1980. பராகுவாயின் சர்வாதிகாரி ஸ்த்ரோஸ்னர்தான் (Stroessner) அன்றைய தினத்தில் மிக நீண்ட காலமாக பதவியில் இருந்து கொண்டிருந்தவன். இருபத்தைந்து ஆண்டுகள். அந்த இருபத்தைந்து ஆண்டுகளும் பராகுவாயில் ஸ்த்ரோஸ்னரின் சர்வாதிகாரத்தை எதிர்த்து ஒரு முணுமுணுப்பு கூட எழவில்லை. அந்த அளவுக்கு நாடு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது. மிகப் பெரும் புரட்சியாளனாகிய ஸாந்தினோவைக் கொலை செய்த சொமோஸாவினால் கூட நிகாராகுவாவில் பத்து ஆண்டுகளுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. நாட்டை விட்டு ஓடி விட்டான். ஆனால் பராகுவாயில் ஸ்த்ரோஸ்னரின் இரும்புக் கோட்டைக்குள் எவராலும் நுழைய முடியவில்லை. யாரைப் பார்த்தாலும் போலீஸின் உளவாளியாக இருந்தார்கள். அப்படிப்பட்ட சூழலில் சொமோஸாவைக் கொல்ல வேண்டும். சொமோஸாவின் அடியாட்களையும் அடியாள் தலைவன் சாமுவல் ஜெனீயையும் தாண்டி அதை முடித்தாக வேண்டும். முடிப்பதோடு மட்டுமல்லாமல் உயிரோடு தப்பி வர வேண்டும்.
ஒரே ஒரு விஷயம்தான் சற்று நம்பிக்கை அளிக்கக் கூடியதாக இருந்தது. ஸ்த்ரோஸ்னரும் அவனது ராணுவமும் ’நம்மை எதிர்க்க ஆளே இல்லை’ என்ற திமிரில் இருக்கிறார்கள். அது ஒன்றுதான் நமக்கு சாதகம் என்று எண்ணினான் ரமோன்.
ஆனால் மற்ற எல்லா விஷயங்களுமே பாதகமாக இருந்தன. முற்றிலும் புதிய தேசம். ராணுவ ஆட்சி. ரமோன் மற்றும் அவனது சகாக்களைப் பார்த்ததுமே அர்ஜெண்டீனியர்கள் என்று தெரிந்து விடும். இத்தனைக்கும் இடையில் ஆயுதங்களை வேறு கடத்திக் கொண்டு வர வேண்டும். எல்லாமே அசாத்தியமாகத் தெரிந்தது.
”ஆனால் அசாத்தியங்களுக்கு இடையேதான் எல்லாவற்றையும் முடித்தாக வேண்டும். சர்வாதிகாரிகள் தங்களை எதிர்க்க யாருமே இல்லை என்று நினைத்து விடக் கூடாது. ஆயிரக்கணக்கான அப்பாவிகளைக் கொன்று குவித்து விட்டு, தேசத்தில் கொள்ளையடித்த பில்லியன் கணக்கான டாலர்களோடும் மெய்க்காப்பாளர்களோடும் ஜாலியாக வாழ்வதை நாம் இனிமேலும் அனுமதிக்கக் கூடாது. இவர்கள் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும். சொமோஸா என்ற மனித விரோதியைக் கொல்வதன் மூலம் நாம் மானுட குலத்துக்குப் பெரும் நன்மையையே செய்தவர்கள் ஆகிறோம். நிகாராகுவாவில் எந்த இடத்தைத் தோண்டினாலும் அது எலும்புக் கூடுகளின் குவியலாகக் கிடப்பதைக் காண்கிறோம். தெருக்களில் திரும்பின இடமெல்லாம் கையில்லாமல் கால் இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள். எல்லாம் நேஷனல் கார்ட் ரவுடிகள் போட்ட வெடிகுண்டுகளால் ஏற்பட்டது.” இது ரமோனின் எண்ணம்.
சொமோஸாவைக் கொல்வதற்காகக் கிளம்பியிருக்கும் புரட்சிக் குழுவுக்கு அனுகூலமாக இருந்த மற்றொரு விஷயம், அர்ஜெண்டினாவுக்கும் பராகுவாய்க்குமான எல்லையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான எளிய மனிதர்கள் அத்தியாவசியப் பொருட்களைக் கடத்தி விற்றுப் பிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்தக் கூட்டத்தோடு ஆயுதங்களைக் கொண்டு வந்து விடலாம். இந்த நடவடிக்கைக்குத் தேவையான பணம் சுவிஸ் வங்கியில் இருந்த்து. அதைக் கொண்டு எல்லாவற்றையும் முடித்து விடலாம். இப்போதைய தேவை, மிகக் கச்சிதமான திட்டமிடுதலும், அதை ஒரு பிழை கூட இல்லாமல் செயல்படுத்துவதும்தான். சிறிய பிழை என்றாலும் ஆறு பேர் உயிரும் போய் விடும். ஒரு மகத்தான வரலாற்று நிகழ்வு அதன் சுவடு தெரியாமல் மறைந்து விடும்.
ரமோன், ஸாந்த்தியாகோ, ஆர்மாந்தோ மூவரும் எல் காவ்ச்சோ உணவகத்தில் அமர்ந்து விவாதித்தார்கள். அசுன்ஸியோனில் சொமோஸாவின் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்க வேண்டும், ஜெனீயைத் தவிர்த்து சொமோஸாவின் பாதுகாப்புக்கு இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள், அவனுடைய கார் குண்டு துளைக்காத காரா, குண்டு துளைக்கக் கூடிய காரா. இந்த மூன்று விஷயங்கள்தான் அடிப்படையானவை.
இம்மாதிரி காரியத்தில் ஈடுபடும் போராளிகளுக்குத் தேவையான மூன்று தகுதிகள் பற்றியும் அறிவுறுத்தப்பட்டது.
1.யாருக்கும் கொஞ்சமும் சந்தேகம் ஏற்படாதபடி காரியங்களைச் செய்ய வேண்டும்.
2.போலீஸிடமோ வேறு யாரிடமோ பிடிபட்டு விடாமல் காரியத்தை முடிக்க வேண்டும்.
3. முடித்து விட்டுத் திரும்பும்போது நம்மைப் பற்றிய எந்த அடையாளத்தையும் விட்டு வைக்கக் கூடாது.
இது எல்லாவற்றுக்கும் மிகக் கடுமையான பயிற்சி தேவை. அதை கொலம்பியத் தலைநகர் பொகோத்தாவில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்யப்பட்டது. ஆயுதப் பயிற்சியும் இருக்கும் என்பதால் அதற்கு ஏற்றவாறு ஒரு தனியான இடம் ஏற்பாடு செய்யப்பட்டது. இடம் கொடுத்த தம்பதிக்கு இவர்கள் அர்ஜெந்த்தீனியப் போராளிகள் என்று தெரியும் என்றாலும், அவர்கள் திரும்பவும் அர்ஜெந்த்தினாதானே செல்லப் போகிறார்கள் என்று நினைத்தே அந்தப் பெரிய இடத்தை வாடகைக்குக் கொடுத்திருந்தார்கள்.
ஜனவரி 1980இல் பயிற்சி பெற வேண்டிய போராளிகள் பொகோத்தா வந்து சேர்ந்தார்கள். முதலில் கருத்தியல் பயிற்சி. அதற்கடுத்து, தகவல் தொடர்பில் பயிற்சி. தகவல் தொடர்புக்கான ஒரு பிரத்தியேக சங்கேத மொழியைக் கண்டு பிடித்தார்கள். இயல்பாகப் பொய் சொல்வது, உருவத்தை மாற்றிக் கொள்வது, யாருக்கும் சந்தேகம் ஏற்படாதவாறு சந்திக்கும் இடங்களைத் தேர்ந்தெடுப்பது என்று நூற்றுக்கணக்கான விஷயங்கள் அந்தப் பயிற்சியில் அடங்கியிருந்தன.
மூன்றாவது, தற்காப்புக் கலைகள் மற்றும் ஆயுதப் பயிற்சி. (தீவிரமான ஆயுதப் பயிற்சி அளித்தும் எப்போது ராக்கெட் தாக்குதலை நடத்த வேண்டுமோ அப்போது ராக்கெட் லாஞ்ச்சர் வேலை செய்யாமல் போனது!) கண்களைக் கட்டிக் கொண்டு ஆயுதங்களைப் பிரிக்கவும் இணைக்கவும் தெரியும் அளவுக்கு அவர்கள் பயிற்சி அளிக்கப்பட்டார்கள். துப்பாக்கி மற்றும் ராக்கெட் வெடிகுண்டுப் பயிற்சி போன்றவைகளுக்காக குழுவினர் காட்டின் உட்பகுதிக்குச் செல்ல வேண்டியிருந்த்து. சூஸானாவுக்கு ஆயுதங்களில் அவ்வளவாக அனுபவம் இல்லை. ஒருமுறை அவள் முழங்காலிட்டு அமர்ந்தபடி எம்-16 துப்பாக்கியை வைத்துக் குறி பார்த்துச் சுடும் பயிற்சி செய்து கொண்டிருந்தபோது துப்பாக்கி வெடித்து விட்டது. அப்போது அவள் பின்னால் இருந்த சாந்த்தியாகோ கண்ணிமைக்கும் நேரத்தில் சூஸானாவை குழந்தையைப் போல் தூக்கிக் கொண்டு விட்டான். இல்லாவிட்டால் சூஸானா படுகாயம் அடைந்திருப்பாள்.
சாந்த்தியாகோ ஒரு அற்புதமான ஆசிரியன். பயிற்சியாளன். அர்ஜெண்ட்டீனியப் புரட்சியாளர்கள் மத்தியில் அவன் கேப்டன் சாந்த்தியாகோ என்றே அறியப்படுகிறான்.
இது தவிர, கண்காணித்தல். மிகச் சரியாகக் கண்காணித்துத் தகவல் தெரிவித்தால்தான் ஆளைச் சாய்க்க முடியும். நாம் கண்காணிக்கும்போது நாம் கண்காணிக்கிறோம் என்பதே யாருக்கும் தெரியக் கூடாது. இதற்காக குழுவிலிருந்து ஒருவன் சொமோஸாவின் பங்களாவுக்கு எதிரே இருந்த பெட்டிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தான். வேலைக்கு ஆள் இருக்கிறது என்று பெட்டிக்கடைக்காரன் முதலில் மறுத்தபோது, கடையை இன்னும் விரிவு படுத்தப் பணம் தருகிறேன், லாபத்தில் கொஞ்சம் கொடு என்று பேசி பெட்டிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தான் குழுவில் ஒருவன்.
பயிற்சியின் முடிவில் போராளிகள் பாதி உடம்பாகி இருந்தார்கள். குழு தங்கியிருந்த இடத்தில் அவர்கள் ஒரு நூலகத்தையும் அமைத்துக் கொண்டிருந்தார்கள்.
ஏப்ரலோடு பயிற்சி முடிவுக்கு வந்தது. குழுவில் சிலர் அசுன்ஸியோன் சென்று நிலைமையைக் கண்காணிப்பது என்று முடிவு செய்தான் ரமோன். பெரிய ஆச்சரியம் என்னவென்றால், குழுவில் ரமோனைத் தவிர வேறு யாருக்கும் எதற்காக இந்தப் பயிற்சி என்றே தெரியாது. ஏதோ ஒரு புரட்சிகர நடவடிக்கை என்றுதான் யூகிக்க முடிந்ததே தவிர அது என்ன என்று யாருக்கும் தெரியாது. நம்முடைய குறி சொமோஸா; சொமோஸாவின் தந்தைக்கு நிகாராகுவாவின் கவிஞன் ரிகபர்த்தோ லோபஸ் பெரஸ் என்ன தண்டனையைக் கொடுத்தானோ அதே தண்டனையை மகனுக்கும் கொடுக்க இருக்கிறோம் என்று அன்றைய தினம் தன் குழுவினரிடம் அறிவித்தான் ரமோன்.
அசுன்ஸியோனில் சொமோஸா எங்கே இருக்கிறான் என்பதை எப்படிக் கண்டு பிடிப்பது? சூஸானாவும் குழுவில் இருந்த ஃப்ரான்சிஸ்கோவும் ரியோ தெ ஹனைரோ (ப்ரஸீல்) கிளம்பிச் சென்றார்கள். தேன் நிலவுக்காகத் தென்னமெரிக்காவைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு இளம் தம்பதி. ப்ரஸீலில் அவர்களுக்கு ஒன்றும் சிக்கல் இல்லை. ரியோவின் நூலகத்தை அலசியபோது ஒரு பத்திரிகையில் சொமோஸா அசுன்ஸியோனில் வசிக்கும் இடத்தைப் பற்றிய செய்தி இருந்த்து.
செய்தி கிடைத்ததும் ரமோன் குழு அசுன்ஸியோன் கிளம்பிச் சென்றது. அர்ஜெண்டீனியர்களுக்கு பராகுவாயில் நுழைய வீசா தேவையில்லை என்பதால் உள்ளே நுழைவது பிரச்சினையாக இல்லை.
பத்திரிகைகளிலிருந்து சொமோஸா அசுன்ஸியோனின் மிக முக்கியமான அவென்யூவில் வசிக்கிறான் என்று தெரிந்தது. ஆனால் வீட்டைக் கண்டு பிடிக்க முடியவில்லை. அப்போதுதான் சொமோஸாவின் மனைவி தினோரா சாம்ஸன் வழக்கமாகச் செல்லும் அழகு நிலையம் பற்றிய தகவலை அறிந்தது குழு.
சூஸானா ஒரு டாக்ஸியில் ஏறினாள். டிரைவரிடம் தினோரா சாம்ஸன் செல்லும் அழகு நிலையத்துக்குச் செல்லுங்கள் என்றாள். டிரைவருக்குத் தெரியவில்லை. அதைக் கண்டு பிடிப்பது சுலபம். அதிபர் சொமோஸாவின் பங்களாவிலிருந்து மூன்று தெருக்கள் தள்ளி இருக்கிறது என்று என் தோழி சொன்னாள்.
டிரைவருக்கு சொமோஸாவின் பங்களா தெரியவில்லை. ஆனால் பார்ப்பதற்கு சூஸானா பெரும் பணக்கார சீமாட்டி மாதிரி இருந்தாள். அந்த அழகு நிலையத்துக்கு என்னைக் கொண்டு போய் விட்டால் நீ எவ்வளவு கேட்டாலும் தருகிறேன் என்று வேறு சொல்லியிருந்தாள்.
டிரைவர் ஒரு போலீஸ்காரரிடமே போய் கேட்டுக் கொண்டு வந்தான். இதோ இருக்கிறதே இதுதான் சொமோஸாவின் பங்களா என்று சூஸானாவிடம் காண்பித்தான். அதிர்ஷ்டவசமாக அப்போதுதான் சொமோஸாவின் காரும் அந்த பங்களாவிலிருந்து வெளியே வந்தது. தெளிவாக அவளால் சாமுவெல் ஜெனீயையும் சொமோஸாவையும் பார்க்க முடிந்தது. கார் நம்பரை மன்னம் செய்து கொண்டாள்.
அவள் குறிப்பிட்ட அழகு நிலையத்தில் கொண்டு போய் விட்டான் டிரைவர். ”கொஞ்சம் பொறு, போய் விடாதே, நான் திங்கள் கிழமைக்கு அப்பாய்ண்ட்மெண்ட் வாங்கிக் கொண்டு வந்து விடுகிறேன். அதிபர் சொமோஸாவின் வீட்டை இன்னொரு முறை அடையாளம் பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அடுத்த முறை இங்கே வருவதற்குக் குழம்ப வேண்டாம்” என்றாள்.
மீண்டும் அந்த வீட்டைப் பார்த்துக் கொண்டு டிரைவருக்கு அவன் கேட்ட காசைக் கொடுத்தாள் சூஸானா.
சொமோஸா வசித்தது அவெனிதா மரிஸ்கல் லோபஸ். இதே அவென்யூவில் சொமோஸா வீட்டுக்குச் சற்று தூரத்தில்தான் ஸ்த்ரோஸ்னரின் அதிபர் மாளிகையும் இருந்தது. அதே வரிசையில் சில வீடுகள் தள்ளி ஒரு மந்திரியின் வீடும் இருந்த்து.
எடுத்த எடுப்பில் ரமோன் குழுவினருக்கு இந்த இடத்தில் வைத்து சொமோஸாவை எப்படிக் கொல்லப் போகிறோம் என்று மலைப்பாகவே இருந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக சொமோஸாவின் பங்களாவுக்கு எதிரே ஒரு பெட்டிக்கடை இருந்த்து.
சூஸானாவும் ஃப்ரான்சிஸ்கோவும் அந்தப் பகுதியிலேயே ஒரு பெரிய பங்களாவை வாடகைக்கு எடுத்தார்கள்.
அடுத்ததாக அர்ஜெண்டினா எல்லையிலிருந்து அசுன்ஸியோனுக்கு ஆயுதங்களைக் கடத்தி வர வேண்டும். அசுன்ஸியோன் அர்ஜெண்டினாவின் எல்லையைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் ஆயுதக் கடத்தல் சுலபம்தான். ஆனால் அதற்கான இடத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். சூஸானாவும் ஃப்ரான்சிஸ்கோவும் அசுன்ஸியோனிலிருந்து காரில் என்கார்னாஸியோன் சென்றார்கள். 286 கி.மீ. அன்கார்னாஸியோனும் எல்லைப்புற நகரம்தான். அந்த நகரில் ஓடும் பரானா நதியின் எதிர்க்கரையில் இருக்கிறது அர்ஜெண்டினீய நகரம் பொஸாதாஸ். இரண்டுக்கும் இடையே உள்ள தூரம் 5 கி.மீ. அதுதான் ஆயுதங்களைக் கடத்துவதற்கு ஏற்ற இடம் என்று முடிவு செய்தார்கள்.
அதற்குள் ரமோன் தங்களின் கமாண்டோ பிரிவை முடிவு செய்தான். ரமோனும் ஜூலியாவும் ஒரு தம்பதி. சாந்த்தியாகோ சூஸானா. ஆர்மாந்தோ ஆனா.
ரமோனுக்கு அர்ஜெண்டீனியப் புரட்சிகரச் செயல்பாடுகளில் நல்ல அனுபவம் இருந்த்து. பத்து ஆண்டுகளுக்கு முன்பு (அதாவது, 1970இல்) ரமோனும் இன்னும் மூன்று பேரும் ராணுவத்தால் கைது செய்யப்பட்டார்கள். தினமும் சித்ரவதை நடந்தது.
எம்மாதிரி சித்ரவதை என்று கேட்கிறாள் ஜூலியா.
எலெக்ட்ரிக் ஷாக்தான் என்கிறான் ரமோன். ஆண்குறியில். தொடர்ந்து பத்து நாட்கள். அதைத் தொடர்ந்து கழுத்திலிருந்து கால் வரை லத்தி அடி. அதன் பிறகு 63 நாட்கள் அவர்கள் இருட்டு அறையில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
அந்த நான்கு பேரையும் தனிமைச் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று தேசம் பூராவிலும் இருந்து பெரும்பான்மையான பாதிரிகள் தேவாலயங்களில் அமர்ந்து பட்டினிப் போராட்டம் நடத்தினார்கள். (ஏன் தென்னமெரிக்கா என்பதற்கான பதில் இங்கே இருக்கிறது.) அந்தப் போராட்டத்தின் விளைவாக நான்கு பேரும் தனிமைச் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு சராசரி சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
ஒரு ஆண்டு கழித்து சிறை அதிகாரிகள் எங்களை ஒரு பாலைவனத்தின் நடுவில் அமைந்திருந்த சிறைச்சாலைக்கு மாற்றினார்கள். அங்கே போட்டால் எங்களால் தப்பிக்க முடியாது என்பது அவர்கள் எண்ணம். அந்தப் பாலைவனச் சிறையிலிருந்து 25 கி.மீ. சென்றால் Trelew என்ற ஊரில் உள்ள விமான நிலையத்திலிருந்து புவனோஸ் அய்ரஸுக்கும் தெற்கு அர்ஜெண்டினாவுக்கும் விமானங்கள் இருக்கின்றன.
ஆகஸ்ட் 15, 1971 அன்று எங்களை சிறையிலிருந்து தப்பிக்கச் செய்தது எங்கள் கட்சியின் புரட்சிகர ஆயுதப் படை. த்ரேலே விமான நிலையத்திலிருந்து ஒரு விமானத்தைக் கடத்தி வந்து எங்களை அழைத்துச் சென்றார்கள் எங்கள் தோழர்கள். அது ஒன்றும் அத்தனை சுலபமாக இல்லை. ஒரே ஒரு நொடிப் பொழுது நாங்கள் தாமதித்தாலும் விமானத்தை ராணுவம் கைப்பற்றி விடும். நாங்கள் மொத்தம் ஆறு பேர் தப்பினோம்.
விமானத்தை சீலே கொண்டு சென்றோம். அயெந்தே அதிபராக இருந்தார்.
ஆனால் எங்களைப் பழி வாங்குவதற்காக அர்ஜெண்டீனிய சர்வாதிகாரி சிறையிலிருந்த மற்ற பதினாறு புரட்சியாளர்களைக் கொன்றான். அதை எதிர்த்து தேசம் பூராவும் பெரும் போராட்டங்கள் நடந்தன. ஆனால் நாங்கள் சீலேயிலேயே தங்கி விடவில்லை. சீலே சென்ற மறுநாளே கூபா சென்று விட்டோம். ஆனால் இரண்டு மாதத்திலேயே யாருக்கும் தெரியாமல் கூபாவிலிருந்து கிளம்பி சீலே வழியாக அர்ஜெண்டினாவுக்குள் நுழைந்து விட்டோம். 1977 வரை அங்கேயேதான் இருந்தோம்.