இந்து என்ற பெயர் விவகாரம் பற்றி ஏற்கனவே எழுதியிருக்கிறேன். சிந்துவை அரபி மொழி பேசுபவர்கள் ஹிந்து என்று அழைத்தார்கள். சிந்து நதியைத் தாண்டி – அதாவது, அரபிகளின் பார்வையில் – வாழ்பவர்கள் ஹிந்துக்கள். ஆக அராபிய முஸ்லிம்கள் வைத்த பெயரே ஹிந்து. அதற்காக, அதற்கு முன்னால் ஹிந்து மதமே இல்லை என்று சொல்வது மட்டித்தனத்தைத் தவிர வேறு இல்லை. ஆப்பிளுக்கு ஆப்பிள் என்று பெயர் வைக்காதிருந்தால் ஆப்பிளே இல்லை என்று சொல்லும் மட்டித்தனம்தான் ராஜராஜன் இந்து இல்லை என்று சொல்வதும். அப்படி ஒரு ”அறிஞர்” எழுதியிருந்ததை இன்று வாசித்தேன். ஹிந்து மதம் என்பது அதற்கு முன்னால் சனாதன மதம் என்று அழைக்கப்பட்டது. அந்த மதம் பல்வேறுபட்ட கிளைகளைக் கொண்டிருந்தது. சைவம், வைணவம், சாக்தம் என்று. கடவுள் இல்லை என்று சொன்னவனையும் தன்னோடு இணைத்துக் கொண்ட மதம் அது.
இப்படி ராஜராஜன் ஹிந்து இல்லை என்று சொல்வதெல்லாம் திரும்பத் திரும்ப மோடிக்கு மட்டுமே உதவும். இப்படிச் சொல்லும் ஆட்களெல்லாம் மறைமுகமாக ஹிந்துத்துவ அரசியல் சக்திகள் ஒன்றிணைவதற்கு மட்டுமே துணை புரிகிறார்கள். உலகில் சிறுபான்மை மதமாக இருக்கும் ஹிந்துக்களை மேலும் மேலும் புண்படுத்தி அவர்களெல்லாம் ஒரே அரசியல் சக்தியாகத் திரள்வதற்கு மட்டுமே இம்மாதிரியான பொறுப்பற்ற, மடத்தனமான பேச்சுகள் உதவும்.