நம்முடைய ஆன்மீக சக்தியைப் பிறர் உறிஞ்சி எடுப்பதிலிருந்து தப்பிப்பதற்கான எளிய உபாயம் (ஒரு ஆட்டோஃபிக்‌ஷன் கதை)

டிசம்பர் பதினேழு பதினெட்டு தேதிகளில் விழா.  பதினாறாம் தேதி பத்தினியின் பிறந்த நாள் என்பதால் பதினாறாம் தேதியே கோயம்பத்தூர் கிளம்ப முடியாது.  நான் எந்த நாட்டில் எந்தப் பட்டணத்தில் இருந்தாலும் டிசம்பர் பதினாறிலிருந்து பதினெட்டு வரை ஊரில் – வீட்டில் – இருந்தாக வேண்டும்.  பதினெட்டு?  அது அடியேனின் பிறந்த நாள்.  ஆக, மூன்று தினங்களும் என்னைப் பொருத்தவரை வெளியுலகம் மூடப்பட்டது.  இப்படித்தான் கடந்த இருபத்தேழு ஆண்டுகளாக நடந்து வருகிறது.   

விழா அமைப்பாளரிடமிருந்து அழைப்பு வந்தது. 

எந்தத் தேதியில் டிக்கட் போட வேண்டும்? 

பதினேழு காலையில் போடுங்கள்.  காலையில் என்றால், அதிகாலையில் இல்லை.  ஒரு பத்து மணி வாக்கில். 

பத்து மணி விமானத்தில் டிக்கட் போடப்பட்டது. 

பிறகுதான் தெரிந்தது கொக்கரக்கோ பதினாறு இரவே கோயம்பத்தூர் வருகிறான் என்று.  ஆகா, அப்படியானால் பதினாறு மாலை வாக்கில் கிளம்பினால் நன்றாக இருக்குமே?  விழா அமைப்பாளரை அழைத்து லேசான குற்ற உணர்வுடன், “பதினாறு மாலை ஏழரை மணிக்கு ஒரு விமானம் இருக்கிறது, அதில் மாற்றிப் போட்டு விட முடியுமா?” என்று கேட்டேன். 

உடனே மாற்றித் தந்தார்கள். 

ஒருசில நாட்கள் சென்று பத்தினியிடம் நைஸாகச் சொன்னேன்.  நான் தனியாகவே போகிறேன், அங்கே நீயும் வந்தால் உன்னைத் திரும்பிப் பார்க்கக் கூட எனக்கு நேரம் இருக்காது.  சரியா?

ஏனென்றால், இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் இப்படித்தான் குற்றாலம் கருத்தரங்குக்கு இருவருமாய்ச் சென்றோம்.  நான் பத்தினியை விட்டு விட்டு நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்திருக்கிறேன்.  பகல் பூராவும், இரவு பூராவும்.  மூன்று நாட்கள்.  நொந்து நூலாகி விட்டாள் போல.  அந்த விஷயத்தையே வாரம் ஒருமுறை என்று கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாகச் சொல்லிக் காண்பித்து எனக்கு டார்ச்சர் கொடுக்க முயன்று கொண்டிருக்கிறாள் பத்தினி.  என்னால் என்ன செய்ய முடியும்?  மனைவியுடன் பேசுவதற்கா இலக்கியக் கருத்தரங்குக்குப் போனேன்?  மேலும், ஒரு பெண்ணோ ஆணோ தன்னுடைய பொழுதுபோக்குக்காக மற்றொருவரைச் சார்ந்து இருக்கலாமா?  மேலும், நான் என்ன தேன் நிலவுக்கா போனேன்? 

அந்தக் குற்றாலம் கருத்தரங்கம் மாதிரி பிரச்சினை எதுவும் இப்போதும் வந்து விடக் கூடாதே என்பதற்காகத்தான் தனியாகப் போகலாம் என்று எண்ணினேன்.  மேலும், அங்கே வந்தால் அவளுக்குத் துன்பம்.  கொக்கரக்கோவைப் பார்த்தாலே அவள் ரத்தம் கொதிக்கும்.  அது போதாதென்று, இப்போது வினித்தை நினைத்தாலும் கொதிக்கிறது. 

ஏன் என்று சொல்ல வேண்டும்.  வினித் அவளைப் பெயர் சொல்லி அழைக்கிறான்.  “இருவத்தஞ்சு வயசு பொடிப்பய என்னெ பேர் சொல்லிக் கூப்புர்றான்… இன்னோர் தடவ அவன் அப்டிக் கூப்டட்டும், இருக்கு கச்சேரி.”

“வேற என்னன்னு கூப்புர்றதும்மா?  உனக்குத்தான் மேடம், ஆண்ட்டீனெல்லாம் கூப்ட்டா புடிக்காதே?”

பத்து ஆண்டுகளுக்கு முன்னால் என் நண்பர் ஒருவர் தன் மனைவியுடன் என் வீட்டுக்கு வந்தார்.  அப்போது என் பத்தினியின் வயது 52.  நண்பரின் மனைவிக்கு 42 இருக்கும்.  அந்தப் பெண்மணி என் பத்தினியை ஆண்ட்டி என்று அழைத்தார்.  பத்தினி செம கடுப்பாகி விட்டாள்.  ”ஆண்ட்டியாம் ஆண்ட்டி, எருமக்கடா வயசு ஆவுது.  பெரிய கொமரின்னு நெனப்பு” என்று ஆரம்பித்து கடுமையான பாட்டு விட்டாள்.  நல்லவேளை, தம்பதி கிளம்பிப் போன பிறகு.

“சரி, வேற என்னன்னு கூப்புர்றது, சொல்லு?”

“ஏன், பேர் சொல்லிக் கூப்ட வேண்டியதுதானே?” 

அதிலிருந்து யாரையும் நான் வீட்டில் சந்திப்பதில்லை.  பத்தினியைப் பார்க்க வேண்டும் என்று சொல்பவர்களைக் கூட அன்புடன் தவிர்த்து விடுவேன்.

வினித் மென்பொருள் துறையில் பணி புரிகிறான்.  அங்கே பெரிய அதிகாரிகளையே பெயர் சொல்லித்தான் அழைப்பார்கள்.  அது மட்டும் அல்லாமல், நானே எல்லோரிடமும் பெயர் சொல்லி அழைக்கும்படி வலியுறுத்தியிருக்கிறேன்.

“ஏன், அம்மான்னு கூப்பிட வேண்டியதுதானே?”

என்னால் முடியாது.  இதெல்லாம் எனக்கு சம்பந்தம் இல்லாத விஷயம்.  வினித்திடம் போய் “இனிமேல் நீ என் மனைவியை அம்மான்னு கூப்புர்றியா?” என்று கேட்பதைப் போல் அவலம் வேறு எதுவும் இல்லை.  எப்படிக் கூப்பிடுகிறானோ அது அவன் பாடு, அதை எதிர்கொள்ள வேண்டியது அவள் பாடு.  ஆனால் பாதிக்கப்பட்டவன் நான்.  இனிமேல் கொக்கரக்கோவைப் போலவே வினித்தோடும் ஃபோனில் பேச முடியாது.  இரண்டு பேருக்கும் தடை. 

வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு ஒரு இலக்கிய விழாவுக்கு – அதுவும் எனக்கு விருது தரும் விழாவுக்குச் – செல்ல முடியுமா? என் பத்தினி ஒரு புரட்சிக்காரி.  எந்த நேரத்தில் என்ன நடக்கும் ஏது நடக்கும் என்று யாருக்குமே தெரியாது.  இன்று காலையிலேயே ஒரு சம்பவம்.  மதியம் ஒரு சம்பவம்.  காலையில் பூனைக்கு உணவு கொடுப்பதற்காகக் கீழே போனாள்.  ஒரு ஸ்விக்கிகாரன் வெளியே செல்லும் கேட்டிலிருந்து உள்ளே வந்தான்.  இவள் என்னங்க இது, ராங் சைட்லேர்ந்து வர்றீங்க என்றாள்.  அவன் திறந்து கிடந்தது, அதனால் வந்தேன், ஸாரி என்றான்.  அவன் மாடிக்குப் போன பிறகு செக்யூரிட்டியை அழைத்த பத்தினி, வெளியே போகும் கேட்டை ஏன் திறந்து வைத்திருக்கிறீர்கள் என்றாள்.  யார் வந்தது என்றார் செக்யூரிட்டி.  அப்போது கீழே இறங்கிய ஸ்விக்கிகாரனைப் பார்த்து, இவர்தான் வந்தார் என்றாள்.  நான்தான் அப்போதே ஸாரி சொன்னேனே, ஏன் நீ இன்னமும் பிரச்சினை பண்றே என்று ஒருமையில் திட்டினான் ஸ்விக்கி. 

ஏண்டா டேய், என்னடா நினைச்சுக்கிட்டு இருக்கே, பொம்பளைன்னா அவ்ளோ கேவலமா, வீடு வீடா போய் டெலிவரி குடுக்குற நீ என்னைப் பார்த்து வா போன்றே, முட்டியப் பேத்துருவேன், ஒழுங்காப் போடா. 

இன்று மாலை நடக்கப் போகும் பூஜைக்காக பூஜைத் தட்டு வாங்குவதற்காக மதியம் கிளம்பிப் போனாள்.  கொஞ்ச நேரத்தில் எனக்கு ஃபோன்.  மிகவும் பதற்றமான குரலில் “இந்தக் கடைக்காரன் செஞ்ச வேலயப் பாத்தியா?  கடைல வேல செய்ற பொண்ணைப் பார்த்து இவ்ளோ நேரம் என்னா மயிரைப் புடுங்கிக்கிட்டிருந்தேன்னு கஸ்டர்மர்ஸ் எதிரே திட்றான்.  இவன போலீஸ்ல புடுச்சுக் குடுத்துட்டுத்தான் மறுவேலை” என்று சொல்லி விட்டு ஃபோனைத் துண்டித்து விட்டாள்.

இருபது ஆண்டுகளுக்கு முன் சின்மயா நகர் குடியிருப்பில் நடந்த சம்பவம் எனக்கு ஞாபகம் வந்த்து.  இப்படித்தான் ஒருநாள் அங்கே நியாயம் கேட்கப் போனாள்.  அவர்கள் ஒரு அரசியல் கட்சித் தொண்டர்கள்.  நாலு பேர்.  ஒவ்வொருத்தனும் நடிகர் பொன்னம்பலம் மாதிரி இருப்பான்.  நள்ளிரவில் கதவைத் தட்டி அவளைக் கொல்லப் பார்த்தான்கள்.  வீட்டிலிருந்த நாய் பப்புதான் அவளைக் காப்பாற்றியது. உன்னைக் கொல்லாமல் விட மாட்டேன் என்று என்னை வேறு பார்த்து கருவி விட்டுப் போனான்கள்.  பத்தினிக்குக் கழுத்து எலும்பு முறிந்து மருத்துவமனையில் இருந்தாள்.  உடல்நிலை தேற பல காலம் ஆயிற்று.  இதெல்லாம் போக என் உயிரை எடுப்பேன் என்று சபதம் போட்டிருந்தார்கள் அல்லவா, அதற்காக அந்தத் தொண்டர்கள் சார்ந்திருந்த கட்சித் தலைவரை சந்தித்து விஷயத்தை விளக்கி, தலைவர் அந்தத் தொண்டர்களிடம் விட்ருங்கப்பா என்று சொன்ன பிறகுதான் எனக்கு உயிர்ப் பயம் நீங்கியது.  அதற்குள் போலீஸ் அவர்கள் மேல் கொலைக் கேஸ் போட்டிருந்ததால் அவர்களின் குடும்பம் சின்னாபின்னம் ஆகியது.  அவர்களும் சபதத்தை வாபஸ் வாங்கி விட்டதால் நானும் கேஸில் சாட்சி சொல்ல மறுத்து விட்டேன்.  கொலைக் கேஸ் ஒன்றுமில்லாமல் ஆயிற்று.

பத்தினி கடையிலிருந்து திரும்ப நீண்ட நேரம் ஆனதால் மறுபடியும் ஏதோ பெரிய சிக்கல் என்றுதான் நினைத்தேன்.  ஆனால் அப்படி ஆகவில்லை என்று திரும்பிய பிறகு தெரிந்தது.  ”ஏண்டா டேய், மயிராண்டி, ஒரு பொண்ணு ஓங்கடைக்கு வேலைக்கு வந்துட்டா என்னா வேணும்னாலும் பேசுவியாடா பாடு, இப்பவே ஒன்ன போலீஸ்ல புடுச்சிக் குடுத்து கம்பி எண்ண வய்க்கிறேன் பாரு” என்று ஆரம்பித்து செம பாட்டு.  நல்லவேளை, கடைக்காரன் ரவுடி இல்லை.  இல்லாவிட்டால் மீண்டும் ஒரு கொலைக்கேஸ்  ஆகியிருக்கும்.  கடையில் சாமான் வாங்க நின்று கொண்டிருந்தவர்களுக்கும் பாட்டு கிடைத்ததாம்.  ”ஒங்களுக்கெல்லாம் பொண்ணுங்க இல்ல?  ஒங்க பொண்ண இப்டி ஒருத்தன் திட்டினா சும்மா இருப்பீங்களா?  பொண்ணுங்கன்னா அவ்வளவு மட்டமா போச்சா, ஒங்களுக்கெல்லாம் மனசாட்சி இல்ல?”  இத்யாதி, இத்யாதி.  கடையில் நின்று கொண்டிருந்த ஒரு மத்திம வயதுப் பெண்மணி மட்டுமே பத்தினிக்கு ஆதரவாக வந்தாராம்.  ஆண்களெல்லாம் ஒரு வார்த்தை பேசவில்லை.  நான் மட்டும் ஆன்மீகப் பாதையில் சென்றிருக்காவிட்டால் ஒரு பெண்ணியவாதியாகத்தான் ஆகியிருப்பேன் என்று புரட்சிகரமாகச் சொன்னாள் பத்தினி. 

எல்லாவற்றும் சீராகத் தலையாட்டி விட்டு தட்டச்சு செய்ய ஆரம்பித்தேன். 

இப்படிப்பட்ட புரட்சியை அழைத்துக் கொண்டு எப்படி மூன்று இரவுகளும் இரண்டு பகல்களும் கோயம்பத்தூரில் கழிக்கப் போகிறேன்?  அதிலும் இந்த வினித் பயல் வேறு வந்து இவளைப் பேர் சொல்லி அழைக்காமல் இருக்க வேண்டும். 

எது எப்படிப் போனாலும் பத்தினியிடம் கொஞ்சம் வெளிப்படையாகப் பேசி விடலாம் என்று ஆரம்பித்தேன்.  அம்மிணி, என்னால் டிசம்பர் பதினேழு பதினெட்டில் உன்னைத் திரும்பிப் பார்க்க்க் கூட நேரம் இருக்காது, சிங்கப்பூரிலிருந்து பத்து பேர் வருகிறார்கள் (சும்மா பில்டப்), துபாயிலிருந்து அஞ்சு பேர், கத்தாரிலிருந்து நிர்மல், அமெரிக்காவிலிருந்து வளன் (பில்டப்), பெங்களூரிலிருந்து ஸ்ரீ என்று ஏகப்பட்ட பேர் வருகிறார்கள், நான் அவர்களோடு பேசிக் கொண்டிருப்பதா, உன்னை கவனிப்பதா, அதனால் நான் மட்டும் போகலாம் என்று முடிவு எடுத்திருக்கிறேன்.

நான் இல்லாமல் உன் பிறந்த நாளைக் கொண்டாடுவது என்று முடிவு செய்து விட்டாய் அல்லவா?   ஓகே.  உனக்கு என்னை விடவும் உன் நண்பர்களும் உன் எழுத்தும்தான் முக்கியம் என்று தெரிந்து விட்ட்து.  நான் கிளம்புகிறேன்.  ஆனால் எங்கே போகிறேன் என்று யாருக்கும் தெரியாது.  என்னால் வெறும் பிளாட்ஃபாரத்தில் கூட படுத்துக் கொள்ள முடியும்.  இப்போது கிளம்பவில்லை.  நீ கோயம்பத்தூரிலிருந்து வா.  நீ வரும்போது நான் இங்கே இருக்க மாட்டேன்.

என்ன சிக்கல் என்றால், பத்தினி சொன்னது போல் செய்யக் கூடியவள்.  ஓ, எல்லோரும் இப்படித்தான் என்கிறீர்களா?  சரி.  அப்படியானால் திரும்பி வந்த பிறகு குடும்ப நிறுவனத்தின் லயம் கெட்டுப் போய் விடும் அல்லவா? லயம் கெட்டால் நான் எப்படி எழுதுவது?  எழுதுவதை விடுங்கள்.  நான் கோபப்பட்டால், மன உளைச்சல் அடைந்தால் என் ரத்த அழுத்தம் 230ஐத் தொடுகிறது.  இரண்டு விஷயங்கள் நடக்கும்.  ஒன்று, மரணம்.  இரண்டாவது, அதை விடக் கொடுமை.  மூளையில் ரத்தக் கசிவு.  விளைவு, பக்க வாதம்.  வாய் பேச முடியாது.  நடக்க முடியாது.  தேவையா இதெல்லாம்?  மனைவியோடு மல்லுக்கு நின்று வாழ்நாள் பூராவும் வாய் பேச முடியாமல் சக்கர நாற்காலியில் நகர வேண்டுமா?  சாஷ்டாங்கமாகக் காலில் விழு.    

அடச்சே, நான் கொஞ்சம் வாய் விட்டு யோசித்தேன் அம்மிணி.  அவ்வளவுதான்.  எனக்கு எழுத்தா முக்கியம்?  உனக்குத் தெரியாதா?  நீதான் என் தெய்வம்.  நீதான் என் குல விளக்கு.  நீதான் என் ஆன்மாவின் கண்கள்.  இதெல்லாம் நான் சொல்லியா உனக்குத் தெரிய வேண்டும்?  நாம் இரண்டு பேரும்தான் கோயம்பத்தூர் போகிறோம்.  இப்போதே இரண்டு பேருக்கும் டிக்கட் போட்டு விடச் சொல்கிறேன்.  ஆனால் நீ எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும்.  பதினாறாம் தேதி மாலை ஏழரை மணி விமானத்தில் கிளம்பலாம்.  இன்னொன்றும் சொல்கிறேன்.  அந்த இரண்டு நாட்களும் என்னால் உன் கூடவே இருக்க முடியாது. 

யார் இருக்கச் சொன்னது?  நான் கோயம்பத்தூரே பார்த்ததில்லை.  நான் பாட்டுக்குப் போய் ஊர் சுற்றுகிறேன்.  ஒரு பிரச்சினையும் இல்லை.  மேலும், பூனைகளைப் பார்த்துக் கொள்ளத்தான் நம் பையன் வந்து விடுகிறானே, அதனால்தான் நானும் உன்னோடு கிளம்பலாம் என்று முடிவு செய்தேன்…

சரி, இன்னொன்றும் சொல்கிறேன்.  அங்கே எனக்கு இன்னாரைச் (பெயர்) சந்திக்க வேண்டும்.  சனிக்கிழமை அவரைப் பார்க்கப் போய் விடுவேன்.  நீ தடை ஒன்றும் சொல்லக் கூடாது.

யார் அவர்?

ஒரு ஆன்மீகவாதி.  (ஜக்கி அல்ல)

ஓ, கூடாது.  ஆன்மீகவாதி என்றால் உன் ஆன்மீக சக்தியையெல்லாம் உறிஞ்சி எடுத்து விடுவார்.  நான் விட மாட்டேன்.  நீ அவரைப் பார்க்கக் கூடாது.

பார்த்தாயா, ஆரம்பித்து விட்டாய்.  அவர் அப்படிப்பட்ட ஆள் அல்ல.

யாராக இருந்தாலும் அப்படித்தான்.  ஆன்மீகவாதிகள் அப்படித்தான் இருப்பார்கள்.  நீ அவரைப் பார்க்கக் கூடாது.  நான் விட மாட்டேன்.  அதோடு, நீ சனிக்கிழமை இரவு பத்து மணிக்கே படுத்து விட வேண்டும்.  அப்போதுதான் ஞாயிற்றுக்கிழமை விழாவில் நீ தூங்கி வழியாமல் இருப்பாய்.  ஏனென்றால், நீ தூங்கி வழிந்தால் அதற்கும் வேறு உன்னை நைய நையப் புடைப்பான்கள். எதற்கும் கவலைப்படாதே. நான் உன்னை கவனித்துக் கொள்கிறேன்.