தீண்டாமை பற்றி யாரும் சொல்லி யாரும் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லாத அளவுக்கு அது பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறோம். இப்போதும் கூட தலித் மக்கள் குடிக்கும் நீரில் மலத்தைக் கரைத்து விட்ட கொடுஞ்செய்தியையும் அறிந்தோம். மூவாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட ஒரு கொடுமை தீண்டாமை. அந்தக் கொடுமையிலிருந்து மீண்டு வருவதற்கு சமூகம் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. ஆனால் தீண்டாமை என்பது ஹிந்து மதத்துக்கு மட்டுமே உரியது அல்ல. உலகின் பல்வேறு சமூகங்களில் தீண்டாமை இருந்திருக்கிறது. முக்கியமாக, ஆஃப்ரிக்காவிலும் தென்னமெரிக்காவிலும் பழங்குடி இனத்தவரிடையே தீண்டாமை இருந்திருக்கிறது. எதிர் கோஷ்டியை வேட்டையாடித் தின்றிருக்கிறார்கள்.
இதை இங்கே ஒரு இலக்கிய விவகாரத்துக்காகச் சொல்ல வந்தேன். இமையம் – வண்ணநிலவன் சர்ச்சையில் நான் ஒரு விஷயத்தை கவனித்தேன். இமையம் எழுதுவது இலக்கியமே அல்ல என்கிறார் வண்ணநிலவன். போகிற போக்கில் தட்டி விட்டுப் போகாமல் தன்னுடைய முடிவுக்கான காரணத்தையும் சொல்கிறார். அப்படிச் சொல்வதற்காக அவர் இமையம் எழுதிய எல்லாவற்றையும் படித்திருக்கிறார் என்றும் தெரிகிறது. வண்ணநிலவன் சொல்வதை அப்படியே புறங்கையால் ஒதுக்கி விட்டுப் போக முடியாது. எஸ்தர் எழுதியவர். எல்லோருடைய மரியாதைக்கும் உரிய மூத்தோன். அதனால் இமையம் வண்ணநிலவனின் கருத்தால் வருத்தமுற்று பதில் எழுதுகிறார்.
இப்போது வண்ணநிலவன் X இமையம் சர்ச்சை பற்றி தமிழில் எழுதும் அத்தனை பேரும் கருத்து சொல்லி விட்டார்கள். எல்லோருமே இமையத்தின் சார்பாகவே பேசியிருக்கிறார்கள், ஜெயமோகன் உட்பட.
நான் இது பற்றிக் கருத்து சொல்ல மாட்டேன். காரணம், நான் கருத்து சொன்னால் அது யாரையும் பாதிக்காது, இமையம் உட்பட. நம்மைப் பொருட்படுத்தாத இடத்தில் நமக்கு வேலை இல்லை. இன்னொரு காரணம், நான் கருத்து சொல்லி, ஒருவேளை அது பொருட்படுத்தப்பட்டால், தேவையில்லாமல் கல்லடி பட வேண்டியிருக்கும். யார் யாரோ அடிப்பார்கள். போவோர் வருவோர் எல்லாம் அடிப்பார்கள். எதற்கு வம்பு என்ற மனநிலையில் இருக்கிறேன். நான் கருத்து சொல்லி அது எதை மாற்றப் போகிறது? என்னை வாசித்தவர்களுக்கும், என் வாசகர் வட்டத்தினருக்கும் என் கருத்து என்ன என்பது நான் சொல்லாமலேயே தெரியும். அவர்களுடைய கருத்தும் என் கருத்தாகத்தான் இருக்கும். எனவே கருத்து சொல்லி குட்டையைக் கலக்க வேண்டாம்.
மேலும், வண்ணநிலவன் இமையம் பற்றிக் கருத்து சொன்னதால், எந்தவிதமான இலக்கிய மேம்பாடும் நடந்து விட்டதாகத் தெரியவில்லை. வண்ணநிலவனுக்குக் கல்லடி பட தெம்பிருக்கிறது. படுகிறார். எஸ்தர் எழுதியவர் என்பதால் எல்லோரும் சுண்டைக்காய் சைஸ் கல்லால்தான் அடிக்கிறார்கள். நான் சொன்னால் பாறாங்கல்லைத் தூக்கிப் போடுவார்கள். எனவே நான் அமுக்கி வாசிப்பதுதான் எனக்கு நல்லது.
சரி, வண்ணநிலவன் – இமையம் சர்ச்சையில் எனக்கு வேறு ஒரு விஷயம் தோன்றியது. அதுதான் தீண்டாமை. தீண்டாமையை விடவும் ஒரு கொடுஞ்செயல் உள்ளது. தீண்டாமை என்பது ஒரு வன்முறை. ஒரு மக்கள் தொகுதியை ஊரிலிருந்து ஒதுக்கி வைப்பது. ஊருக்குள் வந்தால் அடித்து உதைப்பது. குடிசைகளைக் கொளுத்துவது. குடிநீரில் மலத்தைக் கரைப்பது. இன்ன பிற.
இதை விடவும் கொடுமையான செயல் என்ன தெரியுமா? அப்படி ஒரு மக்கள் தொகுதி இருப்பதாகவே கணக்கில் வைத்துக் கொள்வது இல்லை. விமர்சனமோ, திட்டோ, எதுவுமே இல்லை. ஒதுக்கி வைப்பது இல்லை. ஒதுக்கி வைத்தால் இன்னாரை ஒதுக்கி வைக்கிறோம் என்ற கணக்கு இருக்கும். ஊருக்குள் வந்தால் அடி உதை கிடையாது. அப்படி ஒரு கூட்டம் இருக்கிறது என்ற பிரக்ஞை இருந்தால்தானே அடி உதை? இருப்பதாகவே கண்டு கொள்ளவில்லை என்றால் விமர்சனமே இல்லையே?
அப்படித்தான் என்னை வைத்திருக்கிறது தமிழ் இலக்கிய உலகம். என் எழுத்து பற்றி வண்ணதாசனோ, வண்ணநிலவனோ, பூமணியோ, அசோகமித்திரனோ, நகுலனோ ஒரு வார்த்தை சொன்னதில்லை. காரணம், படித்தது இல்லை. நான் ஒரு எழுத்தாளன் என்றால்தானே படிப்பார்கள்? நான் ஒரு தீண்டத் தகாதவன். என் முகத்திலேயே முழிக்கக் கூடாது. நான் எழுதுவதைப் படிப்பதே வீண்.
என்னுடைய முப்பதாவது வயதில் கிரணம் என்று ஒரு சிறு இலக்கியப் பத்திரிகை நடத்தினேன். அதன் இரண்டு பிரதிகளை பம்பாயில் வசித்த அம்பைக்கு அனுப்பினேன். அந்தப் பார்சலைப் பிரிக்காமலேயே இன்னொரு பார்சலில் வைத்துக் கட்டி ஒரு கடிதமும் எழுதி அனுப்பியிருந்தார் அம்பை.
அந்தக் கடிதத்தைத் தொலைத்து விட்டேன். எனக்குக் கிடைத்த நோபல் பரிசு அந்தக் கடிதம்தான்.
அதன் ஒரு வரி சுருக்கம். “நீங்களெல்லாம் பேசாமல் ஸ்பானிஷிலேயே எழுதுங்களேன். ஏன் தமிழில் எழுதித் தொலைக்கிறீர்கள்?
பின் குறிப்பு: நீங்கள் அனுப்பிய பத்திரிகையைப் பிரிக்காமல் உங்களுக்கே திருப்பி அனுப்புகிறேன்.”
இதைத்தான் தீண்டாமையின் உச்சம் என்கிறேன். டேய், நீ எழுதியதைப் படிக்கவே மாட்டேண்டா, நாயே.
அதிலிருந்து நான் என் புத்தகங்களை எந்த ஒரு எழுத்தாளரிடமும் கொடுப்பதில்லை. அடியோடு நிறுத்தி விட்டேன்.
அதனால்தான் சொல்கிறேன், வண்ணநிலவன் போன்றவர்கள் என் எழுத்து பற்றி விமர்சிக்கக் கூட மாட்டார்கள். உண்மையான தீண்டாமை அதுதான்.
அதே சமயம், வண்ணநிலவனைப் போன்றவர்கள் யாரும் என்னைப் படிக்கவில்லை, விமர்சிக்கவில்லை என்று நான் கவலையும் படவில்லை. இதைக் கூட ஏன் எழுதுகிறேன் என்றால், இது என்னுடைய அவதானம். அவ்வளவுதான். மற்றபடி இம்மாதிரி ஆட்கள் என் எழுத்தைப் படிப்பதோ படிக்காததோ பற்றி எனக்கு அக்கறையே இல்லை.
ஏனென்றால்,
ஆர்மரி ஸ்கொயர் என்ற அமெரிக்க நிறுவனம் ராஸ லீலாவை விருதுக்குத் தேர்ந்தெடுக்கிறது. ஏழு பேர் கொண்ட நடுவர் குழு ஒருமனதாகத் தேர்ந்தெடுத்து விட்டதாக மொழிபெயர்ப்பாளருக்குக் கடிதம் எழுதி வாழ்த்தும் தெரிவிக்கிறார்கள். பிறகு மூன்று தினங்கள் சென்று எங்கள் முடிவைத் திரும்பப் பெறுகிறோம்,
ராஸ லீலாவுக்கு விருது கொடுத்தால் சட்டச் சிக்கல் வரும்போல் தெரிகிறது என்று எழுதுகிறார்கள்.
இதை விட எனக்கு ஒரு அங்கீகாரம் தேவையா? அமெரிக்காக்காரனே என் எழுத்தைக் கண்டு மிரள்கிறான் என்றால் நம் வெண்ணைகளைப் பற்றி நமக்கு என்ன கவலை?