தமிழில் வெளிவரும் மொழிபெயர்ப்பு நூல்களை நான் படிப்பதே இல்லை. பெரும்பாலான மொழிபெயர்ப்பாளர்களுக்கு ஆங்கிலமே தெரியவில்லை. ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருந்தால் இலக்கியமும் தெரியவில்லை, இலக்கியத் தமிழும் தெரியவில்லை. அதனால் அந்தப் பக்கமே நான் செல்வதில்லை.
நேற்று அராத்து எழுதியிருந்த ஃபேஸ்புக் பதிவைப் பார்த்தேன். அதில் அவர் எனக்கு மிகவும் பிடித்தமான ஒரு கிரேக்க நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பிலிருந்து ஒன்றிரண்டு பத்திகளை மேற்கோள் கொடுத்திருந்தார். அந்த நாவல் கிரேக்க மொழியிலிருந்து ஆங்கிலத்துக்கு வந்து ஆங்கிலத்திலிருந்து தமிழில் வந்துள்ளது. அந்த நாவல் இதுவரை சுமார் நூறு உலக மொழிகளிலாவது மொழிபெயர்க்கப்பட்டிருக்கும். அதிகமாகக் கூட இருக்கலாம். அதில் பெரும்பான்மையாக ஆங்கிலத்திலிருந்துதான் பிற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கும். மலையாளத்தில் வந்து இருபது முப்பது ஆண்டுகள் கூட ஆகியிருக்கலாம். இப்போதுதான் தமிழில் வந்துள்ளது. இப்போதாவது வந்ததே என்று சந்தோஷப்படலாம் என்று பார்த்தால் முடியவில்லை. காரணம், அப்படி ஒரு மட்டமான மொழிபெயர்ப்பு. இது தமிழா என்றுதான் சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. இப்போதெல்லாம் பல சினிமா இணைய இதழ்கள் வருகின்றன. எல்லாம் கிசுகிசு பத்திரிகைகள். அப்பத்திரிகைகளின் தமிழைப் படித்தால் தமிழ் செத்து விட்டது என்றே தோன்றும். அந்த ரகத்தில் இருக்கிறது அந்த கிரேக்க நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பின் தமிழ். கொடுமை.
ஆனாலும் ஒன்று, ஆங்கிலத்தில் நாவலே படிக்க முடியாது என்று இருப்பவர்களுக்கு இம்மாதிரி குறைபட்ட மொழிபெயர்ப்புகள் கூட போதும். மூல ஆசிரியர்களை நெருங்கி விடலாம்.