ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம்

இந்தப் பரிசு விஷயத்தில் இரண்டு பேருமே கீழ்மையில் கிடந்து புரண்டிருக்கிறார்கள். ஒன்று, பரிசு கொடுக்கும் நிறுவனம். நடுவர்களின் தலைவர் நந்தினிக்கு எழுதிய கடிதத்தில் நாங்கள் அனைவரும் ஏகமனதாக உங்கள் மொழிபெயர்ப்பை (சாரு நிவேதிதாவின் நாவலை) முதல் பரிசுக்குத் தேர்ந்தெடுத்து இருக்கிறோம் என்று எழுதுகிறார். பிறகு நான்கு நாள்களில் “சட்டச் சிக்கல் வரும் என்று எங்கள் சட்டப் பிரிவு கருதுவதால் முதல் பரிசு உங்களுக்கு இல்லை” என்று கடிதம். என்ன சட்டச் சிக்கல் என்ற விவரம் இல்லை.

ஒன்று, இது போன்ற முட்டாள்தனமான பரிசை நிறுத்துங்கள். ஏனென்றால், பதினைந்து பக்கங்களைப் படித்து விட்டுத்தான் முடிவு செய்கிறீர்கள். நாவலின் பிற்பகுதியில் சட்டச் சிக்கல் ஏற்படுத்தும் பகுதி இருந்தால் பரிசைத் திரும்பப் பெறுவீர்களா? இனிமேலும் இப்படி நடக்காது என்பதற்கு என்ன உத்தரவாதம்? உங்களிடம் நேர்மை இருந்திருந்தால் நானே என் பிரதியை உங்கள் நாட்டு சட்டத்துக்கு ஏற்ப சற்று திருத்திக் கொடுத்திருப்பேனே?

இரண்டாவது கீழ்மை. தமிழ்நாட்டிலிருந்து அமெரிக்கர்களை பயமுறுத்திய பேர்வழி. அந்த ஊர்க்காரர்களில் பெரும்பாலானவர்களுக்கு அதேதான் பிழைப்பு. 40 ஆண்டுகளுக்கு முன்பு நான் வேலை பார்த்த பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி பிரின்ஸிபாலுக்கு நான் ஒரு நக்ஸலைட் என்று மொட்டைக் கடுதாசி எழுதியவரும் அந்த ஊர்க்காரர்தான். அண்ணன் தம்பி மேலேயே கேஸ் போடுவது இந்த ஊர்க்காரர்களின் பொழுதுபோக்கு. நான் எல்லோரையும் சொல்லவில்லை. அந்த ஊரில் சிலர்.

என்னைப் பற்றி அமெரிக்க நிறுவனத்துக்குப் போட்டுக் கொடுத்தவர் அந்தப் பிரபலமான ஊரைச் சேர்ந்த ஒரு பதிப்பாளர். அவருக்கு ஜால்ரா அடிக்கும் எழுத்தாளர்களை சர்வதேச அரங்கில் கொண்டு போய் வைப்பதில் கில்லாடி. அவர்கள் அவரை கடவுள் என்றே சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். அப்படித் தன் ஆசீர்வாதம் பெற்ற எழுத்தாளர்களை சர்வதேச அரங்கில் கொண்டு வைப்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார். ஆனால் என் அதிர்ஷ்டம் எனக்கு மட்டும் அவர் சைத்தானாகச் செயல்படுகிறார். என் பெயர் எந்த சர்வதேசக் குறும்பட்டியலில் இடம் பெற்றாலும் தன் உயிரைக் கொடுத்தாவது அதைக் கெடுக்க வேண்டும் என்ற உறுதியில் இருக்கிறார். அதைச் சிறந்த முறையில் செய்தும் வருகிறார். ஏதாவது அவர்கள் பயப்படும்படி அவதூறு வெடியைத் தூக்கிப் போடுவது. வெள்ளைக்காரர்கள்தானே, உடனே பயந்து விடுவார்கள்.

ஏற்கனவே சொன்னது போல் எனக்கு அந்தத் தம்பி மேல் எந்தக் கோபமும் இல்லை. கடவுள் நினைக்கிறார். அதற்கு நீ கருவியாக இருக்கிறாய். அவ்வளவுதான். ஆனால் செய்வினை பற்றிய தர்க்கம் உனக்குத் தெரியும்தானே? எதிரிக்கு இரண்டு கண் போனால் செய்வினை வைத்தவனுக்கு ஒரு கண் போய் விடும். என் மாமனாரின் அண்ணா என் மாமியாருக்கு செய்வினை வைத்து முழுப் பைத்தியம் ஆக்கினார். ஆனால் செய்வினை வைத்தவருக்குக் குஷ்டம் பிடித்து தொண்ணூறு வயது வரை அவஸ்தைப் பட்டார். அதுதான் செய்வினையின் விதி.

நீ தொடர்ந்து எனக்கு செய்வினை வைத்துக் கொண்டிருக்கிறாய். அதை நான் அனுபவமாக எடுத்துக் கொண்டு வருகிறேன். நீயும் செய்வினையின் பலன்களை அனுபவமாக எடுத்துக் கொள்வதற்கான மனோபலத்தை இறைவன் உனக்குக் கொடுக்க வேண்டும்.

ஸர்வம் கிருஷ்ணார்ப்பணம் தம்பி.

பின்குறிப்பு: அந்தக் குறிப்பிட்ட அமெரிக்க நிறுவனம் நந்தினிக்கு எழுதிய கடைசிக் கடிதத்தில் தங்கள் முடிவை மாற்றிக் கொண்டது பற்றி ஒரு வருத்தம் கூடத் தெரிவிக்கவில்லை. இதைத்தான் அமெரிக்கத் தடித்தனம், இனவாதம் என்கிறேன். இதை நாம் எதிர்த்தே ஆக வேண்டியிருக்கிறது.