தூக்கப் பஞ்சாயத்து

இந்தத் தூக்கப் பஞ்சாயத்து இன்னும் ஓயாது போலிருக்கிறது.  இதை வாசிக்கும் உங்களுக்கு ஒரு ஆலோசனை.  எழுத்தாளர்களின் பேச்சைக் கேட்டோ, அவர்களின் வாழ்க்கையைப் பார்த்தோ உங்கள் வாழ்க்கையைக் கெடுத்துக் கொள்ளாதீர்கள்.   ஏனென்றால், எழுத்தாளர்கள் அதிமனிதர்கள்.  அவர்கள் செய்வதைப் பார்த்து நீங்களும் செய்தால் அது உங்களைப் படுகுழியில்தான் தள்ளும். உதாரணமாக, சாரு வைன் அருந்துகிறார் என்று நீங்களும் அருந்தினால் நீங்கள் காலி.  நான் அஞ்சு வருடம் குடிக்காமல் இருப்பேன்.  வேறு யாராலும் முடியாது. ஆகவே, எழுத்தாளர்கள் எழுதி வைத்துள்ளவற்றைப் படியுங்கள்.  இன்புற்றிருங்கள்.  அவர்களுடைய சிருஷ்டிகளிலிருந்து அறத்தையும், மகத்தான விழுமியங்களையும் கற்றுக் கொள்ளுங்கள்.  அதைப் பின்பற்றுங்கள்.  ஆனால் லௌகீக வாழ்வில் அவர்கள் சொல்லும் எதையுமே பின்பற்றாதீர்கள்.  உருப்பட முடியாது.  உதாரணம், எட்டு மணி நேரத் தூக்கம். 

இமயத்தில் சீனி மற்றும் கடற்கரையுடன்

எழுத்தாளன் ஒன்றும் யோகாச்சாரியார் கிடையாது.  ஒரு மனிதன் எத்தனை மணி நேரம் தூங்கினால் நல்லது என்று ஜக்கி வாசுதேவிடம் கேளுங்கள்.  எழுத்தாளனிடம் கேட்காதீர்கள்.  ஜக்கி கூட எல்லோருக்கும் பொதுவான ஒரு பதிலைச் சொல்ல மாட்டார். ஒரு சராசரி மனிதனும் வான்கோவும் ஒரே மாதிரி அளவில் உறங்க மாட்டார்கள்.  உறங்கினால் வான்கோவும் சராசரி மனிதனாகி விடுவான். 

நீங்கள் யோகா கற்றுக் கொண்டு, யோக நித்ரை என்ற ஒரு பயிற்சியைச் செய்தால் எட்டு மணி நேரத் தூக்கம் அவசியம் இல்லை.  சௌந்தரிடம் நான் யோக நித்ரை கற்றுக் கொண்டேன்.  இருபது நிமிடம் செய்தால் இரண்டு மணி நேரம் ஆழ்துயில் கொண்டது போல் இருக்கிறது.  அதன் பிறகு நான் ஐந்து மணி நேரம் தூங்கினால் போதுமானதாக இருக்கிறது.

மீண்டும் சொல்கிறேன்.  எட்டு மணி நேரம் தூங்கும் ஒருவர் உருப்படவே முடியாது.  மிகப் பெரிய நிலையை அடைந்த யாரும் எட்டு மணி நேரம் தூங்கியதில்லை.  ஜெயமோகன் சொல்லும் கணக்கை நீங்கள் ஒரு எழுத்தாளனின் கணக்காகவே கொள்ள வேண்டும்.  எழுத்தாளர்களின் கணக்கு வழக்கே வேறு.  அவனிடம் 500 புத்தகம் இருந்தால் 5000 என்பான்.  உணர்வு எழுச்சியின் உச்சத்தில் வாழ்பவன் எழுத்தாளன்.  ஒருநாள் நான் ஜெயமோகனுக்கு இரவு பத்து மணி வாக்கில் ஒரு முக்கியமான மின்னஞ்சலை அனுப்பி விட்டு வழக்கம் போல் காலை நான்கு மணிக்கு எழுந்து பார்த்தால் அப்போதுதான் ஐந்து நிமிடத்துக்கு முன்னால் ஜெ.விடமிருந்து பதில் வந்திருந்த்து.  உடனே நான், “நீங்களும் என்னை மாதிரி அதிகாலையில் எழுந்து கொள்பவர்தானா?” என்று எழுதிக் கேட்டேன்.  ஒரே நிமிடத்தில் பதில் வந்தது.  இதோ இப்போதுதான் தூங்கப் போகிறேன்.

இன்னொரு முறை நானும் நம்பியும் (விக்ரமாதித்யன்) தர்மபுரியில் ஜெயமோகன் வீட்டுக்குப் போன போது இரவு ஒன்பது மணியிலிருந்து காலை ஒன்பது மணி வரை இருவரும் – இன்னும் சில நண்பர்களும் – பேசிக் கொண்டிருந்தார்கள்.  நான் அஜிதனோடு – அப்போது அவனுக்கு ஐந்து வயது இருக்கும் – பேசிக் கொண்டிருந்தேன்.  இப்போது இத்தனை ஆண்டுகள் கழித்தும் அஜிதனோடு பேசிக் கொண்டிருப்பதுதான் எனக்குப் பாந்தமாகவும் என் ஆரோக்கியத்துக்கு உகந்ததாகவும் இருக்கிறது.   (எட்டு மணி நேரம் தூங்க வேண்டும் என்பதைக் கேட்டாலே என் ரத்த அழுத்தம் எகிறுகிறதே ஐயா, நான் என்ன செய்ய?)

இப்படி அசுரர்களைப் போல், அதிமனிதர்களைப் போல் நீங்கள் இரவு பூராவும் பேசிக் கொண்டிருக்க முடியும் என்றால் (அதுவும் மது அருந்தாமல்) எட்டு மணி நேரம் என்ன, எண்பது மணி நேரமும் தூங்கலாம்.  மேலும், நூறு நாட்களில் நூறு சிறுகதைகள் எழுதும் ஒருவரின் பேச்சை எல்லாம் நம்பி நீங்கள் எட்டு மணி நேரம் தூங்கினால் உங்களை அந்த ஆண்டவனே வந்தாலும் காப்பாற்ற முடியாது.  தூங்கிக் கொண்டே இருங்கள்.  முன்னுக்கு வருவீர்கள்.