போன ஜென்மத்தில் சேவலாக இருந்தவனைப் பற்றிய ஒரு கதை (அல்லது) சாசனம் : ஒரு நெடுங்கதை

அப்போது எனக்கும் என் பத்தினிக்கும் கல்யாணம் நடந்து இரண்டு ஆண்டுகள் ஆகியிருந்தன. இன்றைய கணக்கில் சரியாக இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு கலாப்ரியா நடத்திய குற்றாலம் கருத்தரங்கு.  விஷயம் தெரியாதவனாகவோ அல்லது அனுபவமின்மையினாலோ என் பத்தினியையும் அழைத்துக் கொண்டு குற்றாலம் போனேன்.  பகல் பூராவும் பேச்சு, உரையாடல், விவாதம்.  இரவிலும் பேச்சு, உரையாடல், விவாதம். ஒரே வித்தியாசம், இரவில் மதுவும் சேர்ந்து கொண்டது.  பகல் முழுவதும் அருவியில் பொழுதைப் போக்கிக் கொண்ட பத்தினிக்கு இரவில் என்ன செய்வது என்று தெரியவில்லை.  என்னோடு வருகிறாயா என்று கேட்டேன்.  அதெல்லாம் வேண்டாம்ப்பா என்று சொல்லி விட்டு அறையிலேயே தங்கி விட்டாள்.  நான் நள்ளிரவு கடந்து அறைக்குப் போனால் கொட்டக் கொட்ட முழித்துக் கொண்டிருந்தாள்.  இப்படியே மூன்று தினங்கள் கடந்தன.

இந்த விஷயம் அதோடு முடிந்திருந்தால் நான் ஏன் உங்களிடம் இதை இத்தனை வருடங்கள் கழித்து வேலை மெனக்கெட்டு சுமந்து கொண்டு வந்து சொல்லப் போகிறேன்?  குறைந்த பட்சம் மாதம் ஒருமுறையாவது என் பத்தினி என்னிடம் வந்து “என்னை குற்றாலத்தில் அனாதையாக விட்டுவிட்டுப் போனவன்தானே நீ?” என்று குற்றம் சாட்டுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறாள்.

அந்தக் குற்றாலம் சம்பவத்துக்குப் பிறகு நாங்கள் இருவருமாகச் சேர்ந்து வெளியூர் எங்கேயும் சென்றதில்லை.  குற்றாலத்திலிருந்து திரும்பியதுமே எங்கள் வீட்டுக்கு பப்பு வந்து விட்டது.  ஆள் மாற்றி ஆள் மாற்றி நானோ என் பத்தினியோ பப்புவை கவனித்துக் கொள்வோம்.  அநேகமாக நான்தான் அடிக்கடி ஊர்ப் பயணம் செய்வேன் என்பதால் அவள்தான் பப்புவை கவனிக்க வேண்டி வந்தது.  நான் என்ன செய்ய முடியும்?  அவளுக்கும் ஊர்ப் பயணம் இருந்திருந்தால் பப்புவை நான் பார்த்துக் கொண்டிருந்திருப்பேன். நாய்களை நாய் ஷெல்ட்டரில் விடுவதை நானும் பத்தினியும் விரும்புவதில்லை.  ஆகவே, கடந்த இருபத்தேழு ஆண்டுகளாக நாங்கள் இருவருமாகச் சேர்ந்து எந்த வெளியூரும் சென்றதில்லை. 

இதை வாசிக்கும் உங்களுக்கு இதன் வீரியம் புரிய சாத்தியம் இல்லை.  யாருக்குமே அது அதை அனுபவித்துப் பார்த்தால்தான் தெரியும்.  ஆகவே, இன்னமும் இதை நான் விவரிக்க வேண்டும் என்று தோன்றுகிறது.  ஐந்து ஆண்டுகளுக்கு முன் என் புத்திரனுக்குக் கல்யாணம் நடந்தது.  பெண் மராத்தி.  கல்யாணம் மும்பையில். அப்போது எங்கள் வீட்டில் இரண்டு நாய்கள் இருந்தன.  ஆரம்பத்தில் இருந்த பப்பு இறந்து, அப்போது புதிய பப்புவும் ஸோரோவும் வந்திருந்தன.  பப்பு லாப்ரடார்.  ஸோரோ க்ரேட் டேன். 

இப்போது இந்த இரண்டையும் எங்கே கொண்டு போய் விட்டு விட்டு இருவரும் மும்பை செல்வது?  ஷெல்ட்டரில் விட்டால் இரண்டும் மனநோயாளிகளைப் போல் ஆகி விடுகின்றன.  ஷெல்ட்டரில் விடுவதற்கு ஒரு நாய்க்கு ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய். ஒரு சிறிய இரும்புக் கூண்டில் அடைத்து வைப்பார்கள்.  அது ஒரு கொடுஞ்சிறை.  எங்கள் நாய்களை நாங்கள் கயிறு போட்டுக் கூட கட்டியது இல்லை.  நாயைக் கட்டிப் போடுபவர்கள் அடுத்த ஜென்மாவில் தெருநாயாகத்தான் பிறப்பார்கள் என்பதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. 

பத்தினிக்கு உஷா என்று ஒரு தோழி உண்டு.  அவளுக்கு நாய்கள் மீது வாஞ்சை அதிகம். அவள் வந்து என் வீட்டில் இருந்து நாய்கள் இரண்டையும் பார்த்துக் கொள்கிறேன் என்று வாக்களித்தாள்.  ஆனால் பகலில்தான் அவளால் பார்த்துக் கொள்ள முடியும். அதிலும் ஒரு பகல்தான்.  இரவு ஒன்பதுக்கு அவள் வீட்டுக்குக் கிளம்ப வேண்டும்.  எங்கள் வீட்டு சாவி ஒன்றை அவளிடம் கொடுத்தோம்.  அதைக் கொண்டு வீட்டைப் பூட்டி விட்டு அவள் கிளம்பி விடுவாள்.  என்னிடம் ஒரு வீட்டுச்சாவி இருக்கிறது.  நான் பத்து மணிக்குள் வீட்டுக்குப் போய் விடுவேன். ஒருவேளை விமானம் தாமதமானாலும் அதிகாலைக்குள்  வீட்டுக்குப் போனால் போதும்.  அதிகாலையில்தான் நாய்களை மலஜலம் கழிக்க வெளியே வாக்கிங் அழைத்துச் செல்ல வேண்டும்.  இரவு முழுவதும் பிரச்சினை இல்லை.  எனக்கு மும்பையில் மாலை ஏழரைக்கு விமானம்.   அப்படியானால் பத்து மணிக்குள் சென்னை திரும்பி விடலாம்.  

பத்தினி மட்டும் ஒரு வாரம் மும்பையிலேயே இருந்து கல்யாண காரியங்களை முடித்து விட்டு சென்னை திரும்புவாள்.  நான் காலையில் போய் இரவு பத்துக்குள் திரும்பி விடுவேன்.  பக்காவான திட்டம்.  உஷா அதிகாலையிலேயே எங்கள் வீட்டுக்கு வந்து விட்டாள்.  நாங்கள் இருவரும் அதிகாலையிலேயே மும்பை கிளம்பி விட்டோம்.  நான் மாலையில் ஏழரை மணி விமானத்தைப் பிடிக்கக் கிளம்பிக் கொண்டிருந்த போது நாதனிடமிருந்து ஃபோன் வந்தது.  ”நாம் இன்ன ஓட்டலில் சந்திப்போம்.”  அந்தக் குறிப்பிட்ட நட்சத்திர விடுதி விமான நிலையத்துக்கு அருகிலேயே உள்ளது.  நான் இரவே சென்னையில் இருக்க வேண்டியதன் அவசியத்தைச் சொன்னேன்.

அதற்கு நாதன் ஒரு மாற்று வழி சொன்னார்.  ”யோசித்து பதில் சொல்லுங்கள்.  இந்த ஏழரை மணி விமானத்தை ரத்து செய்து விடலாம்.  நள்ளிரவு இரண்டு மணிக்கு ஒரு விமானம் இருக்கிறது. அதில் டிக்கட் போடுகிறேன்.  அதைப் பிடித்தால் நீங்கள் வீட்டுக்கு ஐந்து மணிக்குப் போய் விடலாம்.”

அதன்படி நாதனும் நானும் அந்த நட்சத்திர விடுதியில் பன்னிரண்டு மணி வரை வைன் அருந்தியபடியே பேசிக் கொண்டிருந்து விட்டு அதிகாலையில் வீடு வந்து சேர்ந்தேன்.  அந்த இரவு – ஒன்பது மணியிலிருந்து காலை ஐந்து மணி வரை – பப்புவும் ஸோரோவும் வீட்டில் பதவிசாக இருந்தன. 

ஆக, இந்த இருபத்தேழு ஆண்டுகளில் நானும் பத்தினியும் ஒன்றாகச் சேர்ந்து வெளியூர் போனது நாய்கள் இல்லாமல் வாழ்ந்த இரண்டு ஆண்டு காலகட்டத்தில்தான்.  அதுதான் குற்றாலம் கருத்தரங்கு.  அங்கே போய் நான் என் பத்தினியோடு கூடவே அவள் நிழலைப் போல் இருக்காமல் என் இலக்கிய நண்பர்களோடு மூன்று தினங்கள் தொடர்ந்தாற்போல் பேசிக் கொண்டிருந்ததற்கான விசாரணையும் தண்டனையும் கடந்த இருபத்தேழு வருடங்களாக மாதம் ஒருமுறை நடந்து கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில்தான் விஷ்ணுபுரம் விருதுக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் செய்தி வந்தது.  உங்கள் மனைவியோடு வாருங்கள் என்று அன்புடன் சொன்னார் ஜெயமோகன்.  அவருக்குத் தெரியுமா அவர் போட்டது ஒரு ஆட்டம் பாம் என்று.  நானும் விளையாட்டுத்தனமாக ஜெயமோகன் சொன்னதைப் பத்தினியிடம் சொல்லி விட்டேன்.  அவளும் சம்மதம் சொல்லி விட்டாள்.

வீட்டில் பத்து பூனைகள் உள்ளன.  நாய் என்றால் கூட ஷெல்ட்டர் இருக்கிறது. பூனைகளுக்கு இல்லை.  அதிலும் பத்து பூனைகளையெல்லாம் ஷெல்ட்டரில் விடுவது பற்றி யோசிக்கவும் முடியாது.  பணிப்பெண் பூங்கோதையைப் பார்த்துக் கொள்ளச் சொல்லலாம் என்றாள் பத்தினி. 

”ஆனால் அங்கே வந்து விழாவில் என்னை யாராவது இன்ஸல்ட் பண்ணினால் அடுத்த ஃப்ளைட்டைப் பிடித்து வந்து விடுவேன்” என்று தன் பங்குக்கு ஒரு ஆட்டம் பாமைப் போட்டாள் பத்தினி.

அப்படியெல்லாம் யார் செய்யப் போகிறார்கள்?  விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தினர் எல்லாம் ரொம்ப அமெரிக்கையான ஆட்கள், உத்தமமான வாசகர்கள் என்றேன். 

”ஏன், உன்னுடைய நண்பர்கள் செய்வார்களே?” என்றாள்.

நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை.  ஏனென்றால், கலாட்டா பண்ண வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஒரு இடத்துக்குப் போனால் கலாட்டா நடக்கத்தான் செய்யும். 

பத்தினியே ஞாபகப்படுத்தினாள்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு கொக்கரக்கோ அவளை அவமானப்படுத்தி விட்டானாம். 

காமராஜர் அரங்கில் என் புத்தக வெளியீட்டு விழா.  அந்த அரங்கில் சினிமா பிரபலங்களின் விழாக்கள்தான் நடக்கும்.  2500 பேர் அமரக்கூடிய பிரம்மாண்டமான அரங்கு.  தமிழ்நாட்டில் எழுத்தாளர்கள் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதால், நாமும் நம்முடைய இருப்பை சமூகத்துக்கு உரத்துச் சொல்ல வேண்டும் என்பதற்காக அந்த அரங்கில் நான்கு லட்சம் ரூபாய் செலவழித்து என் வாசகர் வட்டத்தினர் அந்த விழாவை நடத்தினார்கள்.  1500 பேர் வந்திருந்தார்கள்.  ஒரு திங்கள்கிழமைதான் அரங்கம் கிடைத்தது.  தொடர்ந்தாற்போல் ஏழெட்டு தினங்கள் அரசு விடுமுறை முடிந்து அன்றைய தினம்தான் அலுவலகங்களும் கல்வி நிலையங்களும் திறக்கிறார்கள்.  ஜனவரி இரண்டாம் தேதி என்று நினைக்கிறேன்.   என்னுடைய வாசகி ஒருவர் பள்ளி ஆசிரியை. கோவையில் வசிப்பவர். திங்கள்கிழமை ஒருநாள் தற்காலிக விடுப்பு கேட்டிருக்கிறார். தலைமையாசிரியர் கடும் கோபத்தில் ”இப்படிப் பொறுப்பு இல்லாமல் கேட்டதற்கே உங்களை வேலையிலிருந்து நீக்க வேண்டும்” என்று கத்தியிருக்கிறார்.  உடனே என் வாசகி, கையில் தயாராக வைத்திருந்த ராஜினாமா கடிதத்தை நீட்ட, அதற்குப் பிறகுதான் தலைமையாசிரியர் அந்தப் பெண்ணிடம் இத்தனை சீரியஸான விஷயம் என்ன என்று கேட்டு, விடுப்பும் கொடுத்திருக்கிறார்.  அந்தப் பெண் என் பேச்சு முடிந்த அடுத்த கணமே கோவை கிளம்பும் ரயிலைப் பிடிப்பதற்காக அடித்துப் பிடித்துக் கொண்டு ஓடினார். எதற்குச் சொல்கிறேன் என்றால், ஏழெட்டு நாள் தொடர் விடுமுறைக்குப் பிறகான முதல் வேலைநாளாக இருந்த போதிலும் அந்த பிரம்மாண்டமான அரங்கில் 1500 பேர் வந்திருந்தார்கள் என்றால் அதன் பெருமை எனக்கு உரியது அல்ல.  அந்த அளவுக்கு என் வாசகர் வட்ட நண்பர்கள் களத்தில் இறங்கி வேலை செய்தார்கள்.  சாலை சந்திப்புகளில் கட் அவுட் வைப்பதிலிருந்து பஸ்ஸின் பின்னே நோட்டீஸ் ஒட்டுவது வரை.  இதை எல்லாம் நள்ளிரவில்தான் செய்ய வேண்டும்.  பஸ்ஸில் நோட்டீஸ் ஒட்டும் போது பஸ் தொழிலாளிகள் சங்கத்தினர் வந்து பிரச்சினை செய்திருக்கிறார்கள்.  கட் அவுட் வைத்த போது போலீஸ்காரர்கள் வந்து பிரச்சினை செய்திருக்கிறார்கள்.  நோட்டீஸ் ஒட்டுவதற்குப் பசை இருக்கிறது.  ஆனால் பசை இறுகி விட்டது.  அதை இளக்குவதற்குக் கொஞ்சம்  தண்ணீர் தேவை.  நள்ளிரவில் தண்ணீருக்கு எங்கே போவது?  அப்போது மேற்பார்வை வேலைக்காக கொக்கரக்கோ அங்கே இருந்திருக்கிறான்.  சாலையில் பிய்த்துக் கொண்டு ஓடிக் கொண்டிருந்த பாதாள சாக்கடை நீரை அவன் தன் கைகளால் எடுத்து வந்து பசையைக் குழைத்துக் கொடுக்க, அதற்குப் பிறகு நோட்டீஸை ஒட்டியிருக்கிறார்கள். 

அதனால்தான் அந்த 1500 பேர்.  ஏழெட்டு நாள் அரசு விடுமுறைக்குப் பிறகான முதல் பணிநாளான திங்கள்கிழமை அன்று.

காமராஜர் அரங்கில் நடந்த அந்த விழாவில் கொக்கரக்கோவிடம் தண்ணீர் கேட்டிருக்கிறாள் என் பத்தினி.  கொக்கரக்கோ அதைக் கண்டு கொள்ளவில்லையாம்.  அந்தத் தருணத்திலிருந்து கொக்கரக்கோவின் மீது கொலைவெறியில் இருக்கிறாள் பத்தினி.

ஒன்று விட்டு ஒருநாள் இது சம்பந்தமான நீதி விசாரணையும் தண்டனைப் படலமும் எனக்கு என் இல்லத்தில் நடக்கும்.  சமயங்களில் தினமுமே கூட நடக்கும். 

”அழுது விட்டேன் தெரியுமா அன்றைக்கு?  நான் மேடையேறக் கூடாது என்று சொல்லி என்னைக் கீழேயே உட்கார வைத்து விட்டாய் நீ.    நம்முடைய கூட்டத்தில் உன்னை நான் மேடையில் அமர வைத்தால் நன்றாக இருக்காது என்று சொல்லி என்னைக் கீழேயே உட்கார வைத்து விட்டாய் நீ.  அப்போது நான் தாகமெடுத்தால் யாரைக் கேட்பேன்?  அந்த அயோக்கியன் கொக்கரக்கோவைத்தானே கேட்பேன்?  அவன் கொடுக்கவே இல்லை.  உடனே என் மகன் என்ன செய்தான் தெரியுமா?  மேடையேறிப் போய் கொக்கரக்கோவை மிரட்டி விட்டு வந்தான்.  ’இனிமேல் கொண்டு என் அம்மாவை நீ அவமானப்படுத்தினால் உன்னை நான் உண்டு இல்லை என்று பண்ணி விடுவேன், ஜாக்கிரதை’ என்று.  எத்தனை அழுதிருப்பேன் தெரியுமா அன்று?”  

டேய் ங்கோத்தா, என்னாங்கடா நடக்குது இங்கே?  தண்ணி வேணும்னா ங்கொய்யால வெளீல போய் அங்கேருந்த தண்ணி கேன்லேர்ந்து குடிச்சிருக்கலாமேடா.  சரி, கொக்கரக்கோ கொடுக்கலைன்னா என்னா, அவன் என்ன மஜீஷியனா காத்துல தண்ணி வரவழைக்கிறதுக்கு?  உம் பையன்தான் இருந்தான்ல, அவனைப் போய் எடுத்துக்கிட்டு வரச் சொல்ல வேண்டியதுதானே?  அரங்கத்தை விட்டு வெளியே போனால் கடை.  அங்கே கூட தண்ணீர் கிடைக்கும்.  அது மட்டும் அல்லாமல், அரங்கத்தின் பின்னால் காஃபி, டீ, சமோஸா எல்லாம் கொடுப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தான் கொக்கரக்கோ. 

வாரத்துக்கு மூன்று முறை, அப்படியானால் மாதத்துக்குப் பன்னிரண்டு முறை.  அப்படியானால் வருடத்துக்கு 12 x 12 = 144.  இப்படியே பத்து ஆண்டுகளுக்கு 1440 தடவைகள் நான் மேற்கண்ட பிலாக்கணத்தையும் அதைத் தொடரும் வசைகளையும் சாபங்களையும் கேட்டிருக்கிறேன்.  கேட்டுக் கொண்டேயிருக்கிறேன்.

கேட்கும் போதெல்லாம் எனக்கு ஒரு தீவிரமான மனநோயாளியின் பிதற்றல் போல் தோன்றும்.  ஆனாலும் பதில் பேச முடியாது.  பதில் பேசினால் விளைவுகள் இன்னும் கொடூரமாக மாறும்.  காலையில் ஒரு அரை மணி நேரம் மண்டகப்படி நடந்து விட்டு அன்றைய நாள் பூராவும் சாவு வீடு போல் இருக்கும் வீட்டில் நான் பதில் வேறு பேசி நிலைமையை மேலும் மோசமாக்கினால் என்னால் அப்புறம் எழுதவே முடியாமல் போய் விடும். அதை விட என்ன சொன்னாலும் வாயை மூடிக் கொண்டு கிடக்கலாம்.  

நான் நண்பர்களிடம் சொல்வதுண்டு, நான் ஒரு சுண்ணாம்புக் காளவாய்க்குள் இருந்து கொண்டு எழுதுகிறேன் என்று.  நாள் பூராவும் ஒருவரை சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் ஒருவர் திட்டிக் கொண்டும் சபித்துக் கொண்டும் இருந்தால் நீங்கள் எப்படி எழுதுவீர்கள்?  நான் எழுதுகிறேன்.  வசைச் சொற்களும் சாபச் சொற்களும் பறந்து கொண்டிருக்கும் இந்த இல்லத்திலிருந்துதான் நான் எல்லாவற்றையும் எழுதிக் கொண்டிருக்கிறேன்.  என் எழுத்தைப் படித்து பலரும் வாய் விட்டுச் சிரிக்கிறார்கள்.  அலுவலகத்தில், பஸ்ஸில், எந்த இடமாக இருந்தாலும் வெடித்துக் கொண்டு வருகிறது சிரிப்பு.  சுற்றியிருப்பவர்கள் பார்க்கும் போது லஜ்ஜையாக இருக்கிறது.  ஆனாலும் உங்கள் எழுத்தைப் படித்து சிரிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை.   அந்த எழுத்தை இப்படி ஒரு சுண்ணாம்புக் காளவாயிலிருந்து கொண்டுதான் எழுதுகிறேன்.  இந்த சுண்ணாம்புக் காளவாயில் நான் எரிந்து பஸ்பமாகியிருக்க வேண்டுமே?  அப்படி ஆகாமல் குத்துக்கல்லைப் போல் உட்கார்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறேனே?  ஆம், என்னைச் சுற்றி நான் எழுப்பியிருக்கும் ஒரு அடர்த்தியான பனிச்சுவர் இந்தக் காளவாயின் கொதிப்பிலிருந்து என்னைக் காப்பாற்றி வருகிறது.  இத்தனைக் கொடிய காளவாயில் எனக்குக் குளிருகிறது.  அந்தப் பனிச்சுவர்தான் காரணம். 

ஒருநாள் கொக்கரக்கோவிடம் கேட்டேன், ஏன் அப்பா, அந்தப் பத்தினியிடம் கொஞ்சம் அவள் கேட்ட தண்ணீரைக் கொடுத்துத் தொலைத்திருந்தால்தான் என்ன?

தண்ணியாவது சுன்னியாவது, என்னா நெனச்சுக்கிட்ருக்கீங்க?  மொதல்ல எனக்கு அப்டி ஒரு விஷயம் நடந்ததே தெரியாது.  ஏன்னா அவங்க கேட்டதே எனக்குக் காதுல விழல.  அப்டியே விழுந்திருந்தாலும் நான் குடுத்திருக்க மாட்டேன்.  ஏன்னா, பதினஞ்சு நாளா சோறு தண்ணியில்லாம ராப்பகலா ஒழச்சு இவ்ளோ பெரிய கூட்டத்தைக் கூட்டியிருக்கோம்.  நீங்கள்ள எங்களுக்கு மோரும் பானகமும் கொண்டாந்து குடுத்திருக்கணும்.  நீங்க என்ன என் வீட்டுக்கு வந்த விருந்தாளிங்களா?  ஒங்க வூட்டுக்கார்ரோட ஃபங்ஷன் இது.  நீங்கதான் எங்களுக்கு உபசாரம் செஞ்சு இருக்கணும்.  நாலு லட்சம் செலவாச்சு.  எப்டி வந்துச்சு அவ்ளோ பணம்?  எத்தனை பேர்ட்ட எடுத்த பிச்சை?  (கொக்கரக்கோ சொன்னது வேறு வார்த்தைகள், நான்தான் இங்கிதம் கருதி மாற்றியிருக்கிறேன்!) எனக்கு அவுங்க தண்ணி கேட்ட விஷயமே தெரியாது.  ஒங்க பையன் வந்து ஏங்கிட்ட சொன்னதும் ஞாபகம் இல்லை.  ஏன்னா, காண்டெக்ஸ்டே புரிலைன்னா ஒத்தர் சொல்றது என்னா புரியும்? 

இதுதான் கொக்கரக்கோ சொன்ன பதில்.  

ஆனால் என்னுடைய ஆச்சரியம் என்னவென்றால், இந்தத் தண்ணீர்ப் பிரச்சினைக்காகவா ஒருவர் ஒரு ஆளை பத்து ஆண்டுகளாக – 1440 தடவைகள் – திட்டிக் கொண்டும் சபித்துக் கொண்டும் இருப்பார்கள்?  அப்படி என்ன அது கொலைக் குற்றமா? 

எனக்கு இந்த இடத்தில் இன்னொரு விஷயம் ஞாபகம் வருகிறது.  நான் ஸீரோ டிகிரியில் எழுதிய விஷயம்தான்.  அதனால் சுருக்கமாகச் சொல்லி விடுகிறேன்.  அதில் வரும் மங்கைதான் என் பத்தினி.  அவளுக்குப் பதின்மூன்று வயதாக இருக்கும்போது வீட்டில் ஒன்றன் பின் ஒன்றாகக் கேடுகள் வந்து கொண்டே இருந்திருக்கின்றன.  பத்தினியின் தந்தை ஒரு ஜோதிடரை அழைத்து எல்லோருடைய ஜாதகத்தையும் பார்த்தார்.  வீட்டிலேயே பேரழகி என் பத்தினிதான்.  பதின்மூன்று வயதில் நடிகை ஹேம்மாலினி எப்படி இருந்தாரோ அப்படி இருந்திருக்கிறாள்.  ஜோதிடன் பத்தினியின் தந்தையிடம் சொன்னான், என் பத்தினியைக் கை காட்டி, இவளால்தான் இத்தனைக் கேடும் சூழ்கிறது, இவளுக்கு இன்றே இப்போதே கன்னி கழித்தாக வேண்டும், செய்து விட்டால் தோஷம் போய் விடும். 

ஜோதிடனே பரிகாரம் செய்வதற்குத் தோதான ஆளாகத் தெரிந்தான்.  அறையில் வைத்துக் கன்னி கழித்தான்.  தந்தையும் பத்தினியின் தமக்கையும் அறைக்கு வெளியே விளக்குப் பிடித்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

அப்பேர்ப்பட்ட அயோக்கியர்களை என் பத்தினி மன்னித்து விட்டாள்.  வீட்டில் மிளகாய் பஜ்ஜி செய்தால் சுடச் சுட அதை எடுத்துக் கொண்டு நாலு வீடு தள்ளியிருந்த பெற்றோர் வீட்டுக்கு ஓடிப் போய் தந்தையிடம் கொடுத்து விட்டு வருவாள்.  தந்தையையும் தமக்கையையும் கொஞ்சோ கொஞ்சு என்று கொஞ்சினாள். 

கொக்கரக்கோ என் நண்பன்.  எனக்காக எத்தனையோ காரியங்களைச் செய்து வருகிறான். என் வலது கரமாகத் திகழ்கிறான்.  அவன் மீது ஒரு சில்லறைத்தனமான குற்றத்தைச் சுமத்தி தினந்தோறும் அவனுக்கு மரண தண்டனை விதித்துக் கொண்டிருக்கிறாள் பத்தினி.

இதனால் கொக்கரக்கோவுக்கு எந்த நஷ்டமும் இல்லை.  என் பத்தினிதான் பாவம், வெறுப்பு என்ற சிலுவையைச் சுமந்து திரிந்து கொண்டிருக்கிறாள்.  இன்னொசெண்ட் என்ற வெப்சீரீஸ் பார்த்திருக்கிறீர்களா?  தன் மகனை அவன் நண்பன் ஒருத்தன் கொன்று விட்டதாக தகப்பன் நம்புகிறான்.  ஒரு மதுபான விடுதியில் நடந்த ஒரு சின்ன கைகலப்பின் போது தவறுதலாக ஒரு பாறையில் விழுந்து செத்து விட்டான் இளைஞன்.  அது ஒரு விபத்து.  அதை ஒரு கொலையாக நினைத்து வாழ்நாள் பூராவும் தன் மகனின் நண்பன் மீது வெறுப்பைச் சுமக்கிறான் தந்தை.  அதேதான் என் பத்தினி சுமக்கும் சிலுவையும்.

நீதி விசாரணையின் போதும், சாப மழையின் போதும் என் மீது வந்து விழும் புகார்கள் என்ன தெரியுமா?  அந்த அயோக்கியன் உன்னைப் பயன்படுத்தி, உன்னை உபயோகப்படுத்தி பெரிய ஆளாகி விட்டான். 

அப்படியெல்லாம் ஒருவன் ஆக முடியுமா?  நான் மட்டும் என்ன சுயம்புவாகவா தோன்றினேன்?  நானே அசோகமித்திரனையும் ஆதவனையும் மற்றும் இன்னோரன்ன எழுத்தாளர்களையும் படித்துத்தானே எழுதத் தொடங்கினேன்?  சரி, அப்படியே ஒருவனை நானே வளர்த்து விட்டேன் என்று இருந்தால்தான் என்ன?  அதற்காக நீ மகிழ்ச்சி அல்லவா அடைய வேண்டும்?  எம்ஜியார் காலத்தில் அவரால் முன்னுக்கு வந்தவர்கள் ஆயிரத்துக்கும் மேல் இருக்குமே?  அவர் பக்கத்தில் நின்று கொண்டிருந்தவர்களில் பலர் இன்று கல்வித் தந்தையாக உருவாகவில்லையா?  எம்ஜியார் யாருக்கெல்லாம் உதவினாரோ அவர்கள் எல்லோருடைய ஆசியும் அன்பும்தானே அவருடைய இறுதிக் காலத்தில் பக்கபலமாக இருந்தன?

வன்மம்.  வன்மம்தான் பத்தினியை வாழ வைத்துக் கொண்டிருக்கிறது என்று புரிந்து கொண்டேன்.

கொக்கரக்கோவோடு நீ பழகக் கூடாது என்று ஒருநாள் தடை உத்தரவு பிறந்தது.  அதனால் நான் அவனோடு திருட்டுத்தனமாகப் பழக வேண்டியதாயிற்று.  இந்தத் தடை உத்தரவு வந்து ஐந்து ஆண்டுகள் ஆகிறது.  ஐந்து ஆண்டுகளாக அவனை நான் திருட்டுத்தனாகத்தான் சந்தித்துக் கொண்டிருக்கிறேன்.   எனக்கும் அவனுக்கும் தொடர்பே இல்லை என்பதால் அவனோடு நான் வீட்டில் இருக்கும் போது தொலைபேசியில் பேச முடியாது.  பத்தினி வீட்டில் இல்லாத போது மட்டுமே பேச முடியும்.  அந்த நேரம் காலை பத்து மணிக்குத்தான் கிடைக்கும்.  அப்போதுதான் பத்தினி பூனைகளுக்கு உணவு கொடுப்பதற்கு வெளியே போவாள்.  ஆனால் அப்போது கொக்கரக்கோவுக்கு நள்ளிரவு.  அவன் காலை ஐந்து மணிக்குத்தான் தூங்கவே போவான்.  ஆக, மெஸேஜ் மூலமாகத்தான் தொடர்பு கொள்ள முடியும்.  அதையும் மீறி ஏதோ முக்கிய விஷயமாக ஒருநாள் கொக்கரக்கோ எனக்கு ஃபோன் செய்து விட்டான்.  ஃபோனை எடுத்த பத்தினி அவனிடம் சொன்னது:

“இனிமே நீங்க அவருக்கு ஃபோன் பண்ணாதீங்க, சரியா?”

சொல்லி விட்டு ஃபோனைத் துண்டித்து விட்டாள்.

நான் அப்போது அவள் அருகில்தான் இருந்தேன்.

இதைப் படிக்கும் நண்பர்களே, தோழர்களே, நீங்களாக இருந்தால் அப்போது என்ன செய்திருப்பீர்கள்?  நான் சுண்ணாம்புக் காளவாயில் இருந்து கொண்டு எழுதுகிறேன் என்பதன் அர்த்தம் இப்போது புரிகிறதா? நான் அந்தச் சம்பவத்துக்கு எந்த எதிர்வினையும் காட்டவில்லை.  எதுவுமே நடக்காதது போல அமைதியாக இருந்து விட்டேன். 

கத்தினால் லயம் கெடும்.  என்னால் எழுத முடியாமல் போகும்.

என் எழுத்தின் செய்தி என்ன தெரியுமா?  மானுட சுதந்திரம்.  சுதந்திரமே என் உயிர் மூச்சு.  என் தாரக மந்திரம்.

ஆனால் என்னால் எனக்குத் தேவையான ஒருவருக்கு ஃபோன் செய்ய முடியாது.  அவரும் என்னை அழைக்க முடியாது.

இருந்தாலும் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.  காரணம், என் சுதந்திரத்தை விட சுதந்திரம் பற்றிய செய்திகளைத் தாங்கி வரும் என் எழுத்து எனக்கு முக்கியம்.  எக்காரணம் கொண்டும் என் எழுத்து முடங்கி விடக் கூடாது.  அதனால் எந்த அவமானத்தையும் நான் தாங்கிக் கொள்கிறேன்.

இது எல்லாமே நான் உன் நல்லதுக்காகவே செய்கிறேன் என்பதாவது உனக்குப் புரிகிறதா என்று கேட்டாள் ஒருநாள் பத்தினி. 

இதைத்தானே எல்லா நல்லவர்களும் சொல்லிச் சொல்லி இந்த உலகையே ரத்தக் களரியாக்கிக் கொண்டிருக்கிறார்கள் கண்ணே என்று மனதில் நினைத்துக் கொண்டேன். 

என்ன நல்லது தெரியுமா?

கொக்கரக்கோதான் என்னைக் குடிக்க வைக்கிறானாம்.  நான் குடிகாரனாக இருப்பதற்குக் கொக்கரக்கோதான் காரணமாம். 

ஹே… ஒரு கிளாஸ் வைன் குடித்து நான் செத்துப் போய் விடுகிறேன்!  வைன் என்ன சயனைடா, சாப்பிட்டதும் சாவதற்கு?  வைன் குடித்து விட்டுத்தானே மேற்கத்திய எழுத்தாளன் அத்தனை பேரும் தொண்ணூறு வயதுக்கு மேலும் ஆரோக்கியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறான்கள்?  எனக்கு இப்போது எழுபது வயது.  ஆரோக்கியத்தில் நான் என்ன கெட்டுப் போய் விட்டேன்.  மதுவையே தொடாத என் நண்பர் சந்தானம் அறுபத்தைந்து வயதில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்.  மதுவையே தொடாத என் நண்பன் ப்ரகாஷ் ஐம்பது வயதிலேயே மேலே போய் விட்டான். 

நாதனுக்கு என்ன ஆயிற்று தெரியுமா?  மும்பையிலிருந்து சென்னைக்கு மாற்றல் வந்தது.  சென்னை வேண்டாம், பெங்களூர் செல்லுங்கள் என்றேன்.  கேட்கவில்லை.  மிகப் பெரிய உயர் அதிகாரிதான்.  இருந்தாலும் நான் ஃபோனில் அழைக்கும் போதெல்லாம் புலம்பினார்.  புலம்பினார் என்று ஒரு வார்த்தையில் சொல்லி விட்டேன்.  ஒரு நாவல் எழுதலாம்.  அத்தனை அழுத்தம் வேலையில்.  எப்போதாவது என்னோடு வந்து ஒரு கிளாஸ் வைன் அருந்தியிருந்தால் அவருக்கு நடந்தது நடந்திருக்காது.  வேலையின் அழுத்தத்தில் மூளை நரம்பில் ரத்தக் கசிவு.  தேகத்தில் ஒரு பக்கம் செயலிழந்து விட்டது.  சரியாகப் பேசவும் முடியவில்லை.   எப்படி இருந்த வாழ்க்கை எப்படி ஆகி விட்டது பாருங்கள் என்றார்.  நான் ஒரு கதை எழுதி உங்களுக்கு அனுப்புகிறேன் என்றேன்.  அதுதான் இந்தக் கதை.  

***

என்ன பைத்தியக்காரத்தனம், கொக்கரக்கோவினால்தான் நான் குடிக்கிறேனாம்.  கொக்கரக்கோ இருந்தாலும் இல்லாவிட்டாலும் நான் குடிப்பேன்; குடிக்காமலும் இருப்பேன்.  என் வாழ்வின் எந்த முடிவுகளையும் எடுப்பதற்கு கொக்கரக்கோவோ அல்லது வேறு யாருமோ இதுவரை காரணமாக இருந்தது இல்லை.  ஏனென்றால், ஐந்து ஆண்டுகள் நான் குடிக்காமலும் இருந்திருக்கிறேன்.  அதுவும் சமீபத்தில். 

வன்மம்.  வன்மம் மட்டுமே காரணம்.  யார் மீதாவது வெறுப்பை வளர்த்துக் கொண்டால்தான் சுவாசிக்கவே முடியும் என்பதான வன்மம்.

நானா அதற்குப் பழி?

சரி, இந்த அளவுக்கு ஹோம் ஃப்ரண்ட்டில் ஆபத்தை வரவழைத்துக் கொண்டு நான் ஏன் கொக்கரக்கோவுடன் பழக வேண்டும்?

அப்பட்டமான சுயநலம்தான் காரணம். 

ஔரங்ஸேப் நாவலை எழுதிக் கொண்டிருந்தபோது எனக்குப் பல இடங்களில் பல சந்தேகங்கள் ஏற்பட்டன.  சரித்திரத்தில் அல்ல.  கற்பனையில்.  கதையில்.  அதையெல்லாம் தீர்க்கக் கூடியவனாக இருந்த ஒரே ஆள் கொக்கரக்கோவாகத்தான் இருந்தான்.  உதாரணமாக, ஔரங்ஸேபின் மகள் ஸெபுன்னிஸா தன்னைக் காண வந்த வரன்கள் அத்தனை பேரையும் நிராகரித்துக் கொண்டே இருந்தாள்.  என்ன காரணங்களைச் சொல்லி நிராகரித்தாள் என்று எழுத வேண்டும்.  என்னால் யூகிக்க முடியவில்லை.  கொக்கரக்கோ நாற்பது வரன்களை நிராகரிக்க நாற்பது காரணங்களைச் சொன்னான்.  அத்தனையும் அபாரமாக இருந்தது.  இதை எனக்குச் சொல்ல வேறோர் ஆள் இருந்தால் நான் கொக்கரக்கோவிடம் பேசத் தேவையிருக்காது. 

இதை நான் பத்தினியிடம் சொன்னேன்.  அவள் அதற்கு சொன்ன பதில்:  உனக்கு வெட்கமாக இல்லை?  உன் கற்பனை என்ன வறண்டா போய் விட்ட்து?  இந்த மாதிரி பொடிப் பயல்களை நம்பியா நீ எழுதிக் கொண்டிருக்கிறாய்?

எனக்கு இந்த வசையெல்லாம் தேவையில்லை.  காரியம் நடக்க வேண்டும்.  அது ஒன்றே என் குறி.  மனதில் நினைத்துக் கொண்டேன்.  சொல்லவில்லை.

ஆனால் பாருங்கள், பிரச்சினை இலக்கியத்தோடு நின்று விடவில்லை. லௌகீக வாழ்வில் கொக்கரக்கோதான் என் கால்களாகச் செயல்படுபவன்.  அவன் இல்லாவிட்டால் எனக்கு சக்கர நாற்காலிதான்.

சரி, அந்த அயோக்கியனை உனக்கு எத்தனை வருடமாகத் தெரியும்? அதற்கு முன்னால் என்ன செய்து கொண்டிருந்தாய்?

கால்கள் இல்லாமல் சக்கர நாற்காலியில்தான் இயங்கிக் கொண்டிருந்தேன்.

எதிர்ப்பக்கம் பதில் இல்லை.

எப்படி என்று நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும்.

என் புத்திரன் நல்ல ஸ்ட்ரீட் ஸ்மார்ட் என்று நண்பர்களிடையே பேர் எடுத்தவன்.  அவனிடம் சீலேவுக்கு எத்தனை சல்லிசாக  டிக்கட் கிடைக்கும் என்று கேட்டேன்.  நன்றாகத் தேடிப் பார்த்து விட்டு ஒரு லட்சத்துத் தொண்ணூறாயிரம் என்றான்.

எதற்கும் இருக்கட்டும் என்று கொக்கரக்கோவிடம் கேட்டேன்.  ஒரு முழுநாள் தேடி விட்டு, ஒரு லட்சத்து முப்பதாயிரம் என்றான்.

புத்திரனிடம் சொன்னேன்.  அவன் நம்பவில்லை.  இருக்காதே, நான் நன்றாகத் தேடி விட்டேனே, அந்த லிங்கை அனுப்பி வையுங்கள் என்றான்.

கொக்கரக்கோவிடம் கேட்டு லிங்கை அனுப்பினேன்.  புத்திரனிடமிருந்து பதில் இல்லை. 

சென்ற வாரம் நடந்ததைச் சொல்கிறேன்.  தாய்லாந்து செல்ல வேண்டும்.  அதற்கு இண்டர்நேஷனல் இன்ஷூரன்ஸ் எடுக்க வேண்டும்.  கொக்கரக்கோவிடம் சொன்னால் வேலை விக்கினம் இல்லாமல் நடக்கும்.  ஆனால் இல்லத்தில் கடந்த சில தினங்களாக கொக்கரக்கோவின் மேல் மிகத் தீவிரமான தாக்குதல் நடந்து கொண்டிருந்தது.  அதற்குக் காரணம், வினித்.  அதைச் சொல்லி விட்டு இன்ஷூரன்ஸ் விஷயத்துக்கு வருகிறேன்.

இரண்டு வாரத்துக்கு முன்பு இங்கே மைலாப்பூரில் உள்ள ஆர்.ஆர். சபாவில், என் நண்பனின் தாயார் நடத்திக் கொண்டிருக்கும் நாட்டியப் பள்ளி மாணவிகளின் பரத நாட்டிய நிகழ்ச்சி இருந்தது.  நான்தான் தலைமை தாங்கிப் பேச வேண்டும்.  என் வீட்டிலிருந்து ஆர்.ஆர்.சபா அரை கிலோமீட்டர் தூரத்தில்தான் இருந்ததால் பத்தினியை வருகிறாயா எனக் கேட்டேன்.  ஆ, தாராளமாக என்றாள்.  வந்தாள். 

சபா வாசலிலேயே சந்தானத்தையும் வினித்தையும் பார்த்தேன்.  நான் பேசுகிறேன் என்பதால் வேளச்சேரியிலிருந்து வந்திருக்கிறான் வினித்.  சந்தானம் மைலாப்பூர்தான்.  கை காண்பித்து விட்டு உள்ளே போய் விட்டேன்.

முதல் வரிசை.  நிறைய இருக்கைகள் காலியாக இருந்தன.  இருவரையும் என் அருகில் வந்து அமர்ந்து கொள்ள அழைத்தேன்.  முதல் வரிசை என்றால் பாதியில் கிளம்புவது கடினம் என்று சந்தானம் பின்னால் போய் விட்டார்.  வினித் மட்டும் என் அருகில் அமர்ந்து கொண்டான்.  

நாட்டியம் முடிந்த பிறகு நான் கடைசியாகப் பேச வேண்டும் என்பது ஏற்பாடு.  ஆறு பாடல்களுக்கு மாணவிகள் ஆடினார்கள்.  

நான் குறிப்புகள் எடுக்கத் தயாரானேன்.  பெரிதாக ஒன்றும் இல்லை.  எந்தெந்த கீர்த்தனை, யார் யார் பாடினது.  அவ்வளவுதான்.  சமயங்களில் யார் பாடினது என்பதைத் தெரிந்து கொள்ள முடியாத போது என் ஃபோனில் தேடினேன்.  தேடிக் கொண்டிருந்தால் நாட்டியத்தைப் பார்க்க முடியாது.  வினித்திடம் ஃபோனைக் கொடுத்து பார்க்கச் சொன்னேன்.  அவன் பார்த்துப் பார்த்துக் கொடுக்க நான் பெயர்களைக் குறித்துக் கொண்டேன்.

வீட்டுக்குப் போனதும் நிச்சயம் ஒரு நீதி விசாரணை இருக்கிறது என்று புரிந்தது.  உன் ஃபோனை அவன் ஏன் உபயோகிக்கிறான்?  ஆனால் அதற்குத் தகுந்த பதில் என்னிடம் இருந்தது.  இப்போது நிகழ்ச்சி முடிந்து மேடையில் நான் சரியானபடி பேசியாக வேண்டும்.  அது மட்டுமே முக்கியம்.  இங்கே வந்திருப்பவர்களில் ஒருத்தருக்குக் கூட என் பெயர் தெரிந்திருக்காது.  நானோ பரத நாட்டியத்துக்கு வெளியே இருப்பவன்.  என்றாலும் பரதம் பற்றி நிறைய பேச முடியும்.  அதற்கான குறிப்புகளை எடுத்துக் கொண்டிருக்கும்போது வீட்டில் நடக்கப்போகும் நீதி விசாரணை பற்றியெல்லாம் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. 

அதையும் மீறி உள்ளுக்குள் திக் திக் என்ற பயம் இருந்து கொண்டே இருந்தது.  ஏதோ தவறு செய்கிறோம்.  என்ன தவறு என்று நீதி விசாரணையின் போதுதான் தெரியும்.  நேரம் ஆக ஆக பயம் அதிகரித்துக் கொண்டே போனது.  வினித்தை வேறு இப்போதெல்லாம் பத்தினிக்குப் பிடிக்காமல் போய்க் கொண்டிருந்தது.  காரணம், ஒரு சம்பவம்.  நானும் வினித்தும் ஆரோவில் செல்ல வேண்டும்.  கொக்கரக்கோவும் உண்டு.  வாடகைக் காரில் வினித் வேளச்சேரியிலிருந்து மைலாப்பூர் வந்து என்னை அழைத்துக் கொண்டு வளசரவாக்கத்தில் இருந்த கொக்கரக்கோ வீட்டுக்குப் போக வேண்டும்.  அங்கேயே ஒளிப்பதிவாளர் முருகவேளும் வந்து விடுவார்.  நால்வரும் கொக்கரக்கோவின் காரில் ஆரோவில் சென்று என்னைப் பற்றிய ஆவணப்படத்துக்கான படப்பிடிப்பை நடத்த வேண்டும்.

என்னை வழியனுப்புவதற்காக என் பத்தினி முதல் தளத்திலிருந்து கீழே இறங்கி வந்தாள்.  நான் வாயை மூடிக் கொண்டு இருந்திருக்க வேண்டும். 

வினித்திடம் ”முன் இருக்கையில் நீங்களா நானா?” என்று கேட்டுத் தொலைத்து விட்டேன். வினித் “முன் இருக்கையில் கொக்கரக்கோ” என்றான்.

தொலைந்தது.  செத்தேன்.  வாழ்க்கையே காலி.  பத்தினி ஒன்றும் சொல்லாமல் மேலே போய் விட்டாள். கொக்கரக்கோவின் பெயரைக் கேட்டாலே பத்ரகாளியாக மாறி விடும் பத்தினி இப்போது அவன் ஆவணப்படத்திலும் சம்பந்தப்பட்டிருக்கிறான் என்று தெரிந்தால் என் வாழ்வே நாசமாகி விடும். 

என்னது, சம்பந்தமா?  இயக்கமே அவன்தானே ஐயா? 

அடப்பாவி, இந்த வினித்திடம் எத்தனை ஆயிரம் முறை சொல்லியிருக்கிறேன், கொக்கரக்கோ பேரை பத்தினியின் முன்னே சொல்லாதே சொல்லாதே என்று?  இப்படி என் வாழ்வைச் சிதைத்து விட்டானே?

சரி, நடந்தது நடந்து விட்டது.  இனி ஒன்றும் செய்ய முடியாது.

எப்படியும் இன்னும் ஒரு மாதத்தில் இதற்கான நீதி விசாரணை நடந்து தண்டனை வழங்கப்படும்.  நன்றி வினித். 

ஆனால் வினித் எங்கள் ஊரைச் சேர்ந்தவன்.  கீழத் தஞ்சை மாவட்டம்.  அந்த மண்ணுக்கே உரிய வெகுளித்தன்மை கொண்டவன். 

ஆர்.ஆர். சபாவில் இன்னும் நாட்டிய நிகழ்ச்சி தொடங்கவில்லை.  ”நாளை பொன்னியின் செல்வன் ரிலீஸ்.  பார்க்கவில்லையா?” என்று கேட்டான் வினித்.  பத்தினி கேட்டுக் கொண்டிருந்தாள்.  ஏற்கனவே நடந்த ட்ராஜடி போல் எதுவும் நடந்து விடக் கூடாதே என்ற கிலியுடன் ”தியாகராஜாவில் முழு முற்றாக மூழ்கிக் கிடக்கிறேன்.  பொன்னியின் செல்வன் ரிலீஸ் விஷயமே எனக்குத் தெரியாதே?” என்றேன்.

“நாளைக்கு நானும் கொக்கரக்கோவும் போகலாம் என்று இருக்கிறோம்.  டிக்கட் கிடைத்தது.  படம் மட்டும் கொக்கரக்கோவுக்குப் பிடிக்கவில்லையானால் அவ்வளவுதான், ஃபேஸ்புக் பக்கமே போக முடியாது.  கலவரமாக இருக்கும்.”

ம்ம்ம் என்று கேட்டுக் கொண்டு அந்தப் பேச்சுக்கு முற்றும் போட்டேன். 

வளர்த்திக் கொண்டு போவானேன்.  அப்புறமும் ஏதோ பேச்சு வந்தது.  மறுபடியும் கொக்கரக்கோவை இழுத்தான் வினித்.  இவன் என்ன போன ஜென்மத்தில் சேவலாகப் பிறந்திருப்பானோ, இப்படி மூச்சுக்கு முந்நூறு முறை கொக்கரக்கோ கொக்கரக்கோ என்கிறானே என்று நினைத்துக் கொண்டேன்.

நிகழ்ச்சி தொடங்கியது.

நன்றாகப் பேசினேன் என்றே எல்லோரும் சொன்னார்கள்.  வினித் இருந்திராவிட்டால் திணறிப் போயிருப்பேன்.  குறிப்புகள் எடுக்க வினித் உதவியதால்தான் நன்றாகப் பேச முடிந்தது.  மாடியில் டின்னர் என்றார்கள்.

என்னதான் நடனத்தை ரசித்தாலும், மேடையில் ஏறிப் பேசினாலும் உள்ளுக்குள் ஒரு பயம் இருந்துகொண்டேதான் இருந்தது.  என்ன தவறு செய்கிறோம்?  ஏதோ ஒரு பெரிய தவறைச் செய்கிறோம்.  என்ன தவறு என்று தெரியவில்லை.  ஆனால் நான் தவறு செய்து கொண்டிருக்கிறேன் என்பதைத் தெரிவிக்கும் எந்த சமிக்ஞையோ குறிப்போ பத்தினியின் பேச்சிலோ நடவடிக்கையிலோ இல்லை.  ரொம்ப சாதாரணமாகவே இருந்தாள்.  ஆனால் மான் தண்ணீர் குடிக்கும் வேளையில் நீர்ப்பரப்பு சாதாரணமாகத்தானே தெரிகிறது?

ஒன்றும் புரியவில்லையே ஐயப்பா என்று நினைத்துக் கொண்டேன்.

டின்னருக்குக் கிளம்பினோம்.  நீங்கள் ரெண்டு பேரும் போங்கள், நான் இங்கேயே உட்கார்ந்திருக்கிறேன் என்றாள் பத்தினி.  அப்படியானால் வா, ரெண்டு பேருமே வீட்டுக்குப் போய் விடலாம் என்றேன்.  எனக்குக் கொலைப் பசி அப்போது.  வீட்டில் வேறு எதுவும் இல்லை. மணி ஒன்பது. 

கொஞ்ச நேரம் யோசித்தவள் “சரி, வா” என்று மாடிக்குக் கிளம்பினாள்.

டின்னரின் போதும் கொக்கரக்கோவை இழுத்தான் வினித். 

சரி, நடப்பது நடக்கட்டும் என்று விட்டு விட்டேன்.  வெள்ளம் தலைக்கு மேல் போய் விட்டது. இனி செய்வதற்கு ஒன்றுமில்லை.  

ஒரு வாரம் கழித்து நடந்தது நீதி விசாரணையும் கடும் சாப மழையும். என்னாங்கடா நெனச்சுக்கிட்ருக்கீங்க?  கொக்கரக்கோ நெகட்டிவா சொல்லிட்டா பொன்னியின் செல்வனே ஊத்திக்குமாம்ல?  அட நாயே… அவ்ளோ பெரிய பிஸ்தாவாடா அவன்? என்னை ஓரங்கட்டிப்பிட்டு எங்கெயோ அட்றஸ் இல்லாம கெடந்தவனைத் தூக்கி இவ்ளோ பெரிய எடத்துல வச்சிருக்கியே ஒன்ன சொல்லணும்.  வினித்துடன் இனிமேல் நீ பேசக் கூடாது.  ஏன்னா அவனும் கிட்டத்தட்ட கொக்கரக்கோவா மாறிட்டான்.  

ஏம்ப்பா, நீயும் நானும் ஒன்றாக வெளியே போய் ஒரு பத்து வருடம் இருக்குமா?

இருக்கும்மா.

ம்ம்ம்.  அப்படி ஒரு நிலைமைல ஏதோ அந்த சபா நம் வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிறதே என்று வந்தால் அந்தப் பயலைக் கொண்டு வந்து உன் பக்கத்தில் உட்கார்த்தி வைத்துக் கொள்கிறாய்.  இதெல்லாம் நியாயமா என்று நீயே சொல்.

ஆ, இதுதான் நான் செய்த தவறு என்று அவள் சொன்ன பிறகுதான் புரிந்தது.  இது அப்போதே உறைத்திருந்தால் செய்திருக்க மாட்டேனே?  ஆக, அந்த நிகழ்ச்சியின் போது ஏதோ தவறு நடந்து கொண்டிருக்கிறது என்று என் அடி வயிறு கலங்கியது சரிதான் போல.  சரி, என் உள்ளுணர்வு இத்தனை சரியாக வேலை செய்கிற போது, அது என்ன தவறு என்றும் சுட்டிக்காட்டியிருக்கலாம் அல்லவா என நினைத்துக் கொண்டேன். 

நேற்று ஏதோ விஷயமாக வினித்தைத் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது.  தடை உத்தரவை மறந்து விட்டு ஃபோனில் அழைத்தேன். 

இனிமேல் அந்தப் பயலோடு பேசாதேப்பா, எனக்குப் பிடிக்கவில்லை என்று மீண்டும் அறிவுறுத்தினாள் பத்தினி.

இம்மாதிரி சூழ்நிலைகளால்தான் மனிதர்கள் மிருகங்களாக மாறுகிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்ட தருணம் அது.

நான் மாற மாட்டேன்.  மிலரப்பா கதை படித்திருக்கிறேன்.  அந்தக் கதை போதும், இதை விட எத்தனை சுண்ணாம்புக் காளவாய்களையும் தாங்குவதற்கான பலத்தைக் கொடுக்கும். 

இப்படியாக அந்த நாட்டிய நிகழ்ச்சியிலிருந்து கொக்கரக்கோவின் மீதான வசைப் படலம் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது.  இந்தச் சூழ்நிலையில் கொக்கரக்கோவுக்கு ஃபோன் போட்டு இன்ஷூரன்ஸ் விஷயத்தை விசாரிக்க முடியாது.  கோபுலுவை அழைத்தேன்.  விஷயத்தைச் சொன்னேன்.

சொல்லும் போதே எதற்கும் கொக்கரக்கோவைக் கலந்து கொள் தம்பி என்றேன்.

விஷயம் சரியாக நடந்து முடிந்தது.  இடையில் எனக்குக் கிடைத்த அபூர்வமான ஒரு தனிமை வேளையில் கொக்கரக்கோவை அழைத்து இன்ஷூரன்ஸ் செய்து விட்ட விஷயத்தைச் சொன்னேன்.  ம்க்கும், நான்தான் சரி பண்ணினேன் என்றான்.

பெரிய தவறு நடந்து விட்டதாம்.  கோபுலு கொக்கரக்கோவை அழைத்து இன்ஷூரன்ஸ் எடுத்து விட்டேன் என்று சொல்லியிருக்கிறான்.

எவ்வளவு ரூபாய் ஆனது?

ஐநூறு ரூபாய்.

என்னது, ஐநூறா?  இருக்கவே இருக்காது.

இல்லை, ஐநூறுதான்.

அப்படியா, டீம் வியூவரில் வா நீ.

பார்த்தால் கோபுலு ஒரு நாளைக்கு இன்ஷூர் செய்து வைத்திருக்கிறான். 

என்னடா இது?

ஆஹா, தப்பு நடந்து போச்சு கொக்கரக்கோ.  ஒரு நாள் என்பதை நான் ஒரு ஆள் என்று நினைத்து விட்டேன்.

அது எப்பிர்ரா நெனப்பே?  ஒரு நாள் என்பதை ஒரு ஆள் என்று எப்படிப் படிப்பே?  இங்லீஷ்லேல்ல எழுதியிருக்கு?  தமிழ்னா கூட நாள் ஆள்னு குழப்பிக்கலாம்.  இங்லீஷ்ல எப்டி?

கடைசியில் ஒரு ஆண்டுக்கு இன்ஷூர் எடுக்க பதினோராயிரம் ஆனது. 

இதை கொக்கரக்கோவிடம் சொல்லாமல், நான் இன்ஷூர் செய்து விட்டேன் என்று நினைத்துக் கொண்டு ஐரோப்பா சென்று ஏதாவது ஆனால் அங்கே என்னோடு வருபவர்களின் தாலிதான் அறும்.  எப்பேர்ப்பட்ட கொடூரம்?  நிலைமை இப்படி இருக்கும்போது நீ கொக்கரக்கோவிடம் பேசாதே என்றால் எப்படி நான் இயங்குவது?  இத்தனைக்கும் கோபுலு ஒரு நிறுவனத்தில் சீனியர் ப்ராஜக்ட் மேனேஜராக வேலை செய்கிறான். மூணு லகரம் சம்பளம்.  

”ஏய்யா, நீயே இதையெல்லாம் செய்து கொள்ள வேண்டியதுதானே?  உனக்கு எதுக்கு ஆள் துணை?” என்று நீங்கள் கேட்கலாம்.

பிச்சாவரத்தில் நடந்ததைச் சொன்னால்தான் உங்களுக்கு நான் யார் என்று புரியும்.

பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு கொக்கரக்கோ இரண்டு லட்சம் ரூபாய் தன் கைக்காசைப் போட்டு ஒரு வாசகர் வட்டச் சந்திப்பை பிச்சாவரத்தில் நடத்தினான்.  சந்திப்பு நடப்பதற்கு மூன்று தினங்கள் முன்பே கொக்கரக்கோ பிச்சாவரம் போய் விட்டான்.  சந்திப்புக்கான ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

நான் சென்னையிலிருந்து பிச்சாவரம்.  ஆம்னி பஸ்ஸில். 

”பஸ்ஸிலிருந்து எல்லோரும் இறங்கி விடுவார்கள். டிரைவர் எஞ்சினையே ஆஃப் செய்து விடுவார். அப்போது இறங்குங்கள்.  ஊர் வந்தவுடனே இறங்கி விடாதீர்கள்.”

எத்தனை தெளிவாக இருக்கிறது இந்த விவரம்.

பஸ் சிதம்பரம் வந்ததும் பஸ்ஸிலிருந்து எல்லோரும் இறங்கவே அவர்களுடன் நானும் இறங்கி விட்டேன்.  இறங்கின பிறகுதான் பார்த்தால் பஸ்ஸில் இன்னமும் ஏழெட்டு பேர் அமர்ந்திருக்க, பஸ் புறப்பட்டு விட்டது.  ஆகா, அப்படியானால் இது கடைசி நிறுத்தம் இல்லையா?

கொக்கரக்கோவுக்கு ஃபோன் போட்டேன்.  அவன் சொன்னபடி கடைசி நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தான்.

உங்களிடம் எல்லோரும் எறங்கனதும்தானே எறங்கச் சொன்னேன்? ஏன் முன்னாடியே எறங்குனீங்க?

கொஞ்சம் பேரு எறங்னாங்க, அவங்க பின்னாலயே நானும் எறங்கிட்டேன்.

மத்தவங்க எல்லாம் எறங்கலையே ?

அவங்கள்ளாம் என் பின்னால எறங்கிடுவாங்கன்னு நெனைச்சேன். 

அப்போது கொக்கரக்கோ என்னிடம் சொன்ன வார்த்தை: உங்களுக்கு மூளையில் உள்ள எல்லா பகுதியும் பிரமாதமாக வேலை செய்கிறது. இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் அது எல்லாமே எழுத்து என்ற ஒரே ஒரு விஷயத்தில் போய் குவிந்து விடுகிறது.  மற்ற துறைகளெல்லாம் டிரைவர் இல்லாத ரயிலைப் போல் அங்குமிங்கும் போய் முட்டிக் கொண்டு விடுகிறது. 

இன்னொரு முறை வேறொரு பெரிய ஆபத்தில் சிக்க இருந்தேன்.  கொக்கரக்கோவின் பேச்சைக் கேட்காததுதான் காரணம்.

நான் சிங்கப்பூருக்கு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகப் போயிருந்தேன்.  கொக்கரக்கோவும் கணேஷும் குமாரும் தாய்லாந்தில் உள்ள கோ சுமாய் என்ற தீவில் இருப்பார்கள்.  நான் சிங்கப்பூரிலிருந்து கோ சுமாய் சென்று ஏற்கனவே அங்கே போய் தங்கியிருக்கும் நண்பர்களோடு சேர்ந்து கொள்ள வேண்டும். 

மிக மிக விளக்கமாக, கிளிப்பிள்ளைக்குச் சொல்வது போல் சொல்லியிருந்தான் கொக்கரக்கோ.  சிங்கப்பூரிலிருந்து பாங்காக்.  விமானம்.  பாங்காக் விமான நிலையத்திலிருந்து இன்னொரு விமானத்தை எடுத்து சூரத் தானி வர வேண்டும்.  சூரத் தானியில்தான் நீங்கள் இமிக்ரேஷன் எடுக்க வேண்டும்.  பாங்காக்கில்தான் எடுக்கப் போவீர்கள்.  போகக் கூடாது.  போகக் கூடாது.  போகவே கூடாது.  சிங்கப்பூரிலிருந்து பாங்காக் சென்று விமானத்திலிருந்து இறங்கி எல்லா பயணிகளோடும் கூடவே நடந்தால் ஒரு இடத்தில் இமிக்ரேஷன் என்று போட்டிருக்கும்.  அது உங்களுடைய வலது பக்கமாக இருக்கும்.  அந்தப் பக்கமே நீங்கள் திரும்பக் கூடாது.  எல்லோரும் அங்கே போய் பெரிய கியூவில் நிற்பார்கள்.  அவர்களெல்லாம் பாங்காக்கில் இறங்குபவர்கள்.  நீங்கள் அந்தப் பக்கத்தையே பார்க்காமல் நேராக நடந்து போய்க் கொண்டே இருந்தால் ஒரு இடத்தில் ரெண்டு மூணு பேர் மட்டுமே நிற்பார்கள்.  போலீஸும் நிற்கும்.  உங்களைப் பரிசோதித்து விட்டு சூரத் தானி செல்லும் விமானத்தில் உட்கார வைப்பார்கள். 

சிங்கப்பூர் விமான நிலையத்திலேயே பிரச்சினை வந்து விட்டது.  அங்கே டிக்கட் போடுவதற்கோ மற்ற விஷயங்களுக்கோ சிப்பந்திகளே இல்லை.  எல்லாம் எந்திர மயம்.  நீங்களேதான் போய் எதிலேயே எதையோ சொருகி டிக்கட்டை எடுத்துக் கொண்டு உள்ளே போக வேண்டும்.  எனக்கு ஒரு எழவும் புரியவில்லை.  எந்திரம் சொல்கிறாற்போல் செய்தால் எடை அதிகம் என்று வந்தது.  சிங்கப்பூர் எழுத்தாளர்கள் கொடுத்த புத்தகங்கள் மற்றும் மதுபானம்.  எல்லாவற்றையும் தூக்கிப் போட்டு விட்டுப் பார்த்தாலும் பிரச்சினை என்று வந்தது.

பிறகு ஃபோன் போட்டு என்னை வழியனுப்ப வந்த நண்பரை விசேஷ அனுமதி கேட்டு உள்ளே வரவழைத்து ஒருவழியாக விமானம் ஏறினேன். 

பாங்காக் விமான நிலையத்தில் கொக்கரக்கோ சொன்னபடியே கவனமாக வந்தேன்.  வலது பக்கத்தில் இமிக்ரேஷன்.  பெரும் க்யூ.  நான் அங்கே சென்றேன்.  என் மனதில் ஒரு குரல்.  இமிக்ரேஷன் எடுக்காமல் ஒரு தேசத்துக்குள் பயணம் செய்வது குற்றம் இல்லையா?  கியூ ஆமை வேகத்தில் நகர்ந்தது.  கொக்கரக்கோவை அழைத்து விவரம் கேட்கலாம் என்றால் இண்டர்நேஷனல் அழைப்புக்கு அதில் வசதி இல்லை.  சூரத் தானி விமானம் கிளம்ப இன்னும் பத்து நிமிடங்களே இருந்தன.  ஆனால் கியூவோ ரொம்பப் பெரிதாக இருந்தது.  சரி, விமானத்தை விட்டு விட்டால் இங்கே பாங்காக்கிலேயே ஒரு வாரம் தங்கியிருந்து விட்டு சென்னை கிளம்பி விடலாம் என்று முடிவு செய்தேன்.  ஒருவழியாக கியூவின் முடிவில் இமிக்ரேஷன் அதிகாரியின் முன்னே நின்றேன்.  அவரோ என்னைப் பார்த்து “உங்களுக்குக் கோ சுமாய் விமான நிலையத்தில்தான் இமிக்ரேஷன்” என்று சொல்லி விட்டார். 

அப்போதுதான் கொக்கரக்கோ சொன்னதே எனக்கு முழுசாகப் புரிந்தது.  சுற்றிச் சுற்றி ஒரே கியூ மயம்.  புதிர்வட்டப் பாதை மாதிரி.  எல்லோரையும் பிடித்துத் தள்ளிக் கொண்டுதான் வெளியே வந்து விழுந்தேன்.  ஓடினேன்.  என்னைப் பார்த்ததும் சூரத் தானி செல்லும் விமான சிப்பந்திகளும் போலீஸும் என்னைப் பிடித்து இழுத்துக் கொண்டு விமானத்தை நோக்கி ஓடினார்கள்.  அப்போதும் ஒரு அதிகாரி “சூரத் தானிக்கு எல்லோரும் ஜாலி பண்ணத்தானே போவார்கள்?  அதற்கு ஏன் இத்தனை பெரிய லக்கேஜ்?” என்று விசாரித்தார்.  “நான் எழுத்தாளன், எல்லாம் புத்தகங்கள்” என்றேன். சிரித்துக் கொண்டார். 

சூரத் தானியில் இறங்கியதும் முழங்கைக்கு சற்று மேலே ஒரு கெட்டியான அட்டைப் பட்டியைக் கட்டினார்கள்.  ஒரு வேனில் ஏறச் சொல்லி தாய்லாந்தின் கிராமங்களின் வழியே பயணம் தொடர்ந்தது.  ஒரு மணி நேரம் சென்று, கடல் வந்தது.  அங்கே இருந்த ஃபெர்ரியில் ஏறச் சொன்னார்கள்.  நான் ஏறப் போன போது “டிக்கட்?” என்று கேட்டார் ஃபெர்ரி ஓட்டுனர்.  இதை கொக்கரக்கோ என்னிடம் சொல்லவில்லையே என்று அவனைத் திட்டி விட்டு, டிக்கட் வாங்கினேன். 

ஃபெர்ரி ரொம்பப் பெரிதாக இருந்தது.  ஐம்பது அறுபது கார்கள் கீழ்த்தளத்தைப் பிடித்துக் கொண்டன.  பயணிகள் மேல்தளம். என்னிடமிருந்த கனமான பையைத் தூக்கிக் கொண்டு மேல்தளம் செல்லும் படிக்கட்டுகளில் என்னால் ஏற முடியவில்லை.  பையிலிருந்த பாதி புத்தகங்களை கடலில் விட்டெறிந்து விட்டு ஏற முயற்சித்தேன்.  அப்படியும் முடியவில்லை.  அரை மணி நேரத்துக்குப் பிறகு கோ சுமாய் தீவின் கரையை அடைந்தோம்.  பையைச் சுமந்து கொண்டு கார்களின் ஊடாக ஊடாகப் புகுந்து போன போது ஃபெர்ரியின் அடுத்த முனையிலோ கரையிலோ ஒரு ஆத்மாவைக் கூட காணவில்லை.  ஏனென்றால், நான் கார்களின் ஊடாகப் புகுந்து வந்ததிலேயே அரை மணி நேரம் ஆகி விட்டது.

என்ன செய்வது என்று தெரியாமல் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்தேன்.  தாய்லாந்து என்பதால் வழிப்பறி பிரச்சினை இல்லை.  நான் செல்ல வேண்டிய விடுதியின் பெயர் தெரியும்.  ஏதாவது டாக்ஸியில் போகலாம் என்றாலும் ஈ காக்கை இல்லை.

கொஞ்ச தூரம் நடந்த போது ஒரு பயணிகள் உதவி மையம் இருந்ததைக் கண்டேன்.  அங்கே இருந்த ஒரு பெண்ணிடம் என் ஓட்டல் பெயரைச் சொன்னேன்.  அவள் ஒரு வரைபடத்தை எடுத்து வந்து காண்பித்தாள்.  நாங்கள் இருந்தது தீவின் ஒரு கரை.  நான் செல்ல வேண்டிய விடுதி இருந்தது தீவின் நேர் எதிர்க்கரை.  காலை வரை ஒரு வண்டியும் கிடையாது.

அப்போதுதான் அங்கே ஒரு டாக்ஸியை அனுப்பி வைத்தார் கடவுள்.  ஒரு ஆண், ஒரு பெண், ஒரு கைக்குழந்தை.  நாங்களும் அங்கேதான் போகிறோம்.  இத்தனை பாட் கொடுத்தால் கொண்டு போய் விடுகிறோம் என்றார் அந்த ஆள்.

ஏறிக் கொண்டேன்.  கொக்கரக்கோவின் மீது கோபம் கோபமாக வந்தது.  அப்படியே பல்லக்கில் ஏந்திக் கொண்டு வந்து விடுதியில் விடுவார்கள் என்று சொன்னானே?

ஒரு மணி நேரத்துக்கும் மேலாக சென்று கொண்டிருந்தது டாக்ஸி.  மணி பத்துக்கும் மேல்.  ஃபோனும் வேலை செய்யவில்லை.  ஒரே கும்மிருட்டு.  வழியில் ஒரு வெளிச்சம் இல்லை.  காட்டுப் பாதை.  ஏதோ ஒரு கிரிமினல் கூட்டத்திடம் மாட்டிக் கொண்டோம் என்று நினைத்தேன்.    அவர்கள் கணவன் மனைவி, அது அவர்கள் குழந்தை என்று புரிந்ததால் கொஞ்சம் நம்பிக்கை துளிர்த்தது. 

ஏன் இத்தனை நேரம் என்று அந்த ஆளை அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தேன்.  அவரோ பதிலே சொல்லாமல் ம்ம் ம்ம் என்று தலையாட்டியபடி காரியத்திலேயே கண்ணாக இருந்தார். 

ஒன்றரை மணி நேரம் கழித்து பதினோரு மணி அளவில் மிகச் சரியாக நான் இறங்க வேண்டிய விடுதியில் கொண்டு வந்து விட்டார்.

நான் வரவே போவதில்லை என்றுதான் முடிவு செய்திருந்தது கோஷ்டி.  காலையிலிருந்து பச்சைத் தண்ணீர் குடித்திருக்கவில்லை.

வயிறு நிரம்ப சாப்பிட்டேன்.

மறுநாள் கொக்கரக்கோ குடைந்து குடைந்து விசாரித்தான்.  நடந்தது அத்தனையும் ஒன்று விடாமல் சொன்னேன்.  ம்ஹும்.  ஒரே ஒரு விஷயத்தை மறைத்து விட்டேன்.  சூரத் தானியில் வேனில் ஏறும் போது முழங்கைக்கு மேலே ஒரு பட்டை கட்டினார்கள் அல்லவா, அது கையை உறுத்துகிறது என்று வேனிலேயே கழற்றிப் போட்டு விட்டேன்.  அதுதான் அடையாளம் போலிருக்கிறது.  அது கையிலேயே இருந்திருந்தால் டிக்கட் கேட்டிருக்க மாட்டார்கள்.  கோ சுமாயிலும் நான் வர ஒரு மணி நேரம் ஆகியிருந்தாலும் என்னை ஏற்றிக் கொள்ளாமல் வேனை எடுத்திருக்க மாட்டார்கள்.  ஏனென்றால், அந்தப் பட்டியில் ஒரு நம்பரும் போட்டிருந்தது.

அப்புறம் பாங்காக் விமான நிலையத்தில்தான் கொக்கரக்கோவிடம் விஷயத்தைச் சொன்னேன்.

மூளையே இல்லாத மட்டி மந்திகள் கூட எந்தக் குழப்பமும் இல்லாமல் சூரத் தானியிலிருந்து கோ சுமாய் வந்து விடும்.  புத்திசாலிகளுக்கோ பிரச்சினையே இல்லை.  நான் ரெண்டாங்கெட்டானாக இருக்கிறேன்.  ஏதோ கோல்மால் செய்து சிஸ்டத்தைக் கெடுத்து சிரமப்படுகிறேன். 

அதனால்தான் எல்லாவற்றையும் துணைக்கு ஆள் வைத்துக் கொண்டு செய்ய வேண்டியிருக்கிறது.  ஆள் என்றால் அது கொக்கரக்கோ மட்டும்தான்.  ஏனென்றால், ஊர் உலகத்தினர் என்னை விட மக்கு உலக்கைகளாக இருக்கிறார்கள்.

ஒருநாள் பச்சையாக கோபுலுவிடம் கேட்டு விட்டேன்.  அவன் இனத்தின் பெயரைச் சொல்லி நீ அதுதானா தம்பி என்று கேட்டேன்.

ஆ, எப்படிக் கண்டு பிடித்தீர்கள்?  யாருக்குமே தெரியாதே?

ரொம்ப சுலபம் தம்பி.  நானும் உன் இனம்தான்.  நம் இனத்தில்தான் மக்கு உலக்கைகள் ஜாஸ்தி.  அப்படித்தான் கண்டு பிடித்தேன். 

சரி, இந்தக் கதையின் முடிவுக்கு வந்து விட்டோம்.

கடந்த பத்து ஆண்டுகளில் இரண்டாவது முறையாக வெளியே கிளம்பினோம்.  காலையில் வழக்கமாக எட்டரைக்கு எழுந்து கொள்ளும் பத்தினி இப்போதெல்லாம் ஆறுக்கெல்லாம் எழுந்து கொள்கிறாள்.  ஏதோ chantingஆம்.  ஒருநாள் நான் ஏழேகால் மணிக்கு வெளியே கிளம்பினேன்.  பொதுவாக ஆறே முக்காலுக்கு நடைப் பயிற்சிக்குக் கிளம்புவேன்.  அன்றைய தினம் ஏதோ தூறலாக இருந்து ஏழேகாலுக்குத்தான் வானம் தெளிந்தது.  ஆனால் நான் நடைப் பயிற்சிக்குக் கிளம்பவில்லை.  சந்தானமும் கிருஷ்ணனும் காலைச் சிற்றுண்டிக்காக அழைத்தார்கள்.  மாதம் ஒருமுறை கிருஷ்ணனோடு அப்படி காலைச் சிற்றுண்டி சாப்பிடுவது. 

”ஓ, சிற்றுண்டிக்காகப் போகிறாயா?  நானும் நீயும் வெளியே போய் சாப்பிடலாம் என்று நினைத்தேன்.  பசிக்கிறது” என்றாள் பத்தினி.

“அப்படியானால் விடு, நான் அவர்களிடம் வரவில்லை என்று சொல்லி விடுகிறேன்.  நாம் இருவரும் கிளம்புவோம்.”

”அப்படி வேண்டாம், அவர்கள் இருவரையும் கூட வரச் சொல்.  மாரிஸ் ஓட்டலில் சாப்பிடலாம்.”

ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஓட்டலில் அன்று கூட்டம் அதிகம். அதனால் இட்லி வருவதற்குச் சற்று நேரம் ஆனது.  அப்போது வேறு ஒரு கொக்கரக்கோ பற்றிய பேச்சு வந்தது.  அந்தக் கொக்கரக்கோ  நானும் சந்தானமும் கிருஷ்ணனும் ஸ்டெனோக்களாக அஞ்சல் துறையில் பணி செய்து கொண்டிருந்த போது எங்களோடு சக ஸ்டெனோவாக இருந்தவன்.  வயதில் இளையவன்.  காந்தி அளவுக்கு நல்லவன். 

நான் சொன்னேன், எனக்கு நல்லவர்களால் பயனில்லை.  என்னுடைய நண்பன் கெட்ட கொக்கரக்கோ இருக்கிறானே அவனை மாதிரி நண்பர்களே எனக்குத் தேவை என்று சொல்லி, சமீபத்தில் நடந்த இன்ஷூரன்ஸ் விஷயத்தை விளக்கினேன். 

அப்போது, தாய்லாந்துக்கு இன்ஷூரன்ஸ் தேவையில்லை என்று சொல்லி ஸேம் ஸைடு கோல் போட்டான் கிருஷ்ணன்.  அடப்பாவி, எங்கெங்கிருந்தோ வந்து சிக்கல் பண்ணுகிறீர்களேடா என்று நினைத்துக் கொண்டேன்.  தாய்லாந்தில் தேவையில்லை என்றால் என்ன?  ஐரோப்பாவில் தேவைதானே? இன்னொன்று இண்டர்நேஷனல் டிராவல் இன்ஷூரன்ஸ் எடுப்பது , அந்த நாட்டு சட்டத்திற்காக அல்ல; நம்முடைய – சொல்லப் போனால் நம் கூட வருபவர்களின் சௌகரியத்துக்காகத்தான்.  உதாரணமாக, நான் ரவி என்ற நண்பருடன் தென்னமெரிக்கா சென்ற போது பெரூவின் குஸ்கோவில் உயரம் பதினோராயிரம் அடிக்கும் மேலே போய் விட்டதால் எனக்கு மூச்சு விட முடியாமல் போனது.  அலுமினியப் பெட்டியில்தான் ஊர் திரும்புவோம் என்று நினைத்தேன்.  கூட வந்த ரவி இளைஞன்.  பெரூவின் பிரசித்தி பெற்ற பிஸ்கோவை நாலைந்து ரவுண்ட் அடித்து விட்டு மட்டையாகிக் கிடக்கிறான்.  இன்ஷூர் செய்திருந்த்தால் தப்பினான்.  இல்லாவிட்டால் என் சடலத்தை உலகின் அந்த மூலையிலிருந்து இந்த மூலை வரை கொண்டு வருவதற்கு எவ்வளவு செலவு ஆகும்?  சரி, அவ்வளவு தூரம் போகாவிட்டாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் அதற்கு வேறு லட்சக்கணக்கில் ஆகியிருக்கும்.  இன்ஷூரன்ஸ் இருந்தால் பிரச்சினை இல்லை அல்லவா?  அது மட்டும் அல்ல, விமானம் ரத்து செய்யப்பட்டால் கூட அதற்கான நஷ்ட ஈட்டை இன்ஷூரன்ஸ் மூலம் பெற்று விடலாம்.  அதனால், தாய்லாந்துக்கு இன்ஷூரன்ஸ் இல்லாமல் போக முடியுமா இல்லையா என்பது அல்ல பிரச்சினை.  இதற்காக கொக்கரக்கோவை அணுகாமல் வேறொரு நண்பரை அணுகியதால் எத்தனை சிக்கல்?  மேலும், என் பத்தினிக்குப் பிடிக்கவில்லை என்பதால் நான் இன்னொருத்தனை நம்பி பாழுங்கிணற்றில் விழ வேண்டுமா?  என்னடா நியாயம் இது?

வீட்டுக்கு வந்ததும் நீதி விசாரணை.  மீண்டும் மிக மிக மிக மிக மிக மிக மிகக் கடுமையான வசைகள், சாபங்கள்.  கொக்கரக்கோவுக்கு.  நான் மாரிஸ் ஓட்டலில் கொக்கரக்கோவின் பேரை எடுத்தது பத்தினிக்குப் பிடிக்கவில்லை.

ஏன் நீ நம் புத்திரனிடம் கேட்டிருக்கலாமே?

அடக் கடவுளே, அவன் பெரும்பாலான சமயத்தில் தன்னுடைய அலுவலக வேலையில் மூழ்கிக் கிடப்பவன்.  அவனைப் பிடிப்பதே குதிரைக் கொம்பு. அவனிடம் போய் யார் கேட்பது?  கையில் வெண்ணையை வைத்துக் கொண்டு எவனாவது நெய்க்கு அலைவானா?  ஏன் சந்தானத்தையும் கிருஷ்ணனையும் கேட்க வேண்டியதுதானே?

கேட்டால் நான் உருப்படவே முடியாது.  அது மட்டும் அல்ல, என் மனதில் ஒரு தீர்மானமான எண்ணம் இருக்கிறது.  என்னவென்றால், என் பத்தினியின் பேச்சைக் கேட்டு நடந்தால் நான் இந்நேரம் எம்.ஜி. சுரேஷ் மாதிரிதான் ஆகியிருப்பேன்.  ஓ, உங்களுக்கு எம்.ஜி. சுரேஷ் என்றால் யார் என்று தெரியாது.  அப்படியானால் சினிமாவிலிருந்து உதாரணம் தருகிறேன்.  நான் இப்போது சிவாஜி, எம்ஜியார் என்ற இரட்டையரில் ஒருவனாக இருக்கிறேன்.  அல்லது, கமல், ரஜினி இரட்டையரில் ஒருவன் என்றும் வைத்துக் கொள்ளலாம்.  பத்தினியின் பேச்சைக் கேட்டு நடந்தால் நான் பாண்டியன் மாதிரிதான் ஆகியிருப்பேன். அந்தப் பெயரில் ஒரு நடிகர் இருந்தார் தெரியும்தானே? ம்… யோசித்தால்தான் ஞாபகம் வரும்.  மண்ணுக்கேத்த பொண்ணு, நவகிரஹ நாயகி போன்ற காவியங்களில் நடித்தவர். 

நீங்கள் பெண்ணுரிமை பேசுபவராக இருந்தால் நான் இப்போது நம்முடைய பட்டிமன்றப் பேச்சாளர்கள் தத்தம் மனைவியர் பற்றி கிண்டலும் நக்கலுமாகப் பேசி கைதட்டல் பெறுகிறார்களே, அதுபோலவே நானும் என் பத்தினியை மட்டம் தட்டுகிறேன் என்று எண்ணலாம். இல்லை. சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தை உங்களுக்குச் சொல்கிறேன்.

என்னைப் பற்றிய ஆவணப் படத்துக்காக எங்கள் குழு தாய்லாந்து செல்கிறது.  மேகாங் நதி இல்லாமல் என் வாழ்க்கை எப்படி பதிவு செய்யப்படலாம் என்று சொன்னேன் ஒருநாள். ரஷ்ய இலக்கியத்திலேயே வளர்ந்த ஒரு தமிழ் எழுத்தாளருக்கு செய்ண்ட் பீட்டர்ஸ்பர்க் ஒரு புனித நகரம் இல்லையா, அதுபோல.  எனக்கு சைக்கிள் கூட ஓட்டத் தெரியாது.  அப்புறம் எங்கே பைக் ஓட்டுவது?  ஆனால் மேகாங் நதித் தீரத்தில் படப்பிடிப்பு நடத்த வேண்டுமானால் பைக் ஓட்டத் தெரிந்த இரண்டு பேர் தேவை.  கொக்கரக்கோவின் பைக்கில் நான் தொற்றிக் கொள்வேன்.  கேமராவில் வேலை செய்யும் முருகவேளுக்குக் கார்தான் ஓட்டத் தெரியும்.  பைக் தெரியாது.  அப்படியே தெரிந்தாலும் பைக் ஓட்டிக் கொண்டே எப்படி படம் பிடிப்பது?  ஆக, பைக் ஓட்டத் தெரிந்த ஒரு ஆள் வேண்டும்.  வினித்துக்கு விடுப்பு கிடைக்கவில்லை.  அதுவும் நல்லதுக்குத்தான் என்று நினைத்துக் கொண்டேன்.  அவன் ஓட்டினால் ஹெல்மட் போடாமல் போலீஸிடம் மாட்டுவான்.  அவன் பின்னால் இருப்பதால் நாமும் குற்றவாளியாக நிற்க வேண்டும்.  இல்லாவிட்டால் பைக்கை எதிலாவது மோதுவான், மண்ணில் சரிப்பான்.  எதாவது ஆகும்.  இத்தனைக்கும் அவன் மதுவைத் தொட்டது கூட இல்லை. 

பைக் ஓட்டத் தெரிந்த வேறு யாரைப் பிடிப்பது?  இப்படி வினித்திடமோ யாரிடமோ பேசிக் கொண்டிருந்தேன்.  நான் பேசுவது அனைத்தையும் மிகத் தீவிரமாக கவனித்துக் கொண்டிருக்கும் பத்தினி வேகவேகமாக என்னிடம் வந்தாள்.  இருபத்து நாலு மணி நேரமும் பத்தினியின் நினைப்பு என்னைப் பற்றித்தான் என்பதை இப்போதாவது நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று உங்களை மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.  இவனுக்கு ஒன்றும் தெரியாது, இவன் ஏமாந்து விடுவான், இவனை இவன் நண்பர்களே ஏமாற்றி விடுவார்கள், இவனை நாம்தான் காப்பாற்றியாக வேண்டும், இவன் மேல் உண்மையான அன்பும் அக்கறையும் கரிசனமும் கொண்டிருக்கும் ஒரே ஜீவன் நாம்தான், மற்றவர்களெல்லாம் இவனைப் பயன்படுத்தி மேலே போய் விடலாம் என்ற கெட்ட எண்ணத்தோடு பழகிக் கொண்டிருக்கிறார்கள், ஆனால் நாமோ இவனைக் காப்பாற்றுவதற்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கும் என் தர்ம பத்தினிக்கு என்னுடைய இந்த பைக் பிரச்சினையைத் தீர்க்க வேண்டுமென்று அன்றைய தினம் ஆவேசமே வந்து விட்டது.

“இதுக்குப் போய் ஏம்ப்பா இத்தனை விசனப்படுகிறாய்?  நம் கதிர் இருக்கிறானே, அவனுக்கு பைக் ஓட்டத் தெரியுமே?  அவனை அழைத்துக் கொண்டு போயேன்?”

சொன்னால் ரொம்பத் தற்புகழ்ச்சி அடித்துக் கொள்கிறேன் என்பீர்கள்.  என்னை மாதிரி ஒரு பொறுமைசாலி இந்த ஞாலத்திலேயே கிடையாது தோழர்களே!  திடீரென்று நான் தோழர்களே, நண்பர்களே என்று அடிக்கடி சொல்கிறேன் என்று தோன்றுகிறது.  விஷ்ணுபுரம் விருது விழாவில் வண்ணதாசன் பார்வையாளர்களைப் பார்த்து நண்பர்களே, தோழர்களே என்று அடிக்கடி நாத்தழுதழுக்க விளித்தது என் மனதைத் தொட்டு விட்டது.  காம்ரேடுகளால் தொட முடியாததை வண்ணதாசன் தொட்டு விட்டார்.    

உங்களிடமிருந்து பெற்ற வார்த்தைகளை உங்களுக்கே தருகிறேன் தோழர்களே!

இப்படி வண்ணதாசன் சொன்னபோது நானும்தான் மனம் கனிந்து போனேன்.

அப்புறம்தான் கிளம்பினான் கடவுள்.  ஹே!  பொறாமை, பேராசை, நயவஞ்சகம், வன்மம், கொடூரம், பொய், பித்தலாட்டம், பிள்ளைப் பாசம், ஏமாற்று வேலை, சுயநலம் போன்ற கச்சடாக்களால் நிரம்பி வழியும் இந்த அற்பப் பதர்களிடமிருந்து பெற்றதையா நான் இவர்களுக்குத் தருகிறேன்?  ஏ மானிடரே, கடவுளிடமிருந்து பெற்றதை நான் உங்களுக்குத் தருகிறேன் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்!  அதிர்ஷ்டசாலிகள் இதைப் பெற்றுக் கொள்கிறார்கள்.  அதிர்ஷ்டமில்லாதவர்கள் விலகிப் போகிறார்கள். 

கடவுள் என்றதும் விநாயகர், முருகர், சிவன், பெருமாள், அம்பாள், கர்த்தர், அல்லாஹ் என்றா நினைக்கிறீர்கள்? 

இல்லை. 

பூனைகளின் முத்தத்திலிருந்தும், நாய்களின் ஊளையிலிருந்தும், யானைகளிடமிருந்தும் முதலைகளிடமிருந்தும் மற்றும் இன்னோரன்ன பிராணிகளிடமிருந்தும், விருட்சங்களிடமிருந்தும், மழைத் துளிகளிலிருந்தும், இடியிலிருந்தும், மின்னலிலிருந்தும், காற்றிலிருந்தும், மலைகளிலிருந்தும், கடலிலிருந்தும், நதியிலிருந்தும், தடாகங்களிலிருந்தும், நட்சத்திரங்களிடமிருந்தும், நிலவிடமிருந்தும், சூரியனிடமிருந்தும், கோள்களிடமிருந்தும், புழுக்களிலிருந்தும், வண்ணத்துப் பூச்சிகளிலிருந்தும், பட்சிகளிலிருந்தும், இருளிலிருந்தும், வெளிச்சத்திலிருந்தும், மணலிலிருந்தும், கற்களிலிருந்தும், புற்களிலிருந்தும், அக்கினியிலிருந்தும், சாம்பலிலிருந்தும் நான் என் சொற்களைப் பெறுகிறேன்.  பெற்று உங்களுக்குத் தருகிறேன்.

சரி, அதை விடுங்கள், வண்ணதாசன் என்றதும் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு விட்டேன்.  வண்ணதாசனுக்கு உணர்ச்சிவசப்படாவிட்டால் நீங்கள் என்ன இலக்கியவாதி?  போகட்டும்.  என் பத்தினி சொன்னதைக் கேட்டீர்களா?  அந்தப் பேச்சைக் கேட்டு எவனாவது உருப்படுவான்?  யார் தெரியுமா அந்தக் கதிர்?  என் வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண் பூங்கோதையின் தம்பி.  எட்டாம் கிளாஸ் ஃபெயில்.  ஆட்டோ ஓட்டுகிறான்.  ங்கொய்யால… அந்தக் கதிரும் நானும் கொக்கரக்கோவும் முருகவேளும் தாய்லாந்து செல்ல வேண்டும். 

ஆணாதிக்க மனோபாவத்தோடு பத்தினியை ஒரு முறை முறைத்தேன்.  சரி, ஏதோ தவறு நடந்திருக்கிறது என்று புரிந்து கொண்டு (என்ன தவறு என்று அவளுக்குப் புரிந்திருக்காது) “சரி, இன்னொரு ஏற்பாடு செய்கிறேன்” என்று என் புத்திரனுக்கு ஃபோன் போட்டாள்.  விஷயத்தைச் சொன்னாள்.  ”நீ போகிறாயா?  இல்லாவிட்டால், உன் நண்பர்கள் யாராவது போய் அப்பாவுக்கு உதவி செய்வார்களா?  யோசித்து சொல்.”

பத்தினியின் ஒரே நோக்கம் என்னவென்றால், பைக் ஓட்டத் தெரிந்த ஆள் வேண்டும் என்று இவன் கொக்கரக்கோவைப் பிடித்து விட்டால் என்ன ஆவது, அவன் இவனுக்கு மதுவை ஊற்றி ஊற்றிக் கொடுத்து இவனைக் கொன்று விடுவான். 

ஆக, பத்தினியின் இப்போதைய பிரச்சினை பைக் அல்ல.  தன் உயிருக்கு உயிரான, இருபத்தோராம் நூற்றாண்டின் பாரதியான (இது தினந்தோறும் அவள் என்னிடம் சொல்லும் வார்த்தை) என் உயிர்தான் ஆபத்தில் இருக்கிறது.  இப்போது என் உயிரைக் காப்பாற்றியாக வேண்டும்.   ஒன்றுமில்லை தோழர்களே, நண்பர்களே, என் பத்தினி என்னை பாரதியாகவும் தன்னை செல்லம்மாவாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறாள்.    

பிறகு பத்தினி வீட்டில் இல்லாத நேரத்தில் புத்திரனுக்கு ஃபோன் போட்டு “டேய், ங்கொம்மா ஒளர்றதையெல்லாம் மனசுல வச்சுக்காதடா, நான் தாய்லாந்தில் பிராத்தலுக்குப் போனால் என் மகனையுமாடா அழைச்சிக்கிட்டுப் போக முடியும்?” என்றேன்.  அவனும் “அதை நான் அப்போதே மறந்து விட்டேனே? நீங்கள் என்ன அதை இத்தனை சீரியஸாக எடுத்துக் கொண்டு விட்டீர்கள்?” என்று சிரித்தான்.       

இன்னொரு சம்பவம்.  நானும் பத்தினியும் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தோம்.  கண்களுக்கு அணியும் கண்ணாடி பற்றிய பேச்சு வந்தது.  உன் கண்ணாடி என்ன விலை என்று கேட்டாள்.  ஒன்றரை லட்சம் என்றேன்.  உடனே ஆட்டோக்காரரிடம் “ஏங்க ஆட்டோக்கார், நீங்க போட்டிருக்கிற கண்ணாடி எவ்ளோ விலை?” என்று கேட்டாள்.  அவர் நூறு ரூபாய் என்றதும் என் பக்கம் திரும்பி, “பாத்துக்கோ, அப்டித்தான் எளிமையா வாழணும், என்ன இலக்கியம் படிக்கிறியோ போ” என்றாள்.  நான் ஒன்றும் பதில் சொல்லவில்லை. 

சரி, கதைக்கு வருவோம்.  சமீபத்தில் இரண்டு முறை பத்தினியுடன் வெளியே சென்றேன்.  இரண்டுமே சில மணி நேரங்கள்தான்.  இந்த நிலையில் இரண்டு முழு தினங்கள் நடக்கும் விருது வழங்கும் விழாவில் என்னென்ன ஆகுமோ, எத்தனை வருடங்களுக்கு நீதி விசாரணையும் சாப மழையும் தொடருமோ?  நினைத்தாலே வயிறு கலங்குகிறது. 

உண்மையைச் சொன்னால், அந்த இரண்டு தினங்களும் என்னால் என் பத்தினியைத் திரும்பிப் பார்ப்பதற்குக் கூட நேரம் இருக்காது.  மட்டுமல்லாமல், இந்தக் கதையில் (?) குறிப்பிடப்படும் ஆவணப் படத்தை எப்படி அங்கே விழா மேடையில் திரையிடுவது?  என் வாழ்வே பாழாகி விடுமே?  ஏற்கனவே ஆவணப்படத்துக்குப் பேட்டி கொடு என்று கேட்ட போது, படத்தைப் பார்த்து விட்டுத்தான் பேட்டி கொடுப்பேன் என்று கூறியிருந்தாள் பத்தினி. 

ஏன்?

அதில் கொக்கரக்கோவின் பேட்டி வந்திருந்தால் நான் பேட்டி தர மாட்டேன்.

அட பகவானே! ஆவணப் படத்தை இயக்குபவனே கொக்கரக்கோதானே?

இந்த வினித் பயல் வேறு மூச்சுக்கு முந்நூறு முறை கொக்கரக்கோ கொக்கரக்கோ என்று நிரவிக் கொண்டிருக்கிறானா, அடுத்த முறை அவன் என் எதிரே வந்து கொக்கரக்கோ என்று சொன்னான், தீர்ந்தான். 

என்னம்மா இது?

ஆமா, அடிச்சிருவேன்.

கொக்கரக்கோவிடம் கேட்டேன், பேசாமல் நீங்கள் வரும் இடங்களையெல்லாம் நீக்கி விட்டு, இயக்கம் என்ற இடத்திலும் ஏதோ ஒரு பெயரைப் போட்டுக் காட்டி விடலாமா?

முதல் முறையாக கொக்கரக்கோ என்னிடம் கோபித்துக் கொண்டான். 

என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்?  நீங்களா இப்படிப் பேசுவது?  ஐநூறு பேர் குழுமியிருக்கும் இடத்தில் ஒரே ஒருவருக்காக பயந்து கொண்டு நாம் எடுத்த படத்தைக் கூறு போட்டு கச்சடாவாக்கியா கொடுக்க முடியும்?  இதற்காகவா மூன்று மாதங்கள் நாம் ஐந்தாறு பேர் கேமராவையும் தளவாடங்களையும் தூக்கிக் கொண்டு ஊர் ஊராய் அலைந்தோம்? இதுவரை இருபத்தைந்து லட்ச ரூபாய் செலவாகியிருக்கிறது.  உங்கள் காசும் நண்பர்கள் கொடுத்த காசும்தானே அது?  இப்படி ஒரு பித்துக்குளி ஆட்டம் ஆடுவதற்கா இத்தனை சிரமப்பட்டோம்?  இப்போது உங்கள் முன் இருக்கும் ஒரே சாய்ஸ் இதுதான்.  ஆவணப் படத்தை அந்தப் பார்வையாளர்கள் வேறோர் சமயத்தில் பார்த்துக் கொள்ளட்டும்.  விழா மேடையில் போட வேண்டாம். 

இதனால் எல்லாம் இதைப் படிக்கும் நீங்கள் யாவரும் என் பத்தினி பற்றி மனதுக்குள் நீதி விசாரணை நடத்தி அவளைப் போலவே அவளுக்குத் தண்டனை வழங்கி விடாதீர்கள்.  அவள் எனக்கு வழங்கும் அன்பில் எந்தப் பாதகமும் இல்லை.  பேரன்புதான் அது.  என்ன, தங்கக் கூண்டுக்குள் அடைத்து எனக்குப் பாலாபிஷேகமும், தேனாபிஷேகமும், மற்றும் இன்னோரன்ன அபிஷேகங்களும் பண்ணிக் கொண்டிருக்கிறாள். 

காலையில் எனக்கு அபிராமி அந்தாதி கேட்கப் பிடிக்கும் என்றேன் ஒருநாள்.

தினமும் அபிராமி அந்தாதி கேட்கத் தொடங்கியது வீட்டில்.

அம்பாளுக்கு விளக்கேற்றி புஷ்பாலங்காரம் செய்தால் எனக்குப் பிடிக்கும் என்றேன் ஒருநாள்.

தினமும் அம்பாளுக்குப் புஷ்பாலங்காரம் செய்து குத்துவிளக்கு ஏற்றி ஊதுபத்தியும் சாம்பிராணியுமாக கற்பூரம் ஏற்றி தீபாராதனை நடக்கிறது.    

எல்லாம் உனக்காகத்தான் செய்கிறேன் என்றாள்.

மீன் சந்தைக்குத் தானே போய் மீன் வாங்கி, கருவாடு போட்டு மணக்க மணக்கக் குழம்பும் உண்டு.  இப்படி நூறு விஷயங்களைப் பட்டியல் இடலாம். 

இதோ இன்று எனக்கு ராம்ஜியுடன் ஒரு மீட்டிங் இருந்தது.  ஒரு முக்கியமான விஷயம் அவரோடு கலந்து ஆலோசிக்க வேண்டும்.  அவரிடமும் சொல்லி விட்டேன்.  அவருடைய எல்லா சந்திப்புகளையும் ரத்து செய்து விட்டு என்னைச் சந்திக்க இருந்தார்.  பத்தினி அனுமதி தரவில்லை.  நீ பத்து நாள் தாய்லாந்து செல்கிறாய்.  நீ இல்லாமல் நான் எப்படித் தனியாக இருப்பேன்?  இன்று உன்னை எங்கேயும் போக விட மாட்டேன்.

ராம்ஜிக்கு ஃபோன் செய்து அனுமதி கிடைக்கவில்லை, ஸாரி என்றேன்.  நாளையும் சந்திக்க இயலாது.  இன்றைக்கே முடியவில்லை என்கிற போது நாளை எப்படி அனுமதி கிடைக்கும்?  நாளை மறுநாள் அதிகாலையிலேயே கிளம்புகிறேனே?

இத்தனை காளவாய்க் கதைக்கு இடையிலும் என் பத்தினி அருகில் இருந்தால்தான் என்னால் அதிகமாக எழுத முடிகிறது.  இதற்கு நீங்கள் மார்க்கி தெ ஸாத்-இன் கதைக்குப் போக வேண்டும்.  அவன் சிறையில் அடைபட்டிருந்ததால்தான் அவ்வளவு எழுதினான்.  உலகில் அதிகம் எழுதிய எழுத்தாளர்களில் அவன் ஒருத்தன்.  அவன் எழுதி நமக்கு இப்போது கிடைப்பதை விடப் பல மடங்கு அதிகமாக அவன் எழுதிய தாள்கள் எரிக்கப்பட்டன.  அவனை மட்டும் சிறையில் அடைக்காமல் மாளிகையிலேயே வாழ விட்டிருந்தால் அவன் இத்தனை எழுதியிருக்க மாட்டான். 

இந்த சுண்ணாம்புக் காளவாயில் வாழ்வதால்தான் என்னால் இத்தனை எழுத முடிகிறது.  பத்தினி இல்லாவிட்டால் காளவாயும் இல்லை, பனிச்சுவரும் இல்லை.  ஜாலியோ ஜாலி.  

***  

இன்று காலை விஷ்ணுபுரம் வட்டத்தைச் சேர்ந்த மீனாம்பிகை ஃபோன் செய்து, கோவைக்கு எத்தனை டிக்கட் போட வேண்டும் என்று கேட்டார்.

ஒன்று என்றேன்.