கனவு, வைன், யோகா…

(ஒரு ஆட்டோஃபிக்‌ஷன் சிறுகதை.  ஆட்டோஃபிக்‌ஷன் கதை என்றாலும் சில சம்பவங்கள் முழுக் கற்பனை.  யாரையும் எதையும் குறிப்பிடுவன அல்ல!) 

இன்று சௌந்தர் ஃபோன் செய்து “யோகா பயிற்சிகள் செய்வதற்கு நேரம் இருக்கிறதா?  செய்கிறீர்களா?” என்று விசாரித்தார்.  அதற்கான பதிலைத்தான் இப்போது எழுதிக் கொண்டிருக்கிறேன்.

கொக்கரக்கோ தன்னுடைய ஒரு பிரச்சினையைப் பற்றி என்னிடம் சொல்லியிருக்கிறான்.  இல்லை, அது அவனுக்குப் பிரச்சினை இல்லை.  அதை நான்தான் பிரச்சினையாக நினைக்கிறேன். அவன் உறங்கச் செல்வது அதிகாலை நான்கு மணிக்கு.  எழுந்து கொள்வது மதியம் பன்னிரண்டு. இதனால் அவனுக்குப் பிரச்சினை இல்லை.  பிரச்சினை எனக்குத்தான்.  என் வீட்டில் கொக்கரக்கோவுடன் பேசுவதற்குத் தடை இருப்பதால் வெளியே நடைப் பயிற்சிக்குப் போகும்போதுதான் அவனோடு பேச முடியும்.  அப்போது அவன் கடும் உறக்கத்தில் இருப்பான். 

எல்லோரும் இரவில்தான் தூங்க வேண்டும் என்று ஏதாவது சட்டம் இருக்கிறதா என்ன?  ஏதோ ஒரு நேரத்தில் எட்டு மணி நேரம் தூங்க வேண்டியதுதான்.  இதெல்லாம் ஒரு பிரச்சினையா?  எனக்குப் பெரிதாக ஒன்றும் நஷ்டம் இல்லை.  நான் என்ன அவனுடைய பிஸினஸ் பார்ட்னரா?  நான் பேசினால் அப்படி என்ன பேசப் போகிறேன்?  ஏதாவது ஒரு ஊருக்கு டிக்கட் போடச் சொல்வேன்.  இல்லாவிட்டால், சென்னையில் நல்ல நான்வெஜ் சாப்பாடு எங்கே கிடைக்கும் என்று கேட்பேன். இல்லாவிட்டால் கம்ப்யூட்டரில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்குத் தீர்வு கேட்பேன்.  இதையெல்லாம் மற்றவர்களால் சரிவர செய்ய முடியவில்லை என்பது என் அனுபவம். ஒன்றுமில்லை, சமீபத்தில் மேக்புக்கில் டவுன்லோடு ஆகியுள்ள சில புகைப்படங்களை என் ப்ளாகில் பதிவேற்ற வேண்டும்.  அதைச் செய்ய முடியவில்லை.  அப்போது முன்மதியம் பதினொன்று.  எதற்கும் இருக்கட்டும் என்று கொக்கரக்கோவுக்கு ஃபோன் போட்டேன்.  ம்ஹும், சத்தமே இல்லை.  மனோ என்னைப் போல் அதிகாலையிலேயே எழுந்து விடுவார்.  அழைத்தேன்.  பிரச்சினையைச் சொன்னேன்.  அதற்கு அவர் சொன்ன பதில், பௌதிகத்தில் நோபல் பரிசு பெற்ற ஒரு பௌதிக விஞ்ஞானி தன்னுடைய புதிய ஆய்வை மற்ற பௌதிக விஞ்ஞானிகள் மத்தியில் விவாதிப்பது போல் இருந்தது.  நானும் ஒரு விஞ்ஞானியாக இருந்தால் பிரச்சினையே இல்லை.  இன்னொன்று, நானும் விஞ்ஞானியாக இருந்தால் ஏன் மனோவுக்கு ஃபோன் போடப் போகிறேன்?  மொத்தத்தில் மனோ பேசியது கிரீன்லாந்து பனிப் பிரதேசவாசிகள் பேசும் மொழியில் பேசியது போல் இருந்தது.  அந்த மொழிதான் உலகிலேயே மிகவும் கடினமான மொழி என்கிறார்கள்.  புரிகிறதுதானே சாரு என்று வேறு கடைசியாகக் கேட்டார் மனோ.  மனசுக்குள் ஒரு கெட்ட வார்த்தை சொல்லி என்னைத் திட்டிக் கொண்டே, “சே, இதில் புரிவதற்கு என்ன இருக்கிறது மனோ, பக்கா” என்று சொல்லி ஃபோனை வைத்து விட்டேன்.  இனிமேல் மனோவிடம் எந்த சந்தேகமும் கேட்கக் கூடாது என்றும் முடிவு செய்து கொண்டேன். 

இரண்டு மணிக்கு கொக்கரக்கோவிடமிருந்து ஃபோன்.  விஷயத்தைச் சொன்னேன்.  Wetransfer என்ற ஒன்றை அறிமுகப்படுத்தினான்.  அவன் சொன்னபடியே செய்தேன்.  புகைப்படங்கள் என் மின்னஞ்சலுக்கு மாறின.  மின்னஞ்சலிலிருந்து டவுன்லோடு செய்தேன்.  ஆனால் டவுன்லோட் செய்ததை ப்ளாகில் கொண்டு வர முடியவில்லை.  ஏதோ ஒன்றை நான் செய்தாக வேண்டும் என்று அறிவிப்பு வந்தது.  அது என்ன என்றும் புரிந்து கொள்ள முடியவில்லை.  புரிந்தால்தானே அதன்படி செய்ய முடியும்?  அதற்கும் ஏதோ ஒன்றை செய்யச் சொன்னான் கொக்கரக்கோ.  இன்னொரு நாள் டீம்வ்யூவர் மூலம் செய்து கொள்ளலாம் என்று ஒத்தி வைத்து விட்டேன்.  என் மூளை ரொம்பவும் களைத்து விட்டது. அப்போதைக்கு என் மின்னஞ்சலில் உள்ள புகைப்படங்களை ராஜா வெங்கடேஷுக்கு அனுப்பி அவர் மூலம் பதிவேற்றம் செய்தாகி விட்ட்து.  விஷயம் அது பற்றி அல்ல.  நானும் கொக்கரக்கோவும் வீட்ரான்ஸ்ஃபர் வேலையைச் செய்து கொண்டிருந்த போது நான் உபயோகித்துக் கொண்டிருந்தது மேக்புக்.  ஏனென்றால், அதில்தான் புகைப்படங்கள் டவுன்லோட் ஆகியிருந்தன.  ஆனால் வீட்ரான்ஸ்ஃபரை டவுன்லோட் செய்யும் வேலையை நான் என் கைபேசியில் செய்து கொண்டிருந்தேன்.  ஏன் திகைக்கிறீர்கள்? புரியாத ஆளாக இருக்கிறீர்களே?  கொஞ்சமாவது யோசிக்க வேண்டாமா? நான் கொக்கரக்கோவிடம் கைபேசியில்தானே பேசிக் கொண்டிருக்கிறேன்?  அப்படியானால் மூளையுள்ள எவனும் வீட்ரான்ஸ்ஃபரை எதில் டவுன்லோட் செய்வான்?  மேக்புக்கிலா?  பைத்தியக்காரனா நான்?  ரொம்ப நேரம் கழித்துத்தான் கொக்கரக்கோவுக்கு வீட்ரான்ஸ்ஃபரை நான் கைபேசியில் இறக்கியிருக்கிறேன் என்பதே புரிந்தது.  அடப்பாவி, இப்படி ஒரு மனிதர் செய்யக் கூடும் என்றே நான் கற்பனை செய்யவில்லையே?  உங்களைப் பற்றி அணு அணுவாகத் தெரிந்து வைத்திருக்கும் என்னையே ஏமாற்றி விட்டீர்களே என்றான். அப்போதுதான் அவன் சொல்வதிலும் லாஜிக் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டேன்.  அதாவது, நானும் அவனும் கைபேசி மூலம் பேசிக் கொண்டிருந்தாலும், மேக்புக்கில் உள்ள புகைப்படங்களை நான் டெஸ்க்டாப்புக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்ய வேண்டும் என்றால், நாங்கள் இருவரும் கைபேசியில் பேசிக் கொண்டிருந்தாலும் வீட்ரான்ஸ்ஃபரை கைபேசியில் டவுன்லோட் செய்யலாகாது, மேக்புக்கில்தான் செய்ய வேண்டும். 

ஆ, எத்தனை பெரிய மகத்தான உண்மை! 

சே, எழுதுவதற்கே இத்தனை பெருமூச்சு வருகிறதே, இதை அனுபவம் கொண்ட நான் எவ்வளவு சிரமப்பட்டிருக்க வேண்டும்!       

ஆனால் இப்போதைய பிரச்சினை என் மூளைத் திறன் பற்றியது அல்ல, கொக்கரக்கோவின் உறக்கத்தைப் பற்றியது இல்லையா?  அவன் உறங்கும் நேரம் அசாதாரணமானதாக இருந்ததால் மற்றவர்கள் அவனைத் தொடர்பு கொள்ள சிரமப்படுவதைக் கண்டு   தன் உறக்க நேரத்தை மாற்ற முயற்சி எடுத்தான்.  

அவனுடைய இந்த அசாதாரணமான உறக்க நேரம் அவன் புனேயில் ஒரு நிறுவனத்தில் செய்த வேலையால்தான் வந்ததாம்.  அந்த வேலை இரவு இரண்டு மணிக்குத்தான் முடியுமாம்.  அதற்கு மேல் அவன் தங்கியிருக்கும் அறைக்கு வந்து உறங்குவதற்குள் நான்கு ஆகிவிடும்.  அதுதான் அதற்குப் பிறகு அவனுடைய நிரந்தர உறக்க நேரமாக ஆகிப் போனது.

ஆனானப்பட்ட ஆயுர்வேதத்தினால் கூட அவனுடைய உறக்க நேரம் மாறவில்லை.  முதலில் அஸ்வகந்தாவைக் கொடுத்தார் மருத்துவர்.  அப்புறம் மானஸ மித்ரா.  எதுவும் உதவவில்லை. ஒருநாள் நான் மானஸ மித்ராவைப் போட்டுப் பார்த்தேன்.  செம தூக்கம். 

இங்கேதான் என்னுடைய தூக்கம் பற்றிச் சொல்ல வேண்டும்.  நான் என்றைக்குமே ஒரு மனிதனுக்குத் தேவையான அளவு தூங்கியதில்லை என்று தோன்றுகிறது.  அதே சமயம், தூக்கத்தின் அளவு ஒவ்வொரு மனிதருக்கும் வேறுபடும் என்றும் நினைக்கிறேன்.  சாதாரண மனிதர்கள் எட்டு மணி நேரம் தூங்குகிறார்கள். ஏன், எனக்குத் தெரிந்த இளவட்டப் பசங்கள் எல்லோருமே பத்து மணி நேரம் தூங்குகிறார்கள்.  சரி, ரமணர் எட்டு மணி நேரம் தூங்கினாரா?  வேண்டாம், துறவிகளின் கணக்கே தனி.  அவர்களை நம்மைப் போன்றவர்களோடு சேர்க்கலாகாது.  என் வாழ்க்கையை இருபத்தைந்து வயதுக்கு முன், இருபத்தைந்துக்குப் பின் என இரண்டு பகுதியாகப் பிரிக்கலாம்.  இருபத்தைந்து வயது வரை அம்மாவின் சேவையில் ஒரு பாதுஷாவைப் போல், ஒரு பேரரசனைப் போல் வாழ்ந்தேன்.  அப்போதும் இரவு பன்னிரண்டு மணிக்குப் படுத்து நான்கு மணிக்கு எழுந்து விடுவேன்.  பகலில் தூங்கிப் பழக்கமே இல்லை.  இந்த எழுபது வயது வரை பகலில் ஒருநாளும் தூங்கியதில்லை.  எங்கேயாவது வெளியூருக்குப் போய் வைன் குடித்தால் காலையில் ஐந்து மணிக்குத் தூங்கப் போய் ஒன்பது மணிக்கு எழுவேன்.  அந்த நான்கு மணி நேரமும் அடித்துப் போட்டது போல் தூங்குவேன்.

இல்லை என்கிறார் மனோ.  பொதுவாக வெளியூர் செல்லும் போது கொக்கரக்கோதான் என் அறைவாசி.  ஆனால் காலையில் எட்டு மணிக்கு எழுந்த்தும் எனக்குக் கொலைப்பசி பசிக்கும், நாங்களோ எங்காவது வனப்பகுதியில்தான் தங்குவோம், பசியாற எதுவும் இருக்காது, கொக்கரக்கோ மதியம் எழுந்து கொள்ளும் வரை கொலைப்பசியிலேயே கிடக்க வேண்டும் என்பதால் இந்த முறை தாய்லாந்து சென்ற போது என் அறைவாசியாக மனோ வந்தார். 

அவர் குடிக்காதவர் என்பதால் சீக்கிரமே எழுந்து கொள்வார்.  ஆனால் குடிக்காதவர்களோடும் இனிமேல் சேரக் கூடாது என்று ஒருநாள் முடிவு செய்தேன்.  காலையில் ஐந்து மணிக்குப் படுத்தோம்.  எட்டு மணிக்கு எழுப்பிய மனோ சாப்பிடப் போகலாமா என்றார். 

வேண்டாம் மனோ என்று சொல்லி விட்டு உள்ளுக்குள் ரத்தக் கண்ணீர் விட்டபடி அப்படியே பத்து மணி வரை புரண்டு கொண்டிருந்தேன்.  ஏன் ரத்தக் கண்ணீர்?  இதுவரை என்னை யாருமே உறக்கத்திலிருந்து எழுப்பியதில்லை.  காலை நான்கு மணிக்கும் ஐந்து மணிக்கும் எழுந்து கொள்ளும் ஆளை யார் எழுப்ப முடியும்?  என்ன பிரச்சினை என்றால், நான் எழுந்து விட்டால் அப்புறம் தூக்கம் வராது.  மனோ என்னை எட்டு மணிக்கு எழுப்பி விட்ட போது கண்களெல்லாம் திகுதிகு என்று எரிந்தன.  ஆனால் தூக்கம் மறுபடியும் வரவில்லை. 

அப்புறமாக அந்த விஷயத்தை நாங்கள் அனைவரும் போஸ்ட்மார்ட்டம் செய்த போது என்னுடைய காலை கொலைப்பசி அந்த அளவுக்கு மற்றவர்களைக் கலவரப்படுத்தியிருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டேன்.  என்னய்யா இது, எழுப்பினாலும் திட்டுகிறார், எழுப்பவில்லை என்றாலும் திட்டுகிறார் என்றார் மனோ. 

சேச்சே, எழுப்பவில்லை என்பதற்காக என்றுமே திட்டியதில்லை,  காலை உணவுக்கு வழியே இல்லை என்றால்தான் புலம்புவேன் என்றேன்.  மற்றும், என்னை ஒருபோதும் யாரும் எழுப்பாதீர்கள் என்றும் ஒரு வேண்டுகோளையும் போட்டு வைத்தேன். 

பலருக்கும் படுத்தவுடன் உறக்கம் வராது.  புரண்டு புரண்டு படுப்பார்கள்.  காலை வரை புரண்டு கொண்டிருக்கும் கிராக்கிகளும் உண்டு.  சே, சரியாவே தூங்கலப்பா என்று புலம்பும் பல பெண்டிரைப் பார்த்திருக்கிறேன்.  எனக்கு அப்படி அல்ல.  படுத்த அடுத்த நொடி தூக்கம்தான்.  ஆனாலும் நான் என் வாழ்நாளில் ஒரு நாள் கூட முழுமையாகத் தூங்கியதில்லை. 

இருபத்தைந்து வயது வரை இரவில் ஒருமுறை எழுந்து சிறுநீர் கழிக்கப் போவது வழக்கமாக இருந்தது.  வீட்டுத் திண்ணையில்தான் படுத்துக் கொள்வோம்.  நானும் தம்பியும்.  திண்ணையிலிருந்து எழுந்து கீழே போய் தெருவிலேயே சிறுநீர் கழித்து விட்டு வந்து விடுவோம்.  வீட்டில் கழிப்பறை கிடையாது.  இதற்கு ஏன் தம்பியும் என்றால், எங்கள் ஊரில் பேய் பிசாசுகள் ஜாஸ்தி.  ஒரு ஆள் கூட இருந்தால் பேய் அண்டாது என்று ஒரு மூட நம்பிக்கை. 

இருபத்தைந்து வயதுக்கு மேல் நகர வாழ்க்கை.  நகரங்களில் பேய்கள் வசிப்பதில்லை.  ஆனால் சிறுநீர் கழிப்பதற்கு இரண்டு முறை எழுந்து கொள்ள நேர்ந்தது.  இதுவே அறுபது வயதுக்கு மேல் மூன்று முறை என்று ஆனது.  ஆனால் பகலில் இப்படிப் போவதில்லை.  நண்பர்களோடு காரில் போகும்போது வழியில் காஃபி கடையில் நிறுத்தும் போது நண்பர்கள் கழிப்பறை செல்வார்கள்.  எனக்குத் தேவையிருக்காது.  ஆனால் இரவில் மூன்று முறை.  அந்த மூன்று முறையும் உறக்கம் கெடும்தானே?  அதனால் கண்களை மூடியபடியே சென்று விட்டு கண்களை மூடியபடியே வந்து படுத்துக் கொள்வேன்.  தூக்கம் கலையாது. 

இதயப் பரிசோதனைக்காக மருத்துவரிடம் சென்ற போது உங்கள் சிறுநீரகத்தையும் சோதிக்க வேண்டும் என்றார்.  அதற்கு ஒரு ஸ்பெஷலிஸ்ட்.  போனேன்.  படுங்கள் என்றார். கழற்றுங்கள் என்றார்.  ஐயோ.  இப்படியென்று தெரிந்திருந்தால் நன்கு சவரம் செய்து கொண்டு வந்திருப்பேனே?  இப்போதெல்லாம் பெண் சகவாசம் இல்லை என்பதால் அப்படியே விட்டு விட்டேன்.  தப்பாகப் போயிற்று.  பெண் சகவாசம் இருக்கிறதோ இல்லையோ, நாம் சுத்தமாக இருக்க வேண்டாமா என்று மனதுக்குள் திட்டிக் கொண்டேன்.  ஆனால் மருத்துவருக்கு இதெல்லாம் சகஜம் போல.  கண்டு கொள்ளவே இல்லை.  எப்படியெப்படியோ சோதித்து விட்டு இன்னொரு சோதனைக்கு எழுதிக் கொடுத்தார்.  அதுதான் பயங்கரம்.  அது ஒரு பெண் மருத்துவர்.  அடி வயிற்றில் கை வைத்து – கையில் உறை போட்டிருந்தார்தான் – ஏதோ பண்ணினார். எனக்கு விரைப்பு ஏற்பட்டு விட்டது.  என்ன ஒரு விபரீதம்.  ஆண் ’அந்த’ இடத்தையே தொட்டார்.  ஒன்றும் ஆகவில்லை.  பெண் வயிற்றைத் தொட்டதுமே இப்படி ஆகி விட்ட்தே என்று வருந்தினேன்.  ஆனால் அந்த மருத்துவர் அதைக் கண்டு கொள்ளவில்லை என்பதால் தப்பினேன்.  அடுத்த சோதனைதான் எல்லாவற்றையும் விடக் கொடுமை.  சிறுநீர் கழியுங்கள் என்று சொல்லி விட்டு பரிசோதகர் பக்கத்திலேயே நின்றார்.  யோவ், இவ்வளவு பக்கத்தில் நின்றால் எப்படி ஐயா சிறுநீர் கழிக்க முடியும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு, அப்பால் செல்லுங்கள் என்றேன்.  சென்றால் சோதிக்க முடியாதே என்றார்.  பிறகு உனக்கும் இல்லை, எனக்கும் இல்லை என்று நடுவாந்திரமாக சமரசம் செய்து கொண்டு காரியத்தை முடித்தோம்.  எவ்வளவு நேரம் சிறுநீர் விடுகிறேன், எவ்வளவு வேகம் என்பதையெல்லாம் கணக்குப் பார்க்க வேண்டுமாம்.

மீண்டும் சிறுநீரக மருத்துவரிடமே வந்தேன்.  இரவில்தான் மூன்று முறை சிறுநீர் போகிறேன், பகலில் நன்றாகத்தானே இருக்கிறேன் என்றேன்.  ம்ஹும்.  இரவிலும் பகலைப் போலவேதான் இருக்க வேண்டும், இல்லாவிட்டால் அது அசாதாரணம், அதை சரி பண்ண வேண்டும் என்றார் மருத்துவர்.  அவர் சொன்னபடியே அதற்கான மாத்திரை Urimax Dஐயும் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். 

சிகரெட் அட்டைகளில் மண்டையோடு போட்டிருக்கும், பார்த்திருக்கிறீர்களா?  அந்த மாதிரி மண்டை ஓடு எல்லாம் இல்லை.  என்றாலும் அந்த மாத்திரையில் ஒரு எச்சரிக்கை வாசகம் போட்டிருந்தது.  இந்த மாத்திரை முழுமையான நபும்சகத்தன்மைக்கு இட்டுச் செல்லும்.  ஆகா, ஒரு மாத்திரை ஐம்பது ரூபாய் என்றதுமே பெரும் வீரியமான மாத்திரையாக இருக்கும் போலிருக்கிறதே என்று யோசித்தேன்.  பார்த்தால் வீரியத்தையே காலி பண்ணி விடும் போலிருக்கிறதே?

மற்ற சமயமாக இருந்திருந்தால் அதை அந்தக் கணமே தூக்கி எறிந்திருப்பேன்.  ஆனால் இப்போது பெண் சகவாசம் எதுவும் இல்லை.  அதனால் நபும்சகத்தன்மை பற்றியும் கவலையில்லாமல் ஆயிற்று. 

வேண்டுமென்றேதான் அப்படி ஆக்கிக் கொண்டேன்.  பின்னே என்ன?  பெண்களோடு பழகுவதை விட பேய் பிசாசுகளோடு பழகுவது சுலபம்.  முதலில் Your happiness is my happiness என்றுதான் ஆரம்பிக்கிறார்கள்.  ஆனால் கொஞ்ச காலத்திலேயே அந்த முதல் எழுத்து ஒய்யை அடித்து விட்டு Our happiness is my happiness என்று தகிடுதத்தம் செய்கிறார்கள்.  அந்த அளவோடு நிறுத்தினாலும் பரவாயில்லை.  இன்னும் கொஞ்ச நாள் போனால், My happiness is your happiness என்று முழுப் பிசாசாக மாறி விடுகிறார்கள்.

இன்னொரு பிரச்சினை என்னவென்றால், பல சமயங்களில் அவர்களோடு பழகுவது ஏதோ செவ்வாய் கிரக ஜீவிகளோடு பழகுவது போல் உள்ளது.  உதாரணம்:

ஒரு தோழி (கேர்ள் ஃப்ரெண்ட்தான்) “எனக்குத் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்ப்பா” என்றாள்.

உடனே அது எத்தனை பாவ காரியம் என்று விளக்கினேன். 

ஒரு மாதம் கழித்து மீண்டும் அதே பேச்சை எடுத்தாள்.  அதற்கான நியாயங்களையும் விளக்கினாள். 

நான் மீண்டும் வேறு வேறு தர்க்கங்களைக் கூறி தற்கொலை மிகப் பெரிய தீங்கை விளைவிக்கும் என்றேன். 

”நான்தான் செத்து விடுவேனே, அப்புறம் என்ன தீங்கு?” என்றாள். 

”அட, உனக்கு இல்லடீ… உன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு… எனக்கு… எல்லாரும் என்ன சொல்வான்?  இவனோடு பழகினாள் அல்லவா, செத்தாள் என்று என்னைத்தான் உன் சாவுக்குக் காரணமாகச் சொல்வான்… வேண்டாம்…”

“அப்படியானால் நான் செத்தால் உங்களுக்குப் பரவாயில்லை.  உங்கள் பெயர் கெட்டு விடும்.  அதுதான் பிரச்சினை?”

“சேச்சே… அப்படியில்லை…”

அதற்குப் பிறகும் ஒரு மாதம் கழித்து மீண்டும் தற்கொலைப் பேச்சு.  நானும் மறுப்பு உரை.  இப்படியே ஆறு ஏழு முறை நடந்ததும் ஒருநாள் கடுப்பான நான் “செய்து தொலை” என்று சொல்லி விட்டேன்.

அவளும் மாத்திரைகளை முழுங்கி விட்டாள்.  ஆனால் மாத்திரை அளவு போதவில்லை போல.  பிழைத்துக் கொண்டாள்.  விசாரணை வந்தது.  இன்னார்தான் சொன்னார் செத்துத் தொலை என்று.  அதனால் போட்டுக் கொண்டேன்.

எப்படியிருக்கிறது கதை?

அப்புறம் நானே போய் அவள் காலில் கையில் விழுந்து அரற்றி ஓராயிரம் மன்னிப்புக் கேட்டு அவள் ஸ்டேட்மெண்ட்டை மாற்றிக் கொடுத்தாள்.  நானும் பிழைத்தேன்.

நீங்களே சொல்லுங்கள், இனிமேலும் ஒருத்தன் ஒரு பெண்ணுடன் பழகுவான்? 

Urimax D என்ன, அதை விட பயங்கரமான மாத்திரை என்றாலும் பரவாயில்லை, கொடுங்கள் டாக்டர், போட்டுக் கொள்கிறேன்.

ஆனால் இதெல்லாம் கூட சின்ன விஷயம்தான். கனவுதான் பெரிய பிரச்சினை.  ஏனென்றால், சில கனவுகள் என் உயிர்க்கொல்லியாகக் கூட இருந்து விடக் கூடிய சாத்தியங்களைக் கொண்டிருந்தன.  கடந்த முப்பது ஆண்டுகளாக ஒருநாள் கூட நிம்மதியாகத் தூங்கியதில்லை. கனவு கனவு கனவு. பல தினங்களில் உயிர் கொல்லும் கனா.  சில சமயங்களில் இனிய கனா. 

சும்மா வார்த்தைக்காக சொல்லவில்லை.  உண்மையிலேயே உயிர் கொல்லும் கனாதான். 

ஒரு பெரிய கூட்டம் என்னைக் கொல்வதற்காக கையில் ஆயுதங்களுடன் நின்று கொண்டிருக்கும்.  நான் அவர்களின் காலில் விழுந்து உயிர்ப் பிச்சை கேட்டுக் கொண்டிருப்பேன்.  கதறிக் கதறி அழுவேன்.  ”நான் உயிருக்காக அஞ்சவில்லை.  இப்போதே சாகத் தயார்.  பாதிப் பாதி முடித்து வைத்திருக்கும் தியாகராஜா நாவலையும், அசோகா நாவலையும் முடித்த பிறகு நீங்கள் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்” என்று கதறுவேன். இந்த நாடகம் ஒரு மணி நேரம் ஓடிக் கொண்டிருக்கும். கடைசியில் விழித்து எழும்போது என் தேகமெல்லாம் வியர்வையில் நனைந்து கிடக்கும்.  இத்தனைக்கும் ஏசி அறை.  கனவு கனவாகத் தெரியாது.  தத்ரூபமாக நடந்ததாக இருக்கும்.

எங்கோ ஒரு பேர் தெரியாத தேசத்தில் பாஸ்போர்ட் கைபேசி எல்லாவற்றையும் தொலைத்து விட்டு தெருத் தெருவாக அலைந்து கொண்டிருப்பேன்.  அப்போது பயத்தில் என் நெஞ்சு விம்மி விம்மி எழுவதைக் காண்பேன்.  இப்படித்தான் பலரும் உறக்கத்திலேயே மாரடைப்பு வந்து சாகிறார்கள் என்று கூட கனவிலேயே தெரியும். 

சில சமயம் – இல்லை, பல சமயம் – பேய்கள் என்னைத் துரத்துவது போல் கனவு வரும்.  அப்போது நானே ஒரு பேய் போல் கத்துவேன்.  நான் கத்துவது எனக்கே தெரியும்.  கத்திக் கத்தி விழித்து விடுவேன்.  நான் பல காலமாக தனியறையில் தூங்குவதால் என் பத்தினிக்கு இது எதுவும் தெரியாது.  எனக்கு ஏசி வேண்டும்.  அவளுக்கு ஏசி போட்டால் ஜுரம் வந்து விடும்.  அதனால்தான் தனியறை. 

சமீபத்தில் தாய்லாந்து சென்றிருந்த போது மனோதான் என் அறைவாசியா?  என் பேய் சத்தத்தைக் கேட்டு மிரண்டு போய் எழுந்திருந்திருக்கிறார்.  அப்புறம் ஒரு மணி நேரம் தூங்கவே இல்லையாம்.  எனக்குமே காலையில் அவர் சொன்னபோது நான் அப்படி பேய் போல் கத்தியது ஞாபகம் இருந்தது.  நான் ஏன் பேய் போல் கத்துகிறேன் என்றால், பேய்கள் என்னைத் துரத்துவதால்தான்.  சொன்னால் மற்றவர்கள் நம்ப மாட்டார்கள் என்று நினைத்து, நான் கத்துவதைப் பதிவு செய்து வைத்திருந்தார் மனோ.  அச்சு அசல் பேய் கத்துவது போலவே இருந்தது.  என்ன மொழி என்று தெரியாத ஒரு அமானுஷ்யமான சப்தம்.  அது சப்தம் கூட இல்லை.  ஏதோ ஒரு பேய் மொழியில் அரற்றுகிறேன்.  கத்துகிறேன்.   

இப்படியே கடந்த முப்பது ஆண்டுகளாகக் கனவுகள் துரத்தத் துரத்தத்தான் தூங்கிக் கொண்டிருக்கிறேன்.

ஆனாலும், கனவுகளிலிருந்து தப்பிக்க இரண்டு உபாயங்கள் உள்ளன.  ஒன்று, வைன்.  இரண்டு, மானஸ மித்ரா. இந்த இரண்டில் எது ஒன்றை எடுத்துக் கொண்டாலும் கனவில்லாத உறக்கம் உத்தரவாதம்.  இருந்தாலும் இரண்டையுமே நான் பின்பற்றவில்லை.  வைன் என் வீட்டில் தடை செய்யப்பட்டிருக்கிறது.  அப்படியே தடை செய்யப்படவில்லை என்றாலும் நான் எடுத்துக் கொள்ள முடியாது.  ஏனென்றால், எல்லா விஷயத்திலும் நான் ஒரு ஐரோப்பியனைப் போல் வாழ்ந்தாலும் குடி விஷயத்தில் மட்டும் அரை ஐரோப்பியன் அரை இந்தியனாக இருக்கிறேன். இந்தியர்கள் வன்மதுப் பிரியர்கள்.  ரம், விஸ்கி, பிராந்தி, வோட்கா இப்படித்தான் குடிப்பார்கள்.  எந்த இந்தியரும் விருப்பத்துடன் வைன் அருந்தி நான் பார்த்ததில்லை.  எல்லாம் வைன் ஷாப் என்ற பெயரோடு சரி.  நான் வைன் விஷயத்தில் ஐரோப்பியன்.  வைன்தான் எனக்குப் பிடித்தமானது.  ஆனால் அரை இந்தியனும் வரும் இடம் எதுவென்றால், ஒரு கிளாஸ் ரெண்டு கிளாஸ் அருந்தினால் நலம்.  நானோ ஒரு பாட்டில் ரெண்டு பாட்டில் குடிப்பேன். 

Ton Sai தீவில்

சரி, பாதுகாப்பாக மானஸ மித்ராவை எடுக்கலாமே என்று கேட்டால், என் கனவின் இன்னொரு பக்கத்தை நான் உங்களிடம் சொல்ல வேண்டும்.

எனக்கு வருவது கொடுங்கனா மட்டும் இல்லை.  நாலு கொடுங்கனா என்றால் ஒரு நல்ல கனாவும் வரும்.  நல்ல கனா என்றால்?  என்னுடைய நாவல் ஒன்றில் கால் பாகம் கவிதையாகவே இருக்கும்.  அது எல்லாமே எனக்குக் கனவில் வந்தவைதான்.  தூங்கும் போது பக்கத்திலேயே பேப்பரும் பென்சிலும் இருக்கும்.  இருட்டிலேயே அமர்ந்து கிறுக்கி விட்டுப் படுப்பேன்.  லைட்டையெல்லாம் போட்டால் தூக்கம் போய் விடும்.  காலையில் எழுந்து பார்த்தால் கிறுக்கலிலிருந்து கவிதையை எடுத்து விட முடியும்.  சமயங்களில் கிறுக்கல் புரியாத அளவுக்கு இருந்தால் விட்டு விடுவேன்.  என் கையெழுத்து அழகாக இருக்கும் என்பதால் அநேகமாக கிறுக்கல்கள் புரிந்து விடும். 

சமயங்களில் எனக்கு துப்பறியும் கதைகள், பேய்க் கதைகள் எல்லாம் கூட கனவில் வரும்.  கதை சீராக இருக்கும்.  ரொம்பப் பாங்காக இருக்கும்.  நனவில் நான் எழுதும் நான் – லீனியர் கதைகள் போல் இருக்காது.  காலையில் கூட ஞாபகத்தில் நிற்கும். 

சென்ற வாரம் எனக்கு வந்த கனவில், டிசம்பர் பதினெட்டாம் தேதி விஷ்ணுபுரம் விழாவில் நான் உரையாற்றுகிறேன்.  ஆஹா, என்ன மாதிரி உரை.  இதுவரையிலான என் பேச்சுக்களிலேயே ஆகச் சிறந்த பேச்சு அது.  காலையில் எழுந்தும் கூட வார்த்தை வார்த்தையாக ஞாபகம் இருந்தது.  குறித்து வைத்துக் கொள்ள விரும்பினேன்.  ஆனாலும் எனக்கே தெரியாத ஏதோ காரணத்தால் விட்டு விட்டேன்.

இப்படிப்பட்ட அபூர்வமான கனவுகளுக்காகத்தான் கனவில்லாத உறக்கத்தைத் தேர்ந்தெடுக்கவில்லை.  இப்போது ஒரு நான்கு நாட்களாகக் கனவே இல்லை.  அடித்துப் போட்டாற்போல் தூங்குகிறேன்.  இரண்டு மூன்று முறை சிறுநீர் கழிக்க எழுந்து கொள்கிறேன்.  ஆனால் கனவு இல்லை.  அறவே இல்லை.  காரணம், சௌந்தர் கற்பித்த யோகா.