காலையில் அபிலாஷ் சந்திரனின் காணொலி பார்த்தேன். எனக்கு ஆதரவாக எப்போதும் பேசக் கூடிய ஒருவர் அபிலாஷ். நண்பர் என்பதால் எனக்கு ஆதரவாகப் பேசவில்லை. ஒத்த கருத்து என்பதால்தான் நட்பே கை கூடுகிறது. இப்போது றியாஸ் குரானா.
நான் இலங்கை செல்வதால் றியாஸ் குரானாவைப் பாராட்டி எழுதுகிறேன் என்ற பிராது கிளம்பும். நான் அரசியல்வாதி அல்ல. நான் றியாஸைச் சந்திக்கிறேன் என்ற காரணத்தினால்தான் அவரை அவசரமாகப் படித்தேன். பார்த்தால் இவரை நான் பத்து ஆண்டுகளுக்கு முன்பே படித்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. தொண்ணூறு சத விஷயங்களில் நானும் அவரும் ஒரே இடத்தில் நிற்கிறோம் என்பதை அவரது நேர்காணல்களிலும் கட்டுரைகளிலும் கண்டேன். அதனால்தான் றியாஸைப் பாராட்டி எழுதுகிறேன். அவரைப் பாராட்டுவது என்னையே பாராட்டிக் கொள்வது போல் உள்ளது.
அமெரிக்க நிறுவனம் என் மீது – என் எழுத்தின் மீது – நிகழ்த்திய வன்முறை பற்றி றியாஸ் ஃபேஸ்புக்கில் எழுதியிருக்கிறார். அது கீழே:
சாருவுக்கு அமெரிக்காவிலும் எதிர்ப்பு
சாருவின் ராஸலீலா நாவல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, Armory Square Prize க்கு அதன் மொழிபெயர்ப்பாளரினால் அனுப்பப்பட்டிருந்தது. சோட் டிஸ்டிற்கு (ஷார்ட் லிஸ்ட்) தெரிவாகி, பின்னர் விருதுக்குத் தகுதியானது என்று முடிவு செய்யப்பட்டு அதை இமெயிலின் வழியாக அறிவித்தும் விட்டனர். அதன்பிறகு, சாருவின் நாவலில் உள்ளே ஏதோ பிரச்சினையுள்ளது எனச் சுட்டிக்காட்டி விருதை வாபஸ் பெற்றுக்கொண்டதாக அறிவித்திருக்கின்றனர்.
நாவல் விருதிலிருந்து நீக்கப்பட்டது ஏன் என்ற காரணங்களை அறியப்படுத்தியுள்ளனர். அந்தக் காரணங்கள் குறித்து சாரு எழுதியதும், அப்படி எழுதுவது தங்கள் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்று கூறி, சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என வக்கீல்நோட்டீசும் அனுப்பியிருக்கின்றனர். ஒரு எழுத்தாளருக்கு தனது நாவல் குறித்து முன்வைக்கப்படும் கருத்தக்களை குறித்து, விமர்சிக்கவோ கேள்வி எழுபிபவோ உரிமையில்லையா? இது குறித்து பேசக்கூடாதா? இலக்கியப் பிரதிகளின் மீதான மிக மோசமான வன்முறையும் அத்துமீறலும் இது என்பதை நாம் கவனிக்க வேண்டும்.
சாருவின் நாவல் குறித்து ரகசியமான “பிட்டிசம்” அடித்தவர்கள் எத்தனை கேவலமானவர்கள்? (பிட்டிசம் அடித்திருந்தால்) அடிக்காமல் விட்டிருப்பார்களா என்ன? உலகில் எந்தப் பகுதி எனினும், ஒழுக்கவாதிகள் இலக்கியப் பிரதிகளுக்கு விருது கொடுப்பதற்கு முனவந்தால் இதெல்லாம் சகஜமாகத்தான் இருக்கும். ஆனாலும்,என்ன சாருவுக்கு நடந்த இந்த அநீதி, தமிழின் வேறு எந்த எழுத்தாளருக்கு நடந்திருந்தாலும் இந்நேரம் மடிச்சிக்கட்டிக்கொண்டு முகநுால் விம்ம விம்ம எதிர்ப்புக்களை பதிவிட்டிருப்பார்கள். என்னவொரு குரோதம்? என்னவொரு கசடு நிறைந்த இலக்கிய உலகம் இது? எது எப்படி இருந்தாலும், எங்களைப் போன்ற சிலரேனும் சாருவின் பக்கம் நின்று பேசத் தயாராகத்தான் இருக்கிறோம். இந்த தமிழ் இலக்கிய வெளியை அதன் பொதுமனதைப்போல் நாங்கள் மௌனம் காத்து, ஒரு எழுத்தாளனுக்கு அநீதி நடக்கும்போது பார்த்திருப்பதற்கு தயாரில்லை. சாரு பெருமை கொள்ளுங்கள். தமிழில் மட்டுமல்ல அமெரிக்காவிலும் உங்களுக்கு எதிர்பு கிளம்பியிருக்கிறது. உங்கள் எழுத்தை அத்தனை எளிதில் உலகெங்கிலுமுள்ள ஒழுக்கவாதிகளால் சகித்துக்கொள்ள முடியாது. அந்த வகையில் நீங்கள் சமகாலத்தின் உலக எழுத்தாளர்தான். நேர்மையானவர்கள் இதன் பக்கம் நிற்பார்கள் என்று நம்புகிறேன்.
1. எழுத்தை வைத்து மிக மோசமான அரசியலைச் செய்பவர் எனப் பல விமர்சனங்கள் இருந்தாலும் தமிழிலிருக்கும் மிகக் கவர்ச்சிகரமான, உலகத்தரத்திலான கதைசொல்லி சாரு நிவேதிதாதான். உலகத்தரத்தில் பலருடைய கதைகள் இருந்தாலும் சாரு நிவேதிதாவின் எழுத்துக்கள் கொண்டிருக்கின்ற கவர்ச்சி தமிழில் வேறு யாரிடமும் இல்லை. இது நிரந்தரமான ஒரு கருத்து அல்ல. வாசிப்பு விரிவுபடும்போது மதிப்பீடுகளும் மாற்றமடைகின்றன.
2.கவர்ச்சிகரமான எழுத்து – நீண்ட நேரம் ஒரே வகையான சூழலுக்குள் பார்வையாளரை வைத்திருப்பதில்லை. பலவகையான பொருட்களுள்ள ஒரு வியாபார நிலையத்தைப் போல, இங்குமங்குமாகப் பலவகையான பொருட்களைப் பரப்பி வைத்திருப்பவை. எல்லா வகையான பார்வையாளர்களுக்குமான சாமான்கள் அங்குக் கிடைக்கும்.மிக மோசமானது எனக் கருதப்படுபவை தொடங்கி உயர்தரமானவை எனக் கருதப்படுபவைவரை அங்குண்டு. ஒரே இடத்தில் எல்லாம் பார்வைக்குண்டு. பன்மையான பார்வையாளர்களை அங்குச் சந்திக்கச் செய்யும். விதம் விதமான பார்வையாளர்களை ஒரே இடத்தில் கூட்டிவிடக்கூடிய பிரதி என்பதால் அப்படிச் சொன்னேன். சாருவின் பிரதியைக் கையிலெடுக்கும் ஒருவர் அதைத் தூக்கிவீசிவிட முடியாது.ஏனெனில், அவர் எதிர்பார்ப்பவையும் சிறிதளவிலேனும் அங்குக் கிடைக்கும். இது தமிழில் வேறு எந்த எழுத்தாளர்களின் பிரதியிலும் இல்லை. அது ராய் இசைபோல ஒரு கலப்பினம்.
3.உலகத்தரம் – எந்த வகையான கோட்பாட்டு வாசிப்புக்களுக்கும் இடந்தருபவை.கோட்பாடுகளுக்கு அப்பாலும் லைற்றீடிங்குக்கும் இடந்தருபவை. சாருவின் பிரதிகளை வாசிக்கும்போது, எப்போதோ வாசித்த பல கோட்பாடுகள், ரசனை மதிப்பீடுகள், சாதாரண செய்திபற்றிய கருத்து நிலைகள் எனப் பலவற்றை மீண்டும் நமக்குள் கிளர்த்துகின்றன. இப்படியான காரணங்களால் அது உலகத்தரமானது என்றும் கூறினேன். உலகத்தரமென்று ஒன்று தனிப்படையான வரையறைகளுக்குள் இல்லை என்று புரிந்திருக்கின்ற நிலையிலே – உலகத்தரம் என்ற சொல்லைப் பயன்படுத்துகிறேன் என்பதையும் தெரிவிக்கிறேன்.
4.சூப்பர் மார்க்கெட்டில் சாமான்கள் பரப்புவதைப் போன்ற அம்சம் மற்றவர்களிடம் இல்லை என்றுதான் சொன்னேன்.மற்றவர்களின் கதைகளை நான் குறைத்து மதிப்பிடவில்லை. மிக மலிவான பொருட்களைக் கொண்டும் பெறுமதிமிக்க ஒன்றை உருவாக்க முடியும் என்பதையே சாரு நிவேதிதாவின் எழுத்துக்களில் பார்க்கிறேன்.அதுவே கவர்ச்சிகரமானதாக எனக்குத் தோன்றுகிறது.
5.பெறுமதி – பிரதியை உருவாக்கும் பணியில் வாசகனின் பங்களிப்பை ஏற்பவன் என்ற வகையில், பலவகைப்பட்ட வாசகர்களின் இருப்பையும் ஏற்பவன்.அது அவசியமென்றும் கருதுபவன்.ஆக, பிரதியை அர்த்தப்படுத்தும் வழிகளில் அனைத்து வகை பார்வையாளர்களும் பங்காற்றக்கூடிய இடத்தைத் தன்னகத்தில் கொண்டிருக்கும் கதைகளாகவே சாருவின் நாவல்களைப் பார்க்கிறேன்.அதுவே அதற்கான பெறுமதி என்றும் கருதுகிறேன்.
மற்றபடி, அகவிரிவாக்கதில் சுயவிமர்சனத்தைத் தவறவிடும் தருணங்கள் போன்ற உங்கள் ஏனைய விமர்சனங்கள் எனக்கு உடன்பாடானவைதான். ஆயினும், சலிப்பூடடாத கதைகளை சொல்லும் தமிழின் மிக முக்கியமான எழுத்தாளர்.