எந்த விருதும் கிடைக்காததன் காரணம் இதுதான்!

ஏதாவது நல்லது நடக்க இருந்தால் கடைசி நிமிடத்தில் அது தட்டிப் போய் விடுகிறது.  சில ஆண்டுகளுக்கு முன்பு Jan Michalski விருதுக்கு ஸீரோ டிகிரி பரிந்துரைக்கப்பட்டது.  குறும்பட்டியலில் இடம் பெற்ற நாவல் விருது பெறவில்லை.  விருது பெற்ற நாவல் அப்படி ஒன்றும் சிறப்பாக இல்லை.  அந்தப் பட்டியலில் ஸீரோ டிகிரிதான் வலுவானது என்றும் அதற்குத்தான் விருது கிடைக்கும் என்றும் எஸ்.ரா. எனக்கு ஃபோன் செய்து சொன்னார்.  ஆனால் கிடைக்கவில்லை. 

இப்படியே ஒவ்வொன்றாகத் தட்டிக் கொண்டு போகிறது.  இப்போது இந்த ஆர்மரி ஸ்கொயர்.  விருது உங்களுக்குத்தான் என்று அறிவித்து விட்டு வாபஸ் பெற்றுக் கொண்ட்தெல்லாம் உலகில் யாருக்குமே நடக்காது. 

இப்படியெல்லாம் ஏன் நடக்கிறது என்று டார்ச்சர் கோவிந்தன் கண்டு பிடித்து விட்டார். 

எனக்கு ஒரு சர்வதேச விருது கிடைக்க வேண்டும் என்று கோவில் கோவிலாகப் போய் வேண்டிக் கொள்கிறார் டாக்டர் ஸ்ரீராம்.  ஒரு பெண் “சாருவுக்கு விருது கிடைத்தால் நான் மில்க் ஸ்வீட் சாப்பிடுவதையே விட்டு விடுகிறேன்” என்று வேண்டுதல் கொடுத்திருக்கிறார்.  இப்படி பல நண்பர்கள் வேண்டிக் கொண்டும் கடைசியில் தட்டிப்  போகிறது என்றால், உங்களுக்கு ஒரு தடை இருக்கிறது என்றார் டார்ச்சர்.

என்ன தடை?

நிறைய சாபம் வாங்குகிறீர்கள்.  அல்லது, நிறைய பேரின் கசப்பைச் சம்பாதித்துக் கொள்கிறீர்கள்.  உங்களை ஒருவர் ஒரு வருடத்துக்குப் பிறகு ஓட்டலுக்கு அழைத்துப் போகிறார்.  அதிக பட்ச அன்புடன் உங்களுக்கு சாப்பாடு வாங்கித் தருகிறார்.  நீங்களும் ரசித்துச் சாப்பிடுகிறீர்கள்.  வீட்டுக்குப் போய் ஃபேஸ்புக்கில் பிடித்து கிழிகிழி என்று கிழிக்கிறீர்கள்.  அவர் மனம் கசப்படையுமா, இல்லையா?

ஐயோ, எவ்வளவு கேவலம் இது?  அப்படியெல்லாம் நான் நடந்து கொள்கிறேனா என்ன?

அப்புறம்தான் கொஞ்ச நேரம் கழித்து எனக்கு ஞாபகம் வந்தது.  ஓட்டல் சாப்பாட்டைக் குறை சொன்னால் நண்பருக்கு என்ன பிரச்சினை?  அவரா ஓட்டல் நடத்துகிறார்?  

ஜெயமோகனுக்கு எத்தனை நண்பர்கள் இருக்கிறார்கள்?  உங்களோடு எத்தனை பேர் இருக்கிறார்கள், சொல்லுங்கள்? நீங்கள் மட்டும் உங்களுடைய எதிர்மறை எண்ணங்களை விட்டு விட்டால் ஜெயமோகனை விட அதிக நண்பர்கள் உங்களுக்கு இருப்பார்கள்.  இப்போது பாருங்கள்,  ராஜேஷ் (கருந்தேள்) உங்களை விட்டு ஓடி விட்டார்.  ஸாம் ஓடி விட்டார்.  ஜெகா ஓடி விட்டார்.  இன்னும் இப்படி உங்களை விட்டு ஓடி விட்டவர்களின் பெரிய பட்டியலே இருக்கிறது.  காரணம், நீங்கள் எல்லோரையும் திட்டுகிறீர்கள்.  கசப்பை சம்பாதிக்கிறீர்கள்.   இத்தனை கசப்பு உங்களைச் சுற்றியிருப்பதுதான் விருது கிடைக்காததன் காரணம்.  சீனிக்குப் பிரச்சினை இல்லை.  அவர் உணர்ச்சிகளே இல்லாத மனிதர்.  அதே சமயம், விருதுகளை மயிருக்குச் சமானமாக நினைப்பவர்.   மட்டுமல்லாமல், யாரையும் திட்டி மனக்கசப்பை வளர்ப்பவரும் அல்ல.  ஏனென்றால், அவருக்கு விருதைப் போலவே ஓட்டல் சாப்பாடும் மயிருக்கு சமானம்.  எனவே யாரையும் திட்ட மாட்டார்.  யாரும் அவரை விட்டு ஓடவும் இல்லை.  உடனே நான் அவரைத் திட்டி விட்டேன் என்று அவரிடம் போட்டுக் கொடுத்து என்னை அவர் வெறுக்குமாறு செய்யாதீர்கள்.  அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதையும் அன்பும் உண்டு.  ஆனால் நீங்கள் சீனி அல்ல.  கசப்பை வளர்க்காதீர்கள்.  அப்படி இருந்தால் விருது உங்களுக்குத்தான்.  ஆனால் இதை நீங்கள் புரிந்து கொள்ள மாட்டீர்கள்.  உங்களுக்காக நான் இனி ஒவ்வொரு வியாழக்கிழமையும் இரண்டு வேளை சாப்பிடாமல் விரதம் இருக்கப் போகிறேன்.  வேறு வழியில்லை. 

எனக்கு வடிவேலு காமெடி படம் பார்ப்பது போலவும் இருந்தது.  அதே சமயம் பாவ மன்னிப்பு சிவாஜி படம் பார்ப்பது போலவும் இருந்தது.

உடனே அபிலாஷைக் கூப்பிட்டு அழுதேன்.  விருது கிடைக்காதது கூடப் பரவாயில்லை அபி.  இந்த டார்ச்சர் கோவிந்தனின் கண்டு பிடிப்புதான் மனதை உலுக்குகிறது.  நான் என்ன அவ்வளவு கெட்டவனா?

அந்த டார்ச்சர் கோவிந்தன் நம்பரைக் கொடுங்கள்.  அவரை உண்டு இல்லை என்று பண்ணி விடுகிறேன்.  நீங்கள் எழுத்தைக் காலி செய்பவர்.  எதிர் எழுத்தை முன்வைப்பவர்.  அதேபோல்தான் மனித உறவுகளிலும் சாராம்சவாதத்தைத் தீர்த்துக் கட்டுகிறீர்கள்.  உங்களுக்கு சீனியும் ஒன்றுதான், அபிலாஷும் ஒன்றுதான், ராம்ஜியும் ஒன்றுதான்.  இருப்புக்கு முன்பே இருப்பது சாராம்சம், கருத்தே மனித இருப்பைத் தீர்மானிக்கிறது என்பது போன்ற சாராம்ச வாத நம்பிக்கைகளை  உங்கள் எழுத்தும் வாழ்வும் தீர்த்துக் கட்டுகிறது என்ற சிறிய உண்மை கூடவா அந்த டார்ச்சர் கோவிந்தனுக்குத் தெரியவில்லை, என்ன மனிதர் அவர்?  

எனவே இது பற்றியெல்லாம் கவலையே படாதீர்கள்.  இந்த ஆர்மரிக்காரர்கள் நாவலைத் தேர்ந்தெடுத்து ஓப்பன் லெட்டர் பதிப்பகத்திடம் கொடுத்துப் பதிப்பிக்கப் போகிறார்கள்.  அந்த ஓப்பன் லெட்டர் பதிப்பக உரிமையாளரோ (Chad W Post) 2008இலேயே உங்கள் ஸீரோ டிகிரி பற்றிப் புகழ்ந்து எழுதி அதைத் தன்னுடைய (ரோச்சஸ்டர்) பல்கலைக்கழகத்தின் பாடத்திட்டத்திலும் சேர்த்தவர்.  அதனால் இந்த அலட்டலுக்கெல்லாம் அஞ்சாதீர்கள் என்றார். 

இலங்கை செல்லும் பொருட்டு விமான நிலையத்தில் தேவைப்படலாம் என்று ஒரு நண்பர் நூறு டாலர் கொடுத்தனுப்பினார்.  இன்னொரு நண்பர் இருபத்தைந்தாயிரம் ரூபாய் அனுப்பினார்.  உங்களுக்காக என் உயிரை தரச் சித்தமாக இருக்கிறேன், ஆனால் என் உயிர் சல்லிக் காசுக்குப் பிரயோஜனம் இல்லை, அதனால் உருப்படியாக உங்களுக்கு ஏதாவது செய்ய முடியுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்று மெஸேஜ் அனுப்பியிருந்தார் ஸ்ரீ.  அதனால் நானும் ஒன்றும் தனியாக இல்லை என்று தோன்றியது.