வணக்கம் சாரு ஐயா,
நிலவு தேயாத தேசம் வாசித்து முடித்து விட்டேன். இந்த நூலை வாசித்ததன் மூலம் எனக்கு ஏற்பட்ட புரிதல்களில் ஏதாவது பிழை இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன்.
நான் வாசித்த நூல்களிலே மதிப்புரை இல்லாத நூல் இதுவே. மதிப்புரைகள் வாசிப்பது எனக்குப் பிடிக்காது. புத்தகத்தை வாசிக்கும் முன்னரே மதிப்புரையை வாசித்தால் அதை எழுதியவரின் பார்வை ஆழ்மனதில் பதிந்து விடும் என்று வாசிக்க மாட்டேன். இந்த நூலில் மதிப்புரை இல்லாதது எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
இந்த நூலை வாசித்து விட்டு பல குழப்பங்களுக்கு ஆளாகி விட்டேன். அதில் முதலாவது, எது சுதந்திரம் என்ற குழப்பம். இந்த நூலில் அதற்கு விடையைத் தேடி தேடி மீண்டும் மீண்டும் குழம்பி என்னால் கடைசி வரை இதற்கான விடையைக் கண்டுபிடிக்கவே இயலவில்லை. எது சுதந்திரம் என்ற கேள்வி என்னை விடாமல் துரத்திக் கொண்டே இருக்கிறது. சுதந்திரம் என்பது எதில் உள்ளது? மனதிலா, பிறர் நமக்கு அளிப்பதிலா, எடுத்துக் கொள்வதிலா? அரபு நாடுகளில் திருமண நிகழ்ச்சிகளில் பெண்கள் அதி கவர்ச்சியாக உடையணியலாம். ஆனால் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை. ஐரோப்பாவில் பெண்கள் சுதந்திரமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு ஒரு சிகரெட் பிடிப்பதற்கு இன்னொருவரின் அனுமதிக்காகக் காத்திருக்கிறார்கள். அடிப்படையில் சுதந்திரம் என்பது என்ன? மற்ற நாடுகளில் நிலவும் இறுக்கமான சூழலை வாசிக்கும்போது இங்கு மிகவும் சுதந்திரமாக உணர்கிறேன். நம் நாட்டின் மீதான பார்வை கொஞ்சம் மாறுகிறது. நமக்கு இல்லாத சுதந்திரத்தை அவர்கள் அனுபவிக்கும் பொழுது எனக்கு எந்த சுரணையும் இல்லை. அந்த அளவுக்கு இந்த ஊரில் ‘நீந்தப்’ பழகியிருக்கிறேன். நாம் அனுபவிக்கும் சில சுதந்திரங்களைப் பிறர் அனுபவிப்பதில்லை. பிறர் அனுபவிக்கும் சில சுதந்திரங்களை நாம் அனுபவிப்பதில்லை. இப்படி ஒரு முடிவுக்கு வந்து விட்டு அதுவும் என்னைக் குழப்புகிறது. முரண்களை என்னால் புரிந்து கொள்ள இயலவில்லை.
மதங்களைப் பற்றியும் கொள்கைகளைப் பற்றியும் இந்நூலின் மூலம் சிலவற்றை என்னால் உறுதிபடுத்திக் கொள்ள முடிகிறது. இது சரியா தவறா என்று தெரியவில்லை. மனிதர்களிடம் மனிதத் தன்மையைக் கொண்டு வரும் மதம் இன்னும் தோன்றவில்லை .அல்லது இருக்கும் மதங்களிலிருந்து மனிதத்தைத் தேட மனிதனுக்கு வழி தெரியவில்லை. எந்த ஒரு மதத்தையும் கொள்கையையும் பின்பற்றி அன்பு முழுமையாக விதைக்கப்படவில்லை. குரூரத்தை, ஆக்ரோஷத்தை, வெறுப்பை அதில் தேடுகிறான். கொலை வெறி தலைக்கேறி வெறிக்கூத்தாடுகிறான். உலகில் வெவ்வேறு விதமான கலாச்சாரங்கள், மொழிகள், வழிபாடுகள், நம்பிக்கைகள். அடுத்தவரின் சுதந்திரத்தைக் கைப்பற்றுவதுதான் யுத்தங்களின் வெற்றியா?
அழகியல் குறித்தான கேள்வியும் எழுகிறது .கோர்ஸிகா தீவை பற்றி வாசித்தவுடன் எனக்கு சட்டென்று ‘தமாஷா’ திரைப்படம்தான் நினைவிற்கு வந்தது. அந்தப் படத்தைப் பார்த்த போது எப்படி அந்தத் தீவைத் தேடிக் கண்டுபிடித்தார்கள் என்று வியந்தேன். கோர்ஸிகாவின் தெருக்கள் மனதில் சுற்றிச் சுற்றி வந்தன. ஆனால் அதன் இன்னொரு பக்கத்தை வாசித்தவுடன் அதன் அழகியல் நொறுங்கி விட்டது. ஒரு நாட்டின் இயற்கை வனப்பும் பிரம்மாண்டங்களும் அந்நாட்டின் கொடூர முகத்தை, அடக்குமுறைகளை, குமுறல்களை, தந்திரங்களைப் பூசி மூடிவிடுகின்றன. ஒரு பிரம்மாண்டம் சிதைக்கப்பட்டு இன்னொரு பிரம்மாண்டம் உருவாகிறது. கொஞ்ச நாளில் அந்த பிரம்மாண்டத்தின் பிரமிப்பில் அநீதி வீரமாக மாறிவிடுகிறது. அடக்குமுறை ஆரம்பிக்கிறது. சிலர் வெகுண்டெழுகின்றனர். கலகம் செய்கின்றனர். அதிகாரத்தை வெல்கின்றனர். அதிகாரத்தை வென்று மறுபடியும் அடக்குமுறை… தொடர்ந்து கொண்டே செல்கிறது. இரத்த வாடை மூக்கைத் தொலைத்து குடலைப் பிடுங்குகிறது. மனிதனுக்கு அமைதியில் என்றுமே நாட்டம் இல்லையா? வரலாறு நெடுகிலும் சமநிலையை எங்குமே காண முடியவில்லை.
நம் ஊரில் பள்ளி, கல்லூரியில் படித்ததைத் தாண்டி வேறு எந்தப் புத்தகத்தையும் வாசிக்காத ஒருவருக்கு ஹிட்லரைத் தவிர வேறெந்த கொடுங்கோலனையும் நிச்சயமாகத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. புத்தகங்களின் வழியேதான் உலகத்தின் அதிசயங்களையும் அபத்தங்களையும் தெரிந்து கொள்கிறோம். மனிதனுக்கு இன்னொரு மனிதனை இம்சிப்பதில் ஏன் இவ்வளவு பிரியம்? அத்தனையும் தனதாக்கிக் கொள்ளத் துடிக்கும் வெறி? ரத்தத்தைச் சுவைப்பதில் அப்படி என்ன ஆனந்தம்? கடைசிக் கட்டுரையில் வரும் போஸ்னியா வன்கலவி சம்பவங்கள் அப்படியே எனக்கு வாச்சாத்தி சம்பவத்தை நினைவுப்படுத்தியது.
கபடோச்சியாவின் கதை மிகவும் சுவாரசியமாக இருந்தது. அதன் நிலவியல் அமைப்பு பார்ப்பதற்கு ஏதோ டிஸ்னி திரைப்படத்தில் வரும் மாய தேசம் போல் உள்ளது. Ephesus நகரைப் பற்றிய கட்டுரையில், அங்குள்ள நூலகத்தைப் பற்றி வாசித்த பொழுது 3000 ஆண்டுகளுக்கு முன்பு எந்த மாதிரியான நூல்கள் இருந்திருக்கும், அந்த பிரம்மாண்டமான கட்டிடத்தில் எத்தனைப் பேர் வாசித்துக் கொண்டிருந்திருப்பார்கள் என்று காட்சிகள் விரிந்தன.
இந்த நூலில் பல எழுத்தாளர்களைப் பற்றி எழுதியுள்ளீர்கள். தில்ரூபா, ஸேனாபின் கட்டுரைகள்தான் என்னை சுதந்திரத்தைப் பற்றி அத்தனைக் குழப்பங்களுக்கு ஆளாக்கின. ஜோக்கா அல் ஹாத்தியின் Women of the Moon நாவலின் பகுதியில், பிரசவத்தைப் பற்றி மரியா கூறும் வார்த்தைகள் என்னை மின்சாரம் தாக்கியது போல் தாக்கியது. நாஸிம் ஹிக்மத்தின் ‘A claim’ கவிதை இந்நூலின் அழகிய பகுதி. அந்தக் கவிதையைத் தொடர்ந்து ஐந்து முறைக்கு மேல் வாசித்தேன். நாஸிமைப் பற்றி கட்டுரை தீவிரமாகச் சென்று கொண்டிருக்கையில், முனீஸ்வரனுக்கு சாராயத்தைப் படைத்துவிட்டு… என்ற வாக்கியத்தைப் பார்த்தவுடன் வெடித்துச் சிரித்து விட்டேன்.
இதற்கு முன்னர் நான் வாசித்த பயண நூல்களிலிருந்து இந்நூல் முற்றிலும் மாறுபட்டு இருக்கிறது. உங்களின் எழுத்துக்கள் என்னைக் கனவிலும் துரத்துகின்றன. 270 பக்கங்களைக் கொண்ட இந்நூலை வாசிக்க 7 நாட்கள் எடுத்துக் கொண்டேன். முடித்துவிட்டு உங்களுக்கு ஏதாவது எழுதலாம் என்றால் மறுபடியும் ஒரு முறை இந்த நூலை வாசிக்க வேண்டியிருந்தது.
உங்களின் பயணக் கட்டுரைகளை பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்தில் வைக்கலாம். வரலாற்றின் மீதும் பயணத்தின் மீதும் நிச்சயமாக ஒரு ஈடுபாடு வரும். இந்த நூலை வாசிக்கும் முன்னர் இஸ்லாம் நாடுகளின் பெயர்களை மட்டுமே அறிந்திருந்தேன். அதன் வரலாறு, மக்கள், பண்பாடு என்று எதையுமே அறிந்திருக்கவில்லை. துருக்கி என்றொரு தேசத்தைப் பற்றி மட்டும் இல்லாமல் இஸ்லாத்தைப் பற்றியும் இஸ்லாமிய நாடுகளைப் பற்றியும் ஒரு தெளிவான பார்வையைக் கொண்டுவர முயற்சித்துள்ளீர்கள். பயணம், குதூகலம், வரலாறு, நிலவியல் அமைப்பு, வன்முறை, துயரம், சுதந்திரம், அமைதி என எல்லாம் கலந்தது இந்நூல்.
த.செந்தமிழ்
டியர் செந்தமிழ்,
நான் பெரும்பாலான சமயங்களில் ஒரு பெண்ணாக இருந்து யோசித்துப் பார்ப்பது வழக்கம். உங்கள் கடித்த்தில் நீங்கள் ”இங்கு மிகவும் சுதந்திரமாக உணர்கிறேன்” என்று எழுதுகிறீர்கள். இங்கு என்றால் எங்கே? இந்தியாவில் எந்த ஒரு பெண்ணுக்கும் சுதந்திரமான வெளி என்பது கிடையாது. பசித்த புலியைப் போல் ஆண்கள் வேட்டையாடி விடுவார்கள். இந்தியாவில் மும்பை, கொல்கொத்தா போன்ற ஒருசில நகரங்களைத் தவிர இரவில் பெண்கள் தனியாக வெளியே போக முடியாது. வன்கலவி செய்து பெட்ரோலை ஊற்றி எரித்துக் கொன்று விடுவார்கள் ஆண்கள். நீங்கள் ஏன் சுதந்திரமாக உணர்கிறீர்கள் என்றால், நீங்கள் உங்களுடைய ஊரில், உங்களுடைய வீட்டில், உங்கள் பெற்றோரின் பாதுகாப்பில் இருக்கிறீர்கள். அதனால் சுதந்திரமாக உணர்கிறீர்கள். இதுவே நீங்கள் சென்னையில் தனியாக எந்த ஆணின் அல்லது பெண்ணின் துணையும் இல்லாமல் தங்கியிருந்தால் உங்களுக்கு வீடு கிடைப்பதே கடினம். வேலைக்குச் செல்லும் பெண்கள் விடுதி ஒரு நரகம்.
திருமணம் செய்து கொண்டால் பாதுகாப்பு கிடைக்கும். ஆனால் வருகின்ற ஆண் ஆணாதிக்கவாதியாக இருந்தால் திருமணமும் நரகம்.
”ஐரோப்பாவில் பெண்கள் சுதந்திரமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு ஒரு சிகரெட் பிடிப்பதற்கு இன்னொருவரின் அனுமதிக்காகக் காத்திருக்கிறார்கள்” என்று எழுதியிருக்கிறீர்கள். ஐரோப்பாவுக்குப் போகாமல் இப்படியெல்லாம் எழுதுவது தவறு. அங்கே பெண்கள் இயல்பாக சிகரெட் குடிக்க முடிகிறது என்பதுதான் சுதந்திரம். இங்கே சிகரெட் குடித்தால் அவள் கற்பு பற்றி எல்லோரும் தீர்ப்பு எழுதி விடுவார்கள். ஆஃப்டர் ஆல் ஒரு டாக்ஸி டிரைவர் சிகரெட் குடிக்கும் பெண்ணை டாக்ஸியில் ஏற்ற மாட்டார். சென்னை நிலவரம் அதுதான். ஐரோப்பியப் பெண்கள் ஏன் இன்னொருவரின் அனுமதி கேட்பதன் பொருள் என்ன என்றால், ”நான் சிகரெட் குடிப்பதில் உங்களுக்கு ஆட்சேபணை இல்லைதானே?” என்பதாகும். அப்படிக் கேட்பதே அங்கே மரபு. அப்படிக் கேட்பது சுதந்திரம் இல்லை என்று ஆகாது. சிகரெட்டுக்கு மட்டும் அல்ல, அங்கே எல்லாவற்றுக்கும் அனுமதி கேட்பார்கள். எந்தக் காரணத்துக்காகவும் அடுத்த மனிதருக்கு இடைஞ்சல் கொடுத்து விடக் கூடாது என்பதில் ஐரோப்பியர் கவனமாக இருப்பார்கள். அதற்காக்க் கேட்பதுதான் அது.
மற்றபடி எது சுதந்திரம் என்றால், எதற்காகவும் சமரசம் செய்து கொள்ளாமல், அடுத்த மனிதரைச் சுரண்டாமல், நம் மனம் எதைச் சரி என்று நினைக்கிறதோ அதன்படி வாழ்வதே சுதந்திரம்.
உங்கள் நீண்ட கடிதம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. நிலவு தேயாத தேசம் பயண நூலை அனுபவித்துப் படித்திருக்கிறீர்கள். நன்றி.
சாரு