ஏப்ரல் 26 இலங்கை வருகிறேன். இப்போதுதான் சென்னையிலிருந்து கொழும்பு ஒன்றரை மணி நேரப் பயணம் என்பது மனதில் பட்டது. ராமேஸ்வரத்திலிருந்து பத்து நிமிடத்தில் கூட இலங்கை மண்ணைத் தொட்டு விடலாமாக இருக்கும். என்ன செய்வது, அத்தனை மோசமாக இலங்கையும் இந்தியாவும் நட்புறவு பாராட்டியிருக்கிறார்கள்.
ஏப்ரல் 26, 27, 28 மூன்று தினங்களும் கொழும்பு. எங்கே தங்குவேன் என்ற விவரம் சீனிக்குத்தான் தெரியும்.
அதன் பிறகு வவுனியா. மே 18 வரை இலங்கையில்தான் இருக்கிறேன்.
கொழும்புவில் ஒடியல் கூழ் கிடைக்காது என்று நினைக்கிறேன். யாழ்ப்பாணம் போனதும் எங்கேயாவது ஒடியல் கூழ் குடிக்க வேண்டும். அதிலும் கூட்டமாகக் குடித்தால்தான் மஜா என்கிறார்கள். என் வாழ்வில் நான் ஒரே ஒருமுறைதான் ஒடியல் கூழ் குடித்திருக்கிறேன். ஷோபா சக்திதான் செய்து கொடுத்தார். அது போன்ற ஒரு உணவுப் பண்டம் இந்த உலகிலேயே இல்லை என்பது என் கருத்து. அக்கார அடிசலைக் கூட இரண்டாவதாகத்தான் வைப்பேன். ஆனால் ஒடியல் கூழ் செய்வது கடினம் என்று தெரிகிறது. இங்கே தமிழ்நாட்டில் ஒடியல் மா கிடைக்காது என்று நினைக்கிறேன். நண்டு, கணவாய், சிறுமீன் என்று மீனிலேயே நாலைந்து வகையறா தேவைப்படுமே? சென்னையில் நண்டு என்று கேட்டால் மனித மண்டை சைஸுக்கு எடுத்துக் கொடுப்பார்கள். சிறு நண்டு இங்கே கிடைக்காது. ஒடியல் கூழுக்கு சிறுநண்டுதானே போடுவார்கள்?
நான் ஒடியல் கூழ் சாப்பிட்ட அன்று எங்கே சாப்பிட்டேனோ அந்த வீட்டுக்காரருக்கும் எனக்கும் அடிதடி ஆகி விட்டது. அது பற்றி ஒரு சிறுகதை எழுத வேண்டும். மிகக் கசப்பான அனுபவமும் மிக அற்புதமான அனுபவமாகவும் ஆன ஒரு இரவு அது. சென்னை சின்மயா நகரில்.
அன்றிலிருந்து ஒடியல் கூழுக்கு நான் அடிமையாகி விட்டேன். எனக்கு யாழ்ப்பாணத்தில் யார் ஒடியல் கூழ் செய்து தருவீர்கள்?
அமெரிக்காவிலிருந்து வெள்ளைக்காரன் என்னை மிரட்டுகிறான். இங்கே நண்பர்கள் என்னை துவாரங்களை மூடிக் கொண்டு கிட என்கிறார்கள். அமெரிக்கர்களைப் பகைத்துக் கொண்டு நான் நியூயார்க் நீதிமன்றங்களுக்கு அலைய முடியுமா? எட்டு ஆண்டுகள் நித்யானந்தா வழக்குகளை பெங்களூருக்கும் சென்னைக்குமாக அலைந்து அலைந்து நடத்தினேன். ஒரு அம்பது லட்சம் ரூபாய் ஆகியிருக்கும். குமுதம் பத்திரிகைதான் செலவு செய்தது. குமுதம் ரிப்போர்ட்டரில் எழுதியதால். கிரிமினல் கேஸ் போட்டு விட்டான் என்பதாலும், மூன்று கேஸ்கள் என்பதாலும் அத்தனை செலவு. இப்போது அமெரிக்காக்காரன். ஆர்மரியாம். பெயரே பயமுறுத்துவது போல் இருக்கிறது. போங்கடா தூமைங்களா என்று நாமும் பதிலுக்குக் கேஸ் போடலாம். யாரிடம் கோடி ரூபாய் இருக்கிறது? இப்போதே என் சக எழுத்தாளர்கள் ஒருத்தர் கூட இது பற்றி வாய் திறக்கவில்லை. ஆர்மரிக்காரனுக்குப் போட்டுக் கொடுத்ததே இங்கே உள்ள ஒரு இலக்கியத் தரகர்தான்.
அமெரிக்காக்காரன் எனக்கு இலக்கியப் பாடம் எடுக்கிறான். தாய்லாந்து அரசரைத் தாக்கி எழுதி விட்டேன் என்கிறான். தாய்லாந்து மந்திரி சொன்னதை பத்திரிகைத் தேதியோடு நாவலில் கொடுத்திருக்கிறேனே? அந்த மட்டிக்கு அது புரிந்திருக்காது. ஒழுக்கவாதிகள் அமெரிக்காவில் உட்கார்ந்து கொண்டு மிரட்டுகிறார்கள். என்னிடம் மட்டும் ஒரு கோடி ரூபாய் இருந்தால் அவர்கள் மீது ஒரு லட்சம் டாலர் கேட்டு மான நஷ்ட வழக்குப் போட்டிருப்பேன். ஒரு பக்கத்துக்கு ராஸ லீலாவைத் திட்டி எழுதி தங்கள் தளத்தில் வைத்திருக்கிறான் பாருங்கள். இப்படி உலகத்தில் எந்த ஒரு எழுத்தாளனுக்காவது நடந்திருக்கிறதா? பெருமாள் முருகனை ஹிந்துத்துவா ஆட்கள் எதிர்த்தார்கள். என் நாவலை அமெரிக்காவின் பேராசிரியர் கும்பலும் ஒரு கோடீஸ்வர நிறுவனமும் எதிர்க்கிறதே, எனக்கு யார் ஆதரவு தருவார்? இது என்ன மாதிரி ஒடுக்குமுறை?
இலங்கையில் சந்தித்துப் பேசுவோம்.