இன்றும் வினித்திடம் பேசினேன். அவர் ஒரு கேள்வி கேட்டார். ”உங்களைப் பற்றிய ஆவணப்படம் குறித்துதான் இந்த அவ்ட்ஸைடர் தொடரை எழுத ஆரம்பித்தீர்கள். இப்போது சீலேயிலிருந்து கிளம்பி அர்ஜெண்டினா, கொலம்பியா, பராகுவாய், நிகாராகுவா என்று எங்கெங்கோ சுற்றுகிறீர்களே, படம் பார்ப்பவர்கள் இது பற்றியெல்லாம் படத்தில் வரும் என்று எதிர்பார்க்க மாட்டார்களா? சீலே போவதற்கே பணம் தட்டுப்பாடாக இருக்கிறதே? இங்கெல்லாம் எப்படிப் போவீர்கள், அதுவும் ரெண்டு பேர்?”
சீலேயுடன் படத்தை முடித்து விட்டு, இறுதியில் ஒரு அறிவிப்பைப் போட்டு விட வேண்டியதுதான் என்றேன்.
”உங்களிடமிருந்து நிதி உதவி கிடைத்தால் ஆவணப் படம் இன்னும் தொடரும்.”
நிதி உதவி என்றால் என்ன? ஐநூறு என்றாலும் ஆயிரம் என்றாலும் கூட நிதி உதவிதான். சென்ற அத்தியாயத்தில் படித்திருப்பீர்கள், அர்ஜெண்டீனியப் புரட்சிக் குழுவின் செயல்பாடுகளுக்கான பணம் – சொமோஸாவைக் கொல்வதற்கான பணம் – சுவிஸ் வங்கியில் வைக்கப்பட்டிருந்தது. அதை யாரெல்லாம் கொடுத்திருப்பார்கள்? லத்தீன் அமெரிக்க சுதந்திரத்தின் மீது அக்கறை கொண்ட தனி மனிதர்களும், அரசுகளும்தான். அந்தக் கதையை எழுத முனையும் நான் உங்களிடமிருந்து யாசிக்கிறேன். அவ்வளவுதான். உண்மையில் எனக்குப் பணத் தேவையே இருந்திருக்காது. பூனைகளுக்காகவே வாரம் பதினைந்தாயிரம் ரூபாய் ஆகிறது. மாதம் அறுபதாயிரம். இது என் கையிலேயே இருந்தால் தென்னமெரிக்க நாடுகள் அனைத்தையும் பயணத்தில் உள்ளடக்கி விடலாம். ஆனால் பூனைகளை எங்கே விட முடியும்? என்னாலெல்லாம் அந்தப் பூனைகளைக் கொண்டு போய் அனாதைகளாக அலைய விட முடியாது. தீர்க்கதரிசியின் ஓவியங்களைப் பார்த்திருக்கிறேன். சீடர்களோ, ஆட்டுக் குட்டிகளோ அவர் பின்னாலேயே போவார்கள். நான் ஒன்றும் தீர்க்கதரிசி அல்ல. ஒரு சாதாரண எழுத்தாளன். ஆனால் என் பின்னால் பத்து பூனைகளும் வந்து கொண்டிருக்கின்றன. நான் செல்லுமிடங்களிலெல்லாம் என்னைத் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. நான் குளியலறைக்குப் போனால், அங்கேயே வாசலில் வந்து உட்கார்ந்து கொள்கின்றன. உறங்கும் போது அறைக் கதவை மூடி விடுவேன். காலையில் நாலரைக்கு நான் எழுந்து கொள்ளும் வரை கதவின் அருகிலேயே எல்லாம் தவம் கிடக்கின்றன.
இதையெல்லாம் மீறி, புத்தன் தன் குதிரையைப் பிரிந்தது போல் என் எழுத்துக்காக, என் பயணங்களுக்காக இந்தப் பூனைகளைப் பிரிந்து விடலாம் என்று முடிவெடுத்தாலும், அவந்திகா தடையாக நிற்கிறாள்.
அதனால் இந்த ஆண்டு டிசம்பர் பதினெட்டு அன்று எனக்குப் பரிசு அளிக்க விரும்பும் அன்பர்கள் சில காரியங்களைச் செய்யலாம். பூனை உணவு அனுப்பி வைக்கலாம். Whiskas. Dry or wet. அல்லது, பணமாகக் கொடுத்தால் நானே வாங்கிக் கொள்வேன். பணம் பயணத்துக்கும் பயன்படும். ஆனால் யாரும் புத்தகம் மட்டும் அனுப்பி விடாதீர்கள். நான் பட்டினி கிடந்து வாங்கிய அரிதான புத்தகங்களே இன்று இணைய நூலகங்களில் இலவசமாகக் கிடைக்கின்றன. அந்த அளவுக்கு வாழ்க்கை அபத்தமாகப் போய் விட்டது. வீட்டில் இனி ஒரு புத்தகம் கூட வைக்க இடம் இல்லை. நீங்கள் எழுதிய புத்தகமாக இருந்தால் மென்புத்தகத்தை அனுப்பி விடுங்கள். இடத்தை அடைக்காது.
அர்ஜெண்டினாவில் நமக்கு ஒரு சே குவேராவைத் தெரியும். ஒரு போர்ஹேஸைத் தெரியும். ஒரு ஹூலியோ கொர்த்தஸாரைத் தெரியும். ஆனால் என்ன இது, அர்ஜெண்டினாவில் திரும்பின இடமெல்லாம் சே குவேராக்களாக இருக்கிறார்கள் என்றார் வினித். ஆம், அப்படித்தான்.
இன்னொரு விஷயம், சே என்றால் இங்கே மலையாளத்தில் அடிபொளி என்கிறார்கள் அல்லவா, அதுதான் பொருள். அங்கே தென்னமெரிக்காவில் எதாவது அட்டகாசமான ஒரு விஷயத்தைச் சொல்லி விட்டால் சே என்கிறார்கள். வாக்கியத்தை சே என்று முடிக்கிறார்கள். என்னமா ஆட்றான், அட்டகாசம். இந்த வாக்கியத்தில் வரும் அட்டகாசத்தைத்தான் தென்னமெரிக்கர்கள் சே என்கிறார்கள். ஆனால் நாம் சொல்லும் சே’வுக்கும் அவர்களின் சே’வுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. என்னால் சொல்லித்தான் காண்பிக்க முடியும்.
சொமோஸாவின் மரணம் கதை ஒரு த்ரில்லர் மாதிரி இருக்கும். ஃபாண்டஸி மாதிரி இருக்கும். நம்ப முடியாத சாகஸக் கதை போல் இருக்கும். நார்க்கோஸ் மாதிரியான ஒரு வெப்சீரீஸுக்கான கதை. இது எல்லாம்தான் சொமோஸாவின் மரணம்.
பாருங்கள், ஆனாவும் ஆர்மாந்தோவும் புரட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி கொலம்பியாவில் உள்ள ஒரு கிராமத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். அது ஒரு தோட்டம். அங்கே ஒரு மாமரம். அதிலே ஒரு மாங்கனி. அந்த மாங்கனி எனக்கு வேண்டும் என்கிறாள் ஆனா. “ஏய் நீ ஒரு புரட்சிக்காரி, அதை மறந்து விட்டு மாங்காய் அடிக்கலாம் என்கிறாயே?” என்று அதட்டுகிறான் ஆர்மாந்தோ. “இதுவும் சேர்ந்ததுதான் புரட்சி. உன்னால் முடியாவிட்டால் சொல், நானே ஏறிப் பறித்துக் கொள்கிறேன்” என்கிறாள் ஆனா.
பெண்களுடன் வாதம் செய்யக் கூடாது என்று தெரிந்திருந்த ஆர்மாந்தோ உடனே மாம்பழத்தைப் பறிக்க எழுந்து கொள்கிறான். (இந்த நாவலை எழுதியது ஒரு பெண் என்பதை மறந்து விடாதீர்கள்.) அவனுக்கும் எட்டவில்லை. எட்டும் அளவுக்கு இருந்த பழங்களையெல்லாம் ஏற்கனவே பறித்துத் தின்று விட்டார்கள். மிகவும் உயரத்தில் இருந்த ஒரு பழம் மட்டும் நன்றாகக் கனிந்து சிவந்து கிடந்தது. அந்தப் பழம் ஆனாவுக்கு வேண்டும். இப்போதே.
நீ லேசாகக் குனி. நான் உன் தோள் மீது ஏறி நின்று பறிக்கிறேன் என்கிறாள் ஆனா.
ஆர்மாந்தோ குனிகிறான். தோளில் ஏறி நின்று கிளையைத் தொடுகிறாள். அதற்குள் அவள் அணிந்திருந்த செருப்பு வழுக்கிக் கீழே விழுந்ததில் முழங்கால் எலும்பு முறிந்து விட்டது. புரட்சிக்கான ஆறு பேரில் ஒருத்தரின் கால் இவ்வாறாக முடக்கப்பட்டது. எலும்பு முறிவு கூட பக்கத்து கிராமத்தில் இருந்த ஒரு டாக்டர் எடுத்த எக்ஸ்ரேயில்தான் தெரிந்தது. கவலைப்பட ஒன்றுமில்லை, பிளேட் போட்டால் சரியாகி விடும் என்கிறார் அந்த கிராமத்து டாக்டர்.
ஆனா கட்டுப்படுத்த முடியாமல் அழுகிறாள்.
ஆர்மாந்தோ அவளுக்கு ஆறுதலாக, “பொறுத்துக் கொள் ஆனா, உயிர் போகிறாற்போல் வலிக்கும்தான், பொறுத்துக் கொள்” என்கிறான்.
“ஏய் முட்டாள், நான் ஒன்றும் வலியில் அழவில்லை. நம் காரியங்களுக்கு நான் உதவ முடியாமல் போய் விட்டதே என்று அழுகிறேன்” என்கிறாள் ஆனா.
ஆனாவின் பாதத்திலிருந்து முழங்கால் வரை போடப்பட்டிருந்த பிளாஸ்டர் கட்டைப் பார்த்து விட்டு புரட்சிக் குழுவினர் அதிர்ச்சியாகின்றனர். இருந்தாலும் எதற்காகவும் எடுத்த காரியத்தை விட்டு விட முடியாது. குழு பராகுவாய் செல்வது என்று முடிவு செய்கிறது. பராகுவாய் விமான நிலையத்தில் இமிக்ரேஷன் எப்படி? உலகிலேயே அவ்வளவு சுலபமான இமிக்ரேஷன் எங்கேயும் கிடையாது. பாஸ்போர்ட்டைப் புரட்டி ஒரு ஸ்டாம்பைக் குத்தி அனுப்பி விடுகிறார்கள். சொல்லப் போனால் பாஸ்போர்ட்டில் காலியான பக்கம் எது என்றுதான் தேடுகிறார்கள், வேறு எதையும் பார்ப்பதில்லை.
இப்போது ஆனா பயணம் செய்ய முடியாது. ஆகவே, சூஸானாவும் ஆர்மாந்தோவும் கணவன் மனைவியாக பராகுவாய் செல்ல வேண்டும். சூஸானாவுக்குக் கடும் கோபம் வந்து விடுகிறது. இப்போதுதானே அவளும் ஃப்ரான்சிஸ்கோவும் அசுன்ஸியோனில் கணவன் மனைவியாகச் சுற்றினார்கள்? உடனேயே எப்படி இன்னொரு கணவனோடு அதே ஊரில் சுற்ற முடியும்?
அவளுடைய வாதம் ஏற்கப்பட்டது. அதற்காக சூஸானாவின் சிகையலங்காரத்தை மாற்றி அவளுக்கு வேறொரு பெயரோடு வேறொரு பாஸ்போர்ட் தயாரிக்கப்பட்டது. கொலம்பியாவில் அதெல்லாம் சர்வ சகஜம். போதை மருந்துக் கடத்தலுக்குப் பேர் போன தேசம். பொகோத்தாவில் நடக்காத சட்ட விரோத காரியமே எதுவும் இல்லை. இதற்கிடையில் ஜூலியா வேறு இன்னொரு குண்டைத் தூக்கிப் போட்டாள். அவள் கர்ப்பமாக இருக்கிறாள்.