“அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே
அன்பெனும் குடில் புகும் அரசே
அன்பெனும் வலைக்குட்படு பரம் பொருளே….” என இறைவனை விளிக்கிறார் வள்ளல் பெருமான். அன்பு உயிர்களை இன்புற்றிருக்க செய்யவேண்டுமேயன்றி அது தீராத துன்பத்தில் தள்ளிவிடலாகாது என்பதே இப்புதினத்தின் நோக்கமாக கருதுகிறேன். அன்பாயிலும் அளவிற்கு மிஞ்சினால் நஞ்சுதான்.
நிற்க. என் சொந்தக்கார பெண் ஒருவர் உண்டு, ஊர் பயணம் வந்தாலும் என் பிள்ளைகளுக்கு நான் ஊற்றுகிற தோசைதான் பிடிக்கும், என் கணவருக்கு நான் வைக்கும் மீன் குழம்புதான் பிடிக்குமென்று கரண்டிக்காம்பை எங்கு போனாலும் விடாமல் பிடித்துக்கொண்டிருப்பார். அந்தப் பிள்ளைகள் இப்பவும் கூண்டுக்கிளிகளாகத்தானிருக்கின்றன. கணவரோ மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் நமட்டுச் சிரிப்போடு வாழ்க்கையை கடத்திக்கொண்டிருக்கிறார்.
ஆச்சா… காதலன் காதலிகள் காதலின் பெயரில் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் இம்சைகள் சொல்லி மாளாது. நண்பன் ஒருத்தனின் காதலி தினமும் காலையில் ஐந்து மணிக்கு போன் செய்வார். ஒரு மணி நேரம் பேசுவார். காலையில் எழுந்ததும் காதலன் குரலைத்தான் கேட்க வேண்டுமாம், அவன் முகத்தைத்தான் பார்க்க வேண்டுமாம். அவன் சில நாட்கள் போனை எடுக்காமல் அசந்து உறங்கிவிட்டால் போயிற்று…
தடிமாடுகளும் சளைத்தவர்களில்லை, நட்பு என்கிற பெயரில் அவர்கள் செய்கிற அராஜகம் ஏராளம் , தன்னுடைய ரசனை மட்டுமே உயர்வானதென்று நண்பர்களை இம்சிக்கும் எத்தனையோ நட்புகளை கடந்து வந்திருக்கிறேன். தக்காளி… குடித்துவிட்டால் சிலருக்கு அன்பு அதிகமாகி பொங்கி வழியும், அவர்கள் இருக்கும் திசை நோக்கி தலை வைத்துப்படுப்பதையே விட்டுவிட்டேன். இப்படியாக அன்பின் பெயரால் செய்யப்படும் வன்கொடுமைகளைத்தான் Auto fiction வழியாக அழுத்தமாக தன் பாணியில் சொல்லியிருக்கிறார் தல சாரு. இதையெல்லாம் யார் பேசினாலும் எழுதினாலும் அவரை பொதுச் சமூகம் விரோதியாகத்தான் பார்க்கும். பார்க்கட்டும், அது நன்மைக்குத்தான்.
பிரபு கங்காதரன்