மாதம் ஒரு நூல்…

அநேகமாக உலக அளவில் தேடினாலும் இந்த அளவுக்குத் தரமாகவும் அதிகமாகவும் எழுதுவதற்கு வேறு எங்கும் எழுத்தாளர்கள் கிடைக்க மாட்டார்கள். சர்வதேச அளவில் எழுத்தாளர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதுமே பத்து நூல்கள்தான் எழுதி முடிக்கிறார்கள். இங்கே லோக்கலாக அருந்ததி ராய் ஒரு உதாரணம். ஒரே ஒரு நாவலை வைத்துக் கொண்டே மூன்று பத்தாண்டுகளை ஓட்டி விட்டு இப்போது இரண்டாவது நாவலை எழுதியிருக்கிறார்.

மூன்று ஆண்டுகளுக்கு முன் நான் பூச்சி என்ற தலைப்பில் ஒரு தொடரை தினந்தோறும் எழுதியது உங்களுக்கு ஞாபகம் இருக்கலாம். அதில் பல அத்தியாயங்கள் நீண்ட நாள் வாசிப்பில் மட்டுமே எழுதக் கூடியவை. ஒரு முழு வாழ்நாள் வாசிப்பின் சாரம் பூச்சி அத்தியாயங்கள்.

ஏப்ரல் 2020இல் ஆரம்பித்தேன். ஏப்ரல் ஐந்தாம் தேதியிலிருந்து மே ஐந்தாம் தேதி வரை எழுதியவற்றைத் தொகுத்தேன். பார்த்தால் 250 பக்கங்களுக்கு ஒரு நூல். ஒரு மாதத்தில் ஒரு நூல். என்னடா இது என்று மே மாதம் எழுதியவற்றைத் தொகுத்தேன். அது ஒரு 250 பக்க நூல். எழுதிக் குவித்திருக்கிறேன் என்று தோன்றியது. பூச்சி தொடரை புத்தக விழாவிலேயே கொண்டு வர முடியவில்லை. வெளியே கிளம்பினால் என் எழுத்து வேலை தடைப்படும். இப்போது இன்னும் ஓரிரு வாரத்தில் பூச்சி முதல் தொகுதியும், பூச்சி இரண்டாம் தொகுதியும் உங்களுக்குக் கிடைக்கும்.