தூக்கம்

தூக்கம் பற்றி ஜெமோ மற்றும் சாரு எழுதிய கட்டுரைகளை வாசித்தேன். தூக்கத்தில் கூட இரண்டு ஆளுமைகளும் எதிரெதிர் துருவங்களில் தூங்கிக்கொண்டு இருக்கிறார்கள்

தூக்கம் என்பது புணர்ச்சியைப்போல பர்ஸனலான ஒன்று. இன்னும் கேட்டால் புணர்ச்சியை விட ரொம்ப பர்ஸனலானது. புணர்ச்சிக்கு இன்னொருவர் தேவையல்லவா ?

நான் இப்படித்தான் மேட்டர் செய்வேன் , அதனால் எல்லோரும் இப்படி மேட்டர் செய்வதுதான் சிறந்தது என்று எப்படி கூற முடியாதோ , அதே போல இப்படி தூங்குவதுதான் சிறந்தது என்று கூற முடியாது , கூறக்கூடாது. இதுதான் பர்ஃபெக்ட் ஸ்லீப் என்றெல்லாம் ஒன்று கிடையாது. அது மட்டுமல்லாமல் , நன்கு தூங்கி எழுபவன் தான் சிறந்தவன் , அவனால் தான் சிறப்பான செயல்களை செய்ய முடியும் என்பதெல்லாம் பழங்கால பிதற்றல்கள். அதெல்லாம் வழக்கொழிந்து போன கதை.

எலான் மஸ்கை எடுத்துக்கொள்ளுங்கள். அந்த ஆசாமிக்கு தூக்கமே வராது. மாத்திரை போட்டு மூன்று மணி நேரம் தூங்குவார் எனத் தெரிகிறது. சமயங்களில் அதுவும் இல்லை. அவர் உலகின் முதல் பணக்காரர் என்பது கூட முக்கியமில்லை, அவரின் மூளை செயல்படும் விதம் , அவரின் அசாத்தியமான கண்டுபிடிப்புகள் தான் முக்கியம்.

சரி , ஜெமோ தூக்கத்தைப் பற்றி பேசிக்கொண்டு போகிறார் என்று பார்த்தால் , ஊருக்கெளச்சவன் பிள்ளையார் கோவி ஆண்டி போல , சம்மந்தம் இல்லாமல் குடிகாரர்கள் மீது பாய்கிறார். அவர்கள் மூளை ஃபிரஷாக இருக்காது , நியாபகம் வைத்துக்கொள்ள முடியாது , குடியை விட்டாலுமே மூளை பழைய ஃபிரஷ் நிலைக்கு போகாது அது இது என அடித்து விட்டிருக்கிறார். சுருக்கமாக சொல்வதென்றால் , அவரால் செய்ய முடிந்ததை வேறு யாராலும் செய்ய முடியாது. மேலும் குடிக்கும் பழக்கம் இருந்தால் செய்யவே முடியாது. எப்படி ? மருத்துவப் பட்டம் பெற்ற மூளை சிறப்பு நிபுணர் கூட இப்படிப் பேசமாட்டார். ஆனால் ஜெமோ பேசுவார். ஏனென்றால் ஜெமோ பல்கலை வித்தகர் மற்றும் பல துறை நிபுணர்.

மூளை மட்டும் ரொம்ப ஸ்பெஷல். அதை இன்னும் முழுதாக ஆராய்ந்து மொத்தமாகக் கண்டுபிடிக்க வில்லை. முடியாது என்றும் தோன்றுகிறது. அதுதான் மூளையின் சிறப்பு. அதை உபயோகித்தே , அதைப்பற்றி கண்டு பிடிக்க வேண்டும் !

சரி , அப்படி என்ன அதிசய செயலை ஜெமோ செய்கிறார் என்று பார்த்தால் ,ஒரு பேச்சாளர் பேசுவதை கண்ணை மூடிக்கொண்டு கேட்பாராம். பத்து வருடங்கள் கழித்து அதை அப்படியே ஒப்பிப்பாராம். அடப்பாவிகளா ? இதையெல்லாம் ஒரு எழுத்தாளர் ஏன் செய்ய வேண்டும் ? ஒரு உரையின் மையக்கருத்து நம் மூளையில் ஏறினால் பத்தாதா ? அந்த பேச்சு ஏதேனும் சிந்தனை மாற்றத்தை நமக்குள் கொண்டு வந்தால் பத்தாதா ? அது என்ன திருப்பாவை , திருவெம்பாவையா ? மனப்பாடம் செய்து ஒப்புவிக்க ?

ஆனாலும் அந்தக் கட்டுரையை வாசித்து விட்டு, நம்மால் இப்படி செய்ய முடியவில்லையே என பல குற்றவுணர்ச்சி அடையக்கூடும். குமையக்கூடியவர்கள்தானே இங்கே அதிகம் இருக்கிறார்கள் ?

இதைப்போன்ற குற்றவுணர்ச்சி ஏற்படுத்துவதுதான் “பர்ஃபக்ட்” ஆட்களின் வேலை. ஏ ..தோ பாரு , நான் எவ்ளோ பர்ஃபக்டா இருக்கேன். எல்லாத்தையும் பர்ஃபக்டா செய்வேன். உன்னால செய்ய முடியாது என கிலி உண்டாக்குவார்கள். இந்த ஒரு தூக்கக் கட்டுரையை வைத்து ஜெமோவை நான் பர்ஃகட் ஆட்களின் லிஸ்டில் சேர்க்கவில்லை. கடந்த பதினைந்து ஆண்டுகளாக அவர் தன்னைப்பற்றி பொதுவெளியில் எழுதிவந்த பல “பர்ஃபக்ட்” கட்டுரைகளை முன்வைத்தே சொல்கிறேன். இவர்களுக்கு தாங்கள் செய்வதுதான் “பர்ஃபக்ட்” . மற்றவர்களின் பழக்க வழக்கங்கள் எல்லாம் அல்பம். அதிலும் தான் சொல்லிக்கொள்வதோடு திருப்தி அடைய மாட்டார். நான் போய் பரிசோதனை செய்துகொண்டேன். அவர்கள் என்னை பர்ஃபக்ட் என்று சொல்லி விட்டார்கள் என நிறுவுவார்.

அவர் மாஸ்டர் ஹெல்த் செக்கப் செய்து கொண்டது முதல் , தூக்க செக்கப் செய்துகொண்டது வரை இப்படித்தான் பகிர்ந்து வருகிறார். ஜெமோ பர்ஃபக்ட் தரிசனங்கள்

1. நான் எப்படி பர்ஃபக்டா சாப்பிடறேன்…2. நான் எப்படி பர்ஃபக்டா பயணம் செய்யறேன்.3. நான் எப்படி பர்ஃப்க்டா வாசிக்கிறேன்.4. நான் எப்படி பர்ஃபக்டா எழுதறேன்.5. நான் எப்படி பர்ஃபக்டா ஃப்ரன்ட்ஷிப் மெயிண்டெயின் பண்றேன்.6. நான் எப்படி பர்ஃபக்டா காதலிச்சேன்…7. நான் எப்படி பர்ஃபக்டா குடுத்தனம் பண்றேன்.8. நான் எப்படி பர்ஃபக்டா புள்ள வளத்தேன்.9. நான் எப்படி பர்ஃபெக்டா விழா நடத்தறேன்…

இப்படியாக ஒரு நூறு “நான் எப்படி பர்ஃபக்டா “ கட்டுரைகள் எழுதியிருக்கிறார். கொஞ்சம் சீரியஸாக சொல்லவேண்டும் என்றால் இது ஃபாஸிஸத்தின் ஒரு கூறு.உதாரணமாக அதிகாலை தூங்கி எழுந்த அடுத்தக் கணம் மூளை சுறுசுறுப்பாக இருக்கும் , அப்போதுதான் எழுதுவேன் என்கிறார். இந்த வாக்கியத்தில் “எனக்கு” என்று போட்டுக்கொண்டிருந்தால் பிரச்சனை அல்ல. அதை பொதுமைப்படுத்துகிறார். ஜெமோவுக்குத் தெரிந்த ஏ ஆர் ரஹ்மானின் வேலை முறை அனைவருக்கும் தெரியும். அவரின் சாதனைகளும் தெரியும். அவர் என்ன எல்லோரையும் இரவில்தான் வேலை செய்ய வேண்டும் என்றா சொல்கிறார்?

உலகின் பல எழுத்தாளர்களும் குடிகாரர்கள். அதிலும் பலர் , கஞ்சா ,இன்ன பிற போதை பொருட்கள் உபயோகிக்கும் வழக்கம் உள்ளவர்கள். குறிப்பாக , இங்கு நமக்கு நன்கு அறிமுகமான தஸ்தாவஸ்கி , புக்கோவ்ஸ்கி எல்லாம் கொடூர குடிகாரர்கள். அவர்கள் படைப்புகள் உலகம் முழுக்கக் கொண்டாடப்படவில்லையா ? அவர்கள் மூளை மழுங்கியா போய் விட்டது. படைப்பூக்கத்தின் உச்சத்தில் இருந்து தன்னிகரில்லாத படைப்புக்களைக் கொடுத்தவர்கள் அல்லவா அவர்கள் ? வேண்டுமானால் ஒன்று சொல்லலாம். தஸ்தாவஸ்கியாலும் புக்கோவ்ஸ்கியாலும் ஜெமோ வின் உரையைக் கேட்டு மனப்பாடம் செய்து , ஒப்பிக்க முடியாதாக இருக்கும்.

எலான் மஸ்க் கூட விஸ்கி மற்றும் கஞ்சா பிரியர். சாருவை கவனித்து இருக்கிறேன். போதை இல்லாதபோது மஞ்ச மாக்கான் போல சில சமயங்களில் காட்சி தருபவர் , மது போதையில் பயங்கர ஷார்ப் ஆகி விடுவார். ஞாபகங்கள் உயிர்த்துக்கொள்ளும். வரலாறு , இலக்கியம் , இசை என தகவல் பிழைகளே இல்லாமல் , ஒவ்வொருவரின் பெயர்களையும் சரியாகச் சொல்லி தங்கு தடையில்லாமல் பேசுவார். போதையில் அவரை ஏமாற்ற முடியாது. சென்ஸிபிலிட்டியும் படைப்பூக்கமும் இருமடங்காகி விடும். சரி , எல்லா மாக்கான்களும் சொல்கிறார்களே என நானும் ஒரு வாரம் தொடர்ந்து அதிகாலை 6 மணிக்கு எழுந்திருக்க ஆரம்பித்தேன். என்னுடைய தூக்க சுழற்சியை மாற்ற இரண்டு தினங்கள் தான் சிரமப் பட்டேன். அதிகாலையில் எழுந்து விட்டேன். ஆனால் என்ன செய்வது என்று தெரியவில்லை. பெரும் திகைப்பாக இருந்தது. அந்த நேரம் , சூழ்நிலை என அனைத்துமே எனக்கு ஒவ்வாமையாக இருந்தது. சரி வெளியே போய்ப் பார்க்கலாம் என்றால், பைத்தியக்கார விடுதியில் நுழைந்து விட்டது போல இருந்தது. எல்லோரும் பச்சை பச்சையாக ஏதோ கீரைத்தண்ணியை குடித்து விட்டு , எமனை நோக்கி ஓடுவது போல கொனஷ்டையாக என்னமோ செய்துகொண்டிருந்தார்கள். அதே போல காலை நேர பரபரப்பு என்று ஒன்று உள்ளது. அதனால் தம்பிடி காசுக்கு புண்ணியமில்லை. வெற்றுப் பரபரப்பு. ஒரு மயிர் வேலையும் அப்போது நடக்காது. அடப்போங்கடா என மீண்டும் இரவுலகத்துக்குள் நுழைந்து விட்டேன். இருந்தாலும் என் வாழ்க்கை முறைதான் சிறந்தது என கூற மாட்டேன். இதில் பல சிக்கல்கள் உள்ளன. சிக்கல்களை மீறி , இது எனக்கு , எனக்கு மட்டும் உகந்ததாக இருக்கலாம். இதனால் என் குடும்பம் , நண்பர் உட்பட பலர் பாதிப்படைகிறார்கள். முக்கியமாக சாரு. அதனால் ஜெமோ அறிமுகம் செய்த சௌந்தரைப் போய்ப் பார்க்கலாம் என இருக்கிறேன். தூக்க சுழற்சியை மாற்றி , அதனால் ஏதும் சிக்கல் வராமல் இருந்து , அது எனக்கும் உகந்ததாக இருந்தால் தொடர்வேன். இல்லையெனில் மீண்டும் இரவுதான். ஆனால் சௌந்தர் சொலிக்கொடுக்கும் யோகாவைத் தொடர்வேன்.

இந்த பதிவை ஜெமோவை ஒட்டுமொத்தமாக எதிர்க்கும் பதிவு என்று எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. அவர் வாசிப்பின் மீதும் , அவரின் பங்களிப்பின் மீதும் அதீத மரியாதை கொண்டவன் நான். இந்த “நான் தான் பர்ஃபக்ட்” என்ற ஒரு புள்ளியிலும் , மற்றவர்களுக்கு குற்றவுணர்ச்சியைத் தூண்டுவதிலும் மட்டுமே எதிர்க்கிறேன்.இது ஒரு மேட்டரா ? இதையெல்லாம் எதிர்க்கணுமா எனக் கேட்டால் , ஆம். இது மிக முக்கியமான மேட்டர். நான் கரக்ட் டைமுக்கு தூங்கிடுவேன் , எது எப்டின்னாலும் 8 மணி நேரம் தூங்கிடுவேன் என்றெல்லாம் லௌகீக ரிட்டயர் ஆசாமி பேசலாம். ஒரு எழுத்தாளர் பேசக்கூடாது என நினைக்கிறேன். இது ஒரு மேல்தட்டு லக்ஸூரி மனோபாவம். உலகம் எவ்வளவோ மாறியிருக்கிறது. வெவ்வேறு பின்னணிகளைக் கொண்ட மனிதர்கள் ஏழை முதல் பணக்காரர் வரை இருக்கிறார்கள். எல்லோராலும் இப்படி ஒரே நேரத்தில் , ஒரே கால அளவில் தூங்க முடியாது. தூங்க வாய்ப்பே இல்லை.

எத்தனை பேருந்து , ரயில் , விமான , ஆடோ , கேப் ஓட்டுனர்கள் இரவு பகல் பாராமல் வேலை செய்கிறார்கள் ?நைட் ஷிஃப்ட் , பகல் ஷிஃப்ட் என கலந்து கட்டி சில கோடி பேர்கள் வேலை செய்துகொண்டிருக்கிறார்கள். இரவு நகரில் உலா வந்தால் , நகரைத் தூய்மைப் படுத்திக்கொண்டிருக்கும் தொழிலாளர்களைப் பார்க்கலாம். மருத்துவம் , காவல் , தீயணைப்பு , ஹாஸ்பிடாலிட்டி உள்ளிட்ட எவ்வளவோ துறைகள் 24 X 7 இயங்குகின்றன. இதில் நான் நல்லா 8 மணி நேரம் தூங்குவேன் , அதுவும் நைட்ல கண்டிப்பா தூங்குவேன் என்றால் எப்படி ? அதுதான் பர்ஃபக்ட் என்று சொன்னால் எப்படி எடுத்துக்கொள்வது ?

நான் தான் பர்ஃபக்ட் வரிசையில் ஜெமோ விட்டு விட்ட ஒன்றே ஒன்று இருக்கிறது. அது “நான் தான் பர்ஃபக்டா மேட்டர் செய்வேன் “ என்பதுதான் அது. சாரு நிவேதிதா “நான் தான் பர்ஃபக்டா மேட்டர் செய்வேன் “ என தொடர்ந்து எழுதி வருவதால் , ஒரு சிநேகபூர்வமான அடிப்படையில் ஜெமோ அதைத் தவிர்த்து இருக்கலாம் என்று தோன்றுகிறது.

அராத்து

அராத்து மேலே மணிப்பிரவாள நடையில் எழுதியுள்ள கட்டுரை பற்றி எனக்கும் கொஞ்சம் சொல்ல வேண்டியுள்ளது. நான் ஜெயமோகனின் ப்ளாகைத் தொடர்ந்து வாசிக்க முயற்சிப்பேன். ஆனால் அவருடைய ஒவ்வொரு கருத்துக்கும் எனக்கு மாற்றுக் கருத்து உருவாவதால் சில கட்டுரைகளை மட்டும் தேர்ந்தெடுத்துப் படிக்கிறேன். சமீபத்தில் அவருடைய தூக்கம் பற்றிய கட்டுரையைப் படித்து நாமெல்லாம் உயிர் வாழ வேண்டுமா என்ற அளவுக்குக் குற்ற உணர்ச்சியிலும் தாழ்வு மனப்பான்மையிலும் சில தினங்கள் உழன்றேன். பின்னர் நானே மனதைத் தேற்றிக் கொண்டு வேலைகளை கவனிக்க ஆரம்பித்தேன்.

என் வாழ்நாளில் நான் ஒருநாள் கூட எட்டு மணி நேரம் உறங்கியதில்லை. எட்டு மணி நேர உறக்கம் ஒரு கனவுதான் எனக்கு. மேலும், எட்டு மணி நேரம் உறங்குபவர்கள் அத்தனை பேரும் மொக்கைகளாக இருப்பதையே பார்க்கிறேன். ஜெயமோகனை நான் விதிவிலக்காகச் சொல்ல மாட்டேன். ஏனென்றால், அவர் எனக்குத் தெரிந்து ஆறு மணி நேரத்துக்கு மேல் உறங்க மாட்டார் என்பது என் யூகம். எட்டு மணி உறங்குபவர்களால் அவர் அளவுக்குக் கூர்மையாக இருக்க முடியாது. அவர் கணக்கில் ஏதோ பிழை விடுகிறார் என்றே நினைக்கிறேன்.

ஐந்து மணி நேரம், ஆறு மணி நேரம் – அதிலும் கொலைகாரக் கொடுங்கனவுகளோடு உறங்குபவன் என்பதால் நான் மதியம் வந்து விட்டாலே கொட்டாவி விட ஆரம்பித்து விடுவேன். காலை பத்து மணிக்கு அழைத்தாலே கொட்டாவி விட்டுக் கொண்டே பேசுவேன். காரில் போனால் தூங்குவேன். ஆட்டோவில் போனால் தூங்குவேன். மேடையில் தூங்குவேன். மேடையில் யாராவது பேசிக் கொண்டிருந்தால் தூங்குவேன். எழுதிக் கொண்டிருக்கும் போதும் தூங்குவேன். தூங்கும் போதும் மனதில் எழுதுவேன். எப்போதுமே கூர்மையாக இருக்க மாட்டேன். பத்து வயதில் ஒருநாள் காலை நேரத்தில் இட்லிக்குத் தொட்டுக் கொள்ள மிளகாப் பொடி வாங்கி வரச் சொல்லி காசு கொடுத்தார்கள். நான் எலி மருந்து வாங்கிக் கொண்டு வந்தேன். இப்படி எதை எடுத்தாலும் கவனமே இல்லாமல் ஏடாகூடம் பண்ணிக் கொண்டிருப்பேன்.

ஆனால் மது அருந்தினால் கூர்மை அடைந்து விடுவேன். அது போலிக் கூர்மை என்றெல்லாம் சொல்லக் கூடாது. அம்பது பேர் சாட்சி. சில பல துறவிகள் கஞ்ஜா அடிப்பார்கள். அப்போது அவர்களின் மனம் கூர்மையடையும். தியானம் செய்தாலும் மனம் கூர்மை அடையும். நான் ஒருநாளில் காலையிலும் மாலையிலும் இருபது இருபது நிமிடம் தியானம் செய்வேன். அதற்குப் பிறகு மூன்று மணி நேரம் மனம் கூர்மையாக இருக்கும். ஆனால் தியானத்தை விடவும் வைனில் மனக்கூர்மை அதிகம். இது எனக்கு மட்டும்தான். நீங்கள் யாரும் முயற்சி செய்தால் போதை அடிமை ஆகி விடுவீர்கள்.

என்னால் ஐந்து ஆண்டுகளுக்குக் கூட மது அருந்தாமல் இருக்க முடியும். மது அருந்த வேண்டும் என்று தோன்றக் கூட தோன்றாது. உலகிலேயே அதி அற்புதமான வைன் கிடைக்கும் ஸ்மிர்னா என்ற ஊரிலேயே (துருக்கி) நான் வைன் அருந்தாமல் வந்தேன். ஆனால் ஏன் குடிக்காமல் இருக்க வேண்டும் என்று தோன்றியதால் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வைன் மட்டும் குடிக்க ஆரம்பித்தேன். சமீபத்திலும் கொரோனா காலகட்டத்தில் இரண்டு ஆண்டுகள் ஒரு சொட்டு கூட குடிக்கவில்லை. குடிக்க வேண்டும் என்று தோன்றவும் இல்லை. ஆனால் குடித்தால் மனம் கூர்மையடைந்து விடுகிறது. ஞாபகங்கள் கூர்மை அடைகின்றன. பெயர்கள் ஞாபகம் வருகின்றன. சிருஷ்டிகரத்தின் உச்சத்தில் இருக்கிறேன். எங்கே? லௌகீக உலகத்தில் கூட. மற்ற நேரங்களில் எதையோ பறிகொடுத்தவனைப் போல்தான் இருப்பேன். ஏற்கனவே ஒரு introvertஆன நான் வைனும் இல்லையென்றால் கல் பிள்ளையார் மாதிரிதான் கிடப்பேன். அதற்காக குடித்தால்தான் கிரியேட்டிவிட்டி வரும் என்றும் இல்லை. தினமும் நான் 2000 வார்த்தைகள் எழுதுகிறேன். ஔரங்ஸேப் ஆயிரம் பக்கம். எல்லாம் குடிக்காமல் எழுதியதுதான்.

முழு நாவலையும் போதையில் எழுதியது என்றால் அது ராஸ லீலாதான். அதைப் படித்துப் பாருங்கள். அப்படி ஒரு நாவல் உலகில் எழுதப்பட்டதில்லை. ப்யூகோவ்ஸ்கியின் போஸ்ட் ஆஃபீஸ், கோஸின்ஸ்கியின் ஹெர்மிட் ஆஃப் சிக்ஸ்டி நைந்த் ஸ்றீட் ஆகிய நாவல்கள் ராஸ லீலாவின் நிழலைக் கூடத் தொட முடியாது. அந்த நாவலில் வரும் மேற்கோள்களின் நாவல்களைப் படிக்க உங்களுக்கு இரண்டு ஆயுள் காலம் வேண்டும்.

எனவே போதை பற்றி, தூக்கம் பற்றி, செக்ஸ் பற்றி, வாசிப்பு பற்றியெல்லாம் உங்கள் அனுபவங்களை நீங்கள் பொதுமைப்படுத்த முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதி உள்ளது. என் அனுபவத்தில் சொல்கிறேன், எட்டு மணி நேரம் தூங்கும் ஒருத்தர் கூட உருப்பட்டது இல்லை. திமுக தலைவர் கருணாநிதி நான்கு மணி நேரம்தான் தூங்குவார். இளையராஜாவும் அப்படியே. ரஹ்மானும் அப்படியே. நான் ஐந்து மணி நேரம். யோகிகள் இரண்டு மணி நேரம்தான் தூங்குவார்கள்.

எனக்குத் தெரிந்து அராத்து அளவுக்கு மோசமான தூக்க ஷெட்யூல் உள்ள ஆள் வேறு யாரும் இல்லை. காலை நாலுக்குப் படுத்து பத்துக்கு எழுந்து கொள்வது. ஐந்துக்குப் படுத்து பதினொன்றுக்கு எழுவது. எனக்குத் தெரிந்து அராத்து அளவுக்குக் கூர்மையான ஆளையும் நான் பார்த்தது இல்லை. ஆனால் இதையும் பொதுமைப்படுத்த முடியாது. என் மகன் பத்து மணி நேரம் தூங்குவான். ஆனால் படு கூர்மையான ஆள். அவந்திகா ஒன்பது மணி நேரம். கூர்மையான ஆள். நான் அஞ்சு மணி நேரம். படு மொக்கை. ஆனாலும் இருபத்து நாலு மணி நேரமும் என் மனம் கிரியேட்டிவிட்டியிலேயேதான் செயல்பட்டுக் கொண்டிருக்கும்.

திரும்பவும் சொல்கிறேன். எட்டு மணி நேரம் தூங்கும் ஒருத்தர் கூட உருப்பட்டுப் பெரிய ஆளாக ஆனதில்லை. அப்படி ஒருவர் பெரிய ஆள் என்றால், கலைஞன் என்றால், அவன் எட்டு மணி நேரம் உறங்கவில்லை.

குடிக்கும் கூர்மைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. தமிழ்நாட்டுக் குடியை குடியிலேயே சேர்க்கக் கூடாது. உலகில் உள்ள எல்லா கலைஞர்களும் ஓவியர்களும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் குடித்தார்கள். சிலர் மொடாக் குடி. அவர்களின் சிருஷ்டிகரத்தன்மை குடியினால் கெட்டுப் போய் விடவில்லை. அவர்கள் குடிக்காமல் இருந்தால் பைத்தியமாகி இருப்பார்கள். நான் குடிக்கவில்லை என்றால் ஒன்று, ப்ரெய்ன் ஹேமராஜ் வந்திருக்கும். அல்லது, பைத்தியமாகி இருப்பேன். குடிதான் என்னை சமநிலையில் இருக்க வைக்கிறது, அவ்வப்போது ஒரு வருடம் இரண்டு வருடம் என்று இடைவெளி விட்டாலும்.

ஜெயமோகன் ஏன் குடிப்பதில்லை என்றால், எழுதுவதற்குத் தேவையான பித்தநிலை அவருக்குக் குடிக்காமலேயே அருளப்பட்டிருக்கிறது. அதையே அவர் எல்லோருக்கும் பரிந்துரை செய்யக் கூடாது.

பின்குறிப்பு: தூக்கம் பற்றி நான் முன்பு எழுதியது கட்டுரை அல்ல, கதை. என் கட்டுரைகள் கதை போலவும், கதைகள் கட்டுரைகள் போலவும் தெரிவதும் ஒரு ஜாலிதான். அஃப்கோர்ஸ், இது கட்டுரைதான்.

சாரு