என் சக தமிழ் எழுத்தாளர்கள் பலரின் மேடைப் பேச்சுகளைக் கேட்டேன். விருது ஏற்புரையும் அதில் ஒன்று. அப்போது எனக்குத் தோன்றியது என்னவென்றால், ஏதோ ஒரு சந்தர்ப்பவசத்தினால்தான் நான் தமிழில் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்பதுதான். மற்றபடி இந்த இலக்கியச் சூழலுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமுமே இல்லை என்பதை அந்த எழுத்தாளர்களின் பேச்சின் போது என் மனதின் அடி ஆழத்திலிருந்து உணர்ந்தேன். என்னால் என்னுடைய ஊரில் ஓடும் நதியை என் நதியெனக் கொள்ள முடியவில்லை. இத்தனைக்கும் தமிழ்நாட்டின் புகழ் பெற்ற நதி. எத்தனையோ எழுத்தாளர்களை உருவாக்கிய நதி. தி. ஜானகிராமன் உருகி உருகி வரைந்த நதி. கர்னாடக இசையின் மூலவர்களை உருவாக்கிய நதி. புனித நதி. ஆனால் எனக்கு அது என்னுடைய நதியெனத் தோன்றவில்லை. அதைவிட பாரிஸில் நான் கண்ட நதி எனக்கு இன்னும் அணுக்கமாகத் தோன்றியது. உடனே, நான் படித்த ஃப்ரெஞ்ச் இலக்கியத்துக்கும் இதற்கும் ஏதோ தொடர்பு இருக்குமோ என என்னையே விசாரித்துக் கொண்டேன். அப்படியும் தெரியவில்லை. ஏனென்றால், ஸெய்னை விட காவிரி சார்ந்த இலக்கியம்தான் நான் அதிகம் வாசித்தது. அப்படியும் ஸெய்ன் ஏன் என்னை அதிகம் ஈர்க்கிறது? தெரியவில்லை. பிறகு எப்போதோ தாய்லாந்தின் மேகாங் நதியைக் கண்ட போது இதுதான் என் நதி எனத் தோன்றியது. அதற்கும் காரணம் புரியவில்லை.
அதேபோல் எந்த ஊரையும் என்னுடைய ஊரென்று கொள்ள முடியவில்லை. எந்த மொழியையும் என் மொழியெனக் கொண்டாட முடியவில்லை. தேசத்துக்கும் இப்படியே.
எந்த ஒன்றிலுமே என்னால் ”இது என்னுடையது” என உணர்ந்து ஒன்ற முடியவில்லை. உரிமை கொண்டாட முடியவில்லை. எல்லாவற்றிலிருந்துமே விலகிய ஓர் அந்நியனாகவே என்னை உணர்கிறேன்.
மாட்டை அடித்து மாமிசம் பிரித்துக் கொண்டிருக்கும் இடத்தில் ஒரு பிராமணன் எப்படி உணர்வானோ, ஒரு அக்ரஹாரத்தில் ஒரு முஸ்லிம் எப்படி உணர்வானோ அப்படிப்பட்ட அந்நியத்தன்மை. ஏனென்றால், அதில் அந்நியத்தன்மையோடு கூட ஒவ்வாமையும் கலந்திருக்கிறது. எனக்கும்தான்.
ஒரு இலக்கியக் கூட்டத்தில் ஒரு எழுத்தாளர் ஏதோ ஒரு கீர்த்தனையைப் பாடுகிறார். கர்னாடக சங்கீதம் தெரிந்தவராம். கழுதை கத்துவது போல் இருந்தது. ஒரு எழுத்தாளரைப் பற்றிய ஆவணப்படத்தில் எடுத்த எடுப்பில் ஏதோ ஒரு இசைக்கருவி ஒலிக்கிறது. அந்த சப்தம் எனக்கு நாராசமாய்ப் பாய்கிறது.
எழுத்தாளரின் பேச்சைக் கேட்டு, “ஐயோ சாமி, என்னை ஆளை விடுங்கள்” என்று அலறியபடி பேச்சை நிறுத்தினேன். இத்தனைக்கும் அவர் ”நண்பர்களே, தோழர்களே” என விளித்து, உணர்ச்சி மிகுந்து கம்மிய குரலில் பேசும்போது பார்வையாளர்களின் கரகோஷம் விண்ணை முட்டுகிறது.
விருது வழங்கும் விழாவின் போது நான் என்ன பேசப் போகிறேன், பார்வையாளர்கள் அதை எப்படி எதிர்கொள்ளப் போகிறார்கள் என்பதை நினைத்தால் இப்போதே கவலையாக இருக்கிறது. பேசாமல் எந்த முன்னேற்பாடும், முன் தயாரிப்பும் இல்லாமல் போக வேண்டியதுதான் என்று நினைத்துக் கொண்டேன்.