பிரார்த்தனை குறித்த கேள்வியும் பதிலும்: சக்திவேல்

அன்புள்ள சாரு

உங்களுடைய புதிய நூலாக அன்பு ஒரு பின்நவீனத்துவவாதியின் மறுசீராய்வு மனு வந்துள்ளதாக அறிந்தேன். புத்தக விழாவில் நீங்கள் சுருதி டிவிக்கு கொடுத்த சிறு பேட்டி ஒன்றையும் கண்டேன். அன்பு என்ற பேரில் ஒருவனை சமூகம் எப்படியெல்லாம் வன்முறைக்கு உட்படுத்துகிறது என்பதை எழுதியிருப்பதாக கூறியிருந்தீர்கள். நான் இன்னும் நாவலை வாசிக்கவில்லை. இனிமேல்தான் வாங்க வேண்டும்.

என்னிடம் கடைசியாக வாசிக்காது வைத்திருந்த உங்களுடைய இரு நாவல்களான தேகம், எக்ஸிடென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் ஆகிய நாவல்களை சென்ற வாரத்தில் வாசித்தேன். இன்னும் எக்ஸைல், நான்தான் ஔரங்கசீப் மற்றும் அன்பு வை வாசித்துவிட்டால் உங்களது அத்தனை நாவல்களையும் ஒருமுறை வாசித்தவனாவேன்.

தேகம் நாவலில் என்னை மிக முக்கியமாகக் கவர்ந்தது, தர்மா இறுதியில் மீனாவை மணம் செய்து குடும்ப குமாஸ்தாவாக மாறுவதுதான். இந்தத் திருப்பம் அதுவரை வந்த நாவல் பகுதிகளை மானுடனின் அந்தரங்கப் பகற்கனவாகவும் வாசிக்கச் செய்துவிடுகிறது. தர்மா செய்வதையெல்லாம் ஒருவனால் நினைத்துப் பார்க்க முடியாது என்பதே பொது பதில். ஆனால் அப்பகுதிகளை வாசிக்கும் போது நானே ஒரு வக்கரித்த இளிப்புடன்தான் கடக்கிறேன். ஆக அந்த வன்முறையை எல்லோரும் செய்தல் சாத்தியமும்தான். வேண்டியது தகுந்த காரணங்களே. தர்மாவின் வன்முறைகளுக்குப் பின்னால் ஒரு நியாயம் சொல்லப்படுவது இந்த அம்சத்தை அழுத்தமாக்குகிறது. போலிஸ் இன்ஸ்பெக்டர் மகனாகட்டும், நாயை அடித்த பையனாகட்டும் எல்லோருமே அநியாயம் செய்தவர்கள். எனவே எந்த வன்முறையும் நீதியின் பெயரால் நிறுவபட்டால் போதுமானது என்று நாவல் சொல்வதாகத் தோன்றுகிறது.

இன்னொருபுறம் தேகம் நாவலில் அத்தியாயங்களுக்கு முன்வரும் அத்தனை வரிகளிலும் உபநிஷத்துகளின் வாக்கியங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. இவையனைத்தும் வேதாந்த தரிசனத்தை  அடிப்படையாகக் கொண்டவை என்பது வெளிப்படை. அவற்றிற்குக் கீழ் எழுதப்படும் நாவலில் அத்தியாயங்களே ஒருவகை மீறலும் வன்முறையும் கொண்டதுதான். அதாவது தேகம் அந்த வேதாந்த கருத்துகள் எல்லாம் வன்முறையானது என்று சொல்கிறதா ? அல்லது அவையனைத்தும் தேகத்தை மட்டுமே குறிக்கின்றன, பாழும் தேகத்திலிருந்து விடுதலை அடைவதை ? இரண்டாகவும் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.

மூன்று: நாவலில் வரும் காம உரையாடல்களும் பெண்களும். இந்த தீவிரமான தேக இச்சையின் வடிவமே வன்முறையாக மாறுகிறது போலும். குறிப்பாக இப்போது எழுதும்போது தோன்றுகிறது செலின் போன்ற பெண்களுடன் கூட முடியாமைதான் தர்மாவை வன்முறையில் சுகம் காண வைக்கிறது போலும். இவை ஒன்றுடனொன்று கலந்து பின்னி விடுகின்றன – தர்மா – நாய் பாஸ்கர் – செலின் – நீதி என்று. இந்த வரிசையில் உள்ள புராண தலைகீழாக்கம் சிந்தனையில் உண்டு பண்ணுவது. தர்மர் வாழ்நாள் முழுக்க நீதியை பின்தொடர்ந்தவர். மரணத்தின் காவலனாகிய நாயால் பின்தொடரப்பட்டவர். நீதியை பற்றி முழங்கிய அவர் தலைமையில் தான் பாரதம் பங்கெடுத்த மிகப்பெரிய உள்நாட்டு போரும் அதன் வன்முறையும் வெளிப்பட்டன. அவரே மிகப்பெரிய ஞானதாகியாகவும் இருந்திருக்கிறார். இவையனைத்தும் உங்கள் பாணியில் இணைக்கப்பட்டது தான் தேகம் என்று ஆராயவும் இடமுண்டு.

எக்ஸிடென்ஷியலிசமும் ஃபேன்சி பனியனும் என்ற உங்களுடைய முதல் நாவலை பற்றி கூற என்னிடம் அதிகமாக ஏதும் இல்லை. ஏனெனில் நாவலின் முடிவுரையாக கொடுக்கப்பட்டிருக்கும் நாகர்ச்சுனனின் ஆய்வுரை வாசனுக்கு இடமே இல்லாமல் நாவல் என்ற வடிவத்தையே காலி செய்துவிடுகிறது. பேச சாத்தியமான விஷயங்கள் அத்தனையையும் தானே பேசி இனி வர வேண்டியவை இவ்வகை கட்டுடைப்பு நாவல்களே என தீர்ப்பு கொடுக்கிறது.

ஆனால் அந்நாவல் எனக்கு வேறு ஒருவகையில் மிக முக்கியமானதாக இருந்தது. விஷ்ணுபுரம் விழாவில் நான் உங்களிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தேன். இப்போதைய உங்கள் படைப்பு வழிக்கு உங்கள் தனிவாழ்க்கை எந்த வகையில் பங்காற்றியது என்று. அதற்கு அன்றைக்கு திரையிடப்பட்ட அவுட்சைடர் ஆவண படத்தில் விடை கிடைத்தது. அதையும் விட துல்லியமான விடையை எக்ஸிடென்ஷியலிசம் சூர்யாவின் வாழ்க்கையின் மூலம் அறிந்து கொண்டேன் என்று சொல்ல வேண்டும். அந்த சூர்யாவின் ஒரு பகுதி நீங்கள் தான் என்பதும் ஏறத்தாழ அந்த குடு்ம்ப வரலாறு உங்கள் சொந்த பரம்பரை கதையின் சாயலை கொண்டதையும் ஆரம்ப வாசகனே அறிய முடியும். என் கேள்விக்கு தக்க விடை கிடைத்தது.

வழக்கமாக உங்கள் நாவல்களின் முன்னுரையில் வாழ்வை பலி கொடுத்து எழுதியுள்ளதாக கூறுவீர்கள். எக்ஸிடென்ஷியலிசம் படிக்கும் போது தான் புரிந்தது. இதுபோன்ற விஷயங்களை எழுதுவது சமூகத்தில் நாமே நம் ஆளுமையை தற்கொலை செய்வது தான். துணிகரமான செயல்பாடு!

அன்புடன்

சக்திவேல் 

அன்புள்ள சக்திவேல்,

வீட்டில் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையும் ஆறரை மணி முதல் எட்டரை வரை அவந்திகாவின் ஆன்மீக வகுப்பு நடைபெறும். ஃபோன் பேச முடியாது. உங்கள் ஃபோன் அழைப்பை அதனால்தான் எடுக்க முடியவில்லை. எடுத்தாலும் அன்பு நாவல் குறித்து எதுவும் பேசியிருக்க முடியாது. அது ரகசியமாக எழுதப்பட்ட நாவல். படித்தால் புரியும்.

எக்ஸிஸ்டென்ஷியலிஸமும் ஃபேன்ஸி பனியனும் நாவலில் நாகார்ச்சுனன் முன்னுரையை நீக்கி விட வேண்டியதுதான். ஜெயமோகன், அராத்து போன்ற நண்பர்கள் அப்படித்தான் அபிப்பிராயப்படுகிறார்கள். நாவல் அதிகாரத்தை எதிர்க்கிறது என்றால் முன்னுரை வேறொரு அதிகாரத்தை முன்வைக்கிறது, வாசகர் மேல் திணிக்கிறது. நீங்கள் சொல்லியிருப்பது சரிதான். பதிப்பாளரிடம் சொல்கிறேன்.

தேகத்தில் உபநிஷத்துக்கள்: அது ஒரு பிரார்த்தனை. கொல்லப்பட்ட என் சகமனிதர்களின் பிரேதங்களின் மீது மண்டியிட்டபடி இறைசக்தியிடம் கேட்கும் கேள்விகள். பார்த்துக் கொள் என்ற இழிநகை.

அன்பு நாவலை உங்கள் முகவரிக்கு நாளை அனுப்பச் செய்கிறேன்.

தொடர்பில் இருங்கள்…

சாரு