கனவு வைன் யோகா (மூன்றாம் அத்தியாயம்) Revised

(சற்று முன்னர் பதிவேற்றம் செய்த கதையில் நிறைய பிழைகள் இருந்ததால் பிழை திருத்தம் செய்து, கதையிலும் சில நகாசு வேலைகள் செய்து இப்போது திரும்பவும் ஏற்றியிருக்கிறேன். மீண்டும் ஒருமுறை படித்துப் பாருங்கள்.)

பரோலில் வெளியே வரும் கைதி திரும்பச் செல்வதற்குத் தாமதமாகி விட்டால் காவல் துறை என்ன செய்யும்?  அந்த சூழலைக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.  நான் இந்த பூலோகத்தில் எங்கே போயிருந்தாலும் பத்தினி ஃபோன் செய்யும் போது எடுக்க வேண்டும்.  இல்லாவிட்டால் ஃபோனிலேயே பெரும் ரகளை நடக்கும்.  உதாரணமாக ஒருநாள் ஆரோவில்லில் இருந்த போது காலை ஒன்பது மணி அளவில் காலை உணவுக்காக வினித்தோடு வெளியே போயிருந்தேன்.  அப்போது என்னுடைய கைபேசியில் சுத்தமாக சார்ஜ் இல்லாமல் இருந்ததால் அறையில் அதை சார்ஜில் போட்டு விட்டுப் போய் விட்டேன்.  பொதுவாக, காலையில் எழுந்ததும் வீட்டுக்கு அட்டெண்டன்ஸ் போட்டு விட்டால் நாள் முழுதும் நிம்மதியாக இருக்கலாம்.  ஆனால் காலையில் அட்டெண்டன்ஸ் போடுவது சாத்தியமே இல்லை.  காலையில் பத்தினி பயங்கர பிஸியாக இருப்பாள்.  வீட்டைச் சுத்தம் செய்வது (பணிப்பெண் வந்தாலும் பத்தினியும் ஒருமுறை வீட்டைச் சுத்தம் செய்வது அவள் வழக்கம்), கீழே போய் பூனைகளுக்கு உணவிடுவது, தெருவில் சாக்கடை அடைத்துக் கொண்டால் அதற்காகக் கார்ப்பொரேஷன் அதிகாரிகளிடம் பேசுவது, தெருவைச் சுத்தம் செய்யும் துப்புரவுப் பணியாளர்களை ஒருங்கிணைப்பது போன்ற பல வேலைகள் அவளுக்கு இருக்கும். 

சாப்பிட்டு விட்டுப் பத்து மணிக்குத் திரும்பினோம்.  பார்த்தால் இருபத்தைந்து மிஸ்ட் கால்ஸ்.  வாட்ஸப்பில் “Pl don’t call” என்று இருந்தது.  உடனே ஃபோனில் அழைத்தேன். 

“போன் பண்ணினேன், ஏன் எடுக்கவில்லை?” என்று படு அதட்டலாகக் கேட்ட்து குரல்.

விஷயத்தைச் சொன்னேன். 

”சார்ஜ் இல்லேன்னா நான் பண்ண போது மட்டும் எப்டி எடுத்துச்சி?”

“இது என்னய்யா அக்ரம்மா இருக்கு?  சார்ஜ் இல்லேன்னு சார்ஜ் போட்டுட்டு சாப்பிடப் போனேன்.  சார்ஜ் ஆகியிருக்கும்.  எடுத்திருக்கும்.”

“இப்போ நான் பிஸியா இருக்கேன்.  சாய்ங்காலம் பேசறேன்.”

மாலையும் இதே டாபிக்தான் ஓடியது.  ஏதோ மகா பயங்கரமான குற்றங்களைச் செய்து விட்டது போல குற்றச்சாட்டுகள் அடுக்கடுக்காக விழுந்து கொண்டே இருந்ததால் ஒரு கட்டத்தில் பொறுமையை இழந்து கத்த ஆரம்பித்தேன்.  கத்தல் என்றால் அந்தக் கத்தல் இந்தக் கத்தல் இல்லை.  அந்தக் கானகமே நடுங்கும் அளவுக்கான கத்தல்.  தொண்டைச் சவ்வுகள் கிழிந்து போயிருக்கும்.  ஒரு வாரம் என்னால் பேச முடியவில்லை.  பத்தினியோடு பேச ஆரம்பித்ததுமே நான் பங்களாவை விட்டு ஒரு ஃபர்லாங் தூரம் வெளியே போய் விட்டேன்.  ஆனாலும் கதறல் கேட்டது என்றார்கள் நண்பர்கள்.  பாதிரியாராக இருக்கும் வளனின் முகம் பேயறைந்தது போல் இருந்தது.  திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கொஞ்ச நஞ்ச ஆசை இருந்தாலும் அன்றைய தினம் அவன் அதை விட்டிருப்பான் என்பது திண்ணம்.

ஓய்வுக்காக ஆரோவில் சென்றிருந்தேன்.  எப்படி மகிழ்ச்சியாக இருந்திருக்க முடியும்?  மறுநாள் முழுவதும் நான் பேசவில்லை.  மாலையில் அழைத்த பத்தினி பஞ்சவர்ணக் கிளி கொஞ்சுவது போல் கொஞ்சினாள்.  முந்தின நாள் நடந்தது எதுவுமே அவளுக்கு ஞாபகம் இல்லை. 

மற்றொரு சம்பவம், கோவையில் நடந்தது.  காலை ஐந்து மணி வரை நண்பர்களோடு பேசிக் கொண்டிருந்து விட்டு படுத்தேன்.  பன்னிரண்டு மணிக்கு எழுந்தேன்.  அதற்குள் முப்பத்தைந்து மிஸ்ட் கால்ஸ்.  அது மட்டும் அல்ல.  சேஷனுக்கு ஃபோன் செய்து ஒரு மணி நேரம் பேசியிருக்கிறாள் என் பத்தினி.  எல்லாம் இந்தக் கொக்கரக்கோ செய்கின்ற வேலைதான்.  அவன்தான் இவனைக் குடிக்க வைக்கிறான், அவன்தான் இவனைக் கெடுக்கிறான், இத்யாதி.  அது மட்டும் அல்ல, நான் அஞ்சாங்கிளாஸ் படிக்கும் போதிருந்து என்னென்ன அயோக்கியத்தனங்கள் செய்தேன் என்ற பட்டியலும் சேஷனுக்குப் போயிருக்கும்.   போயிருக்கும் என்ன போயிருக்கும்?  போனது. எல்லாம் கொஞ்சம் அதிக நேரம் தூங்கினதால் – பத்தினியின் ஃபோனை எடுக்காததால் – வந்த வினை. 

இன்னொரு முறை, சென்னையிலேயே ஒரு சந்திப்பு. அதிகாலை ஐந்து மணிக்குப் படுத்திருப்பேன்.  ஏழரைக்கு ஃபோன்.  ஏதோ நல்லூழின் காரணமாக ஃபோனை எடுத்து விட்டேன்.  

உடனே கிளம்பி வா.  நான் வெளியே கிளம்ப வேண்டும்.

எங்கே?

அதெல்லாம் நேரில் சொல்கிறேன்.  உடனே கிளம்பி வா.

இரவெல்லாம் பேசி விட்டு, இரவெல்லாம் குடித்து விட்டுப் படுத்து இரண்டே மணி நேரம் தூங்கி விட்டுக் கிளம்பினால் எப்படி இருக்கும்?  கண்கள் திகுதிகுவென தீக்கொழுந்துகளாய் எரிந்தன.  பல் கூட விளக்காமல், கக்கூஸ் கூடப் போகாமல் விழுந்தடித்துக் கொண்டு ஓடினேன் ஆட்டோ பிடிக்க. விழுந்தடித்துக் கொண்டு ஓடினேன் என்பதுதான் இங்கே பாய்ண்ட்.  ஏன் அப்படி ஓட வேண்டும் என்று கேட்கிறீர்களா?  உங்களுக்கு அடுத்த ஜென்மாவில் என் பத்தினி போல் ஒரு பெண் மனைவியாக மாட்டுவாள்.  அப்போது உங்களுக்குப் புரியும்.  அப்படி நான் விழுந்தடித்துக் கொண்டு ஓடினதை கொக்கரக்கோ அரைத் தூக்கத்தில் பார்த்துக் கொண்டிருந்தான்.  எத்தனை கொலை வெறி ஆகியிருப்பான்? 

ஒரு பதிமூணு வயதுச் சிறுமியை ஒருவன் வன்கலவி செய்வது போல்தான் இதெல்லாம் எனக்கு அர்த்தமாகும்.  ஆனாலும் எனக்கு வேறு வழியில்லை.  எதற்காகவும் சண்டை பிடிக்க முடியாது.  எதிர்த்துப் பேச இயலாது.  வீட்டின் லயம் கெடும். லயம் கெட்டால் என் ரத்த அழுத்தம் 230க்குப் போகும்.  போனால் ப்ரெய்ன் ஹேமராஜ்.  அல்லது, மரணம்.  மரணம் பிரச்சினை இல்லை.  ப்ரெய்ன் ஹேமராஜ் வந்து பக்கவாதம் அடித்துப் பேச முடியாமல் போனால் அடுத்த நிமிடம் தற்கொலைதான் செய்து கொள்ள வேண்டும்.  ஏனென்றால் என்னை அப்படி ஒரு நிலையில் கவனித்துக் கொள்ள இந்த உலகில் ஒரு நாதி இல்லை.  தவறாக நினைக்காதீர்கள்.  என் பத்தினியைத் தாண்டி வேறு யாரும் இந்த வீட்டின் உள்ளே வர இயலாது.  பத்தினியால் அவளையே கவனித்துக் கொள்ள முடியாது.  அதற்கே அவளுக்கு எடுபிடியாக நான் வேண்டும்.  இந்த லட்சணத்தில் பக்கவாதம் அடித்த என்னை எங்கே அவளால் கவனித்துக் கொள்ள இயலும்?

ஒருமுறை ஹார்ட் அட்டாக் வந்து மருத்துவமனையில் இருந்தேன்.  சாமிநாதன்தான் இரவு பகலாக என்னை கவனித்துக் கொண்டான்.  சும்மா ஒருக்களித்துப் படுத்தால் கூட “சாரு, என்ன வேண்டும்?” என்று கேட்பான்.  பசிக்கிறது என்று சொன்னால் பழம் உரித்துத் தருவான். ஒருவாரம் ஓய்வு எடுங்கள் என்றார்கள்.  ஐந்தாவது நாளிலேயே பத்தினி வந்து வீட்டுக்கு வா என்றாள்.  அவளால் என் நண்பர்கள் என்னை கவனித்துக் கொள்வதைப் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.  அவளாலும் கவனிக்க முடியாது.  வீட்டில் இரண்டு நாய்கள் இருந்தன.  இன்னும் இரண்டு நாள் இங்கேயே இருந்து விட்டு வருகிறேனே என்றேன்.  வேண்டாம் என்று தீர்மானமாகச் சொல்லி விட்டாள்.

வீட்டுக்கு வந்த்தும் மறுநாள் ஒரு மணி இருக்கும், எனக்கு மதியம் சாப்பிட மருந்து வாங்குவதற்காக வெளியே போய் விட்டாள்.  எனக்கோ கொலைப்பசி.  வீட்டில் சாப்பிட எதுவுமே இல்லை.  நடக்க முடியாமல் நடந்து நானே சமைக்க வேண்டியதாயிற்று.  உடம்பில் துளிக்கூட தெம்பு இல்லை.  மகன் ஃபோன் பண்ணினான்.  விஷயத்தைச் சொன்னேன்.  அம்மா என்ன செய்வார்கள், மருந்தும் வாங்க வேண்டி இருக்கிறதே என்றான். 

தேவ்டியாப் பசங்களா, இந்த எழவுக்குத்தானேடா ஆஸ்பத்திரியிலேயே இருந்து விட்டு வருகிறேன் என்று சொன்னேன், என்று அவனிடம் சொல்லவில்லை.  நினைத்துக் கொண்டேன். 

அதனால்தான் எனக்கு உடம்புக்கு எதுவும் வந்து விடக் கூடாது என்பதில் படு கவனமாக இருக்கிறேன்.  அதாவது, பத்தினி என்ன செய்தாலும் நான் வாயை மூடிக் கொண்டிருப்பது என் ரத்த அழுத்தம் காரணமாக மட்டுமே.  எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தால் ரத்த அழுத்தம் ஒழுங்காக 120 – 80 அளவிலேயே இருக்கிறது.  எகிறினால் எகிறுகிறது.  அதனால் என் பத்தினி என்னை என்ன பேசினாலும் நான் பதில் பேசாமல் இருக்கவும், அடிமை போல் அடி பணியவுமே என்னைப் பழக்கிக் கொண்டிருக்கிறேன்.  எழுத்து முக்கியம்.  ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைப்பதற்கான லயம் முக்கியம்.

ஏன், உங்கள் பத்தினி என்ன செய்து விடுவார்கள்?  மீறி வர வேண்டியதுதானே? 

இது அடிக்கடி நான் எதிர்கொள்ளும் கேள்வி.  யாராலும் என்னை ஒன்றும் செய்ய முடியாது.  ஆனால் நான் உணர்ச்சிவசப்பட்டால் செத்தேன்.

ஒருநாள் திருப்பூரில் என்று நினைக்கிறேன், ஜெயமோகனின் வாசகர் ஒருவர் – முப்பது வயதுக்குள் இருக்கும் – அப்துல் கலாம் எப்பேர்ப்பட்ட ஒரு மகத்தான புத்திஜீவி என்று என்னிடம் பேசி, நான் பதில் பேசி, அவரும் பேசி, நானும் பேசி, பிறகு நான் உணர்ச்சிவசப்பட்டு பேசி, கடைசியில் எனக்கு வந்த கடுமையான நெஞ்சு வலி குறைய நான்கு மணி நேரம் ஆயிற்று. 

இதை விட மனித நரகலைத் தின்கலாம் ஐயா, தின்கலாம். 

அதிலிருந்துதான் நான் என்னுடைய வாசகர்கள் என்ற நாலு பேர் கொண்ட கமாண்டோ படை இல்லாமல் எங்கேயும் செல்வதில்லை என்று வைத்திருக்கிறேன்.  என்னைக் கொல்வதற்குத் துப்பாக்கியெல்லாம் வேண்டாம்.  வெறும் அப்துல் கலாம் என்ற பெயர் போதும்.  அந்தப் பெயரை வைத்து என்னோடு மோதி என்னைக் கொல்லலாம்.  அல்லது, இந்தியாவில் ராணுவ ஆட்சி வந்தால் நல்லது என்று சொல்லி என்னைக் கொல்லலாம்.  அல்லது, மோதி எத்தனை நல்லவர், வல்லவர் என்று சொல்லி, என்னைக் கொல்லலாம்.  அல்லது, இந்த உலகிலேயே சிறந்த நாடு இந்தியா என்று சொல்லி என்னைக் கொல்லலாம்.  அல்லது, இந்தியாவிலேயே இன்றைய அதிகமான ஒடுக்குமுறைக்கு உள்ளாகிறவர்கள் பிராமணர்கள்தான் என்று சொல்லி என்னைக் கொல்லலாம்.  இப்படி ஆயிரம் விஷயங்கள் இருக்கின்றன, என்னோடு வாதிட்டு என்னைக் கொல்வதற்கு.  ஒருநாள் – பத்து ஆண்டுகளுக்கு முன்பு – தாய்லாந்துக்கு என்னோடு உடன் வந்த என் வாசக நண்பன், இந்த உலகத்திலேயே சிறந்த நடிகன், இந்த உலகத்திலேயே சிறந்த மனிதன் அஜித் என்று சொல்லி, என்னைக் கொல்லப் பார்த்தான்.  என்னைக் கொல்வது அவன் நோக்கம் அல்ல.  எடுத்து விட்டால் போதும்.  நான் வாதம் செய்து, கத்திக் கத்திச் சாவேன்.  அன்றைய தினம் அங்கேயிருந்த நாற்காலிகளை எடுத்துப் போட்டு உடைத்து கத்தோ கத்து என்று கத்தி விட்டுப் படுக்கப் போனேன்.  பத்து ஆண்டுகளுக்கு முன் என்பதால் தப்பினேன்.  இப்போது என்றால் செத்திருப்பேன்.  ரத்த அழுத்தம் 260ஐத் தாண்டியிருக்கும். இத்தனைக்கும் அன்றைய தினம் என் கமாண்டோ படையைச் சேர்ந்த வேறு இருவரும் உடன் இருந்தார்கள்.  கமாண்டோக்கள் இருந்தும் இப்படி சில சமயம் விபத்து நேரும்.

புரிகிறதா, அதனால்தான் என் பத்தினி சொல்வதற்கெல்லாம் தலையாட்டிக் கொண்டிருப்பது.  படி தாண்டாப் பதியாக வாழ்வது.   

இப்படி பத்தினியிடமிருந்து விழும் அடிகளெல்லாம் என் அடி மனதில் படியும்தானே?  அது எல்லாம் அவ்வப்போது கொடுங்கனவுகளாகக் கிளர்ந்தெழுந்து நாட்டியமாடும்.  எல்லாம் பேய் நடனம்.  கனவுதானே?  என்ன லாஜிக் இருக்கும்?  என் நாடி நரம்பெல்லாம் நடுங்கும்.  ஐயோ நேரமாகி விட்டதே, நேரமாகி விட்டதே என்று ஈரக்குலையெல்லாம் பதறும்.  மூச்சு திணறும்.  கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் அந்தப் பதற்றமும் பயமும் கூடி நிற்கும். 

இப்போது சௌந்தரின் புண்ணியத்தால் கனவுகள் நின்று விட்டன.  இன்று காலை ஒன்பது மணிக்கு அடுத்த செட் பயிற்சிகளுக்கு வரச் சொன்னார்.  எட்டே காலுக்குக் கிளம்ப வேண்டும் என்று சொல்லியிருந்தேன்.  வீட்டிலேயே தங்கி உதவி செய்ய ஒரு பணிப்பெண் வந்திருக்கிறார்.  அவரிடம் எட்டே காலுக்குள் டிஃபன் செய்ய முடிந்தால் செய்யுங்கள், இல்லாவிட்டால் பரவாயில்லை, பதற வேண்டாம் என்று சொல்லியிருந்தேன்.

உப்புமா பண்ணியிருந்தார்.  ஆனால் அதில் கொஞ்சம் கூட உப்போ காரமோ இல்லை.  அதனால் தட்டில் போட்டதை அப்படியே குப்பையில் கொட்டி விட்டு, பணிப்பெண்ணுக்கும் பத்தினிக்கும் முருகன் இட்லி கடையிலிருந்து ஸ்விக்கி மூலம் இட்லி சொல்லி விட்டுக் கிளம்பினேன். பத்து மணி வரை சென்றது யோகா பயிற்சி.  பத்தே காலுக்குக் கிளம்பினேன்.  நண்பர் அனுப்பிய காரின் டிரைவர் எண் எதுவென்று தெரியவில்லை.  இறக்கி விடும்போதே டிரைவர் “என் நம்பர் இருக்கிறதா சார்?” என்று கேட்டார்.  அப்போது இரண்டு பிரச்சினைகள் எழுந்தன.  எதிரே ஒரு கார் எங்கள் காரைத் தாண்ட முடியாமல் தவித்தது.  அதற்குள் பின்னால் இருந்த பைக்காரர்கள் பொறுமையிழந்து ஹார்ன் அடிக்க ஆரம்பித்தார்கள்.  அப்போது பார்த்து எனக்குத் தொலைபேசி அழைப்பு.  ஸ்விக்கி.  அவர் பேசியது எனக்கு விழவில்லை.  நான் பேசியது அவருக்கு விழவில்லை.  நான் செல்ல வேண்டிய இடமும் வந்து விட்டதால் காரிலிருந்து இறங்கி விட்டேன்.  “என்னங்க வேணும் உங்களுக்கு?” என்றேன் ஸ்விக்கியிடம்.  “ஐட்டத்தைக் கொடுத்து விட்டேன் என்பதற்காக அழைத்தேன் சார்.”

இதற்கு ஒரு ஃபோனா என்று நினைத்துக் கொண்டு “ஓ, தேங்ஸ்” என்றேன். 

இந்தப் பிரச்சினைகளால் டிரைவரிடம் ”உங்கள் நம்பர் இருக்கிறது” என்று சொல்லி விட்டேன்.

கடைசியில் பார்த்தால் டிரைவர் நம்பர் இல்லை.  பிறகு அவருடைய நிறுவனத்துக்கு ஃபோன் செய்து நம்பர் வாங்கி, கிளம்புவதற்குப் பத்தரை ஆகி விட்டது.  அதற்குள் சௌந்தரும் நானும் ஒரு காஃபி குடித்தோம். 

வீடு திரும்பிக் கொண்டிருந்தேன்.  மணி 10.50.  வீட்டிலிருந்து ஃபோன். 

”என்னப்பா இது, மணி பதிணொண்ணு ஆவுது, இன்னும் காணோம் ஒன்னை.  யோகாவுக்குப் போறேன்னு சொல்லிட்டுப் போனே, இவ்வளவு நேரமா யோகா பண்றே?  எனக்கு ஒடம்பு சரியில்லாமப் போயி நான் படுத்துட்டேன்.  ஒண்ணுமே பண்ணலை” என்று கொடும் பதற்றமான, குற்றம் சாட்டும் தோரணையில் சொன்னாள் பத்தினி.

நான்தான் இப்படியெல்லாம் என்னை மாட்டி விடுகிறாற்போல் கேள்வி கேட்டால் உளறுவேன் என்று சொல்லியிருக்கிறேன் அல்லவா?

“இன்னிக்கு யோகா கிளாஸ் கொஞ்சம் நீண்டுடுச்சும்மா, அதான் லேட்டு.  ஆமா, ஒனக்கு இட்லி ஆர்டர் பண்ணினேனே, சாப்பிட்டியா?”

அதற்குள் ஃபோனைத் துண்டித்து விட்டாள் பத்தினி. 

மறுபடியும் ஃபோன் போட்டு இட்லி பற்றிக் கேட்டேன்.

”நான் இட்லியும் சாப்பிடலை ஒரு மண்ணும் சாப்பிடலை.  எனக்கு ஒடம்பு சரியில்லை” என்று சொல்லி விட்டு ஃபோனை மீண்டும் துண்டித்தாள் பத்தினி. 

இந்தக் காரணங்களால்தான் அப்படி ஒரு கொடுங்கனா என்னைத் துரத்திக் கொண்டே இருந்தது.  பத்தினி அழைக்கிறாள்.  நான் பதறிப் போய், நெஞ்சாங்குழி வெடிக்க வெடிக்க ஓடி வருகிறேன்.

பின்குறிப்பு 1: ஒருநாள் காலை ஏழரை மணிக்கு என்னை விழுந்தடித்துக் கொண்டு ஓடி வரச் செய்தாள் அல்லவா பத்தினி, வந்ததும் நீ எங்கே கிளம்புகிறாய் என்றேன். 

“சாமிக்குப் பூ வாங்கலாம்னு கிளம்ப நினைத்தேன், பிறகு சாய்ங்காலம் வாங்கிக்கலாம்னு விட்டுட்டேன்” என்றாள்.

பின்குறிப்பு 2: இப்போது கொடுங்கனாக்களின் காலம் முடிந்து விட்டது.  சௌந்தரின் யோகப் பயிற்சிகள் எல்லா கனவுகளையும் விரட்டி விட்டன.