இரண்டு கடிதங்களும் ஒரு பதிலும்

சாரு எழுதிய இரண்டு ஆட்டோ ஃபிக்‌ஷன் கதைகளை படித்தேன். தமிழில் அட்டோ ஃபிக்‌ஷன் சாருவுக்கு முன்பு யாரும் எழுதியதில்லை; சாருவுக்குப் பிறகும் யாரும் எழுதப் போவதில்லை என்று தோன்றுகிறது. அப்படியே எழுதினாலும் இந்தக் கதைகளுக்கு அருகில் கூட வர முடியாது எனச் சொல்லலாம்.

ஏன் சாருவுக்குப் பிறகு அட்டோ ஃபிக்‌ஷன் சாத்தியமில்லை? ஒட்டு மொத்த சமூகமும் வெகுஜனக் கலாச்சாரத்துக்குள் இருக்கிறது. இதில் வாழ்வில் நடக்கும் அபத்தங்களை அல்லது அங்கதங்களை அல்லது நேர்மறையான செயல்களை நெருங்கிப் பார்த்து திளைத்தல் இல்லாமல் போய்விட்டது. எது நடந்தாலும் சினிமாவுடன்தான் பொருத்திப் பார்க்கிறோம். உதாரணமாக, யாருக்கோ ஏதோ உதவி செய்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அதைப் படம் பிடித்து ஒரு சினிமா இசைப் பின்னணியில் சமூக வலைத்தளங்களில் போட்டால் லைக் அள்ளும். அப்போதுதான் அந்தக் குறிப்பிட்டச் செயல் நிறைவை அளிப்பதாக நம்புகிறார்கள். இப்படி காதல், விளையாட்டு, சமையல், குழந்தை பிறப்பு, குழந்தைகளின் முதல் நடை எல்லாமே சினிமாவுடன் ஒன்றியிருக்கிறது. அதனால் அன்றாட வாழ்க்கையில் சுவாரசியமே இல்லாமல் போய்விடுகிறது. இதன் வெளிச்சத்தில் சாருவின் ஆட்டோஃபிக்‌ஷனை படித்தால் பல இடங்களில் வாய்விட்டு சிரித்து மகிழச் செய்கிறது. இத்தனைக்கும் சாரு எழுதும் அனைத்தும் நிகழ்கால வாழ்வின் அபத்தங்கள். அபத்தங்கள் நிறைந்த வாழ்வு எரிச்சலைத்தானே வரவழைக்க வேண்டும்? எப்படி இவற்றை கதையாக மாற்றுகிறார்?

சாருவின் வாழ்வு வெகுஜன வாழ்விலிருந்து முற்றுமாக விலகியிருக்கவில்லை. அப்படி விலகியிருந்தால் வினித் போன்ற நண்பர்கள் இருக்க மாட்டார்கள். அதற்கு ஒரு உதாரணம், சாரு அபத்தமாக ஏதோ சொல்ல கடுப்பான வினித், “இப்படியே செய்து கொண்டிருந்தால் விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தில் இணைந்துவிடுவேன்” என்று சொல்லியிருக்கிறான். இந்தச் சம்பவமும் ஒரு கதையில் வருகிறது. ஆக சமூகத்துடனான ஓர் இணக்கத்தை என்றுமே விட்டதில்லை. அதே சமயம் மொத்தமாக ஜனரஞ்சகப் பார்வையும் இல்லை. அப்படியிருந்திருந்தால் சுஜாதா எழுத்துக்கள் போல இருந்திருக்கும். தனித்துவமாக இருக்கிறது. இந்தத் தனித்துவம் என்பது உயிரை பலியாகக் கேட்கும். எழுத்தை மட்டும் சுவாசிக்கும் ஒருவரால்தான் இது சாத்தியமாகும். ஆக வெகுஜன வாழ்வுக்கும் தீவிர வாழ்வுக்குமான சமநிலையை எப்போதும் பராமரித்துக் கொண்டிருக்கிறார் சாரு.

சாரு எழுதியிருக்கும் சம்பவங்களை சாருவைத் தவிர யார் எழுதியிருந்தாலும் அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாமல் போயிருப்பார்கள். சொந்தம் பந்தம் சுற்றம் உறவு எல்லாவற்றையும் இடது கையால் தட்டிவிட்டு எழுத்து மட்டும் போதும் என்பவருக்குத்தான் இம்மாதிரியான அசாத்தியங்கள் சாத்தியமாகும்.

தி.ஜானகிராமன் சில பல ரசவாதங்களுடன் ஆட்டோஃபிக்‌ஷனை முயன்றிருக்கிறார். ஆனால் அது பிரதியெடுக்கும் அலங்காரத்துடனிருந்தது. ‘இடைவெளி’ எஸ்.சம்பத் முயன்றிருக்கிறார். ஆனால் மனப்பிரச்சனைகளும் உடல் உபாதைகளும் கண்டு சீக்கிரமே விடைபெற்றுக் கொண்டார். சாரு அப்பட்டமாக எல்லாவற்றையும் எழுதிக் கொண்டிருக்கிறார். இன்னும் எழுதுவார். இப்படியான சாகச மனப்பான்மை கொண்டவர் இனிமேல் வரவே முடியாது என்பதுதான் என் உறுதியான நம்பிக்கை. Love you Pa.

வளன் அரசு

சாரு,

ஆரோவில் சந்திப்பின் பொழுது, நீங்கள் எங்கள் அனைவரையும் கோவையில் விருது வழங்கும் விழாவிற்கு அழைத்திருந்தீர்கள். ஆனால் என்னால் வர இயலாது. மன்னிக்கவும்.

உங்களின் நேற்றைய பதிவை படித்தேன். ஆதலால், விழா சிறப்பாக நடக்கவும், உங்களுக்கு எந்த சங்கடமும் நேராமல் இருக்கவும் இயற்க்கையை வேண்டிக் கொள்கிறேன்.
அப்துல் ரஹ்மான்

***

வளன், அப்துல் ரஹ்மான் இருவருக்கும் நன்றி. இருவருக்கும் மிலரப்பா கதை தெரிந்திருக்கும். மிலரப்பா அளித்த ஞானத்தினால்தான் சராசரி மனிதர்களுக்குப் பெரும் நரகமாக இருந்திருக்கக் கூடிய இந்த வாழ்வை சொர்க்கத்தில் வாழ்பவனைப் போல் ரசித்து வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஏனென்றால், என் வாழ்க்கையே என் எழுத்துக்கான கச்சாப் பொருள். கோவையில் யாரேனும் ஒரு நலம்விரும்பி என்னுடைய ஆட்டோஃபிக்‌ஷன் கதைகளைப் பற்றியெல்லாம் என் மனைவியிடம் போட்டுக் கொடுத்து அவளுக்கு மன உளைச்சல் கொடுக்கலாம். அதனால் என் வாழ்வின் போக்கு திசை மாறலாம். அது மட்டும் இல்லாமல் என் வாழ்வு பற்றிய ஆவணப்படம் இருக்கிறது. அது உங்களுக்கு மகத்தான இன்பத்தை அளிக்கும். என் மனைவிக்கு அது தீராத மன உளைச்சலை அளிக்கும். காரணம், புக்கட்டில் ஒரு பப்பில் எனக்கு முன்பின் பழக்கமே இல்லாத ஒரு பெண் – பெயர் கூடத் தெரியாது – தன் பாய்ஃப்ரெண்டுடன் வந்தவள் – என்னோடு அரை மணி நேரம் நடனம் ஆடினாள். நான் ஒரு முதியவன் என்றேன். ஹூ செட் என்று கோபமாகக் கேட்டாள். முத்தமிட்டுக் கொண்டோம். (எங்கே என்று படத்தைத்தான் பார்க்க வேண்டும்.) இப்படிப்பட்ட பல வெடிகுண்டுகளைக் கொண்டது ஆவணப்படம்.

ஆனால் நேற்று ஒரு பணிப்பெண் வந்தார். வட இந்தியப் பெண். என்னைக் காட்டி என் மனைவியிடம் “அது உங்கள் தந்தையா?” என்று கேட்டாள்.

அவந்திகாவுக்கு ரொம்ப சந்தோஷமாகி விட்டது. இருக்காதா பின்னே? சந்தோஷத்துக்கு இன்னொரு காரணமும் உண்டு. “நீ என்னை ஒரு தந்தையைப் போல் கவனித்துக் கொள்கிறாய்” என்றாள். ஆவணப்படத்தையும் அவள் என் குழந்தையைப் போல் பார்த்தாள் என்றால் நான் தப்பினேன்.

சாரு