தீண்டாமை

என் நண்பர் சமஸ் எடுத்த பேட்டிகளிலேயே என்னை ஆகக் கவர்ந்தது கருணாநிதியின் இறுதிப் பேட்டிதான்.  தொண்ணூறு வயதுக்கு மேல் கொடுத்த பேட்டி என்பதால் அதுவே அவரது இறுதிப் பேட்டியாக அமைந்தது. 

எனக்கும் கருணாநிதிக்கும் நான் பல ஒற்றுமைகளைக் கண்டதுண்டு.  ஒருசில ஒற்றுமைகள் பற்றி நான் வெளியே சொல்ல முடியாது.  ஆனால் பலதை சொல்லலாம்.  கிண்டல், நக்கல், சிலேடை, எத்தனை மணிக்கு உறங்கினாலும் காலை நான்கு மணிக்கே எழுந்து கொள்வது, சுறுசுறுப்பு, எல்லோரிடமும் சமமாகப் பழகுதல், இத்தியாதி.  ஒரே ஊர்க்காரர்கள் வேறு.  இன்னொரு ஒற்றுமையைத்தான் சமஸ் பேட்டியிலிருந்து எடுத்துக் கொண்டேன்.  நாம் எத்தனை உயரத்துக்குப் போனாலும், நாம் எத்தனை சாதனைகள் செய்திருந்தாலும், நம்முடைய கால் தூசுக்குச் சமமாகாத அரைவேக்காட்டுப் பயல்களெல்லாம் நம்மைத் தூற்றுவது.  சென்ற ஆண்டு ஒரு இலக்கியப் பொடியன் என்னைத் திருடன் என்று சொன்னான் அல்லவா, அந்த மாதிரி.  

அந்தப் பேட்டியில் சமஸ் கேட்கிறார், ஐந்து முறை தமிழகத்தின் முதல்வராக இருந்திருக்கிறீர்கள், தமிழக அரசியலே உங்களை மையமாக வைத்துத்தான் இயக்கம் கொண்டிருக்கிறது, அப்படிப்பட்ட உங்களுக்கு இந்த முதிய வயதில் ஏதேனும் மனக்குறை இருக்கிறதா?  

எப்படித்தான் சமஸுக்கு இந்தக் கேள்வியைக் கேட்கத் தோன்றியதோ என நினைத்துக் கொண்டேன்.

இந்தக் கேள்விக்கு கருணாநிதி யாருமே எதிர்பாராத, பெரும்பாலானவர்களால் நம்பவும் முடியாத ஒரு பதிலைச் சொன்னார்.  நான் நம்பினேன்.  முழுமையாக நம்பினேன்.  ஏனென்றால், இந்த எழுபது வயதிலும் எனக்கு அது நடந்து கொண்டிருக்கிறது, வேறு விதமாக. 

கருணாநிதி சொன்னார். ”எத்தனையோ முறை, யாரும் கவனித்து விடாத முறையில், எனக்கு மட்டுமே புரிந்து கொள்ளக் கூடிய வகையில், என் சாதியை முன்வைத்து அவமதிக்கப்படுகிறேன். இப்போதும் அது நடந்து கொண்டுதான் இருக்கிறது.”  (வார்த்தைகள் என்னுடையவை) 

அப்படிப்பட்ட அவமானம் எனக்கு இந்த வயதிலும் என் எழுத்தை முன்வைத்து நடக்கிறது.  அதைத்தான் இந்தக் குறிப்பில் உங்களுக்குச் சொல்ல நினைத்தேன்.

தமிழ்நாட்டில் ஒருவரை எல்லோரும் மார்க்ஸீய அறிஞர் என்று குறிப்பிடுகிறார்கள்.  மார்க்சீயர், இடதுசாரி என்றெல்லாம் சொல்ல முடியாத பல எழுத்தாளர்களும் கூட அவரை அறிஞர் என்றே அழைக்கிறார்கள்.  ஒருசில ஆங்கிலப் புத்தகங்களைத் தழுவி தமிழில் தலையணை சைஸுக்குப் புத்தகம் எழுதிவிட்டால் இங்கே அறிஞர் பட்டம் பெற்று விடலாம்.  அந்த மார்க்ஸீய அறிஞர் என்னை 1980 வாக்கில் தில்லியில் எப்படி நடத்தினார் என்பதை எக்ஸிஸ்டென்ஷியலியஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவலில் விரிவாக எழுதியிருக்கிறேன். நாவலில் அவர் பெயர் பாலா. அப்போது மனோபாலா என்று ஒரு வணிக எழுத்தாளர் இருந்தார். இந்த நபரின் ஒரிஜினல் பெயர் மனோ என்பதால் மனோவை எடுத்து விட்டு பாலா என்று வைத்தேன். அவரைப் போன்ற இன்னொரு ஃபாஸிஸ்ட்டை நிறப்பிரிகை கருத்தரங்குகளில்தான் பார்த்திருக்கிறேன்.  அவர் பெயர் எஸ்.என். நாகராசன்.  அக்கருத்தரங்குகளில் நாகராசன் என்னை தீண்டாமைக் கொடுமைக்கு ஆட்பட்டவனைப் போலவே நடத்தினார்.  ஒருமுறை அதனால் என்னை விட அதிக வயது மூத்தவரான அவரை அடிக்கப் பாய்ந்து விட்டேன்.  என்னை அவர் என்ன பேசினாலும் பொறுத்துக் கொண்டிருந்திருப்பேன்.  என் மனைவியையும் அவமரியாதையாகப் பேசியபோதுதான்  அடிக்கப் பாய்ந்தேன். 

இந்த இருவரும்தான் தமிழ்நாட்டின் புகழ்பெற்ற மார்க்சீய அறிஞர்கள்!   

இது எல்லாம் ஏன் எனக்கு இப்போது ஞாபகம் வந்தது என்றால், நிறப்பிரிகை சார்ந்த ஒரு நண்பரை இரண்டு நாள்களுக்கு முன்பு தொலைபேசியில் அழைத்தேன்.  தமிழறிஞர் என்பதால் தியாகராஜா விஷயமாக சில நூல்களைப் பற்றி விசாரிக்க வேண்டியிருந்த்து.  இதில் அவருக்கு நல்ல ஞானம் உண்டு.

எடுத்த எடுப்பில் மிகவும் எகத்தாளமான குரலில், ஒரு எல்கேஜி மாணவனிடம் பெரிய ஆள் ஒருத்தர் கேட்பது போல், தியாகராஜர் பத்தி என்னா படிச்சிருக்கீங்க என்று கேட்டார்.

இப்படி எழுத்து மூலமாகக் கேட்டால், நான் படித்த பல்லாயிரம் பக்கங்கள் கொண்ட நூல்களையெல்லாம் பட்டியல் போட்டு எழுதிக் கொடுத்திருப்பேன்.  வாயால் கேட்டதால் எல்லாமே மறந்து விட்ட்து.  சொல்லியிருக்கிறேனே, என்னுடைய முகவரியே எனக்கு மறந்து போயிருக்கும் என்று. 

பெரியதொரு வெற்றுக் காகிதம்தான் என் கண் முன்னே, மனதின் முன்னே தோன்றியது.  முக்கியமாக அந்த நபரின் தொனிதான் என்னை வீழ்த்தி விட்டது.  என் சிறு வயதில் சைக்கிளில் டபுள்ஸ் போகும்போது போலீஸைப் பார்த்து எப்படி திடுதிப்பென்று சைக்கிளிலிருந்து குதிப்பேனோ அப்படி பயந்து போனேன். 

கொஞ்சம் யோசித்து, ஒரு ஆங்கிலேயர் எழுதிய புத்தகம் பற்றிச் சொன்னேன்.  அதிலும் கூட ஆங்கிலேயரின் பெயரும் புத்தகத்தின் பெயரும் மறந்து விட்டது.

அப்புறம் அவராகவே சில புத்தகங்களின் பெயர்களைச் சொன்னார்.  அதையெல்லாம் நான் படித்திருந்தேன்.  சொன்னேன்.

சரி, நீங்க நம்ம ஊருக்கு வாங்க, நான் சொல்றதையெல்லாம் ரெக்கார்ட் பண்ணிக்கிட்டுப் போங்க, சரியா.

இதுவரை கூட நின்றிருந்தால் நான் இந்தக் குறிப்பையே எழுதியிருக்க மாட்டேன்.  அதற்கு மேலும் ஒன்று சொன்னார்.  மனதுக்குள் ங்கோத்தா என்று சொல்லிக் கொண்டேன். 

”அது இருக்கட்டும், நீங்க எப்பவும் எழுதுவீங்கல்ல, ஒரு மாதிரி ஜாலியா, தியாகராஜரையும் அப்டி எழுதி வச்சிராதீங்க.  பாத்து, பல புத்தகங்களை ஆய்வு செஞ்சு எழுதுங்க.”

அதாவது, அவர் சொல்ல வந்த விஷயம் என்னவென்றால், நீ ஒரு செக்ஸ் எழுத்தாளன்.  அந்தப் பாணியிலேயே தியாகராஜாவையும் செக்ஸாக எழுதி வைத்து விடாதே. 

இம்மாதிரி ஆட்களையெல்லாம் பிய்ந்த செருப்பால் அடிக்கலாமா இல்லையா? 

வெறியுடன் சில நூல் கிடங்குகளை ஆய்வு செய்தேன்.  இப்போது அந்த நபருக்கே நான் நூறு புத்தகங்களைப் பரிந்துரை செய்ய முடியும் என்ற அளவுக்குத் திரட்டி விட்டேன். 

அந்த ஆள் நிறப்பிரிகை காலத்திலிருந்தே என்னை அப்படித்தான் நக்கலாக நடத்தினார் என்பதும் இப்போது ஞாபகம் வருகிறது.  கூடவே சமஸின் கருணாநிதியையும் நினைத்துக் கொண்டேன். 

இம்மாதிரியான அற்ப புத்தியினால்தான் இந்த நபரைப் போன்றவர்கள் இன்றைய தினம் செல்லாக்காசாக ஒரு மூலையில் உட்கார்ந்திருக்கிறார்கள்.