பின்வரும் கடிதம் 2020 மே இறுதி வாரத்தில் எனக்கு வந்தது. இணைய தளத்திலும் வெளியிட்டேன். நீண்டதொரு பதிலும் எழுதினேன். கார்த்திக் என்ற வாசக நண்பர் எழுதியிருக்கிறார். திருமணமானவர் என்பதால் என் வாசகர் வட்டத்தில் உள்ள கார்த்திக் இல்லை என்று தெரிகிறது. இந்தக் கடிதத்தை எழுதிய கார்த்திக் என்னைத் தொடர்பு கொள்ளவும். என் மின்னஞ்சல் முகவரி
charu.nivedita.india@gmail.com
கார்த்திக்கின் கடிதம்:
அன்புள்ள சாரு அப்பாவிற்கு,
என் கண்களில் கண்ணீருடன் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம் இதுதான்.
நான் உங்களை என் இலக்கியத் தந்தையாகக் கருதுகிறேன். இன்று என் கண்களில் வழிந்தோடும் வலிமிகுந்த கண்ணீர் உங்களுக்காக.
அழைத்துப் பேசி விட வேண்டும் என்று நினைத்தேன், ஆனால் உங்களையும் சங்கடத்தில் ஆழ்த்த மனம் வரவில்லை.
விஷயத்திற்கு வருகிறேன். முராகாமியின் தீவிர வாசகன் நான். நீங்கள் தேடிப் பார்த்தாலும் அவருடைய ஒரே ஒரு நேர்காணல்தான் யூட்யூபில் கிடைக்கும்.
தேடினாலும் அதிகம் தகவல் கிடைக்காத ஒரு எழுத்தாளர். அது அவருடைய வாழ்க்கை, அவருடைய உரிமை. ஏற்கக்கூடியது தான். இல்லை என்று சொல்லவில்லை.
ஆனால் இன்று நடந்ததோ முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாதது. மே பனிரண்டாம் தேதி தி கார்டியன் வலைத்தளத்தில் முராகாமி மே-22 அன்று வானொலியில் இசை நிகழ்ச்சி ஒன்று தொகுக்க உள்ளார் என்று வாசித்தேன்.
அளவு கடந்த சந்தோசம் அன்று. பத்திற்கும் மேல் அவருடைய புத்தகத்தைப் படித்திருக்கிறேன். என் தங்கை ஜப்பான் புத்தகங்கள் மற்றும் படங்கள் மீது ஈர்ப்பு கொண்டு இப்போது ஜப்பானில் வேலை செய்து கொண்டு இருக்கிறாள் .
இன்று மாலை அந்த நிகழ்ச்சி தொடங்கியவுடன் என்னை அழைத்து ”ஆரம்பித்தது” என்று கூறி சில இணைப்புகளைப் பகிர்ந்தாள். அவை எதுவும் வேலை செய்யவில்லை. நான் மற்ற பல வலைத்தளங்கள், ஜப்பான் ரேடியோ போன்ற மென்பொருள் மூலம் முயற்சி செய்து தோற்றுப் போனேன்.
விட்டுக்கொடுக்க மனம் இல்லை. பல நாள் கனவாக இருந்தது. அவர் ஜப்பானிய மொழியில் பேசுவதைக் கேட்க வேண்டும் மற்றும் அவர் வீட்டில் உள்ள vinyl player மூலம் பாட்டுக் கேட்க வேண்டும் என்று.
இறுதியாக vpn மூலம் முயன்று பார்த்தேன். ஆனால் அந்த வலைத்தளம் ’லொகேஷன்’ சரி பார்த்த பின்புதான் வேலை செய்யும் என்று கூறியது. முயற்சியைக் கைவிட்டேன். கோபம் எரிமலையாக வெடித்தது.
உலகமே படிக்கும் ஒரு எழுத்தாளன் – ஒரு புத்தகம் எழுதினால் கோடியில் புரளும் எழுத்தாளன் – கொடுந்தொற்று நேரத்தில் வெளியே வந்து தன் நாட்டு மக்களிடம் மட்டும் பேசுகிறான். உலகம் முழுவதும் பைத்தியம் போல் அவர் புத்தகங்களை வாசிக்கும் வாசகன் என்ன பாவம் செய்தான்?
என் தங்கையிடம் ஜப்பானியர்கள் மற்றும் அவர்களின் ’மூடிய கலாச்சாரம்’ பற்றி வசை பாடினேன். நான் என்ன செய்வேன் என்று கூறினாள். இதேபோல் Studio Ghibli தங்களுடைய குறும்படங்களை ஜப்பானில் உள்ள அவர்களின் சொந்த அருங்காட்சியகம் தவிர உலகில் வேறெங்கும் பார்க்க இயலாததாகச் செய்திருக்கிறார்கள்.
முராகாமி விரும்பிய இசை மற்றும் அதைத் தன் இசைத்தட்டில் பாடச் செய்வதே அந்த நிகழ்ச்சியின் நோக்கம். அதே சமயத்தில் தான் படித்த புத்தகம், அதை எவ்வாறு அணுக வேண்டும், உலக இலக்கியத்தின் பரந்த வாசிப்பின் முக்கியத்துவம் போன்றவற்றை இலவசமாகத் தரும் உங்களை நான் என்னவென்று சொல்வது. வெறும் இசை நிகழ்ச்சிக்கு ஏன் அதிக விளம்பரம்? கார்டியன் பத்திரிகையில் போட்டு உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டிவிட்டு பின்பு அது உலக நிகழ்ச்சி கிடையாது என்று கூறுவது எவ்வாறு இருக்கிறது? என் தங்கையிடம் அவர்களைப் பற்றி வசை பாடினேன் என்று கூறினேன் அல்லவா, அதில் ஒரு வரி, “அவன் பத்து ஜென்மம் எடுத்தாலும் சம்பத்தின் இடைவெளி நாவல் போல் ஒன்று எழுத முடியாது.” என் தங்கை, “சரி, விடு… நீ தான் கலைகளை ஒன்றோடு ஒன்று ஒப்பிடக் கூடாது என்று சொல்லுவாய். இன்னைக்கு என்னாச்சு உனக்கு?” என்று பதில் அளித்தாள்.
ஆனால் பாருங்கள், நம் ஊரில் உள்ள சில வாசகர்கள் முராகாமிக்கு நோபல் தரவேண்டும் என்று இணையத்தில் சண்டை போடுகிறார்கள்.
சம்பத்தின் இடைவெளி, எம்.வி.வெங்கட்ராமி காதுகள், நகுலனின் கவிதைகளை எல்லாம் கொண்டாட மறந்த கூட்டம்தான் நாம். நீங்கள் தமிழ் எழுத்தாளரின் வாழ்வைப் பற்றிப் பேசும்போது இருந்த வலியை இன்று என் உடலில் உணர்கிறேன். இதை உலகம் முழுவதும் வெளியிடுங்கள், ஜப்பான் மொழி தெரியவில்லை என்றால் என்ன, பாடல் ஆங்கிலம்தானே என்று ஏன் அந்த எழுத்தாளன் நினைக்கவில்லை என்று கோபம். ஏன் இவ்வாறு அவர் செய்ய வேண்டும் என்று ஆசை கொண்டேன் என்றால் அவர் புத்தகம் ஜப்பானில் மட்டும் விற்கவில்லை. உலகெங்கும் ரசிகர்கள் கூட்டம் தங்கள் மொழியில் உள்ள இலக்கியப் புத்தகங்களை விட அதிக விலை கொடுத்து வாங்கும் புத்தகம் அவருடையாது. இப்படியெல்லாம் எதிர்பார்ப்பது மூடத்தனம் என்று எனக்கு நானே கூறிகொண்டேன்.
இந்தக் கோபம் பற்றி அலசி ஆராய்வதற்குள் உங்கள் கட்டுரைகளின் முடிவு என் கண் முன் வந்தது. “www.charuonline.com என்ற இந்த இணையதளம் 2002-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது” என்று தொடங்கும் பத்தி.
என் கண்களில் கண்ணீர் நிரம்பியது. என் மனைவி பயந்துவிட்டாள். ஏன் அழுகிறாய் என்று பல முறை வினவினாள். என்ன நடக்கிறது என்று அவளுக்குத் தெரியவில்லை, எனக்கும்தான்.
என் இலக்கியத் தந்தை, என்னைப் புதியவனாக உயிர்த்தெழ வைத்த ஆசான் வாழ்க்கையை இலக்கியத்திற்காக அர்ப்பணித்த மனிதன் தன் கட்டுரைகளை முடிக்கும் போது “முடிந்தவர்கள் கட்டணம் செலுத்துங்கள். முடியாவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை” என்று முடிக்கிறான்.
முடியவில்லை அப்பா. யார்மீது கோபம் என்று தெரியவில்லை. ஆனால் முராகாமியின் நிலையில் இருக்க வேண்டிய என் அப்பா அப்படி இல்லை என்ற ஒரு எண்ணம் என்னை உலுக்கி விட்டது. இதோ என் எழுத்து, படித்துக் கொள்ளுங்கள்… இதோ நான் பேசுகிறேன், கேட்டுக் கொள்ளுங்கள்… என்று கூறும் ஆசானைக் கண்டுகொள்ளாத சமூகத்தை என்ன செய்வது?
மேலே இருக்கும் அந்த இரண்டு வரிகளை எழுதும் போது மீண்டும் கண்ணீர் வழிந்தது. அறையைச் சாத்திவிட்டு தனிமையில் இருக்கிறேன். இதில் நான் எழுதியதை விட எழுதாமல் விட்டது தான் என் உண்மையான வலி.
பின் குறிப்பு: முராகாமியின் அந்த நிகழ்ச்சி ஏதோ ஒரு வலைத்தளத்தில் ஒளிபரப்பிக் கொண்டியிருக்கலாம். ஆனால் அந்தத் தகவல் வெளிப்படையாக இல்லை. எப்போதும்போல் மர்மமாக அனைவரின் ஏக்கத்தைச் சம்பாதிக்கும் விஷயமாக இருக்கிறது.
என்னால் முடிந்த பணம் மற்றும் பிராத்தனை தவிர வேறொன்றும் கொடுக்க இயலாமல் இருக்கும் வாசகன்.
கண்ணீருடன் முடிக்கிறேன்.
இப்படிக்கு உங்கள் மாணவன்
கார்த்திக்.