கொக்கரக்கோ எழுத்தாளனான கதை (தொடர்ச்சி)

இலங்கை செல்வதற்கு எனக்கு ஒரு ட்ராலி பேக் வேண்டும். சேம்ஸனைட் பதினைந்தாயிரம் ரூபாய். எதற்கு அத்தனை செலவு, ஐந்தாயிரத்திலேயே வாங்கி விடலாம் என்றான் கொக்கரக்கோ. சரி. ஒத்துக் கொண்டாயிற்று. முன்பு போல் இருந்தால் வேண்டாம் என்று சொல்லியிருப்பேன். இப்போது ஆவணப்படத்தில் இருபத்தைந்து லட்சம் செலவாகி விட்டதால் கொஞ்சம் கஞ்ஜூஸாகி விட்டேன்.

தி. நகரில் ரோஷன் பேக் மால் வந்து விடுங்கள் என்றான் கொக்கரக்கோ. சரி.

அப்படியே நாம் கொஞ்சம் பியர் சாப்பிடலாமே என்றேன்.

இல்லை சாரு, நான் தொடர்ந்து முப்பது நாள்களாகக் குடித்துக் கொண்டிருக்கிறேன். அதனால் ஒரு பதினைந்து நாள்கள் குடிக்கா விரதம் என்றான் கொக்கரக்கோ. ஆஹா, அற்புதம், நான் மட்டும் குடித்துக் கொள்கிறேன் என்றேன்.

கொக்கரக்கோ இப்படி மாதக் கணக்கில் கூட குடிக்கா விரதம் இருப்பான். கொக்கரக்கோவின் வயது நாற்பத்தைந்து. என்ன காரணத்தை முன்னிட்டும் ஹார்ட் பிரச்சினையில் மாட்டக் கூடாது என்று அவனிடம் நான் சத்தியம் வாங்கியிருக்கிறேன். உடலை கோவில் போல் போற்றிப் பாதுகாக்கும் நானே ஹார்ட் பிரச்சினையில் மாட்டி விட்டதால் வாங்கிய சத்தியம் இது. ஆனால் குடிக்கும் ஹார்ட் பிரச்சினைக்கும் சம்பந்தமே இல்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்.

ஆஹா, அற்புதம் என்றான் கொக்கரக்கோ.

தி. நகர் ரோஷன் மால் போனோம். ஐந்தாயிரத்துக்கு அற்புதமான ட்ராலி பேக் வாங்கியாயிற்று.

எங்கே பியர் குடிக்கலாம்.

எனக்கு ஒரு பியர் குடிக்கலாம். வீட்டில் தெரியாது.

சவேரா போனால் ட்ராட் பியர் கிடைக்கும். ட்ராட் பியர் ஒரு அற்புதம். (அற்புதம் என்ற வார்த்தை அடிக்கடி வருகிறது, மன்னிக்கவும், பியர் அடித்து விட்டு தட்டச்சு செய்கிறேன்.) சவேராவை விட்டால் வடபழனியில் ராதா ரீஜண்டில் ட்ராட் பியர் கிடைக்கும். ட்ராட் பியர் என்பது ப்யூர் பியர். ஆனால் வட பழனி வரை போனால் எனக்கு வீட்டுக்குத் திரும்ப ரொம்ப நேரம் ஆகி விடும். நான் வீட்டுக்கு ஒன்பதுக்குள் ஆஜராக வேண்டும்.

சவேரா போனால் கொக்கரக்கோவுக்குப் பிரச்சினை. அவனுடைய கார் விபத்துக்குள்ளாகி விட்டது. மெக்கானிக்கிடம் எட்டு மணிக்குள் சேர்க்க வேண்டும்.

அதனால் உனக்கும் வேண்டாம் எனக்கும் வேண்டாம் என்று தி. நகர் ஓட்டல் அருணாவுக்குப் போகலாம் என்றான் கொக்கரக்கோ. எனக்கு அருணாவும் தெரியாது கருணாவும் தெரியாது. கொக்கரக்கோ என்ன சொன்னாலும் அது சரியாகத்தான் இருக்கும்.

தெற்கு உஸ்மான் சாலையிலேயே உள்ள ஓட்டல் அருணாவுக்குப் போனோம்.

ஓட்டல் அருணாவில் நான் கேட்ட எந்த பியரும் இல்லை. டூர்பர்க் என்ற வெளிநாட்டு பியர் இருந்தது. கொக்கரக்கோ கேட்ட ஜூஸ் இல்லை. எந்த ஜூஸும் இல்லை. எந்த சூப்பும் இல்லை. இந்திய முறையில் சமைத்த சிக்கனும் இல்லை. சைனீஸ் முறையில் சமைத்த சிக்கன் தான் இருந்தது. அது கொக்கரக்கோவுக்குப் பிடிக்காது. நானோ குடிக்கும்போது எந்த சைட் டிஷும் எடுக்க மாட்டேன்.

ஆனால் அருணாவின் சிறப்பு என்னவென்றால், மேஜை பூராவும் சைட் டிஷ் நிரப்பப்பட்டது. பொரி. வெள்ளை நிற சுண்டல் மூன்று டப்பா. பாப் கார்ன். மிக்ஸர். அதற்குப் பிறகு அதியற்புதமான வடை. நாலு. தொட்டுக் கொள்ள உலகத் தரமான சட்னி. இன்னும் பல. நான் கொஞ்சம் பியர் போதையில் இதைத் தட்டச்சு செய்வதால் ஐட்டங்கள் மறந்து விட்டன. ஆனால் மேஜை பூராவும் நிரம்பியிருந்தன. ஒரே ஒரு டூர்பர்க் பியருக்கு.

ஒரு பியர் அருந்தியது எனக்குத் தண்ணீர் குடித்தது போல் இருந்தது. இன்னொரு பியர் சொன்னேன். அதையும் குடித்தேன். போதும். இதற்கு மேல் போனால் மகான் படத்தில் வரும் சிம்ரம் மாதிரியான பிரச்சினையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

அப்போதுதான் எனக்கு கொக்கரக்கோவின் கார் விபத்துக்குள்ளானது ஞாபகம் வந்தது. கொக்கரக்கோ கார் ஓட்டினால் விபத்து நடக்க சாத்தியமே இல்லை. யார் ஓட்டியது என்று கேட்டேன்.

என் அலுவலக உதவியாளர்கள் என்றான்.

முன்பக்கம் சப்பையாக நசுங்கியிருந்தது.

காரைக் கடன் கொடுப்பதும் மனைவியைக் கடன் கொடுப்பதும் ஒன்று என்பார்கள் ஜெர்மன்காரர்கள் என்றேன்.

என்னிடம் கார் இருந்தால் என் உயிரே போனாலும் என் காரைத் தர மாட்டேன் என்றேன்.

பிரசவம் போன்ற ஆபத்து நேரத்தில் வேண்டுமானால் தரலாம். ஜாலி பண்ணுவதற்கெல்லாம் தர மாட்டேன்.

புதுச்சேரியில் கொடுத்தானாம்.

இதற்குக் காப்பீடு செய்திருக்கிறான். அதனால் பத்தாயிரம் செலவு செய்தால் போதும். காப்பீடு செய்யாவிட்டால் எத்தனை செலவு என்றேன்.

நாற்பதாயிரம் என்றான்.

கொக்கரக்கோ, ஏற்கனவே கேமரா திருடு போய் விட்டது. இப்போது கார். நீ முழுமையான எழுத்தாளனாகி விட்டாய் என்றேன்.

மையமாக முகத்தை வைத்தபடி “உனக்கு வீட்டுக்குப் போக ஓலா போடவா?” என்றான். அவனுக்கு எட்டு மணிக்குள் கார் ரிப்பேர் கடைக்குப் போக வேண்டும்.

நான் ரோட்டிலேயே ஆட்டோ பிடித்துக் கொள்கிறேன் என்று சொல்லி விட்டு ட்ராலி பேகை எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன்.

ஒரு ஆட்டோ வந்தது. சாந்தோம் என்றேன். எங்கே என்றார். எம்.எஸ். விஸ்வநாதன் வீட்டுக்கு அடுத்த வீடு என்றேன்.

இருநூறு என்றார்.

நூற்றைம்பதுதான் நியாயமான ரேட்.

இருநூறுக்கு ஓக்கே என்று ஏறினேன்.

பின்குறிப்பு: இரண்டு பியர் குடித்தும் வீட்டில் கண்டு பிடிக்கவில்லை. கடவுளுக்கு நன்றி. ஒரு குட்டிக் கதையும் எழுதியாயிற்று.