நான் சில காலமாக அமைதியாக இருப்பதன் காரணம், மிக முக்கியமான காரியம் ஒன்றில் ஈடுபட்டிருக்கிறேன் என்பதுதான்.
இடையில் ஒருநாள் ராம்ஜி மற்றும் காயத்ரியுடன் நிர்வாணா என்ற உணவகத்துக்கு மதிய உணவுக்காகச் சென்றிருந்தேன். இருவரையும் சந்தித்து, இருவரோடும் உணவு உண்டு ஒரு ஆண்டு இருக்கும் என நினைக்கிறேன். சவேரா ஓட்டலில் உள்ள மால்குடி உணவகம் செல்லலாம் என்ற முடிவில் இருந்தோம். அப்படியானால் இரண்டு கிளாஸ் வைன் அருந்தலாம் என்று நினைத்தேன். இரண்டு கிளாஸ் அருந்தினால் வீட்டில் தெரியாது. அதற்கு மேல் ஒரு ஸ்பூன் உள்ளே போனால் கூட வீட்டுக்குத் தெரிந்து விடும். வீட்டுக்குத் தெரிந்தால் கார்த்திக் சுப்பராஜின் மஹான் படத்தில் வருவது போல் ஆகி விடும். அட்டகாசமான அந்தப் படம் ஏன் ஓடவில்லை என்று தெரியவில்லை. ஆனால் இரண்டு கிளாஸ் மட்டும் என்றால் தெரியாது.
போகும் வழியில் ராம்ஜி நிர்வாணா போகலாம் என்றார். சென்னையில் ஆகச் சிறந்த சைவ உணவகம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ராம்ஜியும் அதன் காரணமாகத்தான் சவேராவை மாற்றினார். பொதுவாக என் பழக்கம் என்னவென்றால், இதிலெல்லாம் என் கருத்தையே தெரிவிப்பதில்லை. ஏனென்றால், எனக்கென்று இதிலெல்லாம் கருத்தே இருப்பதில்லை என்பதுதான். சவேரா என்றால் சவேரா. நிர்வாணா என்றால் நிர்வாணா. க்ரீம் செண்டர் என்றால் க்ரீம் செண்டர். சரவண பவன் என்றால் மட்டுமே மனநிலை பாதிக்கப்பட்டவனாக மாறி விடுவேன்.
ஆனால் பாருங்கள், சென்னையில் இரண்டு இடங்களைத் தவிர வேறு எங்குமே சைவ உணவு நன்றாக இருப்பதில்லை. ஒரு இடத்தில் ஒரு சாப்பாடு நாலாயிரம் ரூபாய். பார்க் ஷெரட்டன். இன்னொரு இடம் தி. நகர் பாட்டி வீடு. அங்கே ஆயிரம் ரூபாய். பாட்டி வீட்டுச் சாப்பாடு பிரமாதமாக இருக்கும் என்றாலும் அப்போது அது என் ஞாபகத்தில் வரவில்லை. வந்திருந்தாலும் சென்றிருக்க முடியாது. காயத்ரிக்கு மாலையில் ஒரு நடன நிகழ்ச்சி இருந்தது. அவளே ஆடுகிறாள் என்பதால் அடிக்கடி அபிநயம் பிடித்தபடி இருந்தாள். உலகில் உள்ள எல்லா பெண்களுமே இப்படித்தான் வினோதமான ஜீவிகளாக இருப்பதால் பெண்கள் விஷயத்தில் நான் ஆச்சரியப்படுவதையே நிறுத்தி விட்டேன். அதற்காக என்னை நீங்கள் அபிலாஷோடு சேர்த்து விடாதீர்கள். நான் அபிலாஷை ப்ளாக் பண்ணி ரொம்ப நாள் ஆகிறது. நான் எப்போதுமே ஜெயிக்கும் கட்சியில் சேர்ந்து விடுவேன் என்பதால் நான் எப்போதுமே பெண்கள் கட்சிதான். எல்லா விஷயத்திலும் பெண்கள் சொல்வது மட்டுமேதான் சரி. ஆண்கள் தண்டம். அதிலும் அபிலாஷ் படு தண்டம்.
இப்படியாக நிர்வாணா போனோம். எனக்கு சைவ உணவும் அசைவம் அளவுக்குப் பிடிக்கும். ஒரு முள்ளங்கி சாம்பார், அல்லது, சௌசௌ, அல்லது பூசணிக் காய் சாம்பார், கத்தரிக்காய் காரக் குழம்பு, தக்காளி ரசம், பாகல் பிட்ளை, இன்னும் நாலைந்து காய்கறிகள், ஆவக்காய் ஊறுகாய், நீர் மோர் எல்லாம் இருந்தால் ஜமாய்த்து விடுவேன். இல்லாவிட்டால், வட இந்திய ஸ்டைல். இந்த நிர்வாணாவில் எல்லாமே ஒருவித மையமாக இருந்தது. அங்கேயும் இல்லை. இங்கேயும் இல்லை. காரமும் இல்லை. எல்லாமே சப்பென்று இருந்தது. சரி, இனிமேல் இங்கே வர வேண்டாம் என்று நினைத்துக் கொண்டேன்.
வெளியே வந்த பிறகு கொஞ்சம் இங்கே வாங்க சார் என்றார் ராம்ஜி. நிர்வாணாவுக்குப் பின்னால் ஒரு மளிகைக்கடை மாதிரி இடத்தில் இருபது வகை பொடி, இருபது வகை ஊறுகாய் என்று அமர்க்களமாக இருந்தது. எனக்குப் பிடித்த பூண்டு ஊறுகாய், இட்லி மிளகாப் பொடி, மாகாலிக் கிழங்கு ஊறுகாய், மரவள்ளிக் கிழங்கு சிப்ஸ் என்று ஏராளமாக வாங்கிக் கொடுத்தார்.
இருபத்தைந்து வயதில் மாகாலிக் கிழங்கு ஊறுகாய் சாப்பிட்டிருக்கிறேன். பிறகு அவ்வப்போது அவந்திகா போடுவாள். அவள் போடாத ஊறுகாயே இல்லை. அவள் ஒரு ஊறுகாய் நிபுணர். இது தவிர நான் நல்லவிதமான மாகாலிக் கிழங்கு ஊறுகாயே சாப்பிட்டதில்லை. இப்போதுதான் நிர்வாணா கடையில் சாப்பிட்டேன். உலகத் தரம். இதுவரை நான் சாப்பிட்ட மாகாலிக் கிழங்கு ஊறுகாயிலேயே இதுதான் முதல் தரம். மாகாலிக் கிழங்கு ஊறுகாய் போடுவது மிகவும் கடினம். ஒன்று, கிழங்கு முற்றினதாக இருக்கும். அப்படி இருக்கக் கூடாது. அல்லது, மோரில் உப்பு அதிகமாகி விடும். இந்த நிர்வாணா மாகாலிக் கிழங்கு ஊறுகாய் எந்த விதத்திலும் சோடை போகவில்லை. அற்புதமாகத் தயாரிக்கப்பட்டிருந்தது. இந்த ஊறுகாயை அ-பிராமணர்களால் சாப்பிட முடியாது. கரப்பான் பூச்சி ஸ்மெல் வருவதாகச் சொல்வார்கள். பிராமணர்களில் சிலரே அப்படிச் சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன். கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள பிராமணர், கிறிஸ்தவராக மாறிய பிராமணர் போல மாகாலிக் கிழங்கு ஊறுகாய் பிடிக்காத பிராமணரையும் ஒரு தனிப் பிரிவில் சேர்க்க வேண்டியதுதான்.
மாகாலிக் கிழங்கு ஊறுகாய் சாப்பிடாத மனிதர்கள் சாபம் வாங்கியவர்களே ஆவர்.
***
வரும் 26ஆம் தேதி இலங்கை செல்கிறேன். பதினைந்து கிலோ அளவுக்கு புத்தகங்கள் எடுத்துச் செல்லலாம் என்று நினைக்கிறேன். மீதி பதினைந்துக்கு ஆடைகள்.
அங்கே போய் எனக்கு எதிரான மனநிலை உள்ள அன்பர்களிடம் எதுவும் வாக்குவாதம் வைத்துக் கொள்ளக் கூடாது என்று முடிவெடுத்திருக்கிறேன். நாம் என்ன மதமாற்றமா செய்கிறோம்? உன் கருத்து உனக்கு. என் கருத்து எனக்கு. ஒருவரை ஒருவர் மாற்றவோ அவமதிக்கவோ வேண்டிய அவசியம் இல்லை. எனவே ஒத்த கருத்து உடையவர்களிடம் மட்டுமே உரையாடலாம் என்று இருக்கிறேன்.
மே பதினெட்டுதான் திரும்புகிறேன். இடையில் என்ன செய்வது என்று எதுவுமே திட்டமிடவில்லை. இலங்கை செல்வதற்காக எதையுமே திட்டமிட்டுப் படிக்கவில்லை. நான் தற்சமயம் இரண்டு நாவல்களை எழுதும் வேலையில் மூழ்கிக் கிடக்கிறேன். ஒரு லெக்சர் கொடுக்க வேண்டும். இலங்கைத் தமிழ் இலக்கியம் பற்றிப் பேச எனக்குத் தகுதி இல்லை. நான் அதில் நிபுணன் அல்ல. தமிழ்நாட்டு இலக்கியம் பற்றிப் பேசுவது சரியானது அல்ல. ஏனென்றால், இங்கேயிருந்து செல்லும் அத்தனை பேருமே அது பற்றித்தான் பேசுவார்கள். அது வேண்டாம்.
அரபி இலக்கியம் பற்றிப் பேசலாம். அதில்தான் நான் நிபுணத்துவம் அடைந்திருக்கிறேன். இல்லாவிட்டால், பொதுவாக கேள்வி பதில் செஷன் மாதிரி வைக்கலாம். பார்ப்போம்.