ஆயிரத்துத் தொள்ளாயிரத்து எழுபதுகளின் இறுதியிலும் எண்பதுகளின் ஆரம்பத்திலும் நான் எப்படி இருந்தேனோ அம்மாதிரியான உணர்ச்சிக் குவியலில், உணர்ச்சிக் கொந்தளிப்பில் திக்குமுக்காடிக் கொண்டிருக்கிறேன். எந்த அளவுக்கு என்றால், இந்தக் கணம் வரை எலான் மஸ்க் யார் என்றோ அவர் பெயர் ஏன் இப்படி அடிபடுகிறது என்றோ தெரியவில்லை. முந்தாநாள் வரை எலான் மஸ்க் ஒரு வாசனைத் திரவியம் என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். பிறகுதான் அது ஒரு மனிதர் என்று தெரிந்தது. அவர் ஒரு வலதுசாரி என்றும் ஒரு புதுவகை வாசனைத் திரவியம் கண்டு பிடித்திருக்கிறார் என்றும் கூட அமெரிக்காவிலிருந்து என் சிநேகிதி ஒருவர் வாட்ஸப்பில் சொல்லியிருந்தார். கூடவே, நடப்பு விஷயங்களில் கூர்மையான அறிவு நிரம்பியிருக்கும் உங்களுக்கா எலான் மஸ்க்கைத் தெரியாது, பொய் சொல்லுகிறீர்கள் என்றும் சொன்னார்.
நான் இப்போது உங்களுக்கு ஒரு புத்தகத்தின் கதையைச் சொல்லப் போகிறேன். அதைக் கேட்டால் ஏன் எனக்கு நடப்பு உலகம் பற்றித் தெரியவில்லை என்று நீங்கள் புரிந்து கொள்ளலாம்.
இப்படி ஒரு புத்தகத்தை நான் என் வாழ்நாளில் வாசித்தது இல்லை. 160 பக்கம்தான். ஆனால் அதில் உள்ள ஊர்களையெல்லாம் யூட்யூபில் போட்டுப் பார்த்து, அந்த ஊர்களிலேயே வாழ்ந்து திரிந்ததால் புத்தகத்தை முடிக்க மூன்று தினங்கள் ஆகி விட்ட்து.
சொமோஸாவின் மரணம் என்பதுதான் அந்த நாவல். அது பற்றிய அறிமுகத்தை ஏற்கனவே எழுதி விட்டேன்.
நிகாராகுவாவின் சர்வாதிகாரியான சொமோஸாவைக் (மூன்றாவது சொமோஸா) கொல்லத் திட்டமிட்ட புரட்சிக் குழு தற்கொலைப் படையாகத் தங்களை வடிவமைத்துக் கொள்ளவில்லை. அவர்கள் புரட்சிக்காரர்கள். அவர்கள் வாழ்ந்தாக வேண்டும். சொமோஸாவை அவர்கள் கொல்லவில்லை. சொமோஸாவுக்கு நிகாராகுவாவின் மக்கள் கொடுத்த மரண தண்டனையை நிறைவேற்றினார்கள். ஏனென்றால், தென்னமெரிக்க சர்வாதிகாரிகள் பெரும்பாலும் தண்டிக்கப்படாமலேயே தொண்ணூறு வயதுக்கும் மேல் வாழ்ந்து இயற்கை மரணம் அடைந்து கொண்டிருந்தார்கள். மிக்க் கொடூரமான மனிதப் படுகொலைகளைச் செய்த பினோசெத்துக்குக் தண்டனை கிடைக்காதது மட்டும் அல்ல, கடைசி வரை ராணுவத் தளபதியாகவும் விளங்கினார். முன்னாள் அதிபர்களைத் தண்டிக்கவே முடியாதபடி அரசியல் சட்டத்தை மாற்றி வைத்திருந்தார்கள் தென்னமெரிக்க சர்வாதிகாரிகள்.
பராகுவாயின் ஆல்ஃப்ரதோ ஸ்த்ரோஸ்னர் (Alfredo Stroessner) அப்படிப்பட்ட ஒரு சர்வாதிகாரிதான். 1954இல் பராகுவாயின் அதிபராக ஆன ஸ்த்ரோஸ்னர் பதவிக்கு வந்தவுடன் மக்களின் அடிப்படை உரிமைகள் எல்லாவற்றையும் தடை செய்து, ராணுவத்துக்கு அபரிமிதமான அதிகாரத்தை அளித்தார். எதிர்க்கட்சிகள் அனைத்தும் தடை செய்யப்பட்டன. அரசை விமர்சிக்கும் அத்தனை பேரும் கொல்லப்பட்டார்கள். மீண்டும் அதிபராக ஆவதற்குத் தோதாக 1967இல் அரசியல் சட்டத்தைத் திருத்திக் கொண்டார் ஸ்த்ரோஸ்னர். பிறகு 1977இல் தானே நிரந்தர அதிபராக இருக்குமாறு அரசியல் சட்டத்தை மீண்டும் திருத்தினார். 1958 இலிருந்து 1988 வரை ஏழு முறை அதிபர் தேர்தலில் நின்று ஜெயித்தார் ஸ்த்ரோஸ்னர். வாக்குச் சீட்டில் ஸ்த்ரோஸ்னரின் பெயர் மட்டுமே இருக்கும். அப்படிப்பட்ட கேலிக் கூத்தெல்லாம் தென்னமரிக்காவில் சகஜம். இந்த நிலையில் 1989இல் ராணுவத்தில் ஸ்த்ரோஸ்னருக்கு அடுத்த இடத்தில் இருந்த மேஜர் ஜெனரல் ஆந்த்ரேஸ் ரோத்ரிகேஸ் ராணுவத்தின் துணையுடன் ஸ்த்ரோஸ்னரைப் பதவியில் இருந்து நீக்கினார். அது கூட ஏன் நடந்தது என்றால், ஸ்த்ரோஸ்னருக்குப் பிறகு அவருடைய இரண்டு புதல்வர்களுக்கும் சேவகம் செய்ய வேண்டியிருக்கும் என்பதை ஆந்த்ரேஸும் ஸ்த்ரோஸ்னரின் மற்ற சில நண்பர்களும் விரும்பவில்லை என்பதால்தான். காரணம், ஸ்த்ரோஸ்னரின் ஒரு மகன் கொக்கேய்ன் அடிமையாக இருந்தான். இன்னொருவன், ஓரினச் சேர்க்கையாளன்.
பராகுவாய் அதிபர் பதவியிலிருந்து துரத்தப்பட்ட ஸ்த்ரோஸ்னர் ப்ரஸீலில் புகலிடம் பெற்றார். ஜெனரல் ரோத்ரிகேஸ் முப்பது ஆண்டுகள் ஸ்த்ரோஸ்னரின் வலது கரமாக விளங்கியவர். ப்ரஸீலில் புகலிடம் பெற்ற ஸ்த்ரோஸ்னர் அங்கே பதினேழு ஆண்டுகள் வசித்து தனது 93ஆம் வயதில் 2006ஆம் ஆண்டு இயற்கை மரணம் அடைந்தார்.
தன்னுடைய 35 ஆண்டுக் கால சர்வாதிகார ஆட்சியில் பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஸ்த்ரோஸ்னர் நூற்றுக்கணக்கான பெண்களோடு உறவு கொண்டு முப்பதுக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்குத் தகப்பனாக இருந்தார்.
எல்லா தென்னமெரிக்க சர்வாதிகாரிகளையும் போல் சொமோஸாவை விட்டு விடக் கூடாது என்று நினைத்தார் ரமோன் என்ற அர்ஜெண்டீனியப் போராளி. ஏனென்றால், சொமோஸா குடும்பம்தான் தென்னமெரிக்க சர்வாதிகாரிகளிலேயே ஆகக் கொடுமையானது. சாந்தினிஸ்த்தாக்கள் சொமோஸாவின் கூலிப்படையான நேஷனல் கார்டைத் தாக்கியபோது அதற்கு எதிர்வினையாக சொமோஸா 50000 பேரைக் கொன்றார். இதில் 80 சதவிகிதம் பேர் பொதுமக்கள். சாந்தினிஸ்த்தாக்களைத் தாக்குகிறோம் என்று சொல்லி ஆறு நகரங்களின் மீது வான்வழியாகக் குண்டுகளைப் போட்டது சொமோஸாவின் கூலிப்படை. இந்த வான்வழித் தாக்குதலின் காரணமாக, ஒரு லட்சம் பேர் காயமடைந்தார்கள். 40000 பேர் அனாதை ஆனார்கள். 1,50,000 பேர் அகதிகளாக ஓந்துராஸிலும் கோஸ்த்தா ரீக்காவிலும் அடைக்கலம் ஆனார்கள்.
கிட்ட்த்தட்ட நிகாராகுவா தேசத்தையே கொள்ளையடித்துத் தன் வசம் வைத்துக் கொண்டிருந்த்து சொமோஸா குடும்பம். உதாரணமாக,
நிகாராகுவாவின் தங்கச் சுரங்கம்
வட அமெரிக்காவில் இருந்த சுரங்கங்களின் மூலம் ஆண்டு வருமானம் 1,75,000 டாலர்
45 காஃபித் தோட்டங்கள்
நிகாராகுவாவின் சிமெண்ட் ஆலைகளில் 50 சதவிகிதப் பங்கு
எல் சால்வதோரில் இருந்த பருத்தி ஆலைகளில் 41 சதவிகிதப் பங்கு
தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் 50 சதவிகிதப் பங்கு (அதன் பொருட்டு சிகரெட் லைட்டர்களைத் தடை செய்தார் சொமோஸா)
ஒன்றிரண்டு பத்திரிகளைத் தவிர்த்து மற்ற அனைத்து பத்திரிகைகளும் சொமோஸா குடும்பத்துக்குச் சொந்தம்.
இப்படி சொல்லிக் கொண்டே போகலாம். மொத்த்த்தில் தேசம் பூராவுமே சொமோஸா குடும்பத்தின் சொத்தாக இருந்தது.
இம்மாதிரியான மாஃபியா ஆட்சிகளுக்கு அமெரிக்க அரசு பக்க பலமாக இருந்தது. நிகாராகுவாவிலிருந்து தப்பிய சொமோஸா முதலில் அமெரிக்காவுக்குத்தான் சென்றார். ஆனால் அங்கே அவர் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கவில்லை. ”அமெரிக்க அரசு என்ன சொன்னதோ அதை மட்டுமே நான் செய்தேன். ஆனால் இப்போது அவர்கள் என் மீது பழி போடுகிறார்கள். ஜிம்மி கார்ட்டர் என்னை ஏமாற்றி விட்டார், துரோகம் செய்து விட்டார்.” இப்படிச் சொன்ன சொமோஸா ஸ்த்ரோஸ்னரின் ஆதரவில் பராகுவாய் சென்று விட்டார். சாதாரணமாக அல்ல. நிகாராகுவாவின் மொத்த சொத்தையும் அபகரித்துக் கொண்டு. நிகாராகுவாவின் அன்றாடப் பணிகளை கவனிப்பதற்கு இரண்டே இரண்டு நாட்களுக்கு மட்டும்தான் அரசாங்கத்திடம் அப்போது நிதி இருந்தது. அந்த நிதியில் சொமோஸா கை வைக்க முடியாதபடி இருந்ததால்தான் அது கூடத் தப்பியது. இல்லாவிட்டால் அதையும் துடைத்து எடுத்துக் கொண்டு சென்றிருப்பார் சொமோஸா.
அர்ஜெண்டினாவின் புரட்சிகரத் தொழிலாளர் கட்சியின் ஒரு பிரிவான புரட்சிகர மக்கள் படையைச் சேர்ந்தவர் ரமோன். அவரும் அவரது போராளிக் குழுவினரும் சீலே நாவலாசிரியரான Claribel Alegría மற்றும் அவரது கணவர் Darwin Flakollஇடம் தாங்கள் சொமோஸாவைக் கொன்ற கதையைக் கூறுகிறார்கள். இருவரும் அதை நாவலாக எழுதுகிறார்கள். ஆனால் அதற்குள் அர்ஜெண்டினாவில் சர்வாதிகார ஆட்சி வீழ்ந்து ரவூல் அல்ஃபோன்ஸின் தலைமையிலான ஜனநாயக ஆட்சி ஏற்படுகிறது. அந்த நிலையில் அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் விசாரணையில்லாமல் ஒரு முன்னாள் அதிபரைக் கொன்றார்கள், அது பயங்கரவாத நடவடிக்கை என்ற கெட்ட பெயர் ஏற்பட்டு விடும் என்று ரமோன் சொன்னதால், க்ளாரிபெல் நாவலை வெளியிடவில்லை. அது நடந்தது 1983. அதன் பிறகு அந்த நாவல் பத்து ஆண்டுகள் வெளியிடப்படாமல் ரகசியமாகவே இருந்து, 1993இல்தான் வெளியிடப்பட்டது.
***
17 ஜூலை. பராகுவாய் தலைநகர் அசுன்ஸியோனுக்கு வந்து சேர்கிறது புரட்சிக் குழு. ஆறு பேர். பராகுவாய் ஒரு ஏழை நாடு. ஏழை நாடுகளின் தனித்த அடையாளத்தைப் போலவே டாக்ஸி டிரைவர் புரட்சியாளர்களை அவர்கள் செல்ல வேண்டிய ஓட்டலுக்குப் போகாமல் நகரத்தையே சுற்றிச் சுற்றிக் காண்பிக்கிறார்.
குழுவில் ஆறு பேர். ரமோன் தலைவர். ஸாந்த்தியாகோ, ஆர்மாந்தோ, ஆனா, ஜூலியா, சூஸானா. இவர்கள் ஆறு பேரும் 1979இல் நடந்த நிகாராகுவா புரட்சியில் ஆறு மாதங்கள் நேரடியாக ஈடுபட்டவர்கள். கெரில்லா வாழ்க்கை. உண்ண உணவிருக்காது. இரவெல்லாம் மழையில் நனைய வேண்டும். கொஞ்சம் அசந்தால் குண்டடிபட்டுச் சாக வேண்டும். எங்கே பார்த்தாலும் குண்டடி பட்டுப் பிழைத்தவர்களின் முனகல் சத்தம். அவர்களுக்கெல்லாம் மருத்துவ உதவி செய்ய வேண்டும்.
ஆனால் கெரில்லா யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்ததை விட யுத்தம் முடிந்து சாந்தினிஸ்த்தாக்கள் ஆட்சியைப் பிடித்ததும்தான் போராளிகளுக்குப் பெரும் சிரமம் ஆயிற்று. சொமோஸாவின் நேஷனல் கார்டு கூலிப்படையினர் ஆங்காங்கே ஒளிந்து கொண்டு தாக்கிக் கொண்டிருந்தார்கள். நாட்டில் போலீஸ் என்பதே இல்லை. பட்டினி கிடந்த மக்கள் அனைவரும் – வழக்கமான திருடர்கள் உட்பட – சூப்பர் மார்க்கெட்டுகளுக்குள் புகுந்து கிடைத்த எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு போனார்கள். அலுவலகங்களும் மற்ற எல்லா பணியிடங்களும் சூறையாடப்பட்டன. ஏர் கண்டிஷனர்கள், ரேடியோ, டெலிவிஷன் செட்டுகள் எல்லாம் நடைபாதைகளில் வைத்து சிகரெட் விற்கும் விலையில் விற்றுக் கொண்டிருந்தார்கள். இதற்கிடையில் Milpas என்று ஒரு தீவிரவாதக் குழு வேறு சாந்தினிஸ்த்தாக்களைத் தாக்கிக் கொண்டிருந்தது. அவர்களின் கோஷம்: ”சாந்தினிஸ்த்தாக்கள் முதல் புரட்சியை முடித்து விட்டார்கள். நாங்கள் அடுத்த புரட்சியை நடத்தி அரசியல் அதிகாரத்தைத் தொழிலாளர்களிடமும் விவசாயிகளிடமும் கொடுப்போம்.”
ரமோனின் வயது 37. அர்ஜெண்டினாவில் 1952இலிருந்தே எந்த ஒரு ஜனநாயக ஆட்சி வந்தாலும் ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டுக் கொண்டிருந்தது. அந்தச் சம்பவங்களிலிருந்துதான் ரமோன் தன்னுடைய அரசியல் கல்வியைக் கற்றார். அப்படித்தான் அர்ஜெண்டினாவின் புரட்சிகரத் தொழிலாளர் கட்சி உருவானது.
அர்ஜெண்டினாவில் மட்டும் அல்ல. ஒட்டு மொத்த லத்தீன் அமெரிக்காவின் எதிரி ஏகாதிபத்தியம். முதலில் ஸ்பானிஷ் ஏகாதிபத்தியம். அதை எதிர்த்துத் தன் குருதியைச் சிந்தியவர்கள் ஸான் மர்த்தீன், பொலிவார். ஸான் மர்த்தீன் சீலேயிலும் பெரூவிலும். பொலிவார் கொலம்பியாவில், எக்குவதோரில், வெனிஸுவலாவில். இதுவே லத்தீன் அமெரிக்காவின் முதல் சுதந்திரப் போர். வெற்றியும் கிடைத்தது. ஆனால் ஆட்சியைக் கைப்பற்றியவர்கள் பூர்ஷ்வாக்கள். காலனி ஆதிக்கம் என்பது இப்போது நேரடியாக இல்லாமல் மறைமுகமாக இருந்தது. இதுவே நவகாலனியம். எனவே நிகாராகுவாவின் கொள்ளைக்காரனைக் கொன்றது என்பது லத்தீன் அமெரிக்காவின் எல்லா நாடுகளிலும் நடந்து கொண்டிருக்கும் விடுதலைப் போராட்டங்களுக்கு உதவி செய்வதே ஆகும். நாங்கள் நிகாராகுவாவின் விடுதலைக்குப் போராடுவதே எல் ஸால்வதோருக்காகவும் எங்கள் தாய்நாடான அர்ஜெண்டினாவுக்காகவும் போராடுவது ஆகும்.
ரமோன், ஸாந்த்தியாகோ, ஆர்மாந்தோ மூவரும் நிகாராகுவா தலைநகர் மனாகுவாவில் உள்ள El Gaucho உணவகத்தில் சந்தித்து பியர் அருந்தியபடியே பார்பெக்யூவை உண்பது வழக்கம். நிகாராகுவாவின் மாட்டுக் கறி லத்தீன் அமெரிக்காவிலேயே விசேஷமானது. இங்கே மக்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கும்போது பராகுவாயில் அந்தக் கிரிமினல் கோடிக்கணக்கான டாலர்களை வைத்துக் கொண்டு கும்மாளம் போட்டுக் கொண்டிருக்கிறான். அவனைத் தண்டிக்க வழியே இல்லையா?
அப்போது ஸாந்த்தியாகோ சொன்னான், அந்த மனித விரோதியை இந்தப் பூமியிலிருந்து அகற்றியாக வேண்டும்.
ஆம், சர்வாதிகாரிகள் மானுட குலத்தின் கழிவுகள். அதனாலேயே அவர்கள் அப்புறப்படுத்தப்பட வேண்டியவர்கள். ஆகவே, நாம் அதற்கான வேலையை ஆரம்பிப்போம் என்கிறான் ரமோன்.