இம்மாதிரி சந்தர்ப்பங்களில் எப்படி நடந்து கொள்வதென்று எல்லோரும் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறோம். எந்தக் குற்றமும் செய்யாத ஒரு சாதாரண சராசரி மனிதனின் முகபாவம் எப்படி இருக்குமோ அப்படிப்பட்ட முகபாவத்தோடு நாங்கள் எங்கள் வீட்டை நோக்கிச் சென்றோம். வீட்டின் உள்ளே சென்றவுடன் யாரிடமும் எதுவும் பேசவில்லை. விளக்கையும் ஐந்து நிமிடத்தில் அணைத்து விட்டோம். ஆயுதங்கள் காரிலேயே இருந்தன. அதைப் பற்றியும் கவலைப்படவில்லை. இம்மாதிரி சமயங்களில் மற்றவர்களாக இருந்தால் உடனடியாக, ரகசியமாக ஆயுதங்களை எடுத்து வைத்துக் காபந்து பண்ணுவார்கள். போலீஸ் வேறு காரியமாக வந்திருந்தால் கூட இவர்களின் அசாதாரணமான நடவடிக்கைகளைப் பார்த்து சந்தேகப்பட்டு விடுவார்கள். நாங்கள் அப்படி எதுவும் செய்யவில்லை. இருட்டிலேயே அமைதியாக அமர்ந்திருந்தோம். பத்து நிமிடம் ஆகியது. அரை மணி ஆகியது. அதற்குப் பிறகு போலீஸும் கிளம்பி விட்டது. நள்ளிரவு இரண்டரை மணிக்கு மேல்தான் ஆயுதங்களைக் காரிலிருந்து எடுத்து நிலவறைக்குள் வைத்தோம்.
மாம்பழம் பறிக்கிறேன் என்று காலை உடைத்து பிளாஸ்டர் கட்டு போட்டுக் கொண்டிருந்த ஆனா கடைசியில் அந்த மருத்துவரை மாற்ற வேண்டும் என்றாள். ஏனென்றால், அந்த டாக்டர் இன்னும் இரண்டு வாரம் கட்டு இருக்க வேண்டும் என்கிறார்.
பொகோத்தாவில் மற்றொரு இளம் எலும்பு மருத்துவரைப் பார்க்கிறார்கள் சாந்த்தியாகோவும் ஆனாவும். அந்த இளம் மருத்துவன் ஆனா சொல்வதை அக்கறையோடு கேட்டான். ஆனாவின் கணவன் சாந்த்தியாகோவுக்கு உருகுவாயில் வேலை கிடைத்திருக்கிறது. அதனால் இருவரும் உடனடியாக உருகுவாய் செல்ல வேண்டும். செல்லலாமா? செல்வதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும்?
எக்ஸ்ரே எடுத்தார் டாக்டர். ஐந்து நிமிடங்கள் கழிந்தன. அந்த ஐந்து நிமிடங்களும் ஆனா அடைந்த மன உளைச்சலை வார்த்தைகளில் சொல்ல முடியாது.
எக்ஸ்ரேயுடன் வந்த டாக்டர், எலும்பு சேர்ந்து விட்டது, கட்டைப் பிரித்து விடலாம், இரண்டு நாளில் நீங்கள் உருகுவாய் செல்லலாம் என்றார். கூடவே சில பயிற்சிகளையும் சொல்லிக் கொடுத்தார்.
இரண்டு தினங்களில் இருவரும் பராகுவாய் சென்று சேர்ந்தனர். அன்று ஜூலை 16.
இதற்கிடையில் ஆஸ்வால்தோ ஸ்பானிஷ் அவென்யூவில் ஏதாவது ஒரு வேலை கிடைக்குமா என்று அலைந்து கொண்டிருந்தான். இரண்டு பெட்ரோல் பங்கிலும் வேலை இல்லை என்று சொல்லி விட்டார்கள். கொரியன் சூப்பர் மார்க்கெட்டிலும் ஆள் தேவை இல்லையாம். இப்படி வேலை தேடியபடியே ஸ்பானிஷ் அவென்யூவில் அலைந்து திரிந்தபடி சொமோஸாவின் பங்களாவை நோட்டமிட்டுக் கொண்டிருந்தான் ஆஸ்வால்தோ. ஆனால் அந்த பங்களாவில் ஒரு நடமாட்டமும் தெரியவில்லை.
நானும் (ஆனா) சாந்த்தியாகோவும் உருகுவாய் தேசத்தவர் என்றே எல்லோரிடமும் சொல்லியிருந்தோம். பராகுவாயில் அது சகஜம். பராகுவாயில் எக்கச்சக்கமான உருகுவாய் மக்கள் இருந்தார்கள்.
ஜூலை மத்தியில் அசுன்ஸியோன் வந்தோம். சாந்த்தியாகோ பார்ப்பதற்கு கம்பீரமாக இருப்பான். எளிதில் எல்லோரிடமும் பழகி விடுவான். அசுன்ஸியோன் முழுவதும் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியிருந்தது. ஓட்டலில் அறை கிடைக்கவில்லை. ஆனால் வீடுகளில் தங்கள் அறைகளை வாடகைக்கு விட்டார்கள். அப்படி எங்களுக்கு ஒரு வீட்டில் அறை கிடைத்தது. அங்கே நாங்கள் ஒரு வாரம் தங்கினோம். அசுன்ஸியோனில் ஒரு வியாபாரத்தைத் தொடங்கலாம் என்பது எங்கள் யோசனை என்று ஒருநாள் வீட்டுக்காரரிடம் சொன்னேன். உடனே அந்த முதியவர் “உங்கள் பணத்தை ஒரேயடியாக ஒரே நேரத்தில் ஒரே ஆளிடம் கொடுத்து விடாதீர்கள். அசுன்ஸியோன் முழுவதும் ஏமாற்றுக்காரர்கள்தான்” என்றார்.
இனி கதையை ஆர்மாந்தோ தொடர்கிறான்:
ஆனாவும் சாந்த்தியாகோவும் வந்து சேர்ந்தார்கள். வந்தவுடனேயே சாந்த்தியாகோ கேட்டான், எப்போது முடிக்கப் போகிறோம் என்று.
கேள்வியை மாற்றிக் கேள் என்றேன். எப்படி முடிக்கப் போகிறோம் என்பதே சரி. ஏனென்றால், இன்னும் நம்முடைய இலக்கை நாம் ஒரு முறை கூடப் பார்த்த்தில்லை. நாம் நமது கண்காணிப்பைத் தொடங்கி இன்றோடு ஐந்து வாரங்கள் கடந்து விட்டன. இன்னும் நம்மில் ஒருவர் கூட அவனைப் பார்க்கவில்லை. அவன் இங்கே இந்த பங்களாவில் இருக்கிறானா என்றே சந்தேகம் உண்டாகிறது.
இப்போது ஆனா கதை சொல்கிறாள்: நாங்கள் ஆறு பேர் இருந்தோம். சம்பவ இடத்திற்கு அருகில் ஒரு வீடு பார்க்க வேண்டும். அதற்காக நானும் சாந்த்தியாகோவும் ஒரு ஏஜண்டிடம் சென்றோம். ”உன்னை நம்பி எப்படி வீடு தருவது? லத்தீன் அமெரிக்காவில் எங்கு பார்த்தாலும் பயங்கரவாதம் அதிகரித்து விட்டது, சமீபத்தில் கூட அர்ஜெண்டினாவில் ஒரு பெண் கார்தோஸாவின் படுக்கைக்குக் கீழே ஒரு வெடிகுண்டை வைத்து விட்டாள், கடைசியில் பார்த்தால் அவள் ஒரு தூதரின் மனைவி, நீங்கள் இருவரும் பேசுவது அர்ஜெண்டினா உச்சரிப்பாக இருக்கிறது” என்றாள் அந்த ஏஜண்ட்.
வசமாக மாட்டிக் கொண்டோம். நானாவது புவனோஸ் அய்ரஸைச் சேர்ந்தவள். அதனால் என்னுடைய உச்சரிப்பு பொதுவான ஸ்பானிஷாக இருக்கும். ஆனால் சாந்த்தியாகோ அர்ஜெண்டினாவின் உள்பகுதியில் ஒரு கிராமத்தைச் சேர்ந்தவன். அவனுடைய ஸ்பானிஷ் ஒரு சுத்தமான அர்ஜெண்டினா ஸ்பானிஷ் என்பது எல்லோருக்கும் தெரிந்து விடும். ஆனால் சாந்த்தியாகோ ஒரு மாதிரி சமாளித்தான். “உருகுவாயில் ஒரு இடம் இருக்கிறது. அங்கே அச்சு அசலாக அர்ஜெண்டீனியர்கள் மாதிரியே பேசுவார்கள்” என்றான்.
வீட்டின் உரிமையாளர் வரும் வரை நாள் முழுவதும் காத்திருந்தோம். மாலை ஆறு மணிக்கு வந்தார் உரிமையாளர். நான் வாயைத் திறக்கப் போவதில்லை, நீயே பேசிக் கொள் என்றான் சாந்த்தியாகோ. இருபது நிமிடம் பேசினார் வீட்டுக்காரர். நானேதான் பேசினேன். இடையில் சாந்த்தியாகோவிடம் நீங்கள் எங்கே வேலை பார்க்கிறீர்கள் என்று கேட்டார். ஏதோ ரு..ய்…யி என்றான். யாருக்குமே அவன் சொன்னது புரிந்திருக்காது.
மறுநாளே நானும் சாந்த்தியாகோவும் அந்தப் புதிய வீட்டுக்குக் குடி பெயர்ந்தோம். ஆஸ்வால்தோ இன்னமும் வேலை தேடிக் கொண்டிருந்தான். இப்போது நாங்கள் ஆறு பேரும் சொமோஸாவின் நடவடிக்கைகளை கவனிப்பதை விட்டு விட்டு, அவன் அந்த வீட்டில்தான் வசிக்கிறானா என்பதைக் கண்டு பிடிப்பதில் கவனம் செலுத்த ஆரம்பித்தோம். ஒரே ஒரு முறையாவது அவனைப் பார்த்தால்தான் அவன் அங்கே வசிக்கிறான் என்பது நிச்சயமாகும்.
இப்படியே ஒரு வாரம் கழிந்தது. சொமோஸாவின் நிழல் கூடத் தென்படவில்லை. ஆக, ஒன்றரை மாதமாக எங்களில் ஒருவர் கூட சொமோஸாவைப் பார்க்கவில்லை. என்ன செய்யலாம் என்று ரமோனிடம் கேட்டோம்.
ரமோன் சொன்னான். “ஆமாம். ஒன்றரை மாதங்களாக நாம் அவனைப் பார்க்கவில்லை. இன்று பார்த்து விடலாம், நாளை பார்த்து விடலாம் என்றுதான் நினைத்துக் காத்துக் கொண்டிருக்கிறோம். நம் ஆறு பேரின் கவனமும் ஒரே விஷயத்தில் குவிந்திருக்கிறது. ஏதோ ஒரு அதிசயம் நடந்து விடும் என்று நம்பிக் கொண்டிருக்கிறோம். நாளுக்கு நாள் அந்த நம்பிக்கை நம்மை விட்டு அகன்று கொண்டிருக்கிறது. உளவியல் ரீதியாக அது நம்மை சோர்வடையச் செய்கிறது. அதனால் நாம் ஒரு தந்திரம் செய்கிறோம். நம்பிக்கை அகல அகல மேலும் மேலும் நம்பிக்கை கொள்கிறோம். எப்படியாவது சம்பவத்தை நிகழ்த்தியே தீர வேண்டும் என்பதில் நமக்குள்ள உறுதி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இன்னும் கொஞ்சம் காத்திருப்போம். ஏதாவது நடக்கும்.”
ஜூலை 22. 1980. காலை எட்டு மணி. ஆர்மாந்தோ சொல்கிறான்:
இரண்டு தினங்களுக்கு ஒருமுறை செல்வது போல் அன்றைய தினமும் பெட்ரோல் பங்கில் காரைக் கழுவுவதற்காகச் சென்று கொண்டிருக்கிறேன். சொமோஸா பங்களாவின் பின்புற கேட் வழியாக ஒரு வெண்ணிற மெர்ஸிடஸ் பென்ஸ் என்னைக் கடந்து செல்கிறது. (அங்கே அப்படி ஒரு கேட் இருப்பதே அந்த பென்ஸ் அங்கிருந்து வந்ததால்தான் தெரிந்தது. இல்லாவிட்டால் தெரிந்திருக்காது.) பென்ஸின் பின்னே ஃபோர்ட் ஃபால்கன். என் காரிலிருந்து நூறு மீட்டர் தூரம்தான் இருக்கும். வெண்ணிற பென்ஸையே உற்றுப் பார்க்கிறேன். நான் அவனை புகைப்படங்களில்தான் பார்த்திருக்கிறேன். டிரைவர் இருக்கையின் பக்கத்தில் அவனேதான். தடித்த உருவம். இஞ்ச் இஞ்சாக அவன் சர்வாதிகாரியேதான். சந்தேகமே இல்லை.
என் கைகாலெல்லாம் நடுங்க ஆரம்பித்து விட்டது. உடனடியாக வீட்டுக்குத் திரும்பி வந்து ரமோனிடம் சொன்னேன். எங்களுடைய நாற்பது நாள் காத்திருப்பு வீண் போகவில்லை. இத்தனை நாட்களாக இந்த பங்களாவுக்கு இப்படி பின்பக்கமாக ஒரு வழி இருப்பதே எங்கள் யாருக்கும் புலப்பட்டதில்லை. எங்கள் இலக்கு ஜிம்முக்குப் போகிறது என்று நினைக்கிறேன். அம்மாதிரி உடைதான் அணிந்திருந்தான் அவன்.
செய்தியைக் கேட்ட அனைவருக்கும் உற்சாகமாகி விட்ட்து.
அடுத்த நாள் காலை எட்டு மணிக்கு சூஸானாவும் ஜூலியாவும் சொமோஸா பங்களாவின் பின்பக்கம் நடைப் பயிற்சிக்கு சென்ற போது மீண்டும் சொமோஸாவைப் பார்த்தார்கள். கைக்கெட்டும் தூரத்தில் இருந்தான் சொமோஸா. அவனும் அந்த இருவரையும் பார்த்தான்.
சூஸானா சொல்கிறாள்: ஜூலியா அசாதாரணமான உயரம் என்பதால் எல்லோரும் அவளை கவனித்தார்கள். அதைத் தவிர்க்க முடியாது. மட்டுமல்லாமல் அவள் கண்களும் வித்தியாசமாக இருந்தன. அதன் காரணமாக, சில நாட்களில் சொமோஸா பங்களாவின் செக்யூரிட்டிகள் எங்கள் இருவரோடும் பேச ஆரம்பித்தார்கள். என்னவோ தெரியவில்லை, என்னோடு அதிகமாகப் பேசினார்கள். அவர்கள் சிரித்து, பதிலுக்கு நானும் சிரித்தால் அவர்கள் விசில் அடித்தார்கள். மீண்டும் சிரித்து விட்டுச் செல்வேன்.
சந்தர்ப்பவசமாக அன்றைய தினம் மாலையே சொமோஸாவை நான் மீண்டும் பார்க்க நேர்ந்தது.
இப்போது ஆஸ்வால்தோ சொல்கிறான்:
அது நடந்து இரண்டு நாட்களுக்குப் பிறகு நடந்தது இந்தச் சம்பவம். சொமோஸாவின் பங்களாவுக்கு அருகில் ஒரு பங்களாவில் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருந்தது. அநேகமாக வேலை முடிந்த நிலையில் இருந்ததால் நான் பெயிண்ட் அடிக்கும் வேலை கேட்கலாமா என்று நினைத்தேன். வேலையும் கேட்டேன். ஆனால் புது ஆள் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள். வேலை கேட்பதற்காகக் காத்திருந்த ஒன்றிரண்டு நாட்களில் ஒரு விஷயம் தெரிந்தது. சொமோஸா பின்வழியாகச் செல்வதை நிறுத்தி விட்டு முன்புறமாகத்தான் சென்று கொண்டிருந்தான்.
***
கண்காணிப்பு தினங்கள் முடிந்ததும் ரமோன் சொன்னான்: சொமோஸாவிடம் ஒரு முறையான நேர அட்டவணை இல்லை என்று தெரிகிறது. இஷ்டப்பட்ட நேரத்தில் போகிறான், வருகிறான். இன்னொரு துரதிர்ஷ்டமான விஷயம், நம்முடைய கண்காணிப்பு நேர அட்டவணை மிகவும் மோசமாக இருக்கிறது. நம்முடைய கண்காணிப்பு நேரப் பட்டியல் பகல் பன்னிரண்டு மணி நேரத்தைக் கூட முழுமையாக முடிக்கவில்லை. நாம் கண்காணிக்காத நேரத்தில் கூட அவன் பலமுறை வெளியே சென்று உள்ளே வர முடியும் போல் இருக்கிறது. இந்த நேர அட்டவணையைச் சரி செய்தால்தான் நாம் சம்பவம் செய்ய முடியும். எனவே, இருபத்து நான்கு மணி நேரமும் கண்காணித்தால் மட்டுமே சம்பவம் சாத்தியம். இதற்கு யாரிடமாவது ஆலோசனை இருக்கிறதா?
சிறிது நேரம் மயான அமைதி நிலவியது. அந்த அமைதியை உடைத்துக் கொண்டு ஜூலியா பேச ஆரம்பித்தாள்.
”சூப்பர் மார்க்கெட்டை ஒட்டி ஐந்தாறு தள்ளுவண்டிப் பழக்கடைகள் இருக்கின்றன. கார்களில் செல்பவர்கள் அந்தக் கடைகளில் நிறுத்தி, காய்கறிகளும் பழங்களும் வாங்கிச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். அந்தக் கடைகளில் வேலை செய்யும்படியான தோற்றம் நம்மிடம் யாருக்கும் இல்லை, ஆஸ்வால்தோவைத் தவிர.”
“அவன் ஏற்கனவே இங்கே உள்ள எல்லா கடைகளிலும் வேலை கேட்டுப் பார்த்து விட்டானே? மறுபடியும் எப்படி அங்கே போய்க் கேட்க முடியும்?” என்றான் ரமோன்.
அப்போது ஆர்மாந்தோ ஒரு யோசனை சொன்னான். ”அந்தக் கடைகளில் ஒன்றை ஆஸ்வால்தோ வாங்கிக் கொள்வதாகச் சொன்னால் அது நடக்கலாம். ஏனென்றால், அதில் ஒரு கடை ரொம்பப் பரிதாபமான நிலையில் உள்ளது.”
ஒரே ஒரு கடையைத் தவிர மற்ற எல்லா கடைகளும் சொமோஸா பங்களாவிலிருந்து அரை ஃபர்லாங் தூரத்தில் இருந்தன. ஆனால் அந்தக் கடைகளில் வியாபாரம் நன்கு நடந்து கொண்டிருந்தபடியால் ஆஸ்வால்தோவின் யோசனையை அவர்கள் மறுத்து விட்டார்கள். கடைசிக் கடை இலக்கிலிருந்து ஒரு ஃபர்லாங் தூரம். ஆனால் அந்தக் கடையில்தான் பழங்களோ காய்கறிகளோ சரியாக இல்லை. வியாபாரமும் இல்லை. ஆனாலும் அந்தக் கடைக்காரன் தன் கடையை விற்பதற்குத் தயாராக இல்லை. பார்ட்னராக வருகிறாயா என்று கேட்டான். வருகிறேன், ஆனால் கடையில் நான்தான் முழு நேரமும் இருப்பேன் என்றான் ஆஸ்வால்தோ. கரும்பு தின்னக் கூலியா? கடைக்காரன் உடனே சம்மதித்து விட்டான்.
கடைக்கு நல்லபடியாகக் காசைப் போட்டு, எல்லா பழங்களும் காய்கறிகளும் கிடைக்கிறாற்போல் ஆக்கினான் ஆஸ்வால்தோ. கூடவே சிகரெட், பத்திரிகைகள் எல்லாவற்றையும் சேர்த்தான். மின் இணைப்பும் கொடுத்ததால் இரவிலும் வியாபாரம் செய்ய முடிந்தது. வியாபாரம் பிய்த்துக் கொண்டு ஓடியது. கடைக்காரனுக்கு ஒரே குஷி. பங்கில் எனக்குக் கொஞ்சம் கூடப் போட்டுக் கொடு என்று கேட்டான் ஆஸ்வால்தோ. ஒரு வேடத்தைப் போட்டால் அதைத் துல்லியமாகச் செய்ய வேண்டும். சரி, கொடுக்கிறேன் என்று சொல்லி விட்டான் கடைக்காரன். அந்தக் கடையிலிருந்து சொமோஸாவின் பங்களா சரியாக ஒரு ஃபர்லாங் தூரத்தில் இருந்தது.
சில தினங்களிலேயே அந்தப் பகுதியில் ஆஸ்வால்தோ பிரபலமாகி விட்டான். போலீஸ்காரர்கள் அவன் கடையில்தான் சிகரெட் வாங்கினார்கள். சிலருக்குக் கடனாகவும் சிகரெட் கொடுத்தான். அந்தப் பகுதியில் வேலை செய்யும் பணிப்பெண்களும் அவன் கடையில்தான் சாமான் வாங்கினார்கள். அந்தப் பெண்கள் தங்கள் வீடுகளுக்கும் அவனை அழைத்தார்கள். அங்கே போய் தங்கவும் செய்தான். அவர்களின் குடும்பத்தினருக்கும் குழந்தைகளுக்கும் நண்பனானான். அதே சமயம் கடையில் இருக்கும் சமயங்களிலெல்லாம் கமாண்டோக்களின் இலக்கைக் கண்காணித்துக் கொண்டே இருந்தான்.
கமாண்டோக்களும் கண்காணிப்பிலேயே இருந்தார்கள். முதலில் அசுன்ஸியோனில் இருந்த ஆடம்பர உணவகங்களை நோட்டமிட்டார்கள். அதில் ஒன்றில் அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அதற்கு எதிரே இருந்த உணவகத்திற்குள் சொமோஸா நுழைவதைப் பார்த்தார்கள். ஓட்டலுக்கு வெளியே சாமுவெல் ஜெனீ காவல்காத்துக் கொண்டிருந்தான்.
அடுத்த நாளே சாந்த்தியாகோவையும் ஜூலியாவையும் அந்த ஓட்டலுக்கு அனுப்பினான் ரமோன். அதன் உள் பகுதி, வெளியேறும் வழி எல்லாம் எப்படி இருக்கிறது என்று பார்க்க வேண்டும். ரமோன் அங்கே செல்ல முடியாது. உணவகத்தின் உரிமையாளர்கள் அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர்கள். ரமோனைத் தெரியாத அர்ஜெண்டீனியனே கிடையாது.
இந்த இடத்தில் எனக்கு வினித்துடன் பேசியது ஞாபகம் வருகிறது. ”ரமோன் இத்தனை பிரபலமான புரட்சியாளனாக இருந்தும் சர்வதேச அளவில் யாரும் அவனைப் பற்றிப் பேசியதில்லையே? நீங்களாக ஒரு கற்பனைக் கதாபாத்திரத்தை உலவ விட்டிருக்கிறீர்களா? அதே அர்ஜெண்டினாவைச் சேர்ந்த சே குவேராவைப் பற்றி மட்டும் உலகம் பூராவும் பேசிக் கொண்டிருக்கும்போது ஏன் ரமோன் பற்றி யாருக்கும் தெரியாமல் போனது?”
வினித்தின் கேள்விகளுக்கு எனக்கு பதில் தெரியவில்லை. ரமோனின் உண்மையான பெயர் Enrique Haroldo Gorriarán Merlo. என்ரிக்கே மெர்லோ என்று சுருக்கமாகச் சொல்ல்லாம். ஆனாலும் ரமோன் என்றால்தான் அர்ஜெண்டினாவில் தெரியும். 2006இல் தனது 64ஆம் வயதில் மாரடைப்பில் இறந்தார் ரமோன். அதற்கு முன்பாக வன்முறையைக் கைவிட்டு விட்டு அர்ஜெண்டினாவின் அதிபர் தேர்தலில் நிற்பதற்கு முயன்றார். அந்த அளவுக்குப் பிரபலமானவர் ரமோன். இருந்தாலும் சே அளவுக்கு ரமோன் பிரபலமாகாததற்குக் காரணம், என்னால் இலக்கியத்திலிருந்து சொல்ல முடியும். அசோகமித்திரனை எல்லோருக்கும் தெரியும். நகுலனைத் தெரியாது இல்லையா? அந்த மாதிரிதான் என்று நினைக்கிறேன். மற்றபடி அதன் அரசியல், சமூகவியல் காரணங்களை என்னால் அனுமானிக்க முடியவில்லை. தன்னுடைய கெரில்லா அனுபவங்களை ரமோன் ஒரு புத்தகமாக எழுதியிருக்கிறார். இன்னும் அது ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை என்று நினைக்கிறேன்.
நாம் சொமோஸா கதைக்கு வருவோம். சாந்த்தியாகோவும் ஜூலியாவும் அந்த ஆடம்பர உணவகத்துக்குச் செல்ல வேண்டும். சொமோஸா செல்லும் உணவகம். அதற்காக சாந்த்தியாகோ ஒரு கோட்டும் சூட்டும் வாங்கிக் கொண்டான். சூஸானாவைப் போலவே சாந்த்தியாகோவும் எந்தச் சூழ்நிலையிலும் அதற்குத் தக்கவாறு தன்னை மாற்றிக் கொள்பவன். ஏழ்மையான சூழல் என்றால் ஏழை, பூர்ஷ்வா சூழல் என்றால் பூர்ஷ்வா. ஜூலியா சாந்த்தியாகோவிடம்
”பிரமாதமாக இருக்கிறாய். இப்போது உன்னைப் பார்த்தால் ஒரு புரட்சிக்காரன் மாதிரியே தெரியவில்லை; பக்கா பூர்ஷாவாவைப் போல் இருக்கிறாய்” என்றாள்.
ஜூலியா சொல்கிறாள்: எனக்கு திடீரென்று அந்த உணவகத்தில் அமர்ந்திருந்த போது என் வயிற்றுக்குள் இருக்கும் சிசு பற்றிய ஞாபகம் வந்தது. ஏற்கனவே ஒரு புரட்சிகர நடவடிக்கையின்போது கர்ப்பமாகி விட்டேன். தலைமறைவாக வாழ்ந்தபோதுதான் குழந்தையும் பிறந்தது. இப்போது இன்னொரு குழந்தை. இந்தக் குழந்தையோடு எப்படி நான் அர்ஜெண்டினா போவேன்?
அப்போது சாந்த்தியாகோ ”புரட்சியில் ஈடுபடும் ஒவ்வொரு பெண்ணும் தாய்மையை உணர்ந்தாக வேண்டும்” என்று சொன்னான்.
இருக்கலாம். ஆனால் மாதம் ஆக ஆக நான் கமாண்டோ குழுவுக்கு ஒரு பாரமாகத்தானே இருப்பேன்?
ஆனால் சாந்த்தியாகோ எனக்கு ஆறுதல் வார்த்தைகள் சொன்னான். சாந்த்தியாகோவைப் போன்ற ஒரு நல்லவனைப் பார்க்கவே முடியாது. ஒரு கெரில்லா நடவடிக்கையின் போது கால் உடைந்த நிலையில் கமாண்டோக்கள் அவனை என் வீட்டுக்குத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். ஆ, எப்பேர்ப்பட்ட புரட்சிக்காரன் இந்த சாந்த்தியாகோ! எப்பேர்ப்பட்ட மனிதன்!
அசுன்ஸியோனியில் இதேபோல் இன்னொரு ஆடம்பர ஓட்டலும் இருந்தது. அங்கேயும் எங்கள் இலக்கு உணவருந்தப் போய்க் கொண்டிருந்தது. மறுநாள் அங்கே சென்றது இரண்டு ஜோடியும். சாந்த்தியாகோ ஜூலியா. ஆர்மாந்தோ சூஸானா. ஆர்மாந்தோவின் ஆடையைப் பரிசீலித்தாள் சூஸானா.
”இப்படி இல்லை சே! டிப் டாப்பாக ஆடை அணிய வேண்டும்” என்றாள் சூஸானா. (சே என்றால் பிரமாதம் என்று வரும் என்றேன். அதேபோல், அட போய்யா என்றும் வரும்.)
அந்த உணவகத்தில் அன்றைய தினம் அந்த இரண்டு ஜோடிகளிடையே உடை விஷயத்தில் பெரிய கலவரமே நடந்தது.
உணவகத்தின் உள்ளே யாரும் கோட் அணிந்திருக்கவில்லை. அணிந்திருந்த கோட்டையும் கழற்றி கோட் ஸ்டாண்டில் மாட்டியிருந்தார்கள். ஆனால் ஜூலியா மட்டும் பெரிய ஓவர் கோட்டை அணிந்திருந்தாள். ரமோன் சொன்னான், “சே, கோட்டைக் கழற்றி விடு. உள்ளே யாரும் கோட்டு அணிந்திருக்கவில்லை. பார்க்கவே ஒரு மாதிரியாக இருக்கிறது.” (இந்த இட்த்தில் சே என்பது ஏய் என்ற அர்த்தத்தில் வரும்!)
”ஓ, எனக்குக் குளிருகிறது.”
”எனக்கெல்லாம் வியர்க்கிறது. தயவுசெய்து கழற்றி விடு. பார்க்கவே என்னவோ மாதிரி இருக்கிறது.”
“ரமோன், உனக்குப் பெண்களின் பிரச்சினையே தெரியாது. என்னிடம் ஆடம்பர உடை எதுவும் இல்லாத்தால் உள்ளே பைஜாமா மட்டும் போட்டு மேலே கோட்டால் மறைத்திருக்கிறேன்.”
ரமோனால் நம்ப முடியவில்லை. “பரவாயில்லை, கோட்டைக் கழற்று.”
ஜூலியா எழுந்து நின்று கோட்டைக் கழற்றினாள். ரமோனின் விழி பிதுங்கி விட்டது. கிட்ட்த்தட்ட நிர்வாணம். ”நீ ஒரு பைத்தியம் ஜூலியா, நேராக லேடீஸ் ரூமுக்குப் போய் கோட்டைப் போட்டுக் கொண்டு வா” என்றான்.
“இல்லை ரமோன். அது இன்னமும் எல்லோருடைய கவனத்தையும் ஈர்க்கும். நான் இப்படியே இருந்து விட்டுப் போகிறேன்” என்றாள் ஜூலியா.
ஆர்மாந்தோவுக்கு நிம்மதி. அதுவரை அந்த உணவகத்திலேயே அத்தனை பேரும் அவனைத்தான் வினோதமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஏனென்றால், அவன் அணிந்திருந்த விக் அந்த லெட்சணத்தில் இருந்தது. ஏதோ ஒரு சர்க்கஸிலிருந்து தப்பி வந்த கோமாளி மாதிரி இருந்தான் ஆர்மாந்தோ.
அதோடு பிரச்சினை முடியவில்லை. ஆர்மாந்த்தோ பத்து நாள் பட்டினி கிடந்தவனைப் போல் அள்ளி அள்ளி வாயில் திணித்துக் கொண்டிருந்தான். ரமோன் “ஆர்மாந்தோ, இப்படித் தின்னாதே, இது நல்லது அல்ல” என்றான்.
“என்ன, பிளேட்டில் வைக்கப்பட்டிருக்கும் உணவெல்லாம் சாப்பிடுவதற்காகத்தானே? நீ சொல்வது வேடிக்கையாக இருக்கிறதே? சாப்பிடாமல் பிளேட்டிலேயே வைப்பதற்கு எதற்கு ஓட்டலுக்கு வர வேண்டும்? பிளேட்டில் உள்ள உணவை வெறுமனே பார்த்து விட்டுப் போவதற்கா அத்தனை டாலர் கொடுத்து வருகிறார்கள் இங்கே?”
சூஸானா புகுந்தாள். “ஆர்மாந்தோ, மற்ற மேஜைகளையெல்லாம் பார், யாராவது உன்னைப் போல் பிளேட் மொத்தத்தையுமா நக்கித் தின்றிருக்கிறார்கள்?”
ஆர்மாந்தோவும் பார்த்தான். ”அடப் பாவிகளா! அத்தனை பேரின் பிளேட்டுகளிலும் முக்கால் வாசி பண்டங்கள் தொடப்படாமலேயே இருக்கின்றதே? அதற்குள் அவர்கள் டெஸ்ஸர்ட்டுக்குப் போய் விட்டார்களே? கடவுளே! பூர்ஷ்வாக்களின் வாழ்க்கை இத்தனை அபத்தமானதா? ஆயிரக்கணக்கான பேர் பட்டினி கிடந்து கொண்டிருக்கும்போது இந்த அயோக்கியர்கள் இப்படி உணவை வீணடிக்கிறார்களே? இதற்காகவே இவர்கள் அனைவரையும் போட்டுத் தள்ள வேண்டுமே?” என்று ரமோனிடம் கிசுகிசுத்த குரலில் ஆவேசப்பட்டான் ஆர்மாந்தோ.
ஆகஸ்ட் 12இலிருந்து பெட்டிக் கடையில் வேலை செய்து கொண்டிருக்கிறான் ஆஸ்வால்தோ. (சம்பவம் நடக்க இன்னும் ஒரு மாதமும் ஐந்து நாட்களும் இருந்தன.) எப்போதெல்லாம் சொமோஸா வெளியே செல்கிறானோ அப்போதெல்லாம் ஆஸ்வால்தோவின் கடையைக் கடந்துதான் நகருக்குள் செல்ல வேண்டும். வேறு எந்த வழியும் இல்லை.
ஆஸ்வால்தோ பற்றி இப்போது சூஸானா சொல்கிறாள்: ஆகஸ்ட் 21 வரை தினந்தோறும் ஆஸ்வால்தோ சொமோஸாவைப் பார்த்தான். ஆஸ்வால்தோவுக்கு பராகுவாய் மக்களின் தாய்மொழியான குவரனீயும் தெரியும். அவன் ஒரு தெரு மனிதன். கடத்தல்காரன். அதனால்தான் பெட்டிக்கடை வேலை அவனுக்கு மிகச் சரியாகப் பொருந்திப் போனது.
நாங்களும் அவ்வப்போது அவன் கடைக்குப் போய் தினசரிகளை வாங்கி வருவோம். ஆஸ்வால்தோவின் சிறப்புத் தன்மை என்னவென்றால், அவனுடைய கழுகுப் பார்வை. அவன் பார்வையிலிருந்து எதுவுமே தப்ப முடியாது. உதாரணமாக, அவன் கடைக்கு முன்னே நாங்கள் காரில் செல்வோம். அன்றைய தினம் அவன் எங்களைச் சந்திக்கும்போது, எத்தனை பேர் காரில் இருந்தோம், எந்தெந்த இடத்தில் யார் யார் அமர்ந்திருந்தோம், எல்லாவற்றையும் சொல்லுவான். இதில் மிகப் பெரிய விஷயம் என்னவென்றால், அவன் நம்மை கவனித்ததே நமக்குத் தெரியாது. யாருக்கோ அவன் சிகரெட் கொடுத்துக் கொண்டிருக்கும்போது இதையெல்லாம் கவனித்திருப்பான்.
ஆனால் என்ன ஒரு துரதிர்ஷ்டம், ஆகஸ்ட் முழுவதுமே ஆஸ்வால்தோவின் கண்களில் எங்கள் இலக்கு படவில்லை! இலக்கு அசுன்ஸியோனில்தான் இருக்கிறதா, அல்லது, எங்காவது வேறு இடம் மாறி விட்டதா?
நாங்கள் எல்லோருமே சொமோஸா அசுன்ஸியோனில் இல்லை என்ற முடிவுக்கு வந்தோம்.