கலாச்சார அவலம்

ஸ்பானிஷ், ஃப்ரெஞ்ச், அரபி போன்ற மொழிகளின் இலக்கியத்தோடு ஒப்பிட்டால் தமிழ்தான் உச்சபட்ச நிலையில் இருக்கிறது.  இதை சர்வதேச இலக்கியத்தின் தீவிர வாசகன் என்ற முறையில் என்னால் அறுதியிட்டு சொல்ல முடியும்.  (இந்தப் பட்டியலில் நான் ஆங்கிலத்தைச் சேர்க்கவில்லை.  அந்த மொழியில் இன்று சீரிய இலக்கியம் படைக்கப்படுவதில்லை.) 

தமிழ் இலக்கியத்தின் சாதனைகள் சர்வதேசத் தரத்தில் இருந்தும் அதை வெளியுலகத்துக்கு எடுத்துச் சொல்ல தமிழில் ஒரு ஆள் இல்லை.  பிராமணர்கள் இலக்கியத்தைத் துறந்து விட்டார்கள்.  அவர்கள் துறந்தது இலக்கியத்தை மட்டும் அல்ல.  எத்தனையோ விஷயங்கள்.  அதைப் பற்றி எனக்கு அக்கறை இல்லை.  அது அந்த சமூகத்தின் பிரச்சினை.  ஆனால் அவர்கள் இலக்கியத்தைத் துறந்ததால் அந்த இடம் வெற்றிடமாகி விட்டதுதான் துரதிர்ஷ்டம்.  ஆங்கிலம் தெரியாத, இலக்கியமும் தெரியாத ஒரு சமூகமாக உண்டாகி நிற்கிறது தமிழ்நாடு.  இதுவரை உயர்குடியில் இருந்து, கல்வி கேள்விகளில் சிறந்து, அரசர்களுக்கே அறிவுரை நல்கிய பிராமணனிலிருந்து சமூகத்தின் கீழ்த்தட்டில் வாழ்ந்தவர் வரை எல்லா தரப்பினரும், சாதி மத வர்க்க பேதம் இல்லாமல் ஒரே மாதிரி ஒரே அடையாளத்தில் ரோபோக்கள் போல் பிரம்மாண்டமாக நிற்கிறார்கள்.  அவர்களின் முகங்கள் ஒன்றேபோல் இருக்கின்றன.  நீங்கள் இதைத் திருமண விழாக்களில் காணலாம்.  ஆண் பெண் எல்லோருமே ஒருவித பிளாஸ்டிக் முகங்களோடு, சுண்ணாம்பு அடித்தது போல் இருப்பார்கள்.  அதேமாதிரிதான் ஆகி விட்டது இன்றைய தமிழ்ச் சமூகம். 

தமிழில் சிருஷ்டிக்கப்பட்டிருக்கும் மகத்தான இலக்கியப் படைப்புகளை தமிழ் நிலத்துக்கு வெளியே சொல்ல இன்று ஒரு ஆள் கிடையாது.  சுந்தர் பிச்சை எந்த இடத்தில் இருக்கிறார்?  அய்யங்கார்தான்.  ஆனால் அவருக்குத் தமிழின் சமகால இலக்கியத்தில் ஒருத்தர் பெயர் தெரியுமா?  ஆனால் திருவள்ளுவர், கம்பர் பெயர் தெரியும்.  அவரை விடுங்கள்.  ஜனாதிபதியாகவே இருந்தார் ஒரு தமிழர்.  அவருக்குத் தெரிந்த இலக்கியவாதியின் பெயர் வைரமுத்து.  சிந்தனையாளரின் பெயர் சிரிப்பு நடிகர் விவேக்.  இப்படி இருக்கிறது தமிழின் மேட்டுக்குடி.  எலீட்.

ஆனால் மேற்குலகம் எப்படி இருக்கிறது?  ஃபேஷன் உலகின் மிகப் பிரபலமான நிறுவனங்களில் ஒன்று Prada.  ப்ராதாவின் அலங்காரப் பொருட்கள் கோடீஸ்வரர்கள் உபயோகிப்பதாக இருக்கிறது.  அதன் தலைவர்களில் ஒருவரான Miuccia Bianchi Prada எனக்கு ஒரு இரண்டு பக்கக் கடிதம் எழுதினார்.  என் எழுத்து பற்றி.  பிறகு அவரது நிறுவனம் நடத்திய கலை விழாவுக்காக ஒரு கதை கேட்டார்.  கதைக்கான சன்மானம் ஒன்றரை லட்சம் ரூபாய்.  அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவருக்கு ஐம்பதாயிரம் ரூபாய் (என்று நினைக்கிறேன், ஒரு லட்சமாகவும் இருக்கலாம், நான் மொழிபெயர்ப்பாளரைக் கேட்கவில்லை).  அந்தக் கதையை உலகின் மிகப் புகழ்பெற்ற கதை வாசிப்பாளர்களில் (Audio narrator) ஒருவரான George Guidall மிலன் நகரில் (இத்தாலி) நடந்த கலை விழாவில் வாசித்தார்.  அந்த விழாவுக்கு சல்மான் ருஷ்டி உட்பட பல பிரபலமான எழுத்தாளர்களும் சிற்பிகளும் ஓவியர்களும் விஞ்ஞானிகளும் கலந்து கொண்டார்கள்.  பெங்களூரிலிருந்தும் சில உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானிகள் கலந்து கொண்டார்கள்.  எனக்கும் அழைப்பு வந்தது. எனக்கு அப்போது துணை கிடைக்காததால் நான் போகவில்லை.  நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக லண்டனிலிருந்து வெளிவரும் கலை சஞ்சிகையான ArtReview Asiaவில் எழுதி வருகிறேன்.  அதன் ஆசிரியர் Mark Rappolt அந்த விழாவுக்குச் சென்றிருந்தார் என்றும், என்னை அங்கே எதிர்பார்த்தார் என்றும், என் கதைக்கு நல்ல வரவேற்பு இருந்தது என்றும் எழுதியிருந்தார்.  ஒரு நல்ல வாய்ப்பை இழந்தேன். 

மேற்கு உலகில் உள்ள எலீட் சமூகம் எப்படி இருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணமாக இதைக் குறிப்பிட்டேன்.  நம்மூர் சுந்தர் பிச்சையும் மற்ற எலீட் சகாக்களும் அமெரிக்காவில் எப்படி இருக்கிறார்கள், அவர்களுக்கும் இலக்கியத்துக்கும் எவ்வளவு தூரம்  என்பதெல்லாம் வெளிப்படை. 

மேட்டுக்குடியினருக்கு இலக்கியம் தெரிந்தால்தானே அதை வெளியில் கொண்டு போய் கொடுக்க முடியும் என்பது என் கேள்வி.  மோதி ஜப்பானியப் பிரதமருக்குத் திருக்குறள் பரிசளிக்கிறார்.  இதையே எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குச் செய்து கொண்டிருப்பீர்கள்?  திருவள்ளுவரைத் தாண்டி வரவே மாட்டீர்களா?  மோதியிடம் திருவள்ளுவரைத் தாண்டி தமிழ் இலக்கியம் எங்கேயோ போய் விட்ட்து என்று சொல்ல ஒரு எலீட் இல்லை தில்லியில்.  ஏனென்றால், மோதியைச் சுற்றியுள்ள தமிழ் அதிகாரிகளுக்குத் தமிழின் சமகால இலக்கியம் தெரியாது.  ஜெயமோகனின் நண்பரான ஒருவர் மட்டும் விதிவிலக்கு.  விதிவிலக்குகளைப் பற்றி நாம் பேசக் கூடாது.  இதுவே ஒரு தமிழ் எழுத்தாளர் நோபல் பரிசு பெற்றிருக்கிறார் என்றால், அந்த எழுத்தாளரின் நூலை மோதி ஜப்பானியப் பிரதமருக்குப் பரிசளித்திருப்பார் அல்லவா?

ஆனால் துரதிர்ஷ்டம் என்னவென்றால், நோபல் கமிட்டிக்கும் பரிந்துரை செய்யப்படுவது வைரமுத்து வகையறாக்களாகவே இருப்பார்கள்.  ஏனென்றால், நம்முடைய மேட்டுக்குடிக்கு வைரமுத்துவைத்தான் தெரியும்.   

இந்த அவல நிலையால்தான் அகிலனுக்கு ஞானபீடப் பரிசு கொடுக்கப்பட்டது.  அது தமிழின் அவலம்.  தமிழ்நாட்டின் அவமானம்.  அந்த சமயத்தில் சுந்தர ராமசாமி அகிலனை மலக்கிடங்கு என்று விமர்சித்தார். 

அந்த விமர்சனம் ஒரு அக்கினிப் பிழம்பு.  அந்த அக்கினியை இன்றைக்கும் சுமந்து கொண்டிருக்கும் ஒருசில எழுத்தாளர்களில் எனக்கு உடனே ஞாபகம் வருவது இரண்டு பேர்தான்.  ஜெயமோகன்.  சாரு நிவேதிதா. 

நேற்று ஒரு அழைப்பிதழைப் பார்த்தேன்.  எனக்கு என்ன எழவுக்கு அனுப்பி வைத்தார்கள் என்று தெரியவில்லை.  அகிலனுக்கு ஏதோ நினைவு விழா.  நடத்திக் கொள்ளட்டும்.  எனக்கு என்ன ஆட்சேபணை?  ஆனால் அந்த விழாவை நடத்துவது லயோலா கல்லூரியின் தமிழ்த் துறையும் சாகித்ய அகாதமியும். சாகித்ய அகாதமி பற்றி விமர்சிப்பதற்குக் கூட அந்த நிறுவனத்துக்கு அருகதை இல்லை. ஆனால் லயோலா கல்லூரி அப்படி அல்ல. எதிர்கால சந்த்தியை உருவாக்கும் ஒரு புகழ்பெற்ற, மதிப்புக்குரிய கல்வி நிறுவனம்.  அங்கேயுமா இந்த அவல நிலை?  அதைக் கூட மன்னித்து விடலாம்.  அந்த விழாவில் கலந்து கொள்பவர்களில் கலாப்ரியாவின் பெயரும் இருக்கிறது.   இதெல்லாம் அகிலன் போன்ற மலகிடங்குக்குக் கிடைக்கும் அங்கீகாரம் இல்லையா?  இதை கலாப்ரியா செய்யலாமா?  புகழ் பெற்ற கல்வி நிறுவனம் என்றால் அவர்கள் செய்யும் அவமானகரமான காரியங்களுக்கு நாம் துணை போய் விட முடியுமா? இங்கே நான் கலாப்ரியாவின் பெயரைக் குறிப்பிடாமல் ஒரு மூத்த எழுத்தாளர் என்று எழுதி விட்டுப் பாதுகாப்பாகப் போய் விட முடியும்.  கலாப்ரியாவின் மீது நான் கொண்டிருக்கும் மிக உயர்வான மரியாதையின் காரணமாகவே அவர் பெயரைக் குறிப்பிட்டு எழுதுகிறேன். 

அகிலன் என்பது ஒரு பெயர் அல்ல.  தமிழ் இலக்கிய அவலத்தின் குறியீடு.  அகிலனை ஒரு மூன்றாந்தர எழுத்தாளர் என்று கூட சொல்ல மாட்டேன்.  அவர் எழுத்தாளரே அல்ல.  அப்படிப்பட்ட ஒருவருக்கு ஞானபீடம் என்றால் அது தமிழ் இலக்கியத்துக்காக உயிரை விட்ட அத்தனை எழுத்தாளர்கள் மீதும் மூத்திரம் அடிப்பதற்கு சமம்.  அகிலனைப் போல் நூறு பேர் எழுதினார்கள்.  அவர்கள் மீதெல்லாம் நமக்கு ஒரு பிராது கிடையாது.  இந்த உலகத்தில் சகல ஜீவராசிகளும் வாழ்வதற்கு உரிமை இருக்கிறது.  ஆனால் இலக்கியம் இருக்க வேண்டிய இடத்தில் மலமும் சாணியும் இருக்கலாமா?  நான் பலநூறு முறை எழுதி விட்டேன்.  கல்வி நிறுவனங்களின் அறிவின்மையினால்தான், கல்வி நிறுவனங்களின் மௌடீகத்தினால்தான் தமிழ் இளைஞர்களுக்கு இலக்கியப் பிரக்ஞையே இல்லாமல் இருக்கிறது என்று.  அதற்கு ஒரு உதாரணம், லயோலா கல்லூரியில் நடக்கும் அகிலன் விழா.  அதில் இலக்கியவாதிகளும் கலந்து கொள்வது அவலத்திலும் அவலம்.