உலகப் புத்தக தின விழா

வரும் ஞாயிறு அன்று சென்னை அண்ணா சாலையில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் மாலை 3.45 மணிக்கு மூன்றாம் உலக நாடுகளும் இலக்கியமும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறேன். காலை பத்து மணியிலிருந்தே விழா தொடங்குகிறது. அழைப்பிதழை இணைத்திருக்கிறேன். தவறாமல் வரும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

என்னை உரையாற்ற அழைத்தபோது நான் கொஞ்சம் தயங்கினேன். ஏனென்றால், எழுத்தாளர்கள் பேச்சாளர்களாக மாற வேண்டும் என்று ஒரு விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. அதில் எனக்கு ஒரு சிறிதும் உடன்பாடு இல்லை. சார்ல்ஸ் ப்யூகோவ்ஸ்கி ஒழுங்காகப் பேச மாட்டார். ஆனால் அவருடைய கவிதை வாசிப்பு நிகழ்ச்சிக்கு இடம் கிடைக்காது. பல பத்தாண்டுகள் தமிழ் வாசிப்பு உலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கிய சுஜாதாவுக்கு மேடையில் பேசவே வராது. ஆனால் இன்று பெரும்பாலும் எல்லா எழுத்தாளர்களுமே மேடைப் பேச்சில் வல்லவர்களாக இருக்கிறார்கள். எழுத்தில் சீரியஸாகத் தெரியும் சிலர் கூட பேச்சில் லியோனி மாதிரி கலக்குகிறார்கள். ஆனால் இப்படிப் பேசும் எழுத்தாளர் பட்டியலில் என் பெயர் இடம் பெற்றதே இல்லை. என் பேச்சு யாரையும் ஈர்க்கவில்லை போல என்று நினைத்துக் கொண்டேன். இதையெல்லாம் விளக்கி நான் வரவில்லை என்று சொன்னேன். ஆனாலும் மனுஷின் வற்புறுத்தல் என்னை சம்மதிக்க வைத்து விட்டது. அன்றைய தினம் இன்னொரு எழுத்தாளரிடம் (அவருமே மேடையில் சிறப்பாகப் பேசுபவர்) காலையில் நடந்ததைச் சொன்னேன். அவர், “மேடையில் நின்று பேசும்போது அங்கேயிருக்கும் பார்வையாளர்களின் மனதைத் தொட்டுப் பேசக் கூடிய ஒரே எழுத்தாளர் தமிழ்நாட்டில் நீங்கள்தான்” என்றார். அன்பினால் சொல்லியிருப்பார். ஆனாலும் தைரியமாக இருந்தது.

அழைப்பிதழ்