சமீபத்தில் நான் எழுதிய தீண்டாமை என்ற கட்டுரை பற்றி அபிலாஷ் சந்திரன் பேசியிருக்கிறார். பேச்சில் இருபது நிமிடம் இமையம் பற்றியது. மூத்த எழுத்தாளர்கள் ஏன் இளைய எழுத்தாளர்களை அங்கீகரிப்பதில்லை என்பது பற்றியது. இது எனக்கும் பொருந்தும். எனக்குமே இளைய எழுத்தாளர்கள் பலரைப் பிடிக்கவில்லை. சிலரைப் பிடிக்கிறது. பாலசுப்ரமணியம் பொன்ராஜ், பெருந்தேவி, அராத்து போன்றவர்களே அந்த சிலர். இமையத்தின் எழுத்து எனக்கு ஆரம்பத்திலிருந்தே ஈர்க்கவில்லை. பெருமாள் முருகனும் அப்படியே. இந்த இருவரையும் விட ஜூனியர் விகடனில் எழுதும் நிருபர்கள் சுவாரசியமாக எழுதுகிறார்கள். இருவரின் எழுத்தும் மிகவும் தட்டையாக உள்ளது. ஆனால் என்னுடைய இந்தக் கருத்து பற்றி அவர்களோ அவர்களின் வாசகர்களோ கவலையே பட வேண்டியதில்லை. கவலையும் பட மாட்டார்கள் என்று தெரியும். ஆனால் நான் யாரையும் தலித் எழுத்தாளர் என்றோ பெண் எழுத்தாளர் என்றோ கூறுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அப்படிச் சொல்வது ஒரு அவமானம். இளையராஜாவுக்கு எம்.பி. பதவி கொடுத்தபோது சொன்னது போல அப்படிச் சொல்வது ஒரு அவமானம்.
அபிலாஷ் என்னைப் பற்றிச் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். மிக முக்கியமான அவதானம் அது. அம்பை நான் நடத்திய கிரணம் பத்திரிகையைப் பிரிக்காமல் கவரோடு திருப்பி அனுப்பியது பற்றி நான் பெருமையே அடைய வேண்டும் என்கிறார். மிகவும் சரி. அடிக்கடி நான் இப்படி தீண்டாமை என்று சொல்லி அழக் கூடாதுதான்.
இப்போது கூட ஆர்மரிக்காரர்கள் ராஸ லீலாவில் உள்ள ஆபாசங்களையும் அத்துமீறல்களையும் பட்டியல் போட்டிருக்கிறார்கள். ஆஹா, அமெரிக்காவிலிருந்து நம்மை எதிர்க்கிறார்கள். பெரிய வேடிக்கை என்னவென்றால், தாய்லாந்து அரசரிடமும் என்னைப் போட்டுக் கொடுக்கிறார்கள். சார் சார், உங்களையும் திட்டுகிறான், ஏன் சும்மா இருக்கீங்க, போட்டு சாத்துங்க சார் என்ற ஒண்ணாங்கிளாஸ் பையனின் சேட்டையை ஆர்மரிக்காரர்கள் செய்கிறார்கள். பாவமாக இருக்கிறது அவர்களைப் பார்த்தால். இவர்கள்தான் தெற்காசிய இலக்கியத்தைத் தூக்கி நிறுத்தப் போகிறார்களாம். தூக்கி நிறுத்துவதற்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை போல!
இருபதாவது நிமிடத்துக்கு மேல் என் எழுத்து பற்றிய உரை தொடங்குகிறது.