த அவ்ட்ஸைடர் 23

அதோடு விடவில்லை ஜூலியா.  நான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை ரமோனிடம் சொன்னால் உங்கள் இருவரையும் கழுத்தை நெறித்துக் கொன்று விடுவேன் என்றும் சொன்னாள். 

சூஸானா தன் ’புதிய கணவன்’ ஆர்மாந்தோவுடன் பராகுவாய் திரும்புகிறாள்.  மூன்று வாரங்களுக்கு முன்புதான் கணவன் ஃப்ரான்சிஸ்கோவுடன் அசுன்ஸியோனில் சுற்றித் திரிந்தாள்.  வழக்கம்போல் விமான நிலையத்தில் எந்தப் பிரச்சினையும் இல்லை.  சாதாரணமாகவே அசுன்ஸியோன் விமான நிலையத்தில் யார் வேண்டுமானாலும் போகலாம், வரலாம்; தேன் நிலவுத் தம்பதிகளை யார் தொந்தரவு செய்யப் போகிறார்கள்? 

ஆர்மாந்தோ ஒரு கோடீஸ்வரன்.  தந்தை மூலம் பெரும் பணம் கிடைத்திருக்கிறது.  அதை வைத்து அசுன்ஸியோனில் ஒரு கட்டுமான நிறுவனத்தை ஆரம்பிக்க வந்திருக்கிறான்.  புதிதாகத் திருமணம் ஆனவன் என்பதால் அப்படியே தேன் நிலவையும் கொண்டாடி விடலாம்.  பிஸ்கோத்துக்காக அடித்துக் கொள்ளும் நாய்களைப் போல் வியாபாரப் போட்டியில் தத்தளித்துக் கொண்டிருக்கும் புவனோஸ் அய்ரஸில் எவனாவது வியாபாரத்தைத் தொடங்க நினைப்பானா என்ன?  ஆர்மாந்தோ சொல்வதும் நியாயம்தான் என்று தோன்றியது அசுன்ஸியோன் செல்வந்தர்களுக்கு.  ஜூலியா வேறு பேரழகி.  கேட்க வேண்டுமா?  நான் உதவுகிறேன் நான் உதவுகிறேன் என்று பலரும் முன்வந்தார்கள். 

முதலில் தங்குவதற்கு ஒரு நல்ல வீடு வேண்டும்.  என்னதான் வசதியாக இருந்தாலும் எத்தனை நாட்கள் ஓட்டலில் தங்க முடியும்?  வீட்டில் நான்கு படுக்கையறைகள் இருக்க வேண்டும்.  வாடகை, முன்பணம் எல்லாம் டாலரிலேயே கொடுத்து விடுவோம்.

டாக்ஸியை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு ரியல் எஸ்டேட் ஏஜண்டாகப் போய்ப் பார்க்கலாம் என்று கிளம்பினார்கள்.  முதல் ஏஜண்டிடமே வேலை முடிந்து விட்டது.  இன்னும் அரை மணி நேரத்தில் வீட்டின் சொந்தக்காரர் உங்களைச் சந்திப்பார் என்றார் ஏஜண்ட்.

முடிந்த வரை ஆர்மாந்தோ ஒரு பூர்ஷாவாவைப் போல்தான் ஆடை அணிந்து கொண்டிருந்தான்.  ஆனால் வீட்டின் சொந்தக்காரர் அவனை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்து விட்டு, தலையை இடம் வலமாக அசைத்து விட்டு ஏஜண்டிடம் ஏதோ சொல்லி விட்டுப் போய் விட்டார்.  ஏஜண்ட் சொன்னார், இந்த மாதிரி ஒரு ஹிப்பிக்கு என் வீட்டைக் கொடுக்க முடியாது என்கிறார்.  வீட்டுச் சொந்தக்காரர் ஸ்த்ரோஸ்னரின் மந்திரிகளில் ஒருவர்!

காரில் ஏறும் போது சூஸானா சொன்னாள், ”இதோ பார் ஆர்மாந்தோ, நீ ஒரு ப்ராலிடேரியட் என்று உன் நெற்றியில் எழுதி ஒட்டியிருக்கிறது.  அதை எந்த ஆடையாலும் மாற்ற முடியாது.  ஆரம்பத்திலேயே இந்தக் கவர் ஸ்டோரி எப்படி செல்லுபடியாகும் என்றுதான் நான் யோசித்தேன்.  அதேபோல் நடந்து விட்டது” என்றாள்.

மனம் உடைந்த நிலையில் ஆர்மாந்தோ சொன்னான்.  ”வேண்டுமானால் இப்படிச் சொல்ல்லாம்.  என் தந்தை ஒரு விளிம்புநிலை மனிதர்.  உழைப்பால் உயர்ந்து ஒரு கட்டுமான நிறுவனத்தை உருவாக்கினார்.  நான் அதை பராகுவாயில் வைத்து மேலும் விஸ்தரிக்க நினைக்கிறேன்.  எப்படி?”

ஆனால் மறுநாளே அவர்களுக்கு நீச்சல் குளத்துடன் ஒரு பங்களா கிடைத்தது.  ஆறு மாத வாடகை முன்பணத்தையும் ஒரு மாத வாடகையையும் டாலராகக் கொடுத்தான் ஆர்மாந்தோ.  பெரிய வீடு என்பதால் ஆயுதங்களை மறைத்து வைப்பதற்கும் இடம் இருந்தது. 

சூஸானா சொல்கிறாள்:

கமாண்டோ குழுவின் நான்கு பேர் அந்த வீட்டில் தங்கினோம்.  அண்டை வீட்டாருக்கு எந்த சந்தேகமும் வந்து விடாத அளவுக்கு நடந்து கொண்டோம்.  மத்தியதர வர்க்கத்தின் நடைமுறைகளுக்கு ஏற்ப ஒரு பணிப்பெண்ணையும் அமர்த்தினோம்.  திருமணம் ஆனவள். வாரத்திற்கு இரண்டு முறை வருவாள். காலை எட்டு மணிக்கு வந்து மாலை ஐந்து மணி வரை வேலை செய்தாள்.  ஒரே ஒரு முறை அவள் என் கணவனைப் பார்த்திருக்கிறாள் (ஆர்மாந்தோ).  மற்றபடி அவள் என் உறவினர்களைப் பார்த்ததில்லை (ரமோன், ஜூலியா).

பணிப்பெண் விஷயத்தில் ஒரு பிரச்சினை எழுந்தது.  புரட்சியாளர்களிடையே ஒரு விதி இருந்தது.  அவரவர் துணிமணிகளை அவரவர்தான் துவைத்துக் கொள்ள வேண்டும்.  தங்கியிருக்கும் இடத்தை அவரவரே சுத்தப்படுத்த வேண்டும்.  அடுத்தவர் செய்வார் என எதிர்பார்த்து விட்டு விடக் கூடாது.  அதனால் என்னைத் தவிர மற்ற மூவரும் இந்த இரண்டு வேலையையும் செய்து முடித்து விடுவார்கள்.  பணிப்பெண் என்ன வேலை செய்வாள்?  வேலை இல்லை என்றால் அது சந்தேகத்தை உண்டு பண்ணுமே?   அதனால் மிகவும் சிரமப்பட்டு மூன்று பேரையும் மத்தியதர வாழ்க்கை முறைக்குப் பழக்கப்படுத்த வேண்டியிருந்தது.   

அது மட்டும் அல்ல, அண்டை அயலாரோடு நல்லுறவைப் பேண வேண்டும்.  அவ்வப்போது அவர்களை நம் வீட்டுக்கு அழைத்து விருந்து கொடுப்பது, அவர்கள் வீட்டு விருந்துக்குப் போவது, அவர்களின் குழந்தைகளுக்குப் பிறந்த நாள் பரிசு கொடுப்பது என்று ஒரு சராசரி உயர் மத்தியதர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தோம்.  பெண்கள்தான் பெரிய பிரச்சினை.  அனாவசியமாகக் குடைந்து கொண்டே இருப்பார்கள்.  புவனோஸ் அய்ரஸ் எப்படி இருக்கும்?  அங்கே எந்தப் பகுதியில் வாழ்ந்தீர்கள்?  இப்படி நூற்றுக்கணக்கான கேள்விகளைக் கேட்பார்கள். 

தோட்ட்த்தின் ஒரு மூலையில் ஒரு நிலவறையை அமைக்க வேண்டும். அதில்தான் ஆயுதங்களை வைக்கலாம் என்று ஏற்பாடு.  ஆர்மாந்தோ கட்டிடத் தொழிலில் இருந்ததால் சிமண்டும் செங்கல்லும் கொண்டு வருவதில் குழப்பம் ஏதும் இல்லை.  ஆனால் பகலில் செய்ய முடியாது.  இரவில்தான் செய்தோம்.  இரண்டு இரவுகளில் பதினாறு மணி நேரத்தில் நிலவறையைக் கட்டி முடித்தோம். 

இது எல்லாம் நடந்து கொண்டிருக்கும்போதே ஆர்மாந்தோவும் தன் கவர் ஸ்டோரிக்கு ஏற்ப செயல்பட்டுக் கொண்டிருந்தான்.  கட்டுமானப் பணிகள்.  ஆர்மாந்தோ சொல்கிறான்:  ஏதோ ஆஃபீஸ் வேலைக்குப் போவதைப் போல் தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் கிளம்பி விடுவேன்.  கண்காணிப்பதே தெரியாமல் சொமோஸாவின் வீட்டில் ஏதாவது நடமாட்டம் தெரிகிறதா என்று கண்காணிப்பேன்.  சூஸானாவும் நான் செய்ததையேதான் செய்தாள்.  ஆனால் தனியாக.  ஆனாலும் அந்த வேலைக்கு இரண்டு பேர் போதுமானதாக இல்லை. நாங்கள் இருவருமே மனிதர்களோடு மிகச் சுலபமாகப் பழகி விடும் தன்மை கொண்டவர்கள் என்பதால் யாருக்கும் எங்களைப் பற்றி சந்தேகம் எழவில்லை. 

சொமோஸாவின் நடவடிக்கைகளை கவனிப்பதுதான் பெரும் தலைவலியாக இருந்தது.  ஏனென்றால், அவன் எந்த வேலையையும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் செய்வதில்லை.  ஆனால் நாங்கள் இருவரும் செய்த மிக முக்கியமான வேலை என்னவென்றால், தப்பிச் செல்லும் வழிகளைக் கண்டு பிடித்ததுதான்.  அதில் நாங்கள் நூற்றுக்கு நூறு தெளிவாக இருந்தோம்.  அதற்காக அசுன்ஸியோன் முழுவதையும் இஞ்ச் இஞ்சாக சுற்றி எங்களை அந்த இடங்களுக்குப் பழக்கிக் கொண்டிருந்தோம்.  அதற்கு மேல் அசுன்ஸியோனில் நாங்கள் செய்வதற்கு ஒன்றுமில்லை.  ஆம், அசுன்ஸியோனில் ஒன்றுமே இல்லை. 

”சரி, ஆயுதங்களை எப்படி அர்ஜெண்டீனிய எல்லையிலிருந்து அசுன்ஸியோனுக்குக் கடத்தினீர்கள்?” என்று ஆர்மாந்தோவைக் கேட்கிறார் நாவலாசிரியர்.

அது மிகவும் சுலபமாக இருந்தது.  அர்ஜெண்டினாவுக்கும் பராகுவாய்க்கும் இடையே கள்ளக்கடத்தல் நடக்காத நாளே இல்லை.  எல்லா பொருட்களும் கடத்தப்பட்டன.  போலீஸும் லஞ்சத்தை வாங்கிக் கொண்டு விட்டு விடுவார்கள்.  ஆனால் ஃப்ரான்சிஸ்கோ தேர்வு செய்து வைத்திருந்த இட்த்தை நாங்கள் விட்டு விட நேர்ந்தது.  ஃப்ரான்சிஸ்கோவின் நண்பனான ஒரு கடத்தல்காரன் அந்த இடம் அபாயகரமானதாகி விட்டது என்றான். அந்த இடத்தில்தான் ஒட்டு மொத்தக் கடத்தலும் நடந்து கொண்டிருந்தது.  இந்தக் கடத்தலுக்குக் காரணம், பராகுவாயில் எதுவுமே தயாரிக்கப்படுவதில்லை.  வெண்ணெயிலிருந்து பன்றிக் கறி வரை எல்லாவற்றுக்குமே அவர்கள் அர்ஜெண்டினாவையோ ப்ரஸீலையோதான் நம்பியிருக்க வேண்டியிருந்த்து. 

மூன்று மரப் பெட்டிகளில் ஆயுதங்கள் மோட்டார் சைக்கிள் சாதன்ங்கள் என்று பெயரிடப்பட்டு ஜூலை எட்டாம் தேதி முன்னிரவு எட்டு மணிக்கு படகில் வருகின்றன.  தேதி முக்கியம்.  ஜூலை 8, 1980. சொமோஸா கொல்லப்பட இன்னும் இரண்டு மாதங்களும் ஒன்பது நாட்களும் இருந்தன.  சொமோஸா கொல்லப்பட்ட தினம் செப்டம்பர் 17, 1980.

நதியின் இக்கரையில் இருக்கும் குழு மூன்று முறை சிவப்பு விளக்கு சிக்னல் கொடுக்க வேண்டும்.  அதன் பொருள், இக்கரையில் எதுவும் பிரச்சினை இல்லை, நீங்கள் முன்னே வரலாம்.  இதற்குப் பதிலாக படகில் இருப்பவர்கள் வெள்ளை விளக்கு சிக்னல் கொடுக்க வேண்டும்.   இதற்கிடையில் குழுவில் ஏழாவது ஆளாக ஆஸ்வால்தோவும் வந்து சேர்ந்து கொண்டான். 

Chaco என்பது அர்ஜெண்டினா, ப்ரஸீல் மற்றும் பராகுவாய் ஆகிய மூன்று நாடுகளிலும் இருக்கும் ஒரு பரந்த நிலப்பகுதி.  அதில் பராகுவாயில் இருக்கும் சாக்கோவில் மனிதர்கள் அதிகம் இல்லை.  தென்னமெரிக்காவிலேயே மிகக் குறைந்த அளவிலான மனிதர்கள் வசிப்பது பராகுவாய் சாக்கோதான்.  அந்த சாக்கோவில் 20000 ஹெக்டேரை வாங்கிப் போட்டிருந்தான் சொமோஸா.  பருத்தி ஆலை வைப்பதாகத் திட்டம்.  அதேபோல் ப்ரஸீலிலும் தலைநகருக்கு அருகே பெருமளவில் நிலங்களை வளைத்துப் போட்டிருந்தான்.  மட்டுமல்லாமல் அவன் உருகுவாயில் உள்ள புந்த்தா தெல் எஸ்த்தேவுக்குப் (Punta del Este) போய் விடலாம் என்று யோசித்துக் கொண்டிருப்பதாகவும் பத்திரிகைச் செய்திகள் தெரிவித்தன.  ஏனென்றால், பராகுவாயின் சில கோடீஸ்வரர்களோடு சொமோஸாவுக்கு ஒத்துப் போகவில்லை.  அதை விட முக்கியமாக, புந்த்தா தெல் எஸ்த்தேதான் La dolce vitaவுக்குத் தோதான இடமாக இருந்தது. 

ஆக, சொமோஸா உருகுவாய் செல்வதற்குள் போட்டுத் தள்ள வேண்டும்.    

ஜூலை 2, 1980.  அசுன்ஸியோன். ரமோனும் ஜூலியாவும் ஒரு ஓட்டலில் அறை எடுத்தார்கள். 

ஆர்மாந்தோ புதிதாக வந்து சேர்ந்த கமாண்டோ ஆட்களை அழைத்துக் கொண்டு ’சம்பவ’ இட்த்தை அணு அணுவாகக் காண்பித்தான்.  ஆர்மாந்தோவும் சூஸானாவும் சொமோஸா பயன்படுத்தும் நான்கு கார்களை அடையாளம் கண்டு பிடித்தார்கள்.  இரண்டு மெர்ஸிடஸ் பென்ஸ் லிமோசின்.  ஒன்று நீலம்.  இன்னொன்று வெள்ளை.  மூன்றாவது, சிவப்பு நிற ஃபோர்ட் ஃபால்கன்.  பொதுப் பயன்பாட்டுக்கு ஒரு செரோக்கீ சீஃப். 

ஜூலியா மூன்று மாத கர்ப்பம் என்ற செய்தி ரமோனிடம் சொல்லப்பட்டது.  “ஆனால் அது பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாதே ரமோன்.  நான் இந்தப் புரட்சிகர நடவடிக்கையில் ஈடுபட்டே ஆக வேண்டும்.  நிகாராகுவாவுக்காகவும், அர்ஜெண்டினாவுக்கும், ஏன், ஒட்டு மொத்த லத்தீன் அமெரிக்காவுக்கும் நான் ஆற்றியாக வேண்டிய கடமை இது.  அதே சமயம் என் வயிற்றில் வளரும் சிசு பற்றியும் நான் யோசிக்கிறேன்.  எனக்கு ஏதாவது ஒன்று ஆனால், அது சிசுவையும்தான் பாதிக்கும்.”

சிறிது நேர மௌனத்துக்குப் பிறகு, ”நடப்பது நடக்கட்டும்.  நாம் ஏற்கனவே போட்டிருந்த திட்டத்தில் எந்த மாற்றமும் வேண்டாம்.  உனக்கு ஏதாவது பிரச்சினை என்றால் உன்னை விடுவித்து டாக்டரிடம் அனுப்பி விடுவேன். அது நிச்சயம்” என்றான் ரமோன்.  

ஜூலியா நாவலாசிரியரிடம் சொல்கிறாள். ”கமாண்டோ குழுவில் உள்ள எல்லோரையும் விட என்னுடைய பொறுப்புதான் அதிகமாக இருந்தது.  ஏனென்றால், நான் ரமோனின் மனைவியாக அவனருகில் இருந்தேன்.  அவனுக்கு ஏதாவது ஆகி விட்டால் அது ஒட்டு மொத்த புரட்சிக்கே ஆபத்து.  ஏனென்றால், ரமோன் நூறு புரட்சியாளர்களுக்கு சமம்.  அவனைத்தான் ஒட்டு மொத்த லத்தீன் அமெரிக்காவே தேடிக் கொண்டிருக்கிறது.  அவனைத்தான் ஒட்டு மொத்த லத்தீன் அமெரிக்காவுக்குமே தெரியும்.  அவன்தான் ஒட்டு மொத்த லத்தீன் அமெரிக்கப் புரட்சியின் குறியீடாக விளங்கினான்.  அவனுடைய உயிரைக் காப்பாற்றுவதற்காக நான் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருந்தேன்.  என் உயிரெல்லாம் அவனுக்கு முன்னால் துச்சம்.  அவனுக்காக என் வயிற்றில் வளரும் சிசுவின் உயிரையும் கூட விட்டுக் கொடுக்கலாம். 

ஆர்மாந்தோவும் நீங்களும் (சூஸானா) தம்பதிகளாக ஒரு வீட்டில் வாழ்ந்தீர்கள், சரி.  ஆனால் அதே வீட்டில் ரமோனும் ஜூலியாவும் எப்படி இருந்தார்கள்.  அண்டை வீடுகளில் என்ன சொல்லி சமாளித்தீர்கள்?

’ரமோனும் ஜூலியாவும் விடுமுறையைக் கழிக்க அசுன்ஸியோன் வந்தார்கள்.  ஆனால் வந்த இடத்தில் ரமோனுக்கு உடம்பு சரியில்லாமல் போய் விட்டது.’  இப்படி ஒரு நாடகத்தை உருவாக்கினோம்.  அதே சமயம் ரமோனை யார் கண்ணிலும் காட்டாமல் பார்த்துக் கொண்டோம்.  ஆனால் அதுதான் மிகவும் சிரமமாக இருந்த்து.  ஏனென்றால், ரமோன்தான் எங்கள் ஏழு பேரில் படு சுறுசுறுப்பான ஆள்.  அவனை ஒரு இடத்தில் இருத்தி வைப்பது பெரிய பிரச்சினை.  ஆனாலும் சொமோஸா இருந்த பகுதியில் ரமோனின் நிழல் கூடத் தெரியாமல் பார்த்துக் கொண்டோம். அவனும் எங்கள் கூடவேதான் வருவான்.  ஆனால் காரிலிருந்து இறங்க மாட்டான்.  அவனுக்கும் சம்பவம் நடக்கப் போகும் இடம் பரிச்சயமாக வேண்டும் அல்லவா?

சரி, ரமோன் பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள்?

எங்களுடைய அர்ஜெண்டீனியப் புரட்சிப் படையிலேயே ரமோன் அளவுக்கு ராணுவப் பயிற்சி பெற்றவர்கள் யாரும் இல்லை.  அதனால் எந்த ஒரு நெருக்கடியான சூழ்நிலையையும் சமாளித்து விடக் கூடிய ஆற்றலும் தன்னம்பிக்கையும் ரமோனுக்கு உண்டு.  ரமோன் எந்தச் சூழ்நிலையிலும் உணர்ச்சிவசப்பட்டோ பதற்றமடைந்தோ யாரும் பார்த்ததில்லை.  மற்றவர்களிடத்திலும் தன்னம்பிக்கையை ஊட்டக் கூடியவன்.  அவன் நம் அருகில் இருந்தாலே நமக்கு அளவில்லாத ஆற்றல் வந்து விட்டது போல் தோன்றும்.  சமயங்களில் கோபப்படுவான்.  ஆனால் நமக்குள் எல்லையற்ற நம்பிக்கையை விதைப்பவனும் அவன்தான்.  ஏனென்றால், நம்மைப் பற்றிய தன்னம்பிக்கை நமக்கு அவசியம்.  ஒரு காரியத்தைச் செய்து முடிப்போம் என்று சபதம் எடுத்திருக்கிறோம்.  அதை எப்படியாவது நாம் செய்து முடித்தாக வேண்டும்.  அதற்காக என்ன விலை கொடுக்கவும் நாம் தயாராக இருக்க வேண்டும்.  பல சமயங்களில் நாங்கள் சோர்வடைந்திருக்கிறோம்.  எங்களுடைய இலக்கை எங்களால் பல தினங்கள், பல வாரங்கள் பார்க்க முடியாமலேயே போயிருக்கிறது.  அதனால் வீட்டின் கேட்டை உடைத்துக் கொண்டு போய் விடலாமா என்று கூட ஆலோசித்திருக்கிறோம்.  ஆனால் அது தற்கொலை.  அதை மட்டும் செய்யவே கூடாது.  எதிரியிடம் மாட்டாமல் இருப்பதும், உயிரை இழக்காமல் இருப்பதும்தான் ஒரு போராளியின் அடிப்படைக் கடமைகள்.

எங்களைப் பொருத்தவரை ரமோன்தான் தலைவன்.  நாங்கள் இந்தப் புரட்சிகர அமைப்பில் சேர்வதற்கு முன்பே ரமோன்தான் எங்கள் தலைவனாக இருந்திருக்கிறான். அவன் புரட்சியாளன் மட்டுமல்ல.  அவனிடம் நீங்கள் எத்தனை சாதாரணமான விஷயத்தைக் கூடப் பேசலாம், விவாதிக்கலாம்.  மிக அரிதான நுண்ணுணர்வு கொண்டவன்.  என் மனம் சோர்வடையும் போதெல்லாம் நான் ரமோனிடம்தான் செல்வேன்.  எப்படிப் பார்த்தாலும் ரமோன் நம்மைப் போன்ற ஒரு மனிதன் அல்ல.  அவன் ஒரு வேற்றுக்கிரக வாசி.   

அதிர்ஷ்டவசமாக அசுன்ஸியோனில் ரமோனை யாரும் அடையாளம் கண்டு கொள்ளவில்லை.  அவனுடைய தலைக்கு மிகப் பெரிய விலை விதிக்கப்பட்டிருக்கிறது.  அவனைக் காட்டிக் கொடுத்தால் ஒருவர் கோடீஸ்வரர் ஆகி விடலாம்.  கண்களை மறைக்கும் கருப்புக் கண்ணாடியும், தொப்பியும் அணிந்திருந்தான்.  மீசை வேறு அவனை வேறு ஆளாகக் காட்டியது.  வெளிக்காற்றையே சுவாசிக்காமல் இருப்பதால் அவ்வப்போது ரமோனை ஆர்மாந்தோ ஊருக்கு வெளியே உள்ள ஸ்டீக் கடைகளுக்கு அழைத்துக் கொண்டு போய் வருவான். 

காருக்குள்ளேயே அமர்ந்து சம்பவ இடத்தை ஆய்வு செய்த ரமோன் இவ்வாறாக முடிவுக்கு வந்தான்:

சொமோஸா வசிப்பது ஸ்பானிஷ் அவென்யூவில்.  அவனுடைய நடவடிக்கைகளில் ஒருவித சீரான போக்கு தெரிகிறது.  ஒரு குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நேரத்தில்தான் அவன் வெளியே போகிறான்.  ஆகவே அதை நாம் அவதானிக்க வேண்டும்.  அந்த அவென்யூதான் அசுன்ஸியோனிலேயே மிகவும் பிஸியான இடம்.  காரணம், அது நகரத்தின் மையத்துக்குச் செல்லும் இரண்டு பாதைகளில் ஒன்று.  ஸ்த்ரோஸ்னரும் அவனுடைய மந்திரிகளும் வாழும் இடம் என்பதால் மிகக் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.  எங்கு பார்த்தாலும் போலீஸ் துப்பாக்கிகள்தான் கண்ணில் தென்பட்டன. 

எப்படிப்பட்ட தாக்குதல்களை மேற்கொள்ளலாம் என்று அடிக்கடி விவாதித்தோம்.  பஸூகா, வெடிகுண்டுகள், தற்கொலைப் படையாக மாறி வீட்டிற்குள் செல்லுதல். 

ஆனாலும் எங்கள் இலக்கு எங்கள் கண்களிலேயே தென்படவில்லை.  பிறகுதான் நான் ஒரு யோசனை சொன்னேன்.  இப்படி நாம் அடிக்கடி போய் போய்ப் பார்த்துப் பயன் இல்லை.  நிரந்தரமாகவே இந்தச் சுற்றுப்புறத்தில் நம் ஆள் ஒருவன் உட்கார்ந்து கண்காணிக்க வேண்டும்.  அப்போதுதான் நம் இலக்கை நாம் கண்களால் காண முடியும். 

ஏழு பேர் கொண்ட கமாண்டோவில் நாங்கள் நான்கு பேர் அசுன்ஸியோனில் இருந்தோம்.  தற்சமயம் எங்களுடைய இலக்கு வசித்த வீட்டை நான்கு இடங்களிலிருந்து மட்டுமே கண்காணிக்க முடிந்தது.  ஒரு சூப்பர் மார்க்கெட், இரண்டு பெட்ரோல் பங்க், ஒரு நடைபாதை.  இந்த இடங்களிலிருந்து நாம் ஒரு மணி நேரத்துக்கு மேல் நின்று கண்காணிக்க முடியாது. பெட்ரோல் பங்கில் நம் காருக்கு பெட்ரோல் போடலாம், காரைக் கழுவலாம்.  சூப்பர் மார்க்கெட்டில் மனைவி ஷாப்பிங் செய்ய கணவன் வெளியே நின்று பராக்குப் பார்த்துக் கொண்டிருக்கலாம்.  நடைபாதையில் ஒரு மணி நேரம் நடக்கலாம்.  எல்லாமே ஒரு மணி நேரம்தான்.  அதற்கு மேல் போனால்        சந்தேகம் வந்து விடும்.  இருபத்து நான்கு மணி நேரமும் கண்காணிப்பதற்கான ஒரு இடம்தான் தேவை.  அதாவது, ஒரு பத்து நாட்களுக்கு அப்படி நாம் கண்காணிக்க வேண்டும்.  சொமோஸா எந்த நேரத்தில் வெளியே வருகிறான் என்று தெரிய வேண்டும்.

இப்படிச் செய்யலாம்.  திங்கள் கிழமை காலை பத்திலிருந்து பதினோரு மணி வரை கண்காணிக்க வேண்டும்.  செவ்வாய்க் கிழமை பதினோரு மணியிலிருந்து பன்னிரண்டு வரை.  புதன் பன்னிரண்டிலிருந்து ஒன்று.  இப்படியே பத்து நாட்கள். 

அதாவது, சொமோஸாவுக்கு ஒரு குறிப்பிட்ட ஷெட்யூல் இருக்கும் என்று நினைத்தீர்களா?

ஆமாம்.  உதாரணமாக, செவ்வாய்க் கிழமை காலை எட்டிலிருந்து ஒன்பது வரை சொமோஸாவை நாங்கள் பார்த்து விட்டோம் என்றால், அடுத்த செவ்வாய்க் கிழமையையும் அடுத்த எட்டிலிருந்து ஒன்பதுவையும் சோதிப்போம்.  ஒன்று, கிழமை (செவ்வாய்) ஒத்து வர வேண்டும்.  அல்லது, நேரம் (எட்டிலிருந்து ஒன்பது) ஒத்து வர வேண்டும்.  அது நடக்கவில்லை என்றால், அது திட்டமிடாதது என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். 

ஆனால் அந்தத் திட்டம் வெற்றி பெறவில்லை.  சொமோஸாவிடம் ஒரு குறிப்பிட்ட நேரம் என்பது இல்லை.  ஆட்கள் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருந்தார்களே தவிர சொமோஸா எங்கள் கண்களில் படவே இல்லை.  ஒரு கட்டத்தில் எங்களுக்கு சந்தேகமே வந்து விட்டது, இலக்கு இந்த இடத்தில் இருக்கிறதா? இல்லையா?

இப்போது ஆர்மாந்தோ சொல்ல ஆரம்பிக்கிறான்:

இரண்டு நாட்களுக்கு ஒருமுறை என் காரை பெட்ரோல் பங்கில் வைத்துக் கழுவச் சொல்வது வழக்கம்.  அது கொஞ்சம் அசாதாரணமானதுதான்.  ஆனால் ”கொஞ்சம் அழுக்கு இருந்தாலும் எனக்குப் பிடிக்காது” என்று சொல்லி சமாளித்தேன். அது ஒன்றும் புதிய கார் அல்ல.  ஆனாலும் பார்க்க புதிய கார் மாதிரிதான் இருந்த்து. 

இப்போது அர்ஜெண்டினாவிலிருந்து ஆயுதங்களைக் கடத்த வேண்டிய வேலைதான் மீதியிருக்கிறது.  அந்தப் பொறுப்பு ஆஸ்வால்தோ, ஃப்ரான்சிஸ்கோ (இருவரும் கொலம்பியாவில் பயிற்சி எடுத்தவர்கள்) மற்றும் பேத்ரோ ஆகிய மூவரிடமும் கொடுக்கப்பட்டிருந்தது.

கதையை ரமோன் தொடர்கிறான்:

சூஸானாவை கொலம்பியாவுக்கு அனுப்பி விட்டு, ஆஸ்வால்தோவையும் பேத்ரோவையும் அர்ஜெண்டினா அனுப்பினேன்.  அவர்கள்தான் நதியைக் கடந்து ஆயுதங்களை எப்படிக் கடத்த வேண்டும் என்று திட்டமிட வேண்டும்.  அவர்களுக்கு இன்னமும் கூட சொமோஸாதான் எங்கள் இலக்கு என்று தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.  சர்வாதிகாரி ஸ்த்ரோஸ்னரை வீழ்த்தும் பராகுவாயின் புரட்சிக்கான ஏற்பாடு என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருந்தார்கள். 

பரானா நதிக் கரையில் வசிப்பவர்கள் பரம ஏழைகள்.  அவர்களின் தொழிலே கடத்தல்தான்.  பெரிய அளவு கடத்தல் அல்ல.  அவர்கள் வெறும் கடத்தல் கூலிகள்.  அதனால் ஆயுதங்களைக் கடத்துவது ஆஸ்வால்தோவுக்கும் பேத்ரோவுக்கும் சிரமமாக இருக்காது. 

ஆனால் ஃப்ரான்சிஸ்கோ தேர்ந்தெடுத்த இடத்தில் ஆயுதங்களைக் கடத்த முடியாமல் போனது.  பழைய கடத்தல்கார்ர் ஒருவர் சொன்ன யோசனையின் பேரில்தான் இடம் மாற்றப்பட்ட்து. 

ஆர்மாந்தோ சொல்கிறான்:

நானும் ரமோனும் ஆயுதங்கள் வந்து இறங்கும் இடத்துக்குச் சென்றோம்.  ஆயுதப் பெட்டிகளை எடுத்து எங்கள் காரின் ட்ரங்கில் வைத்துக் கொண்டு அசுன்ஸியோன் வந்தோம்.  ஒரு பிரச்சினையும் இல்லை.  ஒரு நாட்டில் ஊழல் இருந்தால் எப்பேர்ப்பட்ட காரியத்தையும் சுலபமாக முடித்து விடலாம்.  நகர எல்லையில் இருந்த செண்ட்ரி பணத்தை வாங்கிக் கொண்டு   எங்களுக்கு சலூத் அடித்து உள்ளே விட்டான்.  ஊழல் வாழ்க!  இன்னொரு விஷயம், பராகுவாயில் நீங்கள் ஒரு கோடீஸ்வரனைப் போல் ஆடை அணிந்திருந்தால் எல்லா போலீஸ்காரர்களும் உங்களுக்கு சலூத் அடிப்பார்கள்.  அத்தனை ஊழல்.  ஒருநாள் ஒரு போலீஸ்காரர் எங்கள் காரில் லிஃப்ட் கேட்டார்.  அப்போது அவர் அமர்ந்திருந்த பவ்யத்தைப் பார்க்க வேண்டுமே, அன்றைய தினம் என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

அதிர்ஷ்டவசமாக எந்தப் பிரச்சினையும் இல்லாமல் அசுன்ஸியோன் வந்து விட்ட எங்களுக்கு எங்கள் வீட்டின் அருகில் பிரச்சினை காத்திருந்த்து. 

எங்கள் வீட்டிற்கு சற்று அருகில் ஒரு போலீஸ் வண்டியும் பத்து போலீஸ்காரர்களும் நின்று கொண்டிருந்தார்கள்.  திரும்பி விடலாமா?  நேராக வீட்டுக்குப் போகலாமா?

திரும்பினால் போலீஸுக்கு சந்தேகம் வரும்.  எப்படியும் நம்மைப் பிடித்து விடுவார்கள்.  ஆயுதங்கள் அகப்பட்டு விடும்.  நேராகப் போனால் சந்தேகத்திலிருந்து தப்பலாம். 

கடத்தலுக்கு உதவிய படகுக்காரர் போட்டுக் கொடுத்து விட்டாரா?  இருக்காது.  அவர் படகை நதியில் செலுத்திக் கொண்டு போனதைப் பார்த்தேன். 

இப்போது காரைத் திருப்பிக் கொண்டு எங்கே போவது?  இரவு பூராவும் நகரில் சுற்றிக் கொண்டிருப்பது சாத்தியமே இல்லை.  நடப்பது நடக்கட்டும், காரை வீட்டுக்கு விடு என்றேன்.