நீதிபோதனையும் இலக்கியமும்: அமெரிக்க நிறுவனத்தின் ஆலோசனைகள்

என் மொழிபெயர்ப்பாளர் ஒருவருக்கு ஒரு அமெரிக்க நிறுவனம் வக்கீல் நோட்டீஸ் அனுப்பி மிரட்டியிருக்கிறது. முழுக்க முழுக்க மிரட்டல்தான். அவர்கள் சொல்படி கேட்காவிட்டால் உங்களை நியூயார்க் கோர்ட்டுக்கு இழுப்போம் என்று மிரட்டல். இது அவருக்கும் அமெரிக்க நிறுவனத்துக்குமான பிரச்சினை மட்டும் அல்ல. ஏனென்றால், அந்த வக்கீல் நோட்டீஸில் என் ராஸ லீலாவைப் போட்டு கிழி கிழி என்று கிழித்திருக்கிறார் வக்கீல். எனக்கே அந்த நோட்டீஸைப் படித்தால் உலகின் மிக ஆபாசமான, மோசமான நாவல் ராஸ லீலாதான் என்று தோன்றுகிறது.

அந்த வக்கீல் நோட்டீஸ் பற்றி வெளியே மூச்சு கீச்சு விட்டாலும் நியூயார்க் கோர்ட்டுக்கு இழுப்போம் என்று மிரட்டியிருக்கிறார்கள். எனக்கு எந்த வக்கீலைத் தெரியும். தெரிந்த ஒருசிலரைக் கேட்டபோது என் நவத்துவாரங்களையும் பொத்திக் கொண்டு ஒளிந்து வாழும்படி சொல்கிறார்கள். அமெரிக்கக் கோடீஸ்வரர்களைப் பகைத்துக் கொண்டு வாழ முடியுமா?

ஆனாலும் நான் என்ன தவறு செய்தேன்? ஒரு நாவல் எப்படி இருக்க வேண்டும் என்று சொல்ல இந்த அமெரிக்கக் கோடீஸ்வரர்கள் யார்? அதிக பட்சம் என்ன செய்வார்கள்? இண்டர்போலில் சொல்லி என்னைப் பிடித்து அமெரிக்கா கொண்டு போய் சிறையில் போடுவார்களா? அப்படி நடக்க சட்டத்தில் இடம் உண்டா?

அவர்கள் மீது கேஸ் போட என்னிடம் பணம் இல்லை.

எல்லோருமே என்னை பதுங்கு பதுங்கு என்கிறார்கள்.

பெருமாள் முருகனைக் காப்பாற்ற ஒரு மாபெரும் இயக்கமான கம்யூனிஸ்ட்டுகளின் கலாச்சார மையம் இருந்தது. என்னைக் காப்பாற்ற எம்பெருமானைத் தவிர வேறு யாரும் இல்லை.

பெருமாள் முருகனுக்கு நடந்தது உயிர் அச்சுறுத்தல். எனக்கு நடப்பது இலக்கியப் படுகொலை. இரண்டும் வெவ்வேறு அல்ல.

வக்கீல் நோட்டீஸில் முழுக்க முழுக்க மிரட்டல்தான். வக்கீல் நோட்டீஸ் பற்றிப் பேச்சு எடுத்தாலே கேஸ் போடுவோம் என்று மிரட்டல். ஆனால் அந்த வக்கீல் நோட்டீஸில் என்ன உள்ளதோ அது எல்லாவற்றையுமே அந்த அமெரிக்க நிறுவனம் தன் ப்ளாகில் வெளியிட்டு உள்ளது.

உங்களில் யாருக்காவது திருவள்ளுவர் போல நீதி இலக்கியம் எழுத வேண்டும் என்று ஆசையிருந்தால் அந்த அமெரிக்க நிறுவனத்தின் ஆலோசனைகளைக் கேளுங்கள்.

இவர்களுக்கு என் மொழிபெயர்ப்பாளருக்கும் இடையே என் நாவலில் என்னென்ன பகுதிகள் சென்றன என்ற விவரம் எனக்குத் தெரியாது. என் மொழிபெயர்ப்பாளர் இப்போதைக்கு எது பற்றியும் பேச விரும்பாததால் நானே இதை எழுத வேண்டியிருக்கிறது. one man fight against the mighty American institution. எனக்கு உங்கள் ஆதரவு தேவை. இதை வாசிக்கும் நண்பர்கள் தங்களால் முடிந்த வகையில் இதை எல்லோரும் அறியச் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் இது பற்றி ஒரு வரியாவது எழுத வேண்டும்.

குறும்பட்டியலில் இடம் பெற்ற ராஸ லீலா நாவலை ஆர்மரி ஸ்கொயர் திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டது, என் கருத்தைக் கேட்காமலேயே.

கீழே உள்ளது, அந்த அமெரிக்க நிறுவனத்தின் இலக்கிய போதனைகளும் என் ராஸ லீலா நாவல் மீதான அவர்களின் மேலான கருத்துக்களும்…

A Note about the 2023 Translation Prize — Armory Square Ventures (armorysv.com)