றியாஸ் குரானா: இலங்கையிலிருந்து ஒரு மாற்றுக் குரல்

நான் எந்த ஒரு எழுத்தாளரையும் சந்திக்கச் செல்வதற்கு முன்பு அவர் எழுதிய பெரும்பாலானவற்றைப் படித்து விட்டுச் செல்வதையே பழக்கமாகக் கொண்டிருக்கிறேன். இப்போது இலங்கையில் வசிக்கும் நண்பர் றியாஸ் குரானாவை சந்திக்கப் போகிறேன். அதனால் அவர் எழுதிய அனைத்தையும் படிக்கும் முயற்சியில் இருக்கிறேன். அவருடைய ஒரு நேர்காணல் இது:

”தமிழ் இலக்கியத்தை மிக அதிகம் பாதித்தது ரஸ்ய இலக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் அதிகளவு மொழிபெயர்க்கப்பட்டிருப்பதும், அதுதான். இருபதாம் நூற்றாண்டு உலகெங்கும் பலமொழிகளில் ரஸ்ய இலக்கியத்திற்கு பெரும் கவர்ச்சி இருந்தது. அதற்கு தமிழும் விதிவிலக்கல்ல. இன்றுகூட அதன் தாக்கம் மிகவும் பாரதூரமான நிலையிலே இருக்கிறது. சோசலிச யதார்த்தவாதம், என்பது ஒரு கருத்துநிலை. அதாவது இலக்கியம் மற்றும் அரசியல் சார்ந்த கருத்துநிலை என்பதை மறந்து, அதுதான் இயற்கையானது என்று பலர் நம்மும்படி மாறியிருக்கிறது. பிரதிபலிப்பு, என்பதையே இலக்கியச் செயல் என இன்னும் நம்பிக்கொண்டிருக்கும் நிலையும் நீடிக்கிறது. அதாவது, இலக்கியம் என்பது நிலவுகிறசூழலை அப்படியே எழுத்தில் பிரதிபலித்தல் என்றும், மிச்சமின்றி அனைத்தையும் பிரதிபலிக்க முடியும் என்ற நிலையை சிந்தனையின்றி ஏற்றுக்கொள்ளும் நிலைவரை இட்டுச்சென்றது என்பதுதான் உண்மை. ஒருவகையில் இது தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த சாபமும்கூட.”

லிங்க்:

மாற்றுப்பிரதி (maatrupirathi.blogspot.com)