இல்லை, ஞாபகம் இல்லை…

மனுஷின் பன்னிரண்டு கவிதை நூல்களின் தலைப்புகளும் ட்ரெண்டிங்கில் இருக்கின்றன. என் நண்பரோ அவையெல்லாம் டி.ராஜேந்திரன் காலத்துத் தலைப்புகள் என்று சொன்னார். எனக்கு என்னவோ அவையெல்லாம் லவ் டுடே தலைப்புகளாகத்தான் தெரிகின்றன. ஹமீது மாமாக்குட்டீ…யாகி விடக் கூடாதே என்ற கவலையும் வேறு சேர்ந்து கொண்டது. மனுஷின் தலைப்புகளை ஒட்டி நானும் சில தலைப்புகளை வைத்தேன். (கவிதைகள் இனிமேல்தான் எழுத வேண்டும்.)

மனுஷின் தலைப்புகள்

1.மழைக்கால காதலும் குளிர்காலக் காமமும்

2. உன்னை எனது கண்ணீரால் தாங்கிக் கொள்வேன்

3.அன்புக்காகவும் கடவுளுக்காகவும்

4.என்னை நினைத்துக் கொண்டதற்கு நன்றி

5. நீயே என் கடைசிப் பெண்ணாக இரு

6. சித்திரமே…சித்திரமே… பேசக்கூடாதா ?

7. முதல் சந்திப்பின் முதல் முத்தம்

8. இன்பாக்ஸ் பச்சை விளக்குகள் இன்னும் என்ன செய்துகொண்டிருக்கின்றன?

9. எனக்கு நஞ்சூட்டுபவர்களைத்தான் எப்போதும் காதலிக்கிறேன்

10. காதல் கதைகளும் அவமானத்தின் கதைகளும்

11. அழவைக்கத்தான் இவ்வளவு தூரம் வந்தாயா?

12. அப்புறம் பேசறேன்…..

இதை ஒட்டி நான் வைத்த தலைப்புகள்:

1.ஃபோனை கட் பண்ணுங்க.

2. இனிமேல் நாம் பார்த்துக் கொள்ள வேண்டாம்.

3. என்னை நீங்க நம்பவே இல்லேல்ல?

4. உங்களுக்கும் என்னைப் பிடிக்காமப் போச்சு.

5. என்ன, ஓடுதா?

6. ஆமா, ஃபோட்டோல இருக்கிறது யாரு?

7. கொஞ்சமாவது உண்மை பேசுங்களேன்.

8. பார்த்து… ஜாக்கிரதை.

9. வயதுக்குத் தகுந்தாற்போல் இருக்க வேண்டாமா?

10. உங்கள் நன்மைக்காகவே சொல்கிறேன்.

11. நான் அ-செக்‌ஷுவல்.

பன்னிரண்டாவது தலைப்பை இன்று என் தோழி கன்னடத்துப் பைங்கிளி அனுப்பியது.

12. என்னை ஞாபகம் இருக்கா?

நான் சொல்ல நினைத்து சொல்லாமல் விட்ட பதில் இது:

இல்லை. சுத்தமாக இல்லை. இதுவே ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு என்றால், எப்போது உன்னை மறந்தேன் என்று பதில் அனுப்பியிருப்பேன். இன்னொரு எக்ஸைல் நாவல் வந்திருக்கும். அல்லது இன்னொரு காமரூப கதைகள். ஆனால் இப்போது நான் முழுமையான கர்மயோகியாக மாறி விட்டேன். உடனடியாக அன்பு குறித்த ஒரு பின்நவீனத்துவவாதியின் புகார் மனு நாவலை முடித்தாக வேண்டும். இல்லையென்றால், பல சம்பவங்கள் மறந்து விடும். வெறும் சம்பவங்களால் மட்டுமே நிரம்பிய நாவல் அது. நேற்று கூட ராம்ஜி ஃபோன் செய்து, பூச்சி எப்போது சார் தருவீர்கள் என்று அன்பாக மிரட்டினார். அந்த எடிட்டிங் வேலையும் இருக்கிறது. எனவே தற்காலிகமாக மனிதர்களை மறந்து சொற்களில் ஆழ்ந்திருக்கிறேன். மன்னிக்கவும் ஸ்வீட்ஹார்ட்…