எனது வாழ்வைக் கவிதையாய் மாற்றினாய்!

மீள் பிரசுரம்

ஜூலை 31, 2004

இளம் பிராயத்தில் நான் வாசித்த ஒரு புத்தகமே என் வாழ்வின் போக்கை முழு முற்றாகத் திசை திருப்புவதற்கும் காரணமாக அமைந்தது. அந்தப் புத்தகம், சேகுவாரா எழுதிய பொலிவிய நாட்குறிப்புகள். அதன் பிறகு, லத்தீன் அமெரிக்கா சம்பந்தப்பட்ட எதுவாக இருந்தாலும் அதன் மீது தீராக் காதல்கொண்டு அதிலேயே என்னை ஆழ்த்திக்கொள்ள ஆரம்பித்தேன். லத்தீன் அமெரிக்க சினிமா, அரசியல், விடுதலை இறையியல், கால்பந்து, ஸல்ஸா, ஸான்டினிஸ்டா, மெரெங்கே என்று அந்தப் பட்டியல் வெகு நீளமானது. அந்தத் தேடலில் எனக்குக் கிடைத்த ஒரு புதையல், பாப்லோ நெரூதா. உலகில் மிக அதிகமான மக்களால் வாசிக்கப்பட்ட கவிஞன் என்ற பெயர் பெற்ற நெரூதா பிறந்து நுாறு ஆண்டுகள் ஆகியிருப்பதால் (பிறப்பு: ஜூலை 12, 1904) அவரைப் பற்றி பலரும் எழுதியிருப்பதைப் படித்து எனக்கும் நெரூதாவுக்குமான உறவைப் பற்றி யோசிக்கலானேன்.

“இருபதாம் நுாற்றாண்டின் இணையற்ற கவிஞன் நெரூதா,” என்றார் கார்ஸியா மார்க்வெஸ். உண்மைதான். நெரூதாவின் கவிதை வெறும் கவிதை மட்டும் அல்ல. அது வாழ்க்கை பற்றிய புதிய புரிதல்களை எனக்குக் கற்றுத் தந்தது. அதுவரை கவிதையே எழுதியறியாத நான் கவிதை எழுதத் துவங்கினேன். காதலித்தே அறிந்திராத நான் காதலிக்கத் துவங்கினேன். நெரூதாவின் கவிதைகளில் திளைத்த யாராக இருந்தாலும் அவருக்கு இந்த அனுபவம் கிட்டும்.

நெரூதாவின் வாழ்வில் நடந்த ஒரு முக்கியமான சம்பவத்தை இங்கே நினைவு கூரலாம். நம்முடைய பெரும்பாலான கவிஞர்களைப் போல் செளகர்யமான உத்தியோகத்தில் அமர்ந்து கொண்டு ஒய்வு நேரத்தில் கவிதை எழுதியவர் அல்ல நெரூதா. நேரடியான அரசியல் போராட்டத்தோடு அவர் தன்னைப் பிணைத்துக்கொண்டவர். கவிதையை தனது ஆயுதமாகப் பயன்படுத்தியவர்.

நாற்பதுகளின் இறுதியில் சீலேயின் ஆட்சியாளர்களை அவர் கடுமையாக எதிர்த்ததால் அவர் அங்கே ஓராண்டுக் காலம் தலைமறைவாக வாழ நேர்ந்தது. பின்னர் சீலேவை விட்டு வெளியேறி ஐரோப்பிய தேசங்களில் சுற்றிய போது ஒரு முறை ஒரு சிறிய இத்தாலியத் தீவில் வாழ்ந்தார். அப்போது அவருக்குத் தபால் கொண்டுவந்து தரும் மாரியோ என்ற தபால்காரருக்கும் அவருக்கும் சினேகம் ஏற்பட்டது. இது பற்றி சீலேயின் மற்றொரு முக்கிய எழுத்தாளரான Antonio Skarmeta வின் El cartero de neruda (நெரூதாவின் தபால்காரன்) என்று ஒரு நாவல் எழுதியுள்ளார். (ஸ்கார்மேத்தாவின் l Dreamt The Snow Was Burning என்னைக் கவர்ந்த மற்றொரு அற்புதமான நாவல்.) நெரூதாவின் தபால்காரன் என்ற நாவலை இத்தாலிய நடிகரான த்ராய்ஸி (Troisi) 1994-ஆம் ஆண்டு il Postino (தபால்காரன்) என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார். துரதிர்ஷ்டவசமாக அப்படத் தயாரிப்பின் போது த்ராய்ஸிக்கு இருதய நோய் வந்து விட்டதால் அவரது நண்பரான Michael Radford-ஐ இயக்குமாறு செய்தார். நெரூதாவாக வேறொரு நடிகரும், தபால்காரன் மாரியோவாக த்ராய்ஸியும் நடித்தனர். மற்றொரு விபரம்: படம் எடுத்து முடிந்த அதே தினம் த்ராய்ஸி இருதய நோயால் இறந்து விட்டார். அப்போது அவரது வயது 40. நெரூதாவைப் பற்றி எழுதப் புகுந்த நான் தபால்காரன் என்ற அந்த இத்தாலியப் படம் பற்றி எழுதுவதன் காரணம் என்னவெனில் – ஒரு கட்டத்தில் நானும் மாரியோ என்ற அந்தத் தபால்காரனைப் போலவே கூச்ச சுபாவமுள்ளவனாகவும், வாழ்க்கையை மிகவும் தட்டையாகப் புரிந்துகொண்டவனாகவும் இருந்தேன். ஆனால், நெரூதாவின் கவிதையுலகில் நுழைந்த பின்பு நடந்தது ஒரு மேஜிக். மாரியோவுக்கு, தான் பிறந்து வளர்ந்த ஒரு சாதாரண மீன் பிடிக்கும் கடற்கரைக் கிராமம், நெரூதாவைச் சந்தித்த பிறகு ஒர் அதியற்புதக் கவிதையாக மாறுகிறது.

அச்சமயத்தில் அவன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். ஆனால், அவளிடம் தன் காதலை வெளிப்படுத்தத் தெரியவில்லை. தன்னுடைய பிரிய சிநேகிதராகிவிட்ட நெரூதாவின் கவிதைகளை வாசிக்கிறான். உலகமே வேறு விதமாகத் தெரிகிறது. அந்தப் பெண்ணிடம் என்னவெல்லாம் சொல்ல நினைத்தானோ அதையெல்லாம் இந்த மனிதரால் எப்படி எழுத முடிந்தது? அந்தக் கவிதைகளையே கடிதமாக எழுதி அப்பெண்ணிடம் கொடுக்க, அவளோ உருகிப் போய் விடுகிறாள். இது இலக்கியத் திருட்டு அல்லவா. “சே… சே… யார் சொன்னது?” என்று கேட்கிறான் மாரியோ. “இந்தக் கவிதை ஒன்றும் இதை எழுதிய கவிஞனுக்குச் சொந்தமானதல்ல. யாருக்குத் தேவையோ அவனுக்கே இது சொந்தம்.”

***

காதல் மட்டுமல்ல, அரசியலிலும் தீவிரமாக ஈடுபட்டார் நெரூதா. 1970-ஆம் ஆண்டு சீலேயின் அதிபர் பதவிக்கு அவரது பெயர் முன்மொழியப்பட்டது. ஆனால், அவரோ தனது நண்பர் அயெந்தேயை சுட்டிக் காட்டினார். அந்தத் தேர்தலில் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார், நெரூதாவைப் போலவே சீலேயில் பிரபலமான, டாக்டர் அயெந்தே. அதே ஆண்டு நெரூதாவை சீலேயின் துாதராக ஃப்ரான்ஸுக்கு அனுப்பி வைக்கிறார் அயெந்தே. ஆனால், உடல்நலக் குறைவினால் 1972-இலேயே நெரூதா சீலே திரும்ப நேர்கிறது. அயெந்தேயின் இடதுசாரிக் கொள்கைகள் நாட்டின் பெரு முதலாளிகளுக்கும் ராணுவ அதிகாரிகளுக்கும் பிடிக்கவில்லை. நாளுக்கு நாள் எதிர்ப்பு வலுத்துக்கொண்டே போகிறது. 1973-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி ஜெனரல் பினோசெத்தின் ராணுவத்தினால் அதிபர் மாளிகை தகர்க்கப்பட்டு டாக்டர் அயெந்தே கொல்லப்படுகிறார். 

(இது பற்றிய இரண்டு முக்கியமான ஆவணங்கள்:

1. Patricio Guzman இயக்கிய ஆவணப் படமான Battle of Chile – மூன்று பாகங்கள். 

2. நெரூதாவின் டெஸ்டிமனி.) 

அயெந்தே கொல்லப்பட்டவுடன் பினோசெத்தின் ராணுவம் நெரூதாவின் வீட்டுக்குள் நுழைந்தது. ஆயுதங்களைத் தேடுகிறோம் என்று சொல்லிக்கொண்டு உள்ளே வந்த அவர்களிடம் நெரூதா கூறினார், “என்னிடம் உள்ள ஒரே ஆயுதம், என் எழுத்து.”

அயெந்தே கொல்லப்பட்ட பனிரண்டாவது தினம் நெரூதா இறந்து போனார். ஏற்கனவே லுக்கீமியா நோயினால் பீடிக்கப்பட்டிருந்த அவரை அயெந்தேயின் மரணம் வெகுவாக பாதித்தது. அந்தத் துக்கமே அவர் மரணத்தைத் துரிதப்படுத்தியது எனலாம். 

இந்தச் சம்பவங்கள் நடப்பதற்கு இரண்டு ஆண்டுகள் முன்புதான் நெரூதாவுக்கு நோபல் பரிசு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. நெரூதா இறந்ததும் பினோசெத்தின் ராணுவம் நெரூதாவின் புத்தகங்களையெல்லாம் அவரது தோட்டத்தில் குவியலாகப் போட்டுக் கொளுத்தியது. பின்னர், 17 ஆண்டுகள் – 1990-இல் பினோசெத் ஆட்சி முடிவுக்கு வரும் வரை – நெரூதாவின் இல்லம் தடை செய்யப் பட்ட இடமாகவே அறிவிக்கப்பட்டிருந்தது. யாரும் அந்த வீட்டுக்குள் செல்லவோ, புகைப்படம் எடுக்கவோ முடியாத நிலையில் ஒரே ஒருவர் மட்டுமே அவ்வீட்டுக்குள் நுழைந்தார் – அதுவும் பினோசெத்தின் அனுமதியுடனேயே. நுழைந்ததோடு மட்டுமல்ல, அந்த வீட்டை சினிமாவாகவும் எடுத்தார். அதற்கென்று தன் சட்டைப் பைக்குள் மிகச் சிறிய கேமரா ஒன்றை ரகசியமாக மறைத்து வைத்திருந்தார் அவர்.

இரண்டு மாத காலம் சீலே முழுவதும் பயணம் செய்து ஆவணப் படம் எடுத்தார். அந்த மனிதர் – பினோசெத்தின் அந்தரங்க அறை உட்பட. மொத்தம் ஒரு லட்சம் அடி வந்தது அந்த ஆவணப்படம். பின்னர் அதைத் தொகுத்து தொலைக்காட்சிக்காக நான்கு மணி நேரப் படமாகவும், இரண்டு மணி நேர ஆவணப் படமாகவும் வெளியிட்டார். அவர் லத்தீன் அமெரிக்காவின் பிரசித்த பெற்ற இயக்குனர் – Miguel Littin.

பினோசெத் ஆட்சியைப் பிடித்ததும் 5000 பேரை சீலேவுக்குள் நுழையக் கூடாது என தடை விதித்திருந்தார். அந்த 5000 பேரில் மிகுவெல் லித்தினும் ஒருவர். மீறி உள்ளே நுழைந்தால் மரண தண்டனை அல்லது சிறை. எனவே, 1985-ஆம் ஆண்டு, உருகுவாய் தேசத்து பிசினஸ்மேனைப் போல் தன்னை மாற்றிக்கொண்டு, போலிச்சான்றிதழுடன் சீலேவுக்குள் நுழைந்தார் லித்தின். ஒப்பனையின் மூலம் தனது முக அமைப்பை மாற்றிக் கொண்டதோடு, உச்சரிப்பில் கூட உருகுவாய் ஸ்பானிஷாக இருக்குமாறு ஆக்கிக் கொண்டார்.

பின்னர், சீலேவிலிருந்து ‘சேதமடையாமல்’ மெக்ஸிகோ திரும்பியதும் இந்த ரகசியப் பயணம் பற்றி அவர் தனது நண்பர் கார்ஸியா மார்க்வெஸிடம் விளக்கமாகச் சொல்ல, அதை மார்க்வெஸ் Clandestine in Chile என்ற ஒரு புத்தகமாக எழுதினார். அதில் நெரூதாவின் வீட்டை லித்தின் வர்ணிக்கும் இடம் சுவாரசியமானது. நெரூதாவுக்கு பொருட்களைச் சேகரிப்பது ஒரு பொழுதுபோக்காக இருந்து வந்தது. கிளிஞ்சல், ஒடு, அந்துப்பூச்சி (moth), வண்ணத்துப் பூச்சி, பீங்கான் பாத்திரங்கள் என்று எதையெல்லாம் விசேஷமானது என நினைத்தாரோ அதையெல்லாம் வாங்கித் தன் வீட்டில் சேகரித்து வைப்பது அவர் வழக்கம். நெரூதாவுக்கு, உலகின் பல நாடுகளில் சொந்த வீடுகள் இருந்தன. அப்படி ஒரு வீட்டின் மையப் பகுதியில் ஒரு குதிரையையே பாடம் பண்ணி வைத்திருந்தார் நெரூதா. இவரது சேகரிப்புகளைப் பார்த்துவிட்டு ஒரு நண்பர் குறிப்பிட்டது: “இந்த உலகிலேயே இவ்வளவு அதிகமான குப்பைகளை ஒரே கூரையின் கீழ் பார்ப்பது இதுவே எனக்கு முதல் முறை!”

இப்படி குப்பைப் பொருட்களையெல்லாம் சேர்ப்பது துர்வினையைக் கொண்டுவரும், என்று நெரூதாவிடம் சில நண்பர்கள் கூறியபோது, அவர் அளித்த பதில்: “அந்த துர்வினைக்கு கவிதைதான் முறிவு.”

***

சீலேயின் வால்பரைஸோ நகருக்கு அருகிலுள்ள Isla Negra என்ற கடற்கரை கிராமத்திலுள்ள நெரூதாவின் ஒரு வீடுதான் உலகெங்கிலுமுள்ள காதலர்களின் புனித ஸ்தலமாகக் கருதப்படுகிறது. நெரூதா தனது இருபதாவது வயதில் எழுதிய இருபது காதல் கவிதைகள் என்ற புத்தகத்தோடு இங்கு வரும் காதலர்கள் இந்த வீட்டின் சுற்றுச்சுவர்களில் நெரூதாவின் கவிதை வரிகளையும், தங்கள் நன்றியையும் எழுதிச் செல்கின்றனர். (“இதையெல்லாம் சரியானபடி சேர்த்தால் நெரூதாவின் 40 கவிதைத் தொகுதிகளும் இதில் கிடைத்துவிடும் – லித்தின் / மார்க்வெஸ்.) ஒன்றுக்கு மேல் ஒன்றாக எழுதி, எழுதி அந்தச் சுவரில் இப்போது ஒரு துளி இடம்கூட இல்லை என்கிறார் லித்தின். 

அந்த வாசகங்களில் என்னைக் கவர்ந்த ஒன்று: Generals: Love never dies. Allende and Neruda live. One minute of darkness will not make us blind.

இதை எழுதிய கைகள் யாருடையவை என லித்தினுக்கும் தெரியாது, நமக்கும் தெரியாது. லித்தின் இதைப் பார்த்து சரியாக 19 ஆண்டுகள் ஆகி விட்டன. பூகம்பங்கள் நிறைய வரக்கூடிய இடம் அது. இன்று அந்த வீடும், சுற்றுச் சுவரும், அதில் பதிந்த எழுத்துக்களும் உள்ளனவா என்று தெரியவில்லை. வாழ்வில் என்றேனும் ஒரு நாள் Isla Negra சென்று அந்த வீட்டுச் சுவரில் என்னுடைய வாசகத்தையும் பொறிக்க வேண்டும் என்பது என் கனவு. 

அந்த வாசகம்: “பாப்லோ, நீ எனது வாழ்வைக் கவிதையாய் மாற்றினாய்!”