அன்புள்ள சாரு,
அன்பே வடிவான இயேசு பிரானை கடவுளாக வரித்த ஒரு வைகிங் ராஜா அந்த அன்பினாலேயே இயேசு சாம்ராஜ்யத்தை உருவாக்க வேண்டி மற்ற பேகன் வழிபாட்டாளர்களைக் கொன்று குவிக்கும் வல்ஹலா எனும் தொடரை Netflix இல்
சமீபத்தில் பார்த்தேன்.
ரத்தம், நிணம், நெருப்பு, பேரழிவு, பல நூற்றாண்டுகளான கலாச்சாரத்தின் முழுமையான அழித்தொழிப்பு எல்லாமே அன்பே வடிவான ராச்சியத்தை உருவாக்க!
அந்த ராஜாவிற்கு அன்பின்மேல் இருக்கும் அதிதீவிர அர்ப்பணிப்பு, செய்யும்
அழிவுகளை அவனுக்கு மிகச்சுலபமாக நியாயப்படுத்திவிடுகிறது. ”எல்லாம் உங்கள் நன்மைக்குத்தான்”
இதைப் பார்த்தபின் எனக்கு உங்களுடைய அன்பு நாவல் ஆயிரம் சுடர் கொண்டு ஒளி விடுகிறது. நீங்கள் பலமுறை சொல்வதுபோல் நல்லது செய்வதாக நினைத்துக்கொண்டு அன்பு செலுத்தும் ”தெய்வங்கள்” செய்யும் கொடுமைகள் ஒரு நாளும்
அவர்களுக்குப் புரியப் போவதில்லை.
அன்பு நாவல் இன்னும் பலரால் வாசிக்கப்பட்டு உங்களுடைய இதர நாவல்கள் போலவே மனதுக்குள் ரகசியமாக பொங்கி வேதனையும் பரவசமும் தகிக்க போற்றி வழிபடப்படும். படிக்கும் ஆயிரக்கணக்கான வாசகர்களில் எப்போதும் போலவே
நான்குபேர் மட்டும் பொதுவெளியில் அதைப்பற்றி பேசுவார்கள். ஆனாலும் உங்களுக்குப் பல ஆயிரம் ஸ்லீப்பர் செல்ஸ் வாசகர்கள் இருப்பார்கள் என்பது ஆச்சரியம் அளிக்குமா என்ன?
அன்புடன்
வெங்கட்
அன்பு நாவல் கிடைக்குமிடம்: