சென்ற அத்தியாயத்தில் To Bury Our Fathers என்ற நாவலை எழுதியவர் எர்னஸ்தோ கார்டினால் என்று எழுதி விட்டேன். அந்த விவரம் தவறு. இந்தப் பிழையை சுட்டிக் காட்டிய அப்துல் ரஹ்மானுக்கு நன்றி. To Bury Our Fathers நாவலை எழுதியவர் செர்ஹியோ ராமிரெஸ் (Sergio Ramirez). இந்த்த் தவறிலிருந்தே எனக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் உள்ள சம்பந்த்த்தை ஒருவர் புரிந்து கொள்ள முடியும். செர்ஹியோ ராமிரஸ் நிகாராகுவாவின் ஸாந்தினிஸ்த்தாக்களைச் சேர்ந்தவர். எழுத்தாளர். அவர் நிகாராகுவாவில் நடந்த ஸாந்தினிஸ்த்தா புரட்சியில் கலந்து கொண்டவர். தானியல் ஆர்த்தெகாவின் தலைமையில் ஏற்பட்ட ஸாந்தினிஸ்த்தா ஆட்சியின் போது உப ஜனாதிபதியாக பதவி வகித்தார். இதைத்தான் நான் தென்னமெரிக்க, மத்திய அமெரிக்க நாடுகளின் சிறப்பு அம்சமாகப் பார்க்கிறேன். உலகத்தின் எந்த மூலையிலும் இப்படி நடப்பதில்லை. ஃப்ரான்ஸ் உட்பட. ஃப்ரான்ஸில் புத்திஜீவிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் அந்த நாட்டின் அதிபரை விட அதிக மரியாதையும் மதிப்பும் கொடுக்கப்பட்டாலும் (உதாரணம்: சார்த்தர், ஃபூக்கோ, பிக்காஸோ) அதிபர் பதவியெல்லாம் கொடுக்கப்பட்ட்தில்லை.
சரி, செர்ஹியோ ராமிரெஸ் என்ற பெயர் எப்படி எர்னஸ்தோ கார்தினால் என்று மாறியது? எர்னஸ்தோ கார்தினால் நிகாராகுவாவைச் சேர்ந்த ஒரு பாதிரியார். புகழ் பெற்ற கவிஞர். ஒருமுறை ஒரு போப்பினால் தண்டிக்கப்பட்டு மற்றொரு போப்பினால் பழைய பதவி அளிக்கப்பட்டவர். இது எல்லாவற்றையும் விட முக்கியம், எர்னஸ்தோ கார்தினால் தானியல் ஆர்த்தெகாவின் மந்திரி சபையில் மந்திரியாக இருந்தவர். தமிழில் முன்பு ஒரு காலத்தில் இனி என்ற பெயரில் ஒரு இடைநிலைப் பத்திரிகை வந்த்து. க்ரியா ராமகிருஷ்ணன் நட்த்தினார். அதில் எர்னஸ்தோ கார்தினால் பற்றிய கட்டுரையும் கவிதைகளும் வந்திருந்தன.
செர்ஹியோ ராமிரெஸின் To Bury Our Fathers நாவலைப் படித்துப் பாருங்கள்.
இப்போது என்னுடைய பக்கெட் லிஸ்டில் நிகாராகுவாவும் சேர்ந்து விட்ட்து.
லத்தீன் அமெரிக்கா பற்றிய என் தேடலுக்குப் பெரும் உதவியாக இருந்த்து கூபாவிலிருந்து வந்து கொண்டிருந்த வாரப் பத்திரிகை Granma. டாப்ளாய்ட் சைஸில் இருக்கும்.
தென்னமெரிக்கர்களின் ஆரோக்கியம் பற்றியும் தொடர்ந்து பதிவு செய்து வருகிறேன். அங்கே உள்ள எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்களின் பிறப்பு பற்றி மட்டும் நாம் பார்த்தால் போதுமானது. செர்ஹியோ ராமிரெஸும் அப்படியே. 1942இல் பிறந்தவர். இப்போது வயது 80. தென்னமெரிக்கர்களின் வழக்கப்படி இன்னும் பதினைந்து ஆண்டுகள் இருந்து எழுதுவார்.
அதேதான் எர்னஸ்தோ கார்தினாலும். 1925இல் பிறந்தவர். 2020இல் மறைவு. 95 வயது வரை வாழ்ந்தார்.