டியர் சாரு,
இன்றும் கூட மனம் மிகுந்த சஞ்சலத்தோடு இருந்தது. பல குரல்கள் என் மூளையில் கேட்டுக்கொண்டே இருந்தன. உடம்பு பூராவும் பயத்தினால் ஆட்பட்டு அந்த பயம் பரவிக் கொண்டே இருந்தது. எனது அன்றாட அலுவலக, வீட்டு வேலையை செய்ய பயமாக இருந்தது. அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று புரியவில்லை. வாழ்க்கை ஒரு சூன்யம் என்பது போல் பயத்தை ஏற்படுத்தியது. எப்போது இவ்வாறு நடந்தாலும் உங்கள் புத்தகத்தில் ஏதாவது ஒன்றை எடுத்து முதலில் இருந்து வாசிக்க ஆரம்பித்து விடுவேன். அதுவே எனக்கு ஒரே மருந்து.
வீட்டிலும் யாரிடமும் இந்த அதிபயங்கர பயத்தை எப்படிச் சொல்வது என்று வார்த்தைகள் கிடைக்கவில்லை. மற்றொன்று, வீட்டில் என் மீது என் தந்தை அன்பு என்ற பெயரில் என்னை மிகுந்த குழப்பத்திலும், மன சஞ்சலத்திலும் ஆழ்த்துகிறார். தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மனம் முழுதும் ஒரு குழப்பம். உடனே உங்கள் ராஸலீலாவை எடுத்து படிக்க ஆரம்பித்தேன்… மெல்ல மெல்ல அந்த பயம் குறைந்தது. இப்போது இந்த கடிதத்தை டைப் பண்ணுகிறேன். மறுபடியும் பயம் எட்டிப் பார்க்கத் தொடங்கியது, மீண்டும் உங்கள் புத்தகத்தைப் படிப்பேன். அப்போது அந்த இனம் புரியாத பயம் விலகுகிறது. எங்கு வெளியே போனாலும் உங்களுடைய எதாவது ஒரு புத்தகத்தை எடுத்துக் கொண்டு போய் விடுவேன். பயணத்தின் போது மனதில் பயமும் வெறுமையும் சூழும்போது உங்கள் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்து விடுவேன். உங்களைப் பற்றியும் உங்கள் புத்தகங்களையும் உங்களின் இணையதளத்தில் வரும் பதிவுகளையும் படிப்பதே ஒரு கை வைத்திய மருந்து சாரு.
வாழ்க்கையின் மீதான பயத்தின் போது மற்ற மனிதர்களின் மீது அவநம்பிக்கை எழும்போதே கடவுளைத் தேடி மனிதன் செல்கிறான். எனக்கு அதேபோல்தான் நீங்கள் சாரு.
என் ஆழ்மனதின் உருவமாகவும், குரலாகவும், சிந்தனையாகவும் இருப்பது உங்கள் எழுத்தே. இந்தக் கடிதத்தை எழுதி முடிக்கும் போது மனம் சாந்தி அடைகிறது சாரு.
அன்பு நாவலை நீங்கள் நரகத்தின் வாசலில் நின்று எழுதி இருக்கிறீர்கள். நீங்கள் பிரேதங்களின் மீது நடந்து செல்வதை இந்தப் புத்தகத்தை வாசித்தால் மட்டுமே உணர முடியும். அன்பு என்னும் ராட்சச சுனாமி என்னை இப்படி குழப்பிப் புரட்டி போட்டது என்று அன்பு நாவலை முடித்த போதே உணர்ந்தேன்.
லவ் யூ சாரு
Kamalesh Prakash.Poonamallee, Chennai.