌரவிக்க ஒரே வழியாகும். வணக்கம்.