ஒரு நடிகை வாய்ஸ் மெஸேஜ் அனுப்பியிருக்கிறார், ஏன் உங்கள் மனைவி சென்னையை விட்டு வெளியூர் போக மறுக்கிறார்?
மிக நீண்ட பதிலைக் கோரும் ஒரு கேள்வி. முதல் விஷயம், அவளுக்கு சென்னை பற்றி என் அளவுக்கு எந்த வெறுப்பும் கிடையாது. அதற்குக் காரணம், அவளுக்கு சென்னை தவிர வேறு எந்த ஊரும் தெரியாது. மேலும், இங்கேதானே அவளுடைய பெற்றோர் கிற்றோர் எல்லாமே இருக்கிறார்கள்? இதுதானே அவள் வாழ்ந்த வளர்ந்த ஊர்? இதை விட்டுவிட்டு அவள் கோயம்பத்தூர் சென்றால், நீரிலிருந்து எடுத்த மீனைப் போல் ஆகி விடுவாளே? எனக்குப் பிரச்சினை இல்லை. எனக்கு எல்லா ஊர்களிலும் நண்பர்கள் உண்டு. நான் ஒரு துறவியைப் போல. எல்லா ஊரும் என் ஊர்தான். ஆனால் சென்னைதான் ஏமாற்றுப் பேர்வழிகளின் ஊராக இருக்கிறது. அறம் இழந்த ஊராக இருக்கிறது. கெட்டுப் போன மீனை கடல் மணலில் புரட்டி எடுத்து வலையிலிருந்து எடுத்தது என்று சொல்கிறார்கள் என்றால், இந்த ஊர் எந்த அளவுக்கு அறம் இழந்து விட்டது என்பதை ஒருவர் புரிந்து கொள்ளலாம். ஏனென்றால், நேர்மையின் இருப்பிடம் மீனவர் சமுதாயம் என்று கருதப்படும் நாடு இது. நான் விலை அதிகம் வைத்து விற்பதைக் கூட குறை சொல்லவில்லை. உண்ணவே லாயக்கு இல்லாத கெட்டுப் போன மீனை மணலில் புரட்டி விற்கிறார்கள்.