கனவு, வைன், யோகா கதையில் விடுபட்டது

கனவு, வைன், யோகா என்ற நேற்றைய கதையில் விடுபட்ட சில பகுதிகளை இப்போது தருகிறேன். 

எனக்கு வரும் கனவுகளில் முக்கியமான இரண்டு கனவுகள் விடுபட்டு விட்டன.  ஒன்று, மனித நரகல் சம்பந்தப்பட்டது.  அதற்குக் காரணம், மெரீனா பீச்சும் என்னோடு பழகிய பெண்களும்.  நீங்களே கவனித்துப் பார்க்கலாம்.  ஓ, கவனித்துப் பார்க்கலாம் என்பதை அப்படியே அர்த்தப்படுத்திக் கொண்டு உற்று கவனித்தீர்களானால் வெளிநாடுகளில் உங்களைப் பிடித்து உள்ளே போட்டு விடுவார்கள்.  அதனால் கவனிக்காதது போல் கவனியுங்கள்.  பெண்கள் மட்டும்தான் கடல் அலைகளில் நனைவதையும் விளையாடுவதையும் விரும்புவார்கள்.  உலகம் பூராவும் அப்படித்தான்.  இந்தியாவில் என்றால் துணி நனைவது பற்றிக் கூட கவலைப்பட மாட்டார்கள்.  வெளிநாடுகளில் கடற்கரைகளில் டூ பீஸ் ட்ரெஸ்தான் என்பதால் துணி நனையும் பிரச்சினை இல்லை.  சர்வதேசப் பெண்களின் இயல்புக்கு ஏற்ப, என்னோடு பழகிய இந்தியப் பெண்களும் ஒருத்தர் பாக்கி இல்லாமல் கடல் அலைப் பிரியைகளாக இருந்ததால் நானும் அவர்கள் கூடச் செல்லும் அபாக்கியன் ஆனேன்.  ஏன் அபாக்கியன் என்றால், நான் கடல்கரை செல்லும் நேரம் காலை.  அப்போதுதான் அந்த அதிர்ச்சியான காட்சியைக் காண நேரிடும்.  கடல் அலை கரையைத் தொடும் இடத்துக்குப் பத்துப் பதினைந்து அடி தூரத்தில் நூற்றுக்கணக்கான ஆண்கள் வரீசையாக குத்துக் காலிட்டு மலம் கழித்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள்.  ஏற்கனவே கழித்தவர்களின் நரகலும் அலை கரையைத் தொடும் இட்த்தில் கன்னாபின்னாவென்று சிதறிக் கிடக்கும்.  இதையெல்லாம் கூடப் பொருட்படுத்தாமல் அலையில் விளையாடுவேன் என்று நிற்கும் பெண்களைப் பற்றி என்ன சொல்வது?  பதினெட்டிலிருந்து நாற்பத்தெட்டு வரை அப்படித்தான் இருக்கிறது.  சிருஷ்டி வினோதங்களில் ஒன்று என விட்டு விட வேண்டியதுதான்.

இதுதான் என் கொடுங்கனாக்களில் பிரதான இடம் வகிக்கிறது.  ஏனென்றால், மாதத்தில் ஏழு தினங்களாவது இந்தக் கனவு வந்து விடும். அப்படியே அச்சு அசலாக பீச் காட்சியாக வராது.  கனவுக்கும் சில அதிகாரங்கள் இருக்கின்றன அல்லவா, அவற்றைப் பயன்படுத்தி வெவ்வேறு விதமாக விளையாடும் நரகல் கனவு.  உங்களுடைய நலன் கருதி ஒன்றே ஒன்றை மட்டும் விளக்கி நகர்கிறேன்.  நான் ஒரு கக்கூஸுக்குள் இருப்பேன்.  வேலை முடிந்து வெளியே வர வேண்டும் அல்லவா, வெளியே கால் வைக்க இடமில்லாமல் மனித நரகல்.  நான் மனிதாபிமானி.  அதனால்தான் இந்த இடத்தில் scatologyக்கான நல்வாய்ப்பு இருந்தும் எழுதாமல் விடுகிறேன்.  விதவிதமான நரகல்கள்.  அதிலும் இந்தியர்களின் மலக்கழிவு இருக்கிறதே, வார்த்தைகளில் விளக்கினால் வாந்தி எடுத்து விடுவீர்கள்.  ஒரு இஞ்ச் இடமில்லாமல் பரவிக் கிடக்கும் நரகல்.  பலவித நிறங்களில்.  பலவித வடிவங்களில்.  வேண்டாம்.  நிறுத்திக் கொள்கிறேன்.  ஒரு அகோரி குரு இருந்தார்.  அவர் உண்மையான சாமியார் யார், பொய் சாமியார் என்பதைக் கண்டு பிடிப்பதற்காக அந்த சாமியாரின் மலத்தைத்தான் பரிசோதிப்பாராம்.  மலம் ஆட்டாம்புழுக்கை மாதிரி இருந்தால் உண்மைச் சாமியார், வேறு மாதிரி இருந்தால் (புரிந்து கொள்ளுங்கள்) போலிச் சாமியார்.  நம்முடைய ஆட்கள் சாப்பிடும் சாப்பாட்டுக்கு எங்கே ஆட்டாம்புழுக்கை மாதிரி இருக்கும்… உவ்வே உவ்வே என்று வாந்தி எடுத்தபடி விழித்து விடுவேன்.  கனவு எந்த அளவுக்குத் தத்ரூபமாக இருக்கும் என்றால், அந்தக் கொடூரமான நாற்றத்தை மிகத் தீவிரமாக என் நாசியில் உணருவேன். துர்நாற்றம் நாசியோடு நிற்காமல் கை கால் கண் கழுத்து வயிறு தொப்புள் ஆசனவாய் ஆண்குறி அக்குள் முழங்கால் முழங்கை கணுக்கால் விரல் என்று சகல உறுப்புகளிலும் பரவித் தொலையும்.  கனவு லாஜிக் பார்க்காது பாருங்கள், அதன் விளைவு.  பொறுக்க முடியாமல் போய் பெரும் உவ்வே சப்தத்தோடு எழுந்து கொள்வேன்.

ஏற்கனவே சொன்னேன், இந்தக் கனவு வெவ்வேறு சிச்சுவேஷன்களில் வெவ்வேறு மாதிரி வரும்.  ஆனால் முடிவு மட்டும் உவ்வே உவ்வேதான்.

இந்தக் கனவு மாதத்தில் ஒரு வாரம் என்றால், இப்போது சொல்லப் போகும் கனவு மாதம் ஒரு நாள் வரும்.  மைதுனக் கனவு.  தன்மைதுனக் கனவு அல்ல.  ஒரு பெண்ணோடு கொள்ளும் மைதுனம்.  எல்லா கனவுகளையும் போல் தத்ரூபமான கனவுதான்.  அதையும் கூட விவரித்துச் சொல்ல லஜ்ஜையாகிறது.  என்னதான் ஆட்டோஃபிக்‌ஷன் கதை என்றாலும், புத்தகத்துக்காக எழுதும்போது இன்னும் சுதந்திரமாக எழுத முடியும்.  இணையத்தில் எழுதும்போது சுதந்திரம் மட்டுப்படுகிறது.  முன்விளையாட்டு பின்விளையாட்டு என்று ஆரம்பம் முதல் முடிவு வரை – அதாவது, ’மகிழ்ச்சி முடிவு’ வரை கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து முடியும் கனவு.  மகிழ்ச்சி முடிவு என்று சொல்லியாகி விட்டது.  எப்படி ஈரத்தோடு தூங்குவது?  வேஷ்டியை மாற்றிக் கொண்டுதான் தூங்க வேண்டும்.  நல்லவேளை, ஸ்த்ரீ யார் என்று தெரியாது.  தெரிந்தால் நேராக உளவியல் நிபுணரிடம் போக வேண்டியதுதான்.  ஏடாகூடமாக உருவங்கள் வந்து தொலைத்தால் உத்தமமான மனசாட்சியோடு உலவ முடியுமா சொல்லுங்கள்?  ஸ்த்ரீ என்றுதான் தெரியுமே தவிர ஆள் அடையாளம் தெரியாது.  ஆனால் என்னவென்று சொல்வது, அணுஅணுவாக இரண்டு உடல்களும் இணையும் பாருங்கள், சர்ப்ப மைதுனம் தோற்றுப் போகும்.  நனவுக்கும் கனவுக்கும் வித்தியாசமே இல்லாமல் போனால் அப்புறம் நான் வாழும் வாழ்க்கையை என்னவென்று சொல்வது?

இதையெல்லாம் நான் இதுவரை ஒரு ஆத்மாவிடம் கூட சொன்னதில்லை.  ஆனால் ஆட்டோஃபிக்‌ஷன் கதையில் பொய் சொல்லக்கூடாது, எதையும் மறைக்கக் கூடாது என்பதால் சொல்லி விட்டேன். 

இன்னொன்று தெரியுமா? பேய் பிசாசுகளைப் போலவே கடவுள்களும் தேவதைகளும் பல எண்ணிக்கையில் இருக்கின்றனர் என்பது என் முடிவு. அப்படி ஒரு தேவதைதான் நித்ரா தேவி. நித்ரா தேவி என்று சும்மா சொல்ஜாலத்துக்காகச் சொல்வதல்ல.  நித்ரா தேவி என்று ஒரு தேவதை இருக்கிறாள்.  அவளுடைய கருணை எனக்குக் கிடைக்கவில்லை.  அதனால்தான் இப்படிப்பட்ட கனவுகளால் அலைக்கழிக்கப்படுகிறேன்.  எது எப்படிப் போனாலும், அது கடவுளாகவே ஆனாலும், கலைஞனிடம் தோற்றுத்தான் ஆக வேண்டும்.  அதனால்தான் கனவில் வரும் கவிதைகளையும் கதைகளையும் நான் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்.