ஃபிலிஸ்டைன் சமூகத்தின் குறியீடு: விகடன்

உத்தேசமாக 1975ஆக இருக்கலாம்.   கொஞ்சம் முன்னே பின்னே பார்த்துக் கொள்ளுங்கள்.  அப்போது எங்களுக்கெல்லாம் ஆதவன் ஒரு பெரிய நாயகன்.  தில்லியில் நேஷனல் புக் ட்ரஸ்டில் வேலையில் இருந்தார்.  அவ்வப்போது அவர் கதைகள் விகடனில் வரும்.  நான் ஆதவன் வெறியன்.  ஒருநாள் விகடனில் ஆதவன் ஒரு பிக்பாக்கெட் என்பது மாதிரி கட்டம் கட்டிய ஒரு பெட்டிச் செய்தி வந்தது.  அவர் தீபத்தில் எழுதிய கதையை விகடனுக்கும் கொடுத்து பணம் வாங்கி விட்டாராம்.  அதிலும் விகடன் அலுவலகத்துக்கு நேரிலேயே வந்து வாங்கிப் போனாராம்.  என் நண்பர்கள் ஆதவனை திருடன் என்று திட்டினார்கள்.  அந்த மாதிரிதான் செய்தி வந்திருந்தது.  நான் மட்டுமே ஆதவன் சார்பாகப் பேசினேன். 

ஐம்பது ஆண்டுகள் ஆகியும் விகடனின் போக்கு மாறவில்லை.  இத்தனைக்கும் விகடன், எழுத்தாளர்களுக்கு ஆதரவான பத்திரிகை என்று பெயர். இந்தப் பக்கத்தைப் பாருங்கள்.  அதில் இருக்கும் விஷமத்தைப் பாருங்கள்.  ஏன் இந்த விஷமம் என்றால், சுஜாதாவுடன் வணிக எழுத்துக்கான காலம் முடிந்து விட்டது.  அதிகாரம், பேர், புகழ் எல்லாம் இப்போது இலக்கிய எழுத்தாளர்களின் பக்கம் வந்து விட்டது.  வணிகப் பத்திரிகைகளின் காலமும் முடிந்து விட்டது.  அதன் காரணமாக ஏற்பட்ட ஆற்றாமையின் காரணமாகவே விகடன் இத்தகைய கீழ்த்தரமான கிண்டலில் இறங்கியிருக்கிறது. 

நான் கிண்டலையும் பகடியையும் ரொம்பவே ரசிப்பவன். அதிலும் என்னைப் பற்றிய கிண்டல் என்றாலும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஆனால் மேலே உள்ளது கிண்டல் அல்ல. அடுத்தவரின் அண்ட்ராயரை அவிழ்த்துக் கை தட்டுவது. கயவாளித்தனம் அது. கிண்டல் அல்ல.

நான் எப்போதுமே சொல்லி வந்திருக்கிறேன்,  என்னைத் திட்டுவதற்குக் கூட என் பெயரைப் போட மாட்டார்கள் என்று.  கீழே உள்ள கார்ட்டூனில் பாருங்கள், மனுஷும் ஜெயமோகனும் மட்டுமே இருக்கிறார்கள்.  என்னைக் காணோம்.  அதுதான் நமக்குள்ள அதிகாரம்.  கார்ட்டூனில் கூட நம்மைப் புறக்கணிக்கிறார்கள்.  செய்யுங்கள்.  செய்யுங்கள்.  தமிழ்நாடு ஒரு ஃபிலிஸ்டைன் சமூகமாக மாறியதற்கு விகடனின் பங்களிப்பு மிகவும் அதிகம்.  அதன் அடையாளம்தான் இந்த நகைச்சுவை செய்தி.  இந்தத் துணுக்கை எழுதியவர் தன் வாழ்நாளில் இலக்கியத்தின் பக்கம் நிழலுக்குக் கூட ஒதுங்கியவர் அல்ல என்பது மிகத் தெளிவாகத் தெரிகிறது.