ஜென்ரல் நாலட்ஜ்

சில ஆண்டுகளாக எலான் மஸ்க் என்ற பெயர் காதில் விழுந்து கொண்டே இருந்தது. நான் எப்போதும் வாசனைத் திரவியங்களின் ரசிகன் என்பது உலகறிந்தது. வாய்ப்பு கிடைக்கும்போது எலான் மஸ்கை வாங்கிப் பார்க்க வேண்டும் என்ற நினைப்பிலேயே இருந்தேன். நேற்றுதான் சீனியின் மணிப்பிரவாள நடையில் எழுதப்பட்ட கட்டுரையைப் படித்த போது (தூக்கம்) எலான் மஸ்க் என்பது ஒரு ஆளின் பெயர் என்பதை யூகிக்க முடிந்தது. ஆனாலும் எந்தத் துறை என்று தெரியவில்லை. கூகிளைப் பார்த்து ஜென்ரல் நாலட்ஜை இம்ப்ரூவ் (சீனியின் கட்டுரைகளை அடிக்கடி படிப்பதால் நேர்ந்த வினை!) பண்ணிக்கொள்ளவெல்லாம் நேரமில்லை. அடுத்த முறை சீனியைப் பார்க்கும்போது கேட்க வேண்டும்.

கைவசம் இருந்த ஷனால் 5 வாசனைத் திரவியம் தீர்ந்து விட்டது. யாராவது வாங்கிக் கொடுத்தால் நீங்கள் என்ன சொன்னாலும் கேட்பேன்.

***

நேற்று வினித்தை ப்ரூ ரூமில் சந்தித்தேன். ஒரு ஆண் மகனை ப்ரூ ரூமில் சந்தித்தது நேற்றுதான் முதல் முறை. அவர் டீட்டோட்டலர். நானும் வைன் அருந்தி விட்டு வீட்டுக்குப் போக முடியாது. பதினைந்து நாட்களாக ராப்பகலாக எழுதிக் கொண்டும் படித்துக் கொண்டும் இருந்தேன். மழை காரணமாக நடைப் பயிற்சிக்காகக் கூட வீட்டை விட்டு வெளியே போக முடியாமல் இருந்தேன். வினித்தின் நண்பரும் வந்திருந்தார். மூவரும் ப்ரூ ரூமில் காஃபி குடித்தது என் வாழ்வின் – வினித்தின் வாழ்வில் – அந்த நண்பரின் வாழ்வில் நிகழ்ந்த மகத்தான துரதிர்ஷ்ட தருணங்களில் ஒன்று. பின்னே என்ன? மூன்று தடிமாடுகள் சேர்ந்து ப்ரூ ரூமுக்குப் போய் காஃபி குடிப்பதைப் போன்ற அசிங்கம் வேறு உண்டா? எனக்கே ரொம்பப் பாவமாகப் போய் புக்கட்டில் எடுத்த காணொலிகளைக் காண்பித்தேன். வெறுப்பு ஜாஸ்தியாகி விட்டது என்றார் வினித்.

நேற்றைய ப்ரூ ரூம் சம்பவங்களை ஒரு கதையாக எழுதலாம்.